For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இயக்குநர் சீனு ராமசாமியின் 'காற்றால் நடந்தேன்'- கவிதை வெளியீடு!

By Shankar
Google Oneindia Tamil News

Seenu Ramasamy's Kaatral Nadanthen poetry release
மூன்று தேசிய விருதுகள் பெற்ற தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் இயக்குநர் சீனுராமசாமி எழுதிய 'காற்றால் நடந்தேன்" கவிதை நூல் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்டது.

நூலை பேராசிரியர் சுப.வீரபாண்டியன் வெளியிட, தமிழச்சி தங்கபாண்டியன் பெற்றுக் கொண்டார். விழாவில் நடிகர் விவேக் விமர்சன உரையாற்றினார்.

விழாவில் எழுத்தாளர்கள் இந்திரா பார்த்தசாரதி, எஸ்.ராமகிருஷ்ணன், மனுஷ்யபுத்திரன், ஷாஜி, நடிகர் சார்லி, பாடலாசிரியர் நா.முத்துக்குமார், தயாரிப்பாளர் தனஞ்செயன் மற்றும் சினிமா, இலக்கியம் சார்ந்த பலர் கலந்து கொண்டனர். விழாவில் உயிர்மை 100வது இதழின் வெளியீட்டு நிகழ்வும் நடந்தது.

மனுஷ்ய புத்திரன்

'வாழ்வின் அந்தரங்க, அபூர்வமான தருணங்களை நுட்பமும் இதமும் கூடிய சொற்களால் எழுதியுள்ள சீனுராமசாமி கவித்துவ காட்சியமைப்புக்களுடன் கூடிய தென்மேற்குப் பருவக்காற்று படத்தின் மூலம் தேசிய அங்கீகாரம் பெற்றுத் தந்தவர். இப்போது காற்றால் நடந்தேன் தொகுப்பு மூலம் கவிதையில் முத்திரை பதிக்கிறார்" என்றார் மனுஷ்ய புத்திரன்.

சினிமாவும் இலக்கியமும் இணைய வேண்டும்

“நான் நிறைய படிப்பவன், அதை வெளியே காட்டிக் கொள்வதில்லை. ஏனென்றால் அறிவாளி என்று ஒதுக்கி வைத்துவிடுவார்கள். ஒருநாள் இரவு எனக்கு போன் செய்த சீனுராமசாமி, 'நீங்கள் மரங்களை நடுகிறீர்கள், ஒரு நடிகர் என்பதற்கு மேலாக நீங்கள் சமுதாயத்திற்கு செய்யும் நற்காரியம் இது. உங்கள் மரம் நடும் விழாவிற்கு என்னைக் கூப்பிடுங்கள். உங்களை வாழ்த்தி நிறைய பேச வேண்டும்' என்றார். அந்த அளவுற்கு மனிதாபிமானி.

பாண்டிச்சேரியில் ஷூட்டிங் முடித்துவிட்டு 'தள்ளாடாமல்" இந்த விழாவிற்கு வந்திருக்கிறேன். பேருந்துகளில் கரம், சிரம் புறம் நீட்டாதீர்கள் என்கிற வாசகம் எனக்குப் புரிகிறது. பக்கத்தில் எழுதப்பட்டிருக்கிற திருக்குறள் எனக்குப் புரியவில்லை. அதன் உரையைப் படித்துவிட்டுத்தான் புரிந்து கொள்ள முடிகிறது. அந்த அளவிற்குத்தான் எனக்கும் கவிதைகளுக்கும் உள்ள நெருக்கம்.

சீனுராமசாமி எழுதிய கவிதைகளைப் படித்தேன். எனக்கு முன் பேசியவர்கள் இந்தப் புத்தகத்திலுள்ள எல்லா கவிதைகளையும் மேற்கோள் காட்டி பேசிவிட்டார்கள். ஓர் இயக்குநர் எழுதிய கவிதைகள் என்பது காட்சிகளை உள்ளடக்கிய சொற்றொடர்கள் உணர்த்தியது. காமெடியன்களுக்கு மறுபக்கம் உண்டு. நான் மரங்களை நட்டு சுற்றுப்புறச் சூழலை பாதுகாக்க முயல்கிறேன். நகைச்சுவை நடிகர் ஏ.கருணாநிதி பறவைகளைப் பற்றி ஆய்வு செய்திருக்கிறார். தமிழ் இலக்கியமும் திரையிலக்கியமும் இணைந்து செயல்பட வேண்டும். இலக்கியவாதிகளை சினிமாக்காரர்கள் அரவணைக்க வேண்டும். சினிமாவும் இலக்கியமும் இணைய வேண்டும். அதற்கு சீனுராமசாமி அச்சாரம் போட்டிருக்கிறார்," என்றார்.

சுப.வீரபாண்டியன்

"ஒரு பைலட் அழுக்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பறக்கக் கூடாது. அதேபோல் கவிஞர்கள் காமரசத்தை மட்டும் எழுதக்கூடாது. காமம் என்பது ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்கும் ஓர் உணர்ச்சி, அதை யாரும் தூண்டி விடாமலே கிளர்ந்தெழும். நாம் தூண்டி விட வேண்டியது சமூக உணர்ச்சியைத்தான், அதை கவிஞர்கள் செய்ய வேண்டும். சீனு ராமசாமி செய்திருக்கிறார்," என்றார் எழுத்தாளர் சுப வீரபாண்டியன்.

தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசும்போது, "நவீன கவிதை உலகில் ஒரு புதிய கவிஞராக சீனுராமசாமி தடம் பதிக்கிறார். ஒவ்வொரு கவிதைக்குப் பின்னாலும் உள்ள ஓர் உணர்ச்சிகரமான சூழலை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு கவிதையையும் சர்வதேச தரத்துடன் உலக இலக்கியங்களுடன் ஒப்பிட முடிகிறது. இதில் மகள் குறித்த கவிதை, தாத்தா பற்றிய கவிதை போன்றவற்றை ஆழ்மன உணர்வில் ஒரு மழலையாய் மாறி எழுதியிருக்கிறார். என் தோழன் சீனுராமசாமி நவீன இலக்கிய உலகின் அமைதியான சூழலில் ஆழமான தன் வருகையை பதிவு செய்திருக்கிறார், வாழ்த்துக்கள்," என்றார்.

சீனு ராமசாமி ஏற்கெனவே 'ஒரு வீட்டைப் பற்றிய உரையாடல்' என்ற நூலை எழுதியுள்ளார். காற்றால் நடந்தேன் அவரது இரண்டாவது படைப்பு. உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது.

English summary
Seenu Ramasamy, the National Award winning director's second poetry Kaatral Nadanthen has released in Chennai amidst the top Tamil laurels on Friday.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X