For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னை புத்தகக் காட்சி-கலாம் தொடங்கி வைக்கிறார்

By Sridhar L
Google Oneindia Tamil News

Abdhul Kalam
32வது சென்னை புத்தகக் காட்சி 8ம் தேதி தொடங்குகிறது. முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இதைத் தொடங்கி வைக்கிறார்.

இது குறித்து தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத் தலைவர் காந்தி கண்ணதாசன், செயலாளர் ஆர்.எஸ். சண்முகம் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

இந்த புத்தகக் காட்சி பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளியில் 18ம் தேதி வரை நடைபெறும்.

இந்த ஆண்டு 1 லட்சத்து 75 ஆயிரம் சதுர அடி பரப்பில், 588 அரங்குகள் அமைக்கப்படுகின்றன. 512 நிறுவனங்கள் தங்கள் நூல்களை விற்பனைக்காக வைக்கின்றன.

லட்சக்கணக்கான தலைப்புகளில் கோடிக்கணக்கான நூல்கள் வாசகர்கள் பார்வைக்கு வைக்கப்படும். தமிழ், ஆங்கிலம், இந்தி உள்பட பல்வேறு மொழிகளின் புத்தகங்களும், மலேசியா உள்பட பல வெளிநாட்டு பதிப்பாளர்களின் நூல்களும் காட்சியில் கிடைக்கும்.

எல்லா தரப்பு வாசகர்களும் திருப்தியடையும் வகையில் இலக்கியம், அரசியல், சுயமுன்னேற்ற நூல்கள், பக்தி, சமையல், அறிவியல், வரலாறு, குழந்தைகள் நூல்கள் என எல்லாவிதமான நூல்களும் கிடைக்கும்.

கலை நிகழ்ச்சிகள்: தினமும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை கலை நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், பட்டிமன்றம் மற்றும் இலக்கியச் சொற்பொழிவுகள் நடைபெறும். தினமும் மாலை நேரத்தில் நூல் வெளியீட்டு நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

குறும் படம்: கலையுணர்வு மிக்க வாசகர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் தினமும் பிற்பகல் 2.30 மணி முதல் குழந்தைகள் பற்றிய உலகப் புகழ்பெற்ற குறும்படங்கள், இந்திய மொழித் திரைப்படங்கள் திரையிடப்படும்.

தினமணி பரிசு: புத்தகக் காட்சிக்கு வருவோருக்கான நுழைவுக் கட்டணம் ரூ.5 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 12 வயதுக்குட்பட்டோருக்கு கட்டணம் இல்லை.

நாள்தோறும் டிக்கெட்டுகள் குலுக்கப்பட்டு, வாசகர்களுக்கு பல பரிசுகளும், தினமணி நாளிதழ் வழங்கும் ஆண்டு சந்தாக்களும் பரிசாக வழங்கப்படும்.

மாணவர்களுக்கு இலவசம்: பள்ளி மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தும் நோக்கிலும், புத்தகக் காட்சிக்கு அதிக மாணவர்கள் வர வேண்டும் என்பதாலும் மாணவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும்.

மருத்துவ முகாம்: புத்தகக் காட்சி மட்டுமல்லாது, சேவை நோக்கோடு இலவசமாக சர்க்கரை நோய் கண்டறியும் முகாம் சென்னை மோகன் நீரிழிவு மருத்துவமனையோடு இணைந்து நடத்தப்படும். அப்பல்லோ மருத்துவமனையுடன் இணைந்து ஆஸ்துமா நோய் அறியும் முகாம் நடைபெறும். அரிமா சங்கம் சார்பில் ரத்த தான முகாம் நடத்தப்படும்.

இந்த ஆண்டு 10 லட்சம் வாசகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்காக 5 லட்சம் சதுர அடி பரப்பில் கார் பார்க்கிங், 5 ஆயிரம் சதுர அடி பரப்பில் சிற்றுண்டி உணவு விடுதி உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்றனர்.

6 பேருக்கு விருது:

2007ம் ஆண்டு 30வது சென்னை புத்தக கண்காட்சியில் பங்கேற்ற முதல்வர் கருணாநிதி தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்துக்கு தனது சொந்த பணத்தில் இருந்து ரூ.1 கோடி நன்கொடையாக வழங்கினார்.

அந்த தொகை வங்கியில் இருப்பு வைக்கப்பட்டு அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் ஆண்டுதோறும் சிறந்த எழுத்தாளர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

அதன்படி கடந்த ஆண்டு முதல் சிறந்த எழுத்தாளர்கள் 6 பேர் தேர்வு செய்யப்பட்டு "கலைஞர் மு.கருணாநிதி பொற்கிழி'' என்ற பெயரில் விருது வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டும் விருது பெற 6 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கவிதைக்கான விருது பேராசிரியர் சி.மணி, சிறுகதை- நாவலுக்கான விருது ஆர். சூடாமணி, நாடகத்துக்கான விருது கூத்துப்பட்டறை' முத்துசாமி, கட்டுரைக்கான விருது முனைவர் க. நெடுஞ்செழியன், இந்திய மொழி எழுத்தாளருக்கான விருது கன்னட எழுத்தாளர் கிரிஷ் கர்னாட், இந்திய ஆங்கில எழுத்தாளர் விருது எஸ். முத்தையா ஆகியோருக்கு வழங்கப்படவுள்ளது.

புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவில் டாக்டர் அப்துல் கலாம் இந்த விருதுகளை வழங்குகிறார். விருதுடன் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X