For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும் - 4: ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர்...

By Shankar
Google Oneindia Tamil News

-சுப வீரபாண்டியன்

ஒரு நாட்டின் மேம்பாடு, அந்நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும், சமூக முன்னேற்றத்திலும் பிணைந்து கிடக்கின்றது என்று கண்டோம்.

சமூக முன்னேற்றம் குறித்து மட்டுமே இத்தொடர் பேசுகிறது.

ஒரு சமூகத்திற்கும், நாட்டிற்கும் இடையிலான வேறுபாடு நாம் அறிந்ததே. உலகில் உள்ள எந்த ஒரு சமூகமும், ஓர் அரசினால் (State)ஆளப்படுகின்றது. அவ்வாறு ஆட்சிக்கு உட்படும்போதே, சமூகம் என்பதனை நாடு (Nation) என்று அழைக்கின்றோம்.

ஒரு நாட்டில் ஒரே ஒரு சமூகமும் இருக்கலாம். பல்வகைச் சமூகங்களும் இருக்கலாம். (இப்போதெல்லாம் சமூகம் என்பதைச் சாதிக்கான மாற்றுச் சொல்லாக ஆள்கின்றனர். நாம் இங்கே தேசிய இனத்தையே சமூகம் என்று குறிக்கின்றோம்).

Arinthum Ariyamalum part 4

ஒரு நாட்டில் ஒரே ஒரு சமூகம் மிகப்பெரும்பான்மையாக இருக்குமானால், அதனைத் தேசிய அரசு (Nation State) என்றும், பல்வகைச் சமூகங்கள் இருக்குமானால், பல்தேசிய அரசு (Multinational State) என்றும் அரசறிவியல் (Political Science) கூறுகின்றது. எந்த ஐயத்திற்கும் இடமின்றி, இந்தியா ஒரு பல்தேசிய அரசு. சரியான வரையறையின்படி, இந்தியா ஒரு துணைக்கண்டம்.

எனவே, இங்கு ‘ஒரே நாடு, ஒரே பண்பாடு' என்னும் முழக்கம் ஏற்புடையதாகாது. பல்வேறு பண்பாடுகளைப் பெற்றிருக்கும் பல்தேசிய அரசே இந்தியா என்பதால், ஒவ்வொரு சமூகம் குறித்தும் தனித்தனியாகத்தான் நம் ஆய்வினைக் கொண்டு செல்ல முடியும். இங்கு தமிழ்ச் சமூகத்தின் மீது மட்டுமே நம் பார்வை படர்கிறது.

ஒரு சமூகம் முன்னேறிய சமூகம் என்று கொள்வதற்கு, இரண்டு நிலைகளை அச்சமூகம் எட்டியிருக்க வேண்டும்.

(1) அறிவார்ந்த சமூகம்
(2) பண்பார்ந்த சமூகம்

ஒரு சமூகத்தின் அறிவு வளர்ச்சி, அதனுடைய படிப்பு, சிந்தனை, நுண்ணறிவு, பட்டறிவு (அனுபவம்) ஆகிய நான்கு தளங்களில் இயங்குகின்றது. ஆதலால், அறிவு வளர்ச்சியின் முதல்படி படிப்பு & அதாவது கல்வியே என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. கல்விக் கூடங்களின் மூலம் நாம் பெறும் முறைசார் கல்வி, கல்வி நிலையங்களுக்கு வெளியே நூலகம், ஊடகம் முதலானவற்றின் மூலம் நாம் பெறக்கூடிய பொதுக்கல்வி என இருவகைகளில் கல்வியறிவை நாம் பெறுகின்றோம்.

ஒரு நூற்றாண்டுக்கு முன்புவரை, முறைசார் கல்வி கூட நமக்கு முறையாகக் கிடைக்கவில்லை. ஆயிரம் ஆண்டுகளாகக் கல்வி மறுக்கப்பட்ட சமூகம் நம்முடையது.

