For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடிமை வியாபாரத்தையும், அதன் ஒழிப்பையும் ஞாபகமூட்டுவதற்கான சர்வதேச தினம்

By Chakra
Google Oneindia Tamil News

பண்டைய இந்தியாவில் வாங்கி, விற்கும் அடிமைகள் இருந்ததாக தெரியவில்லை. ஒருசில தமிழ் ஆய்வாளரின் கருத்துப்படி, தமிழ்நாட்டில் சோழர் காலத்தில் அடிமை முறை இருந்ததாகக் கூறப்படுகிறது. மன்னர்களும், வளம் படைத்தவர்களும் ஆண்களையும், பெண்களையும் விலைக்கு வாங்கிக் கோவில்களுக்கும், மடங்களுக்கும் தானமாக வழங்கியுள்ளனர். அடிமை விற்பனை, ஓலையில் பத்திரம் போல் பதிவு செய்யப்பட்டது. இது ஆளோலை, ஆள்விலைப் பிரமாண இசைவுத் தீட்டு, அடிமை விற்பனைப் பத்திரம் என்ற பெயர்களால் அழைக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த அடிமை தீண்டா அடிமை என்றழைக்கப்பட்டார். இவ்வாறு அடிமைகளானவர் மீது மாடுகளுக்கு இடுவது போல் இலச்சினை பொறிக்கப்பட்டன. அரண்மனை அடிமைகளுக்குப் புலிச்சின்னமும், சிவன் கோவில் அடிமைகளுக்குத் திரிசு10லச் சின்னமும், வைணவ கோவில் அடிமைகளுக்குச் சங்குச் சின்னமும், இலட்சினையாக இடப்பட்டன. நெல்குற்றுதல், வேளாண்மைப் பணிகள், கோவிற் பணிகள் ஆகியன அடிமைகளின் முக்கிய பணிகளாக காணப்பட்டுள்ளன.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade)

மத்திய காலத்தில் அடிமை வியாபாரம் புதுப் பரிமாணத்தில் வளர்ச்சியடையலாயிற்று. இங்கு அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) எனப்படுவது ஐரோப்பியர்கள் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி வணிகம் செய்தமையைக் குறிப்பதாகும். ஆப்பிரிக்காவில் பல இன மக்கள் வாழ்ந்து வந்தனர். இரண்டு இனங்களுக்கிடையே போர் ஏற்பட்டு அதில் வென்றவர்கள் தோற்றவர்களை ஆபிரிக்காவிற்கும் - அமெரிக்காவிற்கும் இடையே அடிமை வியாபாரம் செய்து வந்தவர்களுக்கு அடிமைகளாக விற்றனர். காடுகளிலோ, தோட்டங்களிலோ தனியாக இருந்தவர்களைத் திருட்டுதனமாகப் பிடித்து வந்து அவர்களுக்கு விற்றனர். அடிமை வியாபாரம் செய்து வந்தவர்கள் கொடுத்த பணத்திற்கு ஆசைப்பட்டு தங்கள் இனத்தவர்களையே திருட்டுத்தனமாகப் பிடித்துக் கொடுத்த சில கிராமத் தலைவர்களும் உளர்.

அத்திலாந்திக் அடிமை வணிகம் (Atlantic slave trade) அட்லாண்டிக் பெருங்கடலை அண்மித்து நடைபெற்றமையால் இவ்வாறு குறிப்பிடப்படுகிறது. 15 முதல் 19ம் நூற்றாண்டு வரை ஐரோப்பியர்கள் மத்திய ஆபிரிக்காவிலிருந்தும் மேற்கு ஆபிரிக்காவிலிருந்தும் ஆபிரிக்கர்களை அடிமைகளாக்கி “புதிய உலகம்" என அவர்கள் அழைத்த அமெரிக்கக் கண்டங்களுக்குக் கொண்டு சென்று விற்றுள்ளனர்.

ஐரோப்பாவிலிருந்து முதன் முதலில் வடஅமெரிக்காவுக்கு வந்தவர்களில் பெரும்பாலோர் பிரித்தானியாவிலிருந்து வந்தவர்களே. அமெரிக்காவிற்கு வந்து அங்கு ஏற்கெனவே வாழ்ந்து வந்த பழங்குடி மக்களின் நிலங்களை அவர்களிடமிருந்து பறித்துக்கொண்டு தங்கள் உடைமையாக்கிக்கொண்ட பிறகு அந்த நிலங்களில் உழைக்க அவர்களுக்கு உழைப்பாளிகள் தேவைப்பட்டனர். அப்போது ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்களைத் தந்திரமாகப் பிடித்து வந்து ஐரோப்பாவில் அடிமைகளாக விற்பது பரவலாக இருந்து வந்தது. இதைப் பின்பற்றி அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர்களும் ஆப்பிரிக்கர்களை அமெரிக்காவிற்குக் கொண்டுவந்து அடிமைகளாக விற்கத் தொடங்கினர்.

9.4 முதல் 12 மில்லியன் ஆபிரிக்கர்கள் அடிமைகளாக அமெரிக்கக் கண்டங்களை வந்தடைந்தனர். ஆனால் அடிமைகளாக்கப்பட்டோரின் தொகை இதைவிட மிக அதிகமாகும். இந்த அடிமை வணிகத்தை ஆபிரிக்க, ஆபிரிக்க அமெரிக்க வரலாற்றாசிரியர்கள் மாஃவா (Maafa) எனக் குறிப்பிடுகின்றனர். சுவாகிலி மொழியில் மாஃவா என்பதன் கருத்து “பெரும் அனர்த்தம்" என்பதாகும்.

16ஆம் நூற்றாண்டின் மத்தியில், அடிமை வியாபாரம், பொருளாதாரரீதியில் பெரும் இலாபகரமான வியாபாரமாக விளங்கியது. இதனால் மற்ற நாடுகளும் அடிமை வியாபாரத்தில் போட்டியிட ஆரம்பித்தன. ஊதாரணமாக போர்த்துக்கள், ஸ்பானியர்கள் போன்றோரைக் குறிப்பிடலாம். இவை பெரும் கப்பல்களை அனுப்பி ஆபிரிக்கர்களைக் கடத்திவர அனுப்பின. ஐரோப்பியர்கள் அடிமைகளை பிராந்திய ஆபிரிக்க தலைவர்களிடமிருந்து வாங்கினர். அல்லது கப்பலைப் பார்வையிட விரும்பிய ஆபிரிகர்களை பார்வையிட அனுப்பி ஏமாற்றி அவர்களைச் சிறைபிடித்தனர். சில சமயங்களில் ஒரு பழங்குடிக்கும் இன்னொரு பழங்குடிக்கும் இடையே பெரும் பழங்குடிப் போர்களுக்கும் அடிமை முறை காரணமாயிற்று. ஏனெனில் ஒரு பழங்குடி இன்னொரு பழங்குடியை அடிமையாக வியாபாரம் செய்ய முனைந்தமை போருக்கு வித்திட்டது.

அடிமை வியாபாரம் நடப்பதற்காகவே மேற்கு ஆபிரிக்கக் கடற்கரையோரங்களில் சில கோட்டைகள் கட்டப்பட்டன. உள்நாடுகளிலிருந்து பிடிக்கப்பட்டவர்கள் இந்தக் கோட்டைகளில் சில மாதங்கள் அடைக்கப்பட்டனர். பின்பு கழுத்திலிருந்து காலுக்குச் சங்கிலி போடப்பட்டும், கையோடு கையும், காலோடு காலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், நான்கு அடி உயரமே உள்ள அறைகளில் திணிக்கப்பட்டார்கள். நாற்றமும் கழிவும் நிரம்பிய அறைகள் வெகு விரைவிலேயே நோயையும் இறப்பையும் கொண்டுவந்தன. தப்பிப்பிழைத்தவர்கள் அங்கே தயாராக நிறுத்திவைக்கப்பட்டிருந்த கப்பல்களில் ஏற்றப்பட்டு மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.

அடிமையாகச் செல்வதைவிட ஆபிரிக்க மண்ணிலேயே செத்துமடியலாம் என்று, சிலர் சாத்தியப்பட்டால் சங்கிலியோடு கடலில் குதித்து சுறாக்களுக்கு இறையானார்கள். வெளிநாட்டு மண்ணைத் தொடுவதற்குமுன்னர், அடிமைகளில் பாதிப்பேர் இறந்தனர்.

உயிர் பிழைத்துக் கொண்டுவரப்பட்டவர்கள் அமெரிக்காவிலுள்ள பெரிய நிலச்சுவான்தார்களுக்கு விற்கப்பட்டனர். இப்படி அடிமைகளாக விற்கப்பட்டவர்கள் வெள்ளையர் நிலங்களிலும் வீடுகளிலும் ஊதியம் எதுவும் இல்லாமல் உழைத்து தங்கள் அடிமைத் தளையிலிருந்து விடுபடாமலேயே தங்கள் வாழ்க்கையைக் கழித்து வந்தனர். அமெரிக்காவில் பெரும்பாலான வேலை பருத்தியை பறிப்பதுதான். இது முதுகொடியும் வேலை. இது ஒரு மனிதனின் கையை புண்ணாக்கி இரத்தம் வர வைக்கும். சவுக்கால் அடிபடுவது என்பது சர்வ சாதாரணம். 100 சவுக்கடி வரையிலும் வழங்கப்படும். இது விரலளவுக்கு ஆழமான சதைத் தோன்டிப் போகச் செய்தது. விழித்திருக்கும் ஒவ்வொரு வினாடியும் உழைப்பிலேயே கழிக்க வேண்டிய நிலை இந்த அடிமைகளுக்கு இருந்தது.

அறுவடையின் போது 18 மணி நேரமும், கர்ப்பமான பெண்களுக்கு பிரசவிக்கும் கடைசி நாள் வரையும் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

அடிமை முறையிலிருந்து விடுபட முயன்ற சில ஆபிரிக்கர்களுக்கு பிடிபட்டபின் பெரிய தண்டனைகள் காத்திருந்தன. வெள்ளைக்காரனை அடித்த அடிமையின் முகத்தில் பழுக்கக்காய்ச்சிய இரும்பால் முத்திரையிட்டார்கள். பொதுவாக உபயோகப்படுத்தப்பட்ட தண்டனை, அடிமைகளை மரத்திலிருந்து தொங்கவிட்டு அவர்களது இடுப்பிலும் தொண்டையிலும் இரும்புக்குண்டுகளை தொங்கவிடுவதாகும். இதனால் விடுபட விரும்பிய பலரும்; முயற்சிகளை மேற்கொள்ளாமலே வாழ்க்கை முழுவதும் அடிமைகளாகவே வாழ்ந்தனர்.

அடிமைச் சமூகத்தில் தற்கொலை விகிதமும் அதிகரித்து காணப்பட்டது. அடிமைகளை வைத்திருந்த எஜமானர்கள் மேலும் அதிகமாக அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவருவதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்த்தனர்.

மேலும் அவர்கள் விவசாய விலங்குகளைப்போல, வலிமை, உயரம், அளவு ஆகிய குணங்களை அதிகப்படுத்தும் நோக்கில், அடிமைகளை இனப்பெருக்கம் செய்யவைத்தார்கள். சில பெண் அடிமைகள் தொடர்ந்து கர்ப்பமாகவே வைக்கப்பட்டனர், இவர்கள் குழந்தை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் போல புதிய அடிமைகளை உருவாக்க வைக்கப்பட்டிருந்தார்கள். கருப்பு நிறப் பெண்களில் பலர் வெள்ளை ஆண்களின் உடல் பசிக்கு ஆளாகி நிறையக் கலப்புக் குழந்தைகள் பிறந்தனர். இப்படிப்பட்ட குழந்தைகளுக்கு கலப்பு என்ற பட்டம் கொடுக்கப்பட்டாலும் இவர்களைக் கறுப்பர்கள் என்றே பாவித்தனர். இந்தக் குழந்தைகளுக்குத் தகப்பன்மார்களாகிய வெள்ளையர்கள் இவர்களை தங்கள் குழந்தைகள் என்று கூறிக்கொள்ளாததால் இவர்கள் தாய்மார்களோடேயே வளர்ந்தனர். அல்லது தாயின் கணவனான கறுப்பு இனத்தைச் சேர்ந்தவன் இவர்களுக்குத் தகப்பனாகக் கருதப்பட்டான். தங்களிடம் அடிமைகளாக இருந்த பெண்ககளுக்குத் திருமணம் செய்விக்கும் முன்பு அந்தப் பெண்களோடு உடல் உறவு வைத்துக்கொள்ளும் முதல் உரிமை எஜமானுக்கே இருந்தது.

ஆபிரிக்கர்களுக்கு எழுதப் படிக்க உரிமை இல்லை. அப்படிப் படிக்க முயன்றவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர். அவர்களுக்கென்று தனி குடியிருப்புகள், தனி கிறிஸ்தவ ஆலயங்கள் இருந்தன. இந்தியாவில் தீண்டாமை இருந்தது போல் அமெரிக்காவிலும் ஆபிரிக்கர்களை வெள்ளையர்கள் தனிமைப்படுத்தினர்.

இவ்வாறாக ஆபிரிக்காவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அடிமை வியாபாரம் கொடிகட்டிப் பறந்தது. 1730ம் ஆண்டில் 15கப்பல்கள் மட்டும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தன. 1792ல் 132 கப்பல்களாக வளர்ந்து அடிமை வியாபாரம் அமோகமாக நடந்தது. இதில் இங்கிலாந்து அதிக இலாபம் சம்பாதித்தது. 1790ல் அமெரிக்காவில் 6லட்சத்து 97 கறுப்பின அடிமைகள் இருந்தனர். இது 1861ல் 40 லட்சமாக பெருகியதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அடிமைமுறை ஒழிப்பு முயற்சிகள்

பல மதங்களும், அரசர்களும், சான்றோர்களும் அடிமைகளை நல்ல முறையில் நடத்த கோரினாலும், 18ம் நூற்றாண்டின் பின் பகுதியிலிருந்துதான், அடிமைமுறையை மொத்தமாக ஒழித்து கட்டுவதற்கான குரல்கள் எழுந்தன. இவை முதலில் இங்கிலாந்தில் வில்லியம் வில்பர்போர்ஸ் என்பவரால் பிரசாரம் செய்யப்பட்டன. இவர் 1787ல் ஆரம்பிக்கப்பட்ட 'அடிமை ஒழிப்பு குழுவின்" முதல் தலைவர்.

பிரெஞ்சு புரட்சியின் போது 'முதல் குடியரசு" பிரகடனம் செய்யப்பட்ட பின், அடிமைமுறை தடை செய்யப்பட்டது. ஆனால் நெப்பொலியன் தலைவராக ஆனவுடன், அடிமைதனத்தின் பல தடைகள் நீக்கப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பல நாடுகள் அடிமை முறையை தடை செய்து ஒழித்தன. அதாவது அடிமைகளை வைப்பதும், பிடிப்பதும், விற்று வாங்குவதும், கடத்துதலும் தடை செய்யப்பட்டன. அடிமை ஒழிப்பு அமெரிக்க ஐக்கிய நாடுகளில் பெரிய அரசியல் பிரச்சினையாகி, அமெரிக்க உள்நாட்டுப் போருக்கு வித்திட்டது.

அடிமைகளைப் பொறுத்தவரையில் அநேகமாக பலசாலிகளாகக் காணப்பட்டனர். அவர்களுக்கு ஒன்றுசேரக்கூடிய வாய்ப்புகள் வழங்கப்படவில்லை. அவர்களின் சிந்தனை உரிமையும், கருத்து வெளியிட்டு உரிமையும் பறிக்கப்பட்டிருந்தது. இப்படிப்பட்ட பின்னணியில் சிறுகச் சிறுக ஏற்பட்ட மறைமுக எழுச்சியின் ஒரு விளைவாக 1791 ஆகஸ்ட் 22ம் தேதி இரவும் ஆகஸ்ட் 23ம் தேதியும் island of Saint Domingue (தற்போதைய ஹெய்டி) இல் அடிமை வியாபாரத்திற்கு எதிரான கிளர்ச்சி அடிமை வியாபாரத்தின் நெகிழ்விற்கு வித்தாகியது.

இக்கிளர்ச்சியையும் அதனால் ஏற்பட்ட எழுச்சியையும் நினைவு கூரும் வகையிலேயே இத்தினம் யுனெஸ்கோவினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஹெய்டி இராச்சியத்தில் ஏற்பட்ட கிளர்ச்சியினையடுத்து பல உலக நாடுகள் படிப்படியாக அடிமை வியாபாரத்தை தடைசெய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டன. உதாரணத்திற்கு சில நாடுகளை குறிப்பிடுவோமாயின் சிலி 1823இலும், ஸ்பெயின் 1837இலும், டொமினிகன் ரிபப்ளிக் 1844இலும், ஈகுவடார் 1854இலும், பிரேசில் 1888இலும் அடிமைமுறையைத் தடை செய்தன. இதே நேரத்தில் உலகத்தின் பெரும்பாலான கப்பல்படைகள் ஆபிரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கு இடையே நடந்துவந்த அடிமை வியாபாரத்தை நிறுத்திக்கொண்டன.

இன்று அமெரிக்க நாடுகளில் நீக்ரோக்கள் என்றழைக்கப்படும் கறுப்பினத்தவர்கள் அதிகமாக வாழ்கின்றார்கள் என்றால் அவர்கள் ஆபிரிக்கா கண்டத்திலிருந்து அடிமைகளாக அமெரிக்காவிற்கு கடத்திச் செல்லப்பட்டவர்களின் பரம்பரையினரே. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்தவர்களை அடிமைத் முறையிலிருந்து விடுவிக்க ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் முயன்றபோது ஆபிரிக்கர்களை அதிக அளவில் அடிமைகளாக வைத்திருந்த தென் மாநிலங்களில் வாழ்ந்த வெள்ளையர்கள் (இந்த மாநிலங்களில்தான் பெரிய பண்ணைகளில் ஆபிரிக்கர்கள் கடுமையாக உழைத்தனர்) தங்களுக்கு ஏற்படும் இழப்பைக் கருதி லிங்கனின் திட்டத்தை எதிர்த்துத் தென் மாநிலங்களைத் தனி நாடாகப் பிரகடனப்படுத்தினர். இதனால் 1861இல், அதாவது ஆப்ரகாம் லிங்கன் பதவி ஏற்றவுடனேயே அமெரிக்க உள்நாட்டுப் போர் மூண்டது.

உள்நாட்டுப் போரில் தென்மாநிலங்களை லிங்கனின் தலைமையில் அமைந்த வட மாநிலங்கள் கடைசியாக வெற்றிகொள்வதற்கு முன்னால் நாடு முழுவதும் ஆபிரிக்கர்களை அடிமை முறையிலிருந்து விடுவிக்கும் பிரகடனத்தை லிங்கன் வெளியிட்டார்.

சட்டப்படி ஆபிரிக்கர்கள் அடிமை முறையிலிருந்து விடுவிக்கப்பட்டாலும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த இனவெறியர்கள் அவர்களைச் சுதந்திர மனிதர்களாக வாழ விடவில்லை. இந்த கறுப்பினத்தவர்களுக்கு எத்தகைய உரிமைகளும் வழங்கப்படவில்லை. இந்நிலையில் கறுப்பினத்தவருக்கெதிராக 1965ஆண்டுவரை அமுலில் இருந்த எல்லாத் தடைகளையும் நீக்கி முதல் முதலாக அமெரிக்க ஜனாதிபதி லிண்டன் ஜோன்ஸன் ஆபிரிக்கர்களுக்கு நிபந்தனையற்ற வாக்குரிமையை வழங்கினார்.

அன்றிலிருந்து நீக்ரோக்கள் என்று அழைக்கப்பட்டு வந்த, ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டவர்களின் சந்ததிகள் ஆபிரிக்க - அமெரிக்கர்கள் என்று அழைக்கப்படலாயினர். அவர்களுக்கென்றிருந்த தனிப் பள்ளிகள், தனிக் கோவில்கள், தனிப் பொழுதுபோக்கு இடங்கள் என்பதெல்லாம் மெதுவாக மறையத் தொடங்கின.

கறுப்பினத்தவர்கள் வாக்குரிமை பெற்று ஐம்பத்தைந்து ஆண்டுகள் நிறைவடையும் வேளையில் ஒரு கறுப்பினத்தவரான பராக் ஒபாமாவை ஜனாதிபதியாகக் கூடிய அளவிற்கு கறுப்பினத்தவர்கள் இன்று உரிமைகளைப் பெற்றுள்ளனர்.

முதல் பக்கம்.... மூன்றாம் பக்கம்....

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X