For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாதுகாப்பாக கொண்டாடுங்கள் தீபாவளியை!

By Mayura Akilan
Google Oneindia Tamil News

Fireworks
பட்டாசும், பலகாரமும்தான் தீபாவளிக்கு அழகு. அதுவும் பண்டிகைக்கு நான்கு நாட்களுக்கு முன்பிருந்தே வீடுகளில் சுடும் முருக்கும், அதிரசமும் தெருவெல்லாம் மணக்கும். நடுநாயகாமாய் அடுப்பை வைத்து அதில் கொதிக்க, கொதிக்க எண்ணெய் சட்டி வைத்து அம்மாவும், பாட்டியும் பலகாரம் சுடும் அழகை பார்ப்பதே ஒரு வேடிக்கைதான்.

பலகாரம் சுடத் தெரியாது என்றாலும் அதற்குத் தேவையான ஏற்பாடுகளை செய்து தருவதில் நானும் என் தங்கையும் கெட்டிக்காரர்கள். என்னதான் பாதுகாப்பாக பார்த்து, பார்த்து செய்தாலும் கொஞ்சமாவது எண்ணெய் தெரித்து கொப்புளம் ஏற்படாமல் இருந்ததில்லை. அடுத்த தீபாவளி வரைக்கும் அந்த காயம் நினைவூட்டிக்கொண்டே இருக்கும். காயம் ஒரு புறம் ஏற்பட்டாலும் அம்மா சுட்ட பலகாரத்தை ஒரு கை பார்க்காமல் விட்டதில்லை. என்னவோ நான்தான் சுட்டேன் என்பது போல தோழிகளுக்கும் கொடுத்து என் கையில் ஏற்பட்ட காயத்தை நான்கு பேராவது விசாரிக்கும் படி செய்து விடுவேன். எனக்கு ஏற்பட்ட காயம் பிறருக்கு நேரக்கூடாது என்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த கட்டுரையின் நோக்கம்.

எண்ணெய் கொப்புளத்தில் இருந்து தப்பிக்க:

தீபாவளிப் பலகாரம் செய்யும் மிகுந்த கவனமுடன் எண்ணெயை கையாள வேண்டும். கொதிக்கும் எண்ணெய் பட்டால் அதன் ரணம் எளிதில் ஆறாது என்பதால் அடுப்பினை மேடை மீது வைத்து நின்று கொண்டு மட்டுமே பலகாரம் சுடவேண்டும்.

முருக்கு, அதிரசம் ஆகியவற்றை செய்யும் போது நீளமான கரண்டியின் மூலம் எண்ணெயில் போடவேண்டும். இதனால் எண்ணெய் கையில் தெரிப்பது தவிர்க்கப்படும். சீடை செய்யும் போது சற்று ஜாக்கிரையாக கையாளவேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எண்ணெய் சட்டிக்கு நேராக முகத்தை கொண்டு போகக் கூடாது. ஏனெனில் ஒரு சீடைகள் எப்பொழுது வேண்டுமானலும் வெடித்து முகத்தை பதம் பார்க்கும். கூடுமானவரைக்கும் எண்ணெய் பொங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும். கொதிக்கும் எண்ணெய் உடலில் கொட்டிவிட்டால் உடனே அந்த இடத்தை கையினால் தேய்க்கக் கூடாது. காயத்தின் மீது குளிர்ந்த நீரை ஊற்ற வேண்டும். பிறகு வெள்ளைத் துணியால் மூடி மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

கைத்தறி புடவை

அடுப்பின் முன் நிற்கும் போது கைத்தறி அல்லது திக்கான நூல் புடவையை கட்டிக்கொள்வது நல்லது. அப்பொழுதுதான் நெருப்பு பற்றும் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம். முந்தானையை இழுத்து சொருகிக் கொள்வது பாதுகாப்பானது. அஜாக்கிரதையாக கையாளும் போது ஒரு வேளை நெருப்பு பற்றிக்கொண்டால் ஓடக்கூடாது. தரையில் விழுந்து புரண்டு நெருப்பை அணைக்க முயல வேண்டும். ஈரமான, கனமான சாக்கு அல்லது போர்வையால் உடலை சுற்றி தீயை அணைக்கலாம். முக்கியமாக குழந்தைகளை அடுப்பின் முன்போ, எண்ணெய் சட்டியின் அருகிலோ அனுமதிக்காமல் இருப்பது பாதுகாப்பானது.

பட்டாசும், மத்தாப்பும்

பட்டாசு இல்லாத தீபாவளியை நம்மில் பலரால் நினைத்துக் கூட பார்க்க முடியாது. ஆனால் குழந்தைகள் வெடி வெடிக்கும் போது விபத்துக்கள் நிகழாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யவேண்டியது பெற்றோர்களின் கடமை. மத்தாப்பு உள்ளிட்ட சிறு சிறு வெடி என்றாலும் எக்காரணத்தைக் கொண்டும் வீட்டிற்குள் வெடிக்க அனுமதிக்கக் கூடாது. ஏனெனில் சிறு நெருப்புப் பொறிதான் மிகப்பெரிய விபத்துக்களுக்கு காரணமாகிறது.

வெட்ட வெளியில் மட்டுமே வெடிகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். அருகில் எப்பொழுதும் தயாராக வாளி நிறைய தண்ணீர் வைத்துக் கொள்வது அவசியம். முக்கியமாக வெடிகளை மொத்தமாக ஒரே இடத்தில் குவித்து வைத்துக்கொண்டு வெடிக்க அனுமதிக்கக் கூடாது. நீளமாக குச்சியில் தீக் கங்குகளை வைத்து மட்டுமே வெடிகளை வெடிக்க அனுமதிக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் வெடிக்காத பட்டாசுக்கு நேராக முகத்தை நீட்டி பார்க்க அனுமதிக்கக் கூடாது. திடீரென்று அவை வெடித்து விட்டால் முதலுக்கே மோசமாகிவிடும்.

பூ மத்தாப்பு, பூச்சட்டி, போன்றவைகளை கொளுத்தும் போது சற்று முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏனெனில் அதிக மருந்தின் வேகத்தில் ஒரு சில பூச்சட்டிகளும் இப்பொழுதெல்லாம். எதிர்பாராமல் வெடிக்கின்றன.

தண்ணீர் ஊற்றுங்கள்

இத்தனை முன்னெச்சரிக்கையையும் மீறி தீக்காயம் ஏற்பட்டு விட்டால் பதறக்கூடாது. முதலில் காயத்தின் மீது குளிர்ந்த நீரை ஊற்றி எரிச்சலை குறைக்க வேண்டும். இது தீப்புண் ஆழமாவதை தடுக்கும். தீப்பட்ட இடத்தில் தண்ணீர் ஊற்றினால் தோல் கெட்டுப்போகும் என்பார்கள். தோல்தான் ஏற்கனவே வெந்துபோய் விட்டதே எனவே அதிக காயம் ஏற்படுவதை தடுக்க தயங்காமல் தண்ணீர் ஊற்றலாம்.

உடனடியாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். ஏனெனில் காயம் எந்த அளவிற்கு இருக்கிறது என்பது மருத்துவருக்கு மட்டுமே தெரியும். காயத்தின் மீது உடனடியாக வெள்ளைத் துணியைப்போட்டு மூடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். வெடி வெடித்து கண்ணில் தீப்பொறி பட்டிருந்தால் உடனே கண் மருத்துவரிடம் செல்ல வேண்டும்.

உற்சாகமான பண்டிகை கொண்டாட்டத்தில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடை பிடித்தால் அனைவருக்கும் என்னென்றும் இனிமையான தீபாவளிதான்.

English summary
Diwali is a colorful festival. Irrespective to the god or the reason it may concern, all people love to celebrate it with joy, love, and happiness. Avoid children near these crackers. Some flower pot, chakras, crackles are loveable items of children. Instruction to handle them will be clearly stated in the manual of the crackling box. Read them very carefully as it may be helpful to safe guard ourselves. So, have safe diwali with crackers and happy diwali with sweets.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X