
குவைத்: குவைத்தில் குவைத் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் சார்பில் கடந்த 15ம் தேதி மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது.
குவைத்தில் பல்வேறு சமூக நல பணிகளை செய்து வரும் குவைத் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரம் (KIFF) குவைத் மத்திய ரத்த வங்கி மற்றும் அல்நூர் மருத்துவமனையுடன் இணைந்து கடந்த 15ம் தேதி மாபெரும் ரத்ததான முகாமினை சல்மிய அரசு பள்ளியின் ஹாலில் நடத்தியது.
பிற்பகல் 2.15 மணிக்கு ரத்ததான முகாம் துவங்கியது. வரவேற்புரையைத் தொடர்ந்து டாக்டர். சன்னி வர்கீஸ் ரத்த தானத்தின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். அதன் பிறகு ஃபோரமின் பொதுச் செயலாளர் அம்ஜத் அலி அவர்கள் முகாமின் நோக்கத்தை பற்றி விளக்கி கூறினார். மேலும் கேகேஎம்ஏ கர்நாடக பிரிவின் தலைவர் மற்றும் சமூக ஆர்வலர் மலாயி மூஸா கோயா அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். அதன் பிறகு இரத்த தானம் நடைபெற்றது.
முகாமில் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு இரவு 7 மணி வரை ரத்த தானம் செய்தனர். குவைத் மத்திய ரத்த வங்கியின் சார்பாக குவைத் இந்தியா ஃப்ரெட்டர்னிட்டி ஃபோரத்திற்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும் ரத்தம் கொடுக்க வந்தவர்களுக்கு வாகன வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.










