For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மனிதர்களை அடித்துச் சென்ற மத வெள்ளம்

By Shankar
Google Oneindia Tamil News

இந்துக்கள் என்று கூறிக்கொண்டவர்கள், சைவர்கள், வைணவர்கள் என்று பிரிந்து நின்று, ஒருவரையொருவர் கொன்றொழித்ததைத் தமிழகத்தின் இடைக்கால வரலாறு கூறுகின்றது. சைவர்களுக்குள்ளேயே, பார்ப்பனர் அல்லாதவர்கள் (வேளாளர்) கட்டிய சைவ மடங்கள், சைவத்தைத் தழுவிய சோழ மன்னர்களால் இடித்துத் தள்ளப்பட்டன. அந்நிகழ்வைக் ‘குகையிடிக் கலகம்' எனப் பெயரிட்டு, வரலாற்றாசிரியர், கே.ஏ.நீலகண்ட (சாஸ்திரி) தன் சோழர் வரலாற்று நூலில் விரிவாக எழுதியுள்ளார். பார்ப்பனர் அல்லாதவர்களால் கட்டப்பட்ட மடம் ‘சூத்திர மடம்' என்று கருதப்பட்டதே அதன் காரணம்.

வைணவர்களுக்குள் வடகலை, தென்கலைப் போராட்டம் பல ஆண்டுகள் நடைபெற்றது. யானைக்கு எந்த நாமம் போடுவது (வடகலையா, தென்கலையா) என்பதில் கூட மோதல் ஏற்பட்டு, நீதிமன்றம் வரையில் அந்த வழக்கு சென்றது.

Subavee's Arinthum Ariyamalum - Part 18

சிலுவைப் போரிலும், பிறகு ஜெர்மனியில் இட்லர் ஆட்சியிலும் தாக்குண்ட யூதர்கள், இன்று பாலஸ்தீனத்தில் அரபு மக்களைத் தாக்கி அழித்துக் கொண்டிருப்பதை அன்றாடம் நாம் செய்தித் தாள்களில் பார்க்கின்றோம்.

பொதுவுடைமைக் கோட்பாடுகளில் ஈர்ப்புக் கொண்டவர்கள், 1917ஆம் ஆண்டைக் கொண்டாடுவார்கள். ஜார் மன்னர்களின் கொடுங்கோன்மையிலிருந்து விடுபட்டு, புரட்சியாளர் இலெனின் தலைமையில் சோவியத் யூனியன் அமைந்த ஆண்டு அது என்பதால்!

யூதர்களுக்கும் 1917 என்பது மகிழ்ச்சிகரமான ஆண்டுதான். அந்த ஆண்டில்தான் பல்ஃபோர் பிரகடனம் (Balfour declaration) வெளியானது. அந்த ஆண்டு நவம்பர் 2ஆம் நாள், இங்கிலாந்தின் வெளியுறவுச் செயலர் பல்ஃபோர் (Arthur James Balfