For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

புதுவையில் 13வது உலகத் தமிழ் இணைய மாநாடு: பன்னாட்டு அறிஞர்கள் வருகை

Google Oneindia Tamil News

புதுச்சேரி: புதுச்சேரியில் பதின்மூன்றாவது உலகத் தமிழ் இணைய மாநாடு, வரும் செப்டம்பர் 19, 20, 21 (வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

புதுச்சேரியில் அமைந்துள்ள புதுவைப் பல்கலைக்கழகத்தின் பண்பாட்டு வளாகத்தில் (Cultural Complex) இந்த மாநாடு நடைபெற உள்ளதாக மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவர் பேராசிரியர் மு. இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

13th world Tamil internet conference to be held in Puducherry

உலக அளவில் கணினி, இணையத்தில் தமிழைப் பயன்படுத்துவது குறித்து ஆராய உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) என்ற அமைப்பு உள்ளது. இது அமெரிக்காவில் பதிவுபெற்ற தன்னார்வ அமைப்பு ஆகும். இதில் உலகம் முழுவதும் உள்ள தொழில் நுட்ப வல்லுநர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். இந்த அமைப்பு பல்கலைக்கழகங்களுடனும், தமிழக அரசுடனும் இணைந்து இதுவரை உலகின் பல பாகங்களில் 12 மாநாடுகளை நடத்தியுள்ளது. பதின்மூன்றாவது மாநாடு புதுச்சேரியில் முதன்முறையாக நடைபெறுகின்றது.

இதன் தொடக்க விழா 19-09-2014 வெள்ளிக்கிழமை காலை 10.00 மணிக்குப் புதுவைப் பல்கலைக்கழகப் பண்பாட்டு வளாகத்தில் உள்ள மாநாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. புதுவை மாநில முதலமைச்சர் ந. ரங்கசாமி கலந்து கொண்டு மாநாட்டைத் தொடங்கி வைக்க உள்ளார். உத்தமம் அமைப்பின் தலைவரும் அமெரிக்கா பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான வாசு. அரங்கநாதன் அனைவரையும் வரவேற்க உள்ளார். சுவிசர்லாந்து பல்கலைக்கழகப் பேராசிரியர் கு. கல்யாணசுந்தரம் மாநாட்டின் நோக்கவுரையாற்ற உள்ளார்.

புதுவைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சந்திரா கிருட்டிணமூர்த்தியின் தலைமையில் நடைபெறும் மாநாட்டில் உத்தமம் ஆலோசகரும், கான்பூர் ஐ.ஐ.டி. தலைவருமான பேராசிரியர் மு.அனந்தகிருட்டிணன் சிறப்புரையாற்ற உள்ளார். புதுவை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. இராதாகிருட்டிணன், காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு. பி.எம்.எல். கல்யாணசுந்தரம் மைசூர் இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனப் பேராசிரியர் முனைவர் எல். இராமமூர்த்தி வாழ்த்துரை வழங்க உள்ளனர். உலகத் தமிழ் இணைய மாநாட்டின் உள்நாட்டுக்குழுத் தலைவரும், புதுச்சேரி காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு மையத் தமிழ்ப் பேராசிரியருமான மு.இளங்கோவன் நன்றியுரை ஆற்ற உள்ளார்.

புதுச்சேரி உலகத் தமிழ் இணைய மாநாட்டுக்கு அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, கனடா, பிரான்சு, செர்மனி, ஹாங்காங்கு, செகோஸ்லேவியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து 300 க்கும் மேற்பட்ட பேராளர்கள் வருகை தர உள்ளனர். ஆய்வறிஞர்கள் 100 பேர் ஆய்வுக்கட்டுரை படிக்க உள்ளனர். ஆய்வுக்கட்டுரைகள் தொகுக்கப்பட்டு மாநாட்டின் தொடக்க விழாவில் வெளியிடப்பட உள்ளது. மாநாட்டை ஒட்டிச் சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்பட உள்ளது.

உலகத் தமிழ் இணைய மாநாடு மூன்று பிரிவுகளாக நடைபெறுகின்றது. ஆய்வரங்கம் புதுவைப் பல்கலைக்கழகத்தில் மூன்றுநாள் நடைபெறுகின்றது. இந்த ஆய்வரங்கில் ஆய்வாளர்கள் 100 பேர் ஆய்வுக் கட்டுரை படைக்க உள்ளனர். பேராசிரியர் ந. தெய்வசுந்தரம், பேராசிரியர் ஆ.க. இராமகிருட்டினன், அ.இளங்கோவன், பேராசிரியர் செல்வகுமார்(கனடா) ஆகியோர் சிறப்பு உரையரங்குகளில் பேச உள்ளனர். அதே நாள்களில் புதுச்சேரி கடற்கரைச் சாலையில் உள்ள காந்தித்திடல் அருகில் உள்ள கைவினைப் பொருள் கண்காட்சிக்கூடத்தில் கணினித்திருவிழா என்ற பெயரில் மென்பொருள், கணினிக் கண்காட்சியும் மக்கள் அரங்கமும் நடைபெறுகின்றது. தமிழகத்தின் முன்னணிக் கணினி நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இந்தக் கண்காட்சியில் கலந்துகொண்டு தங்கள் படைப்புகளை மக்களுக்குப் பார்வைக்கு வைக்க உள்ளன.

மக்கள் அரங்கில் கணினி, இணையத் தன்னார்வலர்கள் இருபதுக்கும் மேற்பட்டவர்கள் கணினி, இணையம் குறித்துப் பொதுமக்கள், மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு விடையளிப்பார்கள். தமிழ்த்தட்டச்சு செய்வது, விக்கிப்பீடியாவில் எழுதுவது, வலைப்பதிவு (பிளாக்) உருவாக்குவது குறித்து, இணையத்தில் உள்ள இலவச மென்பொருள்களை அறிமுகம் செய்வது என்று மக்கள் அரங்கத்தின் பணிகள் இருக்கும்.

மாநாட்டின் சார்பில் நடைபெறும் வலைப்பதிவு உருவாக்கும் போட்டி, தமிழ்த்தட்டச்சுப் போட்டியில் கலந்துகொண்டு வெற்றிபெற்றவர்களுக்குப் பாராட்டும் நடைபெறுகின்றது. தமிழ்க் கணினி, இணைய வளர்ச்சிக்குப் பாடுபட்ட தன்னார்வலர்கள் இந்த மாநாட்டுக்கு அழைக்கப்பெற்றுச் சிறப்பிக்கப்பட உள்ளனர். மாநாடு குறித்த செய்திகள் www.infitt.org என்ற இணையதளத்தில் கிடைக்கும். இவ்வாறு உலகத் தமிழ் இணைய மாநாட்டு உள்நாட்டுக்குழுத் தலைவர் மு.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

நன்றி: http://muelangovan.blogspot.com

English summary
13th world Tamil internet conference to be held in Puducherry for three days from September 19.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X