For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தாழப் பறக்கும் காக்கைகள்- 1: பிரதமருக்கு பிறந்தநாள் பரிசு

By Shankar
Google Oneindia Tamil News

- கதிர்

பிறந்த நாள் அன்று நல்ல செய்தி வந்தால் கொண்டாட்டம் களை கட்டும். மோடி எதிர்பார்த்து இருக்கலாம். இடைத்தேர்தல் முடிவுகள் இப்படி ஆகும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை.

நாடாளுமன்ற தேர்தல் வெற்றியை அமோகம் என்று வர்ணித்தார்கள். சரியான மதிப்பீடு. இடைத்தேர்தல் முடிவுகளை படுதோல்வி என்பதும் சரியான மதிப்பீடு. பிரதமராகி 100 நாட்களே கடந்துள்ள நிலையில் மக்கள் வழங்கியுள்ள பரிசு முட்கள் பொதிந்தது.

ஒன்பது மாநிலங்களில் தேர்தலை எதிர்கொண்ட மூன்று மக்களவை தொகுதிகளையும் சேர்த்தால் 54 சட்டசபை தொகுதிகள். இவற்றில் 42 தொகுதிகளை மே மாத தேர்தலில் வென்றிருந்தது பிஜேபி. அதில் சரிபாதியை இப்போது இழந்திருக்கிறது. வேடிக்கை என்னவென்றால், பிஜேபி எம்எல்ஏக்கள் அன்று எம்.பி.யாகி போனதால்தான் இன்று இடைத்தேர்தல். சந்தேகமே இல்லை, இது மோசமான தோல்வி.

பிஜேபி தலைவர்கள் மறுக்கிறார்கள். இடைத்தேர்தல்களால் எந்த அரசியல் மாற்றமும் நிகழ்ந்துவிடாது என்கிறார்கள். அது உண்மை. பிரதமர் பிரசாரம் செய்யவில்லையே என்கிறார்கள். அதுவும் உண்மை. இடைத்தேர்தல்களில் முதல்வரோ பிரதமரோ பிரசாரத்துக்கு போவதில்லை என்பது ஒரு மரபு.நீண்ட காலமாக பின்பற்றப்பட்டது. மாநிலங்களில் மரபை அடக்கம் செய்துவிட்டனர். தேசிய அளவில் மரபை காப்பாற்ற மோடி விரும்புகிறாரோ என்று ஒரு தலைவரை கேட்டேன்.

'அவர் என்ன மாநில முதலமைச்சரா, முனிசிபல் கார்ப்பரேஷன் இடைத்தேர்தலில்கூட வார்டு வார்டாக சென்று பிரசாரம் செய்வதற்கு? பிரதமருக்கு நிறைய வேலை இருக்கிறது. செய்து முடிக்க நேரம் போதவில்லை' என்று பஞ்ச் வைத்து பதிலளித்தார்.

பாமர வாக்காளர்களுக்கு அந்த வேலையெல்லாம் விளங்கவில்லை. ‘அடேங்கப்பா, ஜெர்மனிக்கு போகிறார், பிரேசிலுக்கு பறக்கிறார், ஜப்பான் செல்கிறார், பூட்டான் போகிறார்.இவர் போகாத நேரங்களில் ஆப்கானிஸ்தான் அதிபர் முதல் ஜாம்பியா பிரதமர் வரை டெல்லிக்கு வந்து மோடியுடன் கைகுலுக்குகிறார்கள். ஆத்திர அவசரத்துக்கு நேரம் இருக்காது போல' என்று ஆச்சரியம் பேசுகிறார்கள்.

உலகமயம் என்ற பேனரில் பூமியை செல்போனில் சுருக்கிய பிறகு எந்த நாடும் தீவாக இயங்க வழியில்லை. இந்தியா மாதிரி வல்லரசாகும் ஆசையில் துடிக்கும் நாடுகள் சர்வதேச அரசியலை தவிர்க்க வழியில்லை. ஆனாலும் பாமரர்களுக்கு எங்கே புரிகிறது? நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தில் மோடி ஆவேசமாக பேசியதும், கட்சிக்காரர்கள் கொடுத்த வாக்குறுதிகளும்தான் வாக்காளர் கண்களில் நிழலாடுகின்றன. எந்த எந்த கடமைகளை ஆற்றத் தவறியதாக காங்கிரஸ் அரசாங்கத்தை மோடி வறுத்தெடுத்தாரோ, எந்த எந்த பணிகளை ஆட்சிக்கு வந்தால் விரைந்து முடிப்பேன் என முழங்கினாரோ அந்த வேலைகளே அவர்களின் காதில் ரீங்காரம் இடுகின்றன.

நமக்கெல்லாம் பரிச்சயமாகாத பல மகானுபாவர்கள் வட மாநிலங்களில் மேடை போட்டு மோடி பிரதமராவதற்கு அணிலாக பாடுபட்டார்கள். பாபா ராம்தேவ் போன்ற கார்ப்பரேட் சாமியார்கள் மறக்க முடியாதவர்கள். காஷ்மீர் முதல் கன்யாகுமரி வரை இந்தியா மொத்தத்தையும் சோனியாவும் குடும்பமும் வெளிநாட்டில் அடகு வைத்து, அதில் கிடைத்த பணத்தை சுவிஸ் பாங்கில் போட்டு வைத்திருக்கிறது என்று இவர்கள் பிரசாரம் செய்தனர். பாமரர்கள் மத்தியில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தியதால், பிஜேபி தலைவர்கள் தடுக்கவில்லை. அவர்களே அதிகபட்சம் 20 லட்சம் கோடி இருக்கலாம் என்று எச்சில் விழுங்கி பேசியபோது, மேற்படி சாமியார் அன் கோ 400 லட்சம் கோடி கருப்புப்பணத்தை காங்கிரசும் அதன் ஆட்சியில் பலன் அடைந்த தொழிலதிபர்களும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கி வைத்திருப்பதாக பிரகடனம் செய்தது. இந்த எண்ணிக்கைக்கு எத்தனை பூஜ்யம் உண்டு, அந்த தொகையை இந்தியாவுக்கு கொண்டுவர எத்தனை விமானங்கள், ரயில்கள், கப்பல்கள் தேவைப்படும் என்று பாடமே நடத்தினார்கள். 'அந்த பணம் மட்டும் வந்துவிட்டால் நீங்கள் கரன்சி கட்டிலில் உறங்கலாம்' என்று ஆசை காட்டியதில் வாய் பிளந்தனர் வாக்காளர்கள். கண்ணாடி வியாபாரியாக மாறி தூக்கம் தொலைத்தார்கள்.

ரிலீசுக்கு முன் ஓவர் பில்டப் கொடுத்தால் சூப்பர் படமும் ஊத்திக் கொள்ளும் என்ற கோலிவுட் ஒன்லைனுக்கு ஏற்ப, நான்கு மாதம் ஆகியும் கைக்கு பணம் வராத ஆத்திரத்தை மக்கள் வெளிக்காட்டியுள்ளனர். ஏழைகளுக்கு வங்கி கணக்கு தொடங்கும் மோடியின் திட்டத்தை இதைவிட தவறான நேரத்தில் தொடங்கியிருக்க முடியாது. 'சுவிஸ் வங்கியிடம் எந்த தகவலும் கிடைக்காது; கிடைத்தாலும் பணம் வராது; காரணம், அந்தளவு யார் பெயரிலும் பெரிய தொகைகளே இல்லை' என்ற தகவல் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தலைவர் வாயிலாக வெளியாகிக் கொண்டிருந்தது. ஆக, இது கானல் நீர்தானா என்று மக்கள் கண் கசக்கும் வேளையில், ‘கன்டெய்னரில் வரும் கருப்புப்பணத்தை உங்கள் அக்கவுண்டில் போடுவார்களாம்' என்று பிரதமர் திட்டத்தை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் உசுப்பிவிட வழி கிட்டியது. அதற்கு நல்ல பலன்.

பாகிஸ்தானிடமும் சீனாவிடமும் மன்மோகன் அரசு பயந்து சாகிறது என்று மோடி அப்போது பேசியதும் மக்கள் மனதில் பதிந்தது. இரும்பு மனிதர் வல்லபாய் படேலின் உண்மையான வாரிசான மோடி மட்டும் பிரதமர் ஆகிவிட்டால், பாகிஸ்தான், சீனா போன்ற எதிரிநாடுகள் நம்மிடம் மண்டியிடுவதை தவிர போக்கிடம் இல்லை என்று அந்த பதிவுகள் மேல் ஒரு பிம்பம் சுமத்தப்பட்டது. ஆனால் எல்லையில் 45 ஆண்டுகளில் இல்லாத எண்ணிக்கையில் இந்த நான்கு மாதத்தில் பாகிஸ்தான் அத்துமீறியுள்ளது. சீனாவின் செம்படை கோடு தாண்டி வந்து நமது வீர்ர்கள் சாலை அமைப்பதையும் குடில் அமைப்பதையும் துப்பாக்கி முனையில் தடுக்கிறது. அதிபர் ஜின்பிங் ஆமதாபாத் வந்து மோடியுடன் சபர்மதி நதிக்கரையில் நடை பயிலும் நேரத்தில், லடாக்கில் நமது வீர்ர்களை செம்படை இரண்டாவது நாளாக மடக்கி வைத்திருக்கிறது. ஆயிரம் கோடி டாலர்களை இந்தியாவில் முதலீடு செய்ய சீனா முன்வருவதை கண்டு மக்கள் குதூகலிக்கவில்லை. எல்லை பதட்டம் தணிந்து பரஸ்பர சந்தேகம் விலகி நம்பிக்கையான சூழல் உருவாகும் வரை சீனாவுக்காக அவர்கள் கரகோஷம் செய்யப் போவதில்லை. பாரம்பரியமாகவே இது தொடர்பான விரிவான செய்திகள் இந்தி ஊடகங்களால் மக்களை எளிதில் சென்றடைகின்றன. பார்த்து
விட்டு '56 இஞ்ச் அது இதுன்னு சொன்னாங்களே, கடைசில விவேக் மாதிரி வெயிட் லிஃப்டர்தானா...' என்று நடையைக் கட்டுகிறார்கள்.

பிஜேபி ஆட்சிக்கு வந்ததும் பதுக்கல்காரர்கள் தலைமறைவாகி விடுவார்கள். அதனால் விலைவாசி குறையும் என்ற வாக்குறுதி காற்றோடு போனது மற்றொரு முக்கியமான ஏமாற்றம். ரிசர்வ் பாங்கும் நிதித் துறையும் புள்ளி விவரங்களை அள்ளி வீசலாம். மக்கள் பொறுக்க தயாரில்லை. தினமும் சந்தைக்கு எடுத்துச் செல்லும் பையில் வாங்கிவரும் பொருட்களின் கனமும், அதற்காக சட்டைப்பையில் இருந்து எடுத்துக் கொடுக்கும் பணமுமே அவர்களின் நிரந்தர அளவுகோல். மாநில அரசுகள் மீது அவர்கள் கோபத்தில் இருந்தபோது, மோடிதான் சொன்னார் ‘விலைவாசியைக் குறைக்க வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் மத்திய அரசுக்கு இருக்கிறதே தவிர, மாநில அரசுகளுக்கு அல்ல' என்று. மக்கள் மறந்து விடுவார்களா?