பல்லவர் காலத்தில் தொடங்கி, சோழர்கள் காலத்தில் பெருவளர்ச்சி கண்டு, நாயக்கர்கள் காலத்தில் கொடிகட்டிப் பறந்த கல்வி முறை, ஒரு குறிப்பிட்ட சாதியில் பிறந்தவர்களுக்கு மட்டுமே கல்வி உரிமையை வழங்கியது.

1835ஆம் ஆண்டு, வெள்ளையர்கள் கொண்டுவந்த பொதுக் கல்வித் திட்டமே அனைவருக்குமான கல்வி என்னும் நிலைக்கு அடித்தளமிட்டது. இதனைத்தான் மெக்காலே கொண்டுவந்த கல்வி என்று இப்போதும் கூறுகிறோம். மெக்காலேயை மிகக் கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் உண்டு. நம்மை எல்லாம் அறிவாளிகள் ஆக்குவதற்காக அவர் கல்விக் கதவுகளைத் திறக்கவில்லை, குமாஸ்தாக்களை உருவாக்குவதற்காகவே அவ்வாறு செய்தார் என்பது ஒரு பார்வை. அப்படியே வைத்துக் கொண்டாலும், கல்வி அற்று அடிமைகளாக இருந்த சமூகத்தை, குறைந்தபட்சம் குமாஸ்தாக்களாகவாவது ஆக்க முயன்றது ஒரு வகையில் முன்னேற்றம்தானே!

அந்தச் சூழலிலும் கூட, சமூகத்தின் மேல்தட்டில் இருந்தவர்கள்தான் அந்த வாய்ப்பையும் பயன்படுத்திக் கொண்டார்கள். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் எடுக்கப்பட்ட (1911) மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, பார்ப்பனர் அல்லாத மக்களில் நான்கு சதவீதத்திற்கும் குறைவானவர்களே கல்வி அறிவு பெற்றிருந்தனர்.

1901ஆம் ஆண்டு, இந்தியா முழுமைக்கும் ஐந்து பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன. இந்தியா என்றால், இன்றைய இந்தியாவை நாம் கணக்கில் கொள்ளக் கூடாது. இன்றைய பாகிஸ்தான், வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், பர்மா, நேபாளம், இலங்கை உட்பட அனைத்தையும் உள்ளடக்கியதே அன்றைய இந்தியா. அவ்வளவு பெரிய நிலப்பரப்புக்கு ஐந்து பல்கலைக்கழகங்கள் மட்டுமே இருந்தன.

மெக்காலேயைப் போலவே, கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகும் இன்னொரு ஆங்கிலேய ஆளுநர் கர்சான் பிரபு. இவர்தான் வங்காளத்தைத் துண்டாடியவர். ஆதலால் அவரை நம் வரலாற்றுப் புத்தகங்கள் கண்டித்துப் பேசும். ஆனால், அதே கர்சான்தான், இந்தியாவில் கல்வி பரவலாவதற்குப் பெரிய காரணமாக இருந்தார் என்பதை நாம் அழுத்திச் சொல்வதில்லை. 1902ஆம் ஆண்டு இந்தியாவில் உள்ள கல்வி அதிகாரிகள் அனைவரையும் அழைத்து சிம்லாவில் ஒரு மாநாடு கூட்டியவர் கர்சான். அந்த மாநாட்டில்தான், நாடு முழுவதும் கல்விக் கூடங்கள் திறக்கப்பட வேண்டும் என்னும் தீர்மானம் நிறைவேறிற்று.

இந்த இடத்தில் இன்னொரு நுட்பமான செய்தியையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. யாரெல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளனரோ, அவர்கள் எல்லோரும் இன்னொரு விதத்தில், கல்வியின் அடிப்படையில் நமக்கு உதவியவர்களாக இருக்கிறார்கள். ஒருவேளை அவர்கள் மீது பார்ப்பனர்கள் கோபம் கொள்வதற்கு அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். மகாத்மா ஜோதிராவ் புலே, ‘அடிமைத்தனம்' என்னும் தன் நூலில் எழுதியிருப்பதை இங்கே எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. "இந்தியாவின் மேல்சாதியினர் ஆங்கிலேயர் மீது கோபம் கொண்டதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. அவர்கள் நமக்குப் பொன்னையோ, பொருளையோ தந்திருந்தால் கூட, இங்கே உள்ளவர்கள் அவ்வளவு கோபப்பட்டிருக்க மாட்டார்கள். ஆனால், சூத்திரர்கள் என்றும், பஞ்சமர்கள் என்றும் கூறி ஒதுக்கி வைக்கப்பட்டவர்களுக்குக் கல்வியை அல்லவா அவர்கள் கொடுத்துவிட்டார்கள்!" என்பார் புலே.

அரசுத்தடை நீக்கப்பட்டபின்பும், காலகாலமாக இருந்துவந்த நம்முடைய மனத்தடையை நீக்கிக் கொள்வதற்கு மீண்டும் பல ஆண்டுகள் ஆயின. 1920களுக்குப் பிறகுதான், வசதியான குடும்பத்தைச் சார்ந்த பிள்ளைகள் படிக்கத் தொடங்கினர். நடுத்தட்டுப் பிள்ளைகள் கல்வி நிலையங்களுக்கு வருவதற்கு மேலும் இரு பத்தாண்டுகள் ஆயின. 1950க்குப் பின்பே பெண் கல்வி தொடங்கிற்று. இவ்வாறாகப் படிப்படியாகத்தான் கல்வி வளர்ச்சியை நாம் கண்டோம்.

அதிலும் ஒரு பெரும் வேறுபாடு இருந்ததை நாம் மறந்துவிடக் கூடாது. ஒரே நிலையில் நம் நாட்டில் கல்வி வளர்ச்சி அமையவில்லை. நாம் மணலில் ‘அரி, ஓம்' என்று எழுதப்பழகியபோது, அவர்கள் வீட்டுப் பிள்ளைகள், சிலேட்டுக் குச்சிக்கு வந்துவிட்டார்கள். நாம் சிலேட்டுப் பலகையைத் தொட்டபோது, அவர்கள் கைகளில் பென்சில் இருந்தது. பென்சிலை நாம் எட்டிப் பிடித்தபோது, அவர்கள் பேனாவிற்குத் தாவிவிட்டார்கள். பேனா நம் வசப்பட்ட நேரத்தில், அவர்கள் தட்டச்சு இயந்திரத்தில் கைபழகிக் கொண்டிருந்தார்கள். நம்மில் பலர் தட்டச்சர்களானோம், ஆனால் அவர்களுக்கோ அப்போது கணிப்பொறி கிடைத்துவிட்டது. கணிப்பொறியைக் கண்டு நாம் மலைத்துத் திகைத்து இயல்பு நிலைக்குத் திரும்புவதற்குள் அவர்கள் நம்மைவிட்டு, வெளிநாடுகளுக்கே சென்று விட்டார்கள். இப்போதுதான் வெளிநாட்டு விமானங்கள் நம் பிள்ளைகளையும் ஏற்றிச் செல்கின்றன.

இன்றைக்கும் கூட, பூரண ஞானம் பொலிந்துவிடவில்லை என்றாலும், கல்வி கற்றோரின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவை அடைந்துள்ளது. ஆணோ, பெண்ணோ, கல்வி என்பது அடிப்படைத் தேவை என்னும் புரிதல் நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. 14 வயது வரையில், அனைவருக்குமான கட்டாயக் கல்வி என்னும் சட்டம் முழுமையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என்றாலும், சமூகம் அத்தேவையைப் புரிந்து ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் விளைவாகத் தமிழ்நாட்டில் முறைசார் கல்வி இன்றைக்குப் பெரும்பான்மையானவர்களுக்குக் கிடைத்துள்ளது-.
என்றைக்குமே எந்த ஒரு நல்ல செயலுக்கும் கூட, வேறுவிதமான பக்க விளைவுகள் இருந்தே தீரும். கல்வி தொடர்பாகவும் அப்படி ஒரு பக்க விளைவு ஏற்பட்டுள்ளது.

முறைசார் கல்வி என்பது ஒவ்வொருவருக்கும் தேவையான ஒன்றுதான். ஆனால் அந்தக் கல்வியே வாழ்வில் எல்லாம் என்று கருதிவிடக் கூடாது. அது வாழ்வின் ஒரு பகுதிதான். பிற வழிகளிலும்கூட கல்வியையும், அறிவையும் நம்மால் பெற முடியும் என்னும் நம்பிக்கையை முற்றுமாக இழந்து, சமூகம் இந்தக் கல்வி முறையின் மீது அளவிலாக் காதல் கொண்டது. அதன் விளைவாகத் தேர்வில் தோல்வி காணும் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் நிலைக்கே சென்றனர், செல்கின்றனர். மதிப்பெண்களை நோக்கி மாணவர்களை விரட்டும் நிலைமை நாடு முழுவதும் ஏற்பட்டுள்ளது. சிறந்த மதிப்பெண் ஒன்றே பிறவிப் பயன் என்பதான எண்ணம் உருவாகியுள்ளது. 10ஆம் வகுப்புப் பாடத்தைச் சில பள்ளிகள் 9ஆம் வகுப்பிலேயே தொடங்கிவிடுகின்றன. படிப்படியாக அறிவு பெறுதல் என்னும் நிலையைத் தவிர்த்துத் தாவிப் பிடிக்கும் ஆர்வம் மேலிடுகிறது.

பார்வை இல்லாதவன் ஒளிபெற்ற பிறகு அடையும் மகிழ்ச்சியினைப் போல, ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு கல்வி பெறத் தொடங்கிய சமூகம், மற்ற எல்லாவற்றிலிருந்தும் தன்னை விலக்கிக் கொண்டு, கல்வி ஒன்றே போதும் என்னும் முடிவுக்கு வந்துள்ளது. வீடுகளில் தொலைக்காட்சிகள் நிறுத்தப்படுகின்றன. படிப்பைத் தவிர மற்ற அனைத்துச் சிந்தனைகளுக்கும் இரண்டாம் இடமே கொடுக்கப்படுகிறது. கவிதை, ஓவியம், இசை போன்றனவெல்லாம் வாழ்விற்கு உதவாதவை, பொழுதுபோக்கிற்கு மட்டுமே பயன்படும், கல்வி ஒன்றே காலத்திற்கும் நமக்குக் கைகொடுக்கும் என்பன போன்ற எண்ணங்கள் தலைதூக்கி நிற்கின்றன. இதுபோன்ற பக்க விளைவினைச் சரி செய்து கொள்ளவேண்டும் என்று கூறுவது, கல்வியைக் கைவிட்டுவிட வேண்டும் என்னும் நோக்கில் அன்று. கல்வியும் வேண்டும், கல்விக்கு அப்பாலும் வேண்டும் என்ற சிந்தனையே இங்கு முன்வைக்கப்படுகிறது.

கல்விக்கு அப்பால் கதைகளை, காப்பியங்களை, கலைகளைத் தேடிய காலம் இங்கே இருந்தது. ஆனால் 1980களுக்குப் பிறகு அதில் ஒரு சரிவை நம்மால் பார்க்க முடிகிறது. அதற்கு என்ன காரணம்?

ஒரு பெரிய காரணம் 1976ஆம் ஆண்டில் தொடங்கிற்று..

(வியாழன்தோறும் சந்திப்போம்)

தொடர்புகளுக்கு: ([email protected] , www.subavee.com)

English summary
Fourth part of Subha Veerapandian's article series Arinthum Ariyamalum.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X