For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும்- 2: எழுத மறந்த காலம்

By Shankar
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

(ஒரு முன்குறிப்பு: இத்தொடரின் தொடக்கத்தைப் பாராட்டி, இணையத்தளத்திலும், முகநூல் மற்றும் என் மின்னஞ்சல் வழியும் தங்கள் கருத்துகளைப் பதிவு செய்துள்ள அனைவருக்கும் நன்றி. ஆக்கப்பூர்வமான திறனாய்வுகளுக்கும் மிக்க நன்றி. எனினும் ஒரு சில பதிவுகள், வழக்கம்போல், "சுபவீ, கருணாநிதியின் ஜால்ரா, அல்லக்கை" என்பன போன்ற வசைபாடல்களாக வந்துள்ளன. அப்படியே நான் ஜால்ராவாக இருந்தாலும், அதற்கும், இக்கட்டுரைக்கும் என்ன தொடர்பு? அவர்கள் ஆட்டத்தைப் பார்க்காமல், ஆளை ஆளைப் பார்க்கிறார்கள். ஒரு முன்முடிவோடு உள்ள அவர்கள் குறித்து நாம் கவலைப்பட முடியாது. நம் பணியைத் தொடர்வோம்.)

Subavee's Arinthum Ariyamalum series: Ezhutha Marantha Kalam

அண்மைக்காலமாக, இளைஞர்களைச் சந்திக்கும் போதெல்லாம், அவர்களின் சட்டைப் பையில், பேனா இருக்கிறதா என்று கவனிக்கிறேன். பலருடைய சட்டைப் பையிலும் பேனா இல்லை. சிலருடைய சட்டைகளில் பையே இல்லை.

இரண்டு விரல்களால் எழுதும் பழக்கம் குறைந்து, பத்து விரல்களால், கணிப்பொறியில் தட்டச்சு செய்யும் பழக்கம் கூடி வருவதன் விளைவாகவே, பேனாவின் தேவை சுருங்கி வருகின்றது. கையொப்பம் இடுவதற்கு மட்டுமே பேனா தேவையானதாக உள்ளது. அறிவியல் வளர்ச்சியில் இதுவும் ஒன்று. இப்போதும் எழுத்து இருக்கின்றது. ஆனால் எழுதும் முறை மாறிவிட்டது.

எழுதுவதற்கும், தட்டச்சு செய்வதற்கும் இடையில் பல வேறுபாடுகள் உள்ளன. நான் ஐந்தாண்டு காலம் தட்டச்சராகப் பணியாற்றியவன். சில வேளைகளில் பத்துப் பக்கங்கள் தட்டச்சு செய்து முடித்த பின்னும், நான் தட்டச்சு செய்த கட்டுரையின் உள்ளடக்கம் என்ன என்பது என் மூளையில் ஏறியிருக்காது. எழுத்துப் பிழை வராமல் தட்டச்சு செய்வதில் மட்டுமே கூடுதல் கவனமிருக்கும். சுருக்கமாகச் சொன்னால், ஓர் இயந்திரத்தின் முன் இன்னொரு இயந்திரமாக மட்டுமே அமர்ந்து தட்டச்சு செய்த நிலை அது!

ஆனால் ஒரு நாளும் அப்படி இயந்திரத்தனமாக நம்மால் எழுத முடியாது. மனம், பொருளோடு ஒன்றினால் மட்டுமே எந்த ஒன்றையும் நம்மால் எழுத முடியும்.
எழுதுதல் என்றால் கதை, கவிதை போன்ற இலக்கியங்களை எழுதுவது என்று கொள்ளத் தேவையில்லை. கடிதங்கள் கூட நம்மால் இன்று எழுதப்படுவதில்லை. "எதற்காக இனிமேல் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்க வேண்டும்? மின்னஞ்சல், குறுஞ்செய்தி (SMS) எல்லாம் வந்த பிறகு, ஏன் நேரத்தைச் செலவழித்துக் கடிதம் எழுதிக் கொண்டிருக்க வேண்டும்? உங்கள் காலத்திற்கு எங்களையும் திரும்பச் சொல்கின்றீர்களா?" என்று இளைஞர்கள் சிலர் கேட்கின்றனர்.

இல்லை, பழைமையை நோக்கித் திரும்ப வேண்டும் என நான் கூறவில்லை. எனினும், இன்றையத் தகவல் பரிமாற்றத்திற்கும், அன்றைய கடிதங்களுக்கும் இடையில் வேறுபாடு உண்டு. எல்லா நேரங்களிலும் நாம் கடிதங்களை எழுதிக் கொண்டிருக்க முடியாது என்பதும், சுருக்கமாகத் தகவல்களை அனுப்பினால் போதும் என்பதும் சரிதான். ஆனால், கடிதங்களில்தான், தகவல்களைத் தாண்டி, நாம் நம் உணர்ச்சிகளைப் பரிமாறிக் கொள்ள முடியும். தகவல் தெரிவிப்பது (Communication) என்பது வேறு, உணர்வுகளின் வெளிப்பாடு (Expression)என்பது வேறுதானே!

இரண்டாவது நிலைக்குக் கடிதங்கள்தான் உதவும். எழுதிப் பார்க்கும் போதுதான் இந்த உண்மையை உணர முடியும்!

எழுத்தும், எழுதும் பழக்கமும் நம் நினைவாற்றலை வளர்க்கும் ஆற்றலுடையன. ஒரு முறை ஒன்றை எழுதுவது, மூன்று முறை படிப்பதற்குச் சமம் என்பார்கள். அந்த உண்மை குறித்து இன்று எவரும் கவலை கொள்ளவில்லை. காரணம், எதையும் மனப்பாடம் செய்ய வேண்டிய தேவை இல்லை என்ற கருத்து இன்று வலுப்பெற்றுள்ளது.

அன்று கணக்கு வகுப்பில், வாய்ப்பாடுகளை மனப்பாடம் செய்து கொண்டிருந்தோம். இன்றோ, அது தேவையில்லை என்று கருதுகின்றோம். கணக்குக் கருவி (Calculator) வந்துவிட்ட பின், வாய்ப்பாடு எதற்கு என்ற கேள்வி மேலெழுகின்றது. ஒரு பொருளின் விலை 13 ரூபாய், ஏழு பொருள்கள் என்ன விலை என்று கேட்டால், உடனே நம் சிறுவர்கள் அந்தக் கணக்குக் கருவியைத் தேடுகின்றனர்.

உடற்பயிற்சியின் தேவை இன்று உணரப்பட்டுள்ளது. அன்றாடம் நடைப்பயிற்சி செய்பவர்களைக் காண முடிகிறது. ஆனால் மனப்பயிற்சி பலவற்றை நாம் கைவிட்டுவிட்டோம். மனப்பயிற்சியின் தேவை உணரப்படாமலே உள்ளது.
மனத்தை ஒரு நிலைப்படுத்துதல், நினைவாற்றலை வளர்த்துக் கொள்ளுதல், சிக்கல்களுக்கேற்ற முடிவுகளை உடன் எடுத்தல் போன்றவை எல்லாம் மனப்பயிற்சியினால் மட்டுமே வாய்க்கும். அதற்குரிய சின்னச் சின்னப் பயிற்சிகளை எல்லாம் விட்டுவிட்டு, யோகா வகுப்பு, சூழ்நிலைத் தியானம் என்று நம்மில் பலர் புறப்பட்டுள்ளோம். யோகப் பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் நல்லவைதான். ஆனால் இன்று அவை குழும நிறுவனங்களாகவும் (Corporate companies)வணிக மையங்களாகவும் மாறிக் கொண்டிருப்பதை நாம் உணர வேண்டும்.

நமது முன்னோர் நமக்கு விட்டுச் சென்றுள்ள அரிய சொத்துகளில் ஒன்றான ‘திருக்குறள்' போன்ற வாழ்வியல் நூல்களை நாம் படிப்பதில்லை. அவையெல்லாம், பயனற்றவை என்று கருதுகின்றோம். ஆனால் ‘வாழும் கலை' (Art of living)அறிய, சாமியார்களின் பின்னால் அலைகின்றோம். இதற்காக ஆயிரக்கணக்கில் கட்டணம் வாங்கும் பெரிய நிறுவனங்களை நம்புகிறோம்.

"வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு"

என்று திருக்குறள் கூறும், ஆழ்ந்த, அரிய உளவியல் செய்தியை உளம்கொள மறுக்கின்றோம். அதனையே, நூறாயிரம் கோடிச் சொத்துகளுக்கு அதிபர்களாக உள்ள சாமியார்கள், ஆங்கிலம் கலந்த தமிழில் சொன்னால் நம்புகின்றோம்.
குறிப்பாக, தொழில் அதிபர்கள், செல்வர்கள் மற்றும் கணிப்பொறித் துறை இளைஞர்கள்தாம் ‘மன அமைதி' பெறுவதற்காகச் சாமியார்களையும், உளவியல் வல்லுனர்களையும் நாடிச் செல்கின்றனர்.

மன அமைதியை அவர்கள் எப்படி, எப்போது இழந்தார்கள்? நிறையப் பணம் ஈட்ட முடிகிறதே, பிறகு ஏன் அமைதி இல்லை?

கோவை, நீலகிரிப் பகுதிக்குச் சென்றால், மலைகளில் மிகப் பெரிய தேயிலை நிறுவனங்கள். கோடிக் கணக்கில் பணம் புரட்டும் தொழில் அதிபர்கள். மலை அடிவாரங்களில், அமைதியான சூழ்நிலையில் பல ஆசிரமங்கள். பரப்பரப்பான தொழிலதிபர்கள் வாழும் இடத்திற்கு அருகிலேயே, அமைதியான ஆசிரமங்கள் ஏன் உருவாக்கப்படுகின்றன?

குன்றுகள் தோறும் கோடீசுவரர்கள், சறுக்கி விழுந்தால் சாமியார்கள் என்னும் நிலை ஏன் ஏற்படுகின்றது?

அன்றாடம் கஞ்சிக்கே வழியின்றி, கடுமையான உடல் உழைப்புக்குத் தங்களை ஆளாக்கிக் கொண்டு, பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வாழும் கூலித் தொழிலாளர்கள் நிறைந்துள்ள வடசென்னை போன்ற பகுதிகளில், ஏன் எந்த ஆசிரமும் காணப்படவில்லை? அவர்கள் ஏன், வாழும் கலை அறிய, எந்தச் சாமியாரையும் அணுகவில்லை?

இவை எல்லாவற்றிற்குமான விடை, நம் வாழ்க்கை முறையில் உள்ளது. நம்முடைய வளர்ப்பு முறையிலும் உள்ளது. இன்றையத் தொழில் முறை அமைப்பிலும் உள்ளது.

எழுத்து வேண்டாம், இலக்கியம் வேண்டாம், ஓய்வு வேண்டாம், உறவுகள் வேண்டாம்... எல்லாவற்றையும் விட்டுவிட்டு, பணம், பணம், பணம் என்ற ஒன்றை நோக்கியே ஓடிய ஓட்டத்தில்தான் நாம் வாழ்வின் உண்மையான பொருளை இழந்தோம்.

இவ்வாறு எழுதுவதன் மூலம், பணமே தேவையில்லை என்னும் வறட்டுச் சிந்தனையை நான் விதைக்கவில்லை. ‘பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை' என்னும் உண்மையை நாம் அனைவரும் உணர்ந்துள்ளோம். ஆனால், பணம் தேடும் பணி ஒன்றே வாழ்க்கையாகிவிடாது என்பதை வலியுறுத்த வேண்டிய இடத்தில் இன்று நாம் உள்ளோம்.

மனிதர்களுக்குப் பணம், உழைப்பு, ஓய்வு, சமூக அக்கறை அனைத்தும் தேவையாக உள்ளன. எட்டு மணி நேர உழைப்பு, எட்டுமணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்னும் சித்தாந்தத்தைத் தொலைத்துவிட்டு, ‘மே நாள்' கொண்டாடுவதில் என்ன பொருள் இருக்க முடியும்?

இன்றையப் பன்னாட்டுக் கணிப்பொறி நிறுவனங்களில் எட்டு மணி நேர வேலை என்பது எங்கேனும் உறுதி செய்யப்பட்டுள்ளதா? அதனைக் கோருவதற்கு அவர்கள் சங்கம் வைத்துக் கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளதா?

மூன்று மாதங்கள் அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை, மாமல்லபுரத்திற்கோ, பாண்டிச்சேரிக்கோ, மலை சூழ்ந்த பகுதிக்கோ அழைத்துச் சென்று, ஆடவும், பாடவும் வழிசெய்து கொடுப்பதன் மூலம், அவர்களின் மன இறுக்கத்தைத் தளர்த்திவிட முடியுமா?

இன்று தங்களிடம் வருவோரில், மிகப் பெரும்பான்மையினர், நல்ல ஊதியம் வாங்குகின்ற, கணிப்பொறித் துறையில் பணியாற்றும் இளைஞர்கள்தாம் என்று உளவியல் மருத்துவர்கள் கூறுகின்றனரே, ஏன் இந்த நிலை?
தொடர்ந்து பேசுவோம்!

(வியாழன்தோறும் சந்திப்போம்)

தொடர்புகளுக்கு: ([email protected], www.subavee.com)

அறிந்தும் அறியாமலும் முதல் பாகம்..அறிந்தும் அறியாமலும் முதல் பாகம்..

English summary
Second part of Subavee's socio political series Arinthum Ariyamalum series: Ezhutha Marantha Kalam
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X