Modi

பிஜேபியின் தோல்விக்கு காரணங்களை அடுக்கிக் கொண்டே போகலாம். வி.கே.சிங், கோபால் சுப்ரமணியம், நம்மூர் சதாசிவம்... என்று சறுக்கல்கள் எத்தனை. விஸ்தரித்தால் காங்கிரஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கை போல் ஆகிவிடும். ஒரு தலைவர் மீதும் ஆட்சியின் மீதும் மக்களுக்கு இத்தனை விரைவில் கோபம் வர ஒரு காரணம் மட்டும் போதாது. பல இருக்கும். திருத்திக் கொள்ளாவிட்டால் காலப்போக்கில் அது கசப்பாக மாறும். தூக்கி கடாசத் தீர்மானிப்பார்கள். காங்கிரஸ் அரசுக்கு அதுதான் நடந்தது. எனவே, இப்போதைய வெற்றிகளைக் கண்டு ஆனந்தத்தில் அக்கட்சி துள்ளிக் குதிப்பதில் அர்த்தமில்லை. இந்த தோல்வியை பாடமாக எடுத்துக் கொண்டு மோடியும் அவரது கட்சியும் அணுகுமுறையைத் திருத்திக் கொள்ள நிறையவே அவகாசம் இருக்கிறது.

மனம் இருக்கிறதா என்றுதான் தெரியவில்லை. ஆட்சியிலும் கட்சியிலும் தனது நிலையை பலப்படுத்திக் கொள்ள மோடி எடுக்கும் நடவடிக்கைகள் நமக்கு புரிகிறது. கொடுத்த வாக்குறுதிகளை குறுகிய காலத்தில் நிறைவேற்றும் மோடிமஸ்தான் வித்தையெல்லாம் வேலைக்காகாது என்பதும் தெரிகிறது. ஆனால், போகப்போக ஒவ்வொன்றாக நிறைவேறும் என்ற நம்பிக்கையை இன்னும் அவரால் மக்கள் மனதில் விதைக்க முடியாதிருப்பது சோகம்.

தன்னோடு இருப்பவர்களையே அவர் நம்பவில்லை என்பது போலத் தோன்றுகிறது. அத்வானி, ஜோஷி போன்ற முதியவர்கள் ஒதுக்கப்பட்டதில் குற்றமில்லை. அடுத்துள்ள சீனியர்களான ராஜ்நாத் சிங், அருண் ஜேட்லி, சுஷ்மா ஸ்வராஜ், நிதின் கட்கரி போன்றவர்களுக்கு இடையில் பரஸ்பர மரியாதையும் நம்பிக்கையும் இருப்பதாக தெரியவில்லை. கட்சிக்கு அமித் ஷாவையும் அரசுக்கு ஜேட்லியையும் நம்பினால் போதும் என்கிற அளவுக்கு மோடி முடிவு எடுத்திருக்கலாமோ?

கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள் ஆகியோரைப் பற்றி நம்மைவிட மோடிக்கு அதிகம் தெரியும். அதனால் அவர்களை முழுமையாக நம்பத் தயங்கலாம். ஆனால், அது தவிர்க்க முடியாதது. ஒவ்வொரு தலைவனும் சந்திக்க வேண்டிய, சமாளிக்க வேண்டிய சிக்கல் அது. அதிகாரத்தைப் பிரித்துக் கொடுத்துதான் ஆக வேண்டும். பொறுப்புகளை உணர்ந்து அவர்கள் சுயமாக முடிவுகள் எடுக்க சுதந்திரம் கொடுத்துதான் தீர வேண்டும்.

எந்தத் தளபதிக்கும் அவன் விரும்பிக் கேட்கும் வீர்ர்கள் கிடைப்பதில்லை. கிடைத்தவர்கள் எல்லாரும் அப்பழுக்கற்ற வீர்ர்களாக இருப்பதில்லை. அனைவரையும் ஒருங்கிணைத்து கட்டுக்கோப்பாக வழிநடத்தி போர்களை வெல்வதில்தான் தலைவனின் பெருமை அடங்கியிருக்கிறது.

இந்தியா மிகப்பெரிய நாடு. 130 கோடி பிரஜைகளையும் எண்களுக்கு அப்பாற்பட்ட அபிலாஷைகளையும் நிர்வாகம் செய்யும் பொறுப்பு அசாத்தியமானது. மனிதனால் ஆகுமோ என மற்ற நாடுகள் வியப்பது. ஒரு மாநிலத்தை ஆள்வதற்கும் ஒட்டுமொத்த இந்தியாவை மேலாண்மை செய்வதற்கும் நிரம்ப வேறுபாடுகள் உண்டு. வெறும் நான்கு மாதங்களில் அந்த நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கு மோடி ஒரு ஞானியல்ல. முரட்டு தோற்றமும் பேச்சில் ஆவேசமும் பின்னணியில் கசப்புகளும் கொண்ட ஓர் அரசியல்வாதி.

கடுமையாக எதிர்த்தவர்களுக்கும் அவர் மீது நம்பிக்கை ஏற்பட உதவியது செங்கோட்டையில் நிகழ்த்திய சுதந்திர தின உரை. வகிக்கும் உயரிய பொறுப்புக்கு தகுதி உடையவனாக தன்னை மாற்றிக் கொள்ளும் ஆற்றல் இந்த ஆளுக்கு இருக்கிறது; அதற்கான தொலைநோக்கு வசப்படும்போல் தெரிகிறது என்ற ஒளிக்கீற்று அந்தத் தருணத்தில் கிளம்பியதுதான்.

மக்களின் மனதைப் படிக்கத் தெரிந்தவர் மோடி. இல்லையேல் இவ்வளவு தூரம் வந்திருக்க இயலாது. கோஷங்களை உருவாக்கித் தரும் வார்த்தைச் சித்தர்களை விடுப்பில் அனுப்பிவிட்டு, ஆற அமர யோசித்தால் தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அனுப்பியுள்ள செய்தியை அவரால் நிச்சயம் வாசிக்க முடியும். அடுத்த மாதம் தேர்தலைச் சந்திக்கும் மகாராஷ்டிராவில் பிரசாரம் செய்யப் புறப்படுவதற்குள் செய்தால் அவருக்கும் நல்லது.

-வெள்ளிதோறும் தொடரும்

தொடர்புக்கு: [email protected]

கட்டுரையாளர் பற்றி...:

கதிர் எனும் கதிர்வேல்..

இன்றைக்கு ஊடகத்துறையில் முன்னிலையில் உள்ள பலருக்கும் ஆசிரியர் என்றால் இவர்தான். கதிர்வேல் எனும் முழுப் பெயர் கூட பலருக்கும் தெரியுமா என்பது சந்தேகமே... பொதுவாக அனைவருக்கும் அவர் 'கதிர் சார்'!

இவர், ஆங்கில இலக்கியத்தில் முதுநிலை முடித்து தற்செயலாக தமிழ் ஊடகத்தில் பிரவேசித்த வாசகன். என்றுமே தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ள விரும்பாதவர்.

முன்னணி நாளிதழ்கள், சஞ்சிகைகளில் வெற்றிகரமான ஆசிரியராக வலம் வந்தவர்.

இதழியலில் சாதிக்க, இலக்கணத்தை காட்டிலும் எளிதில் பொருள் உணர்த்தும் நடை முக்கியம் என்று மொழி ஆர்வலர்களுடன் மல்லுக்கட்டுபவர்.

தவறுகளைப் பெரிதுபடுத்தாமல், இன்னொரு வாய்ப்பு கொடுப்போம் என்று புதியவர்களை தட்டிக் கொடுப்பவர். சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சூத்திரதாரி!

தமிழ் செய்தியுலகம் மக்கள் சார்பு நிலைக்கு மாறும் என்று நம்பிக்கையுடன் காத்திருப்பவர்.

கருத்துப் பரிமாற: [email protected]

English summary
The first chapter of Kathir's new political series Thaazha Parakkum Kakkaigal.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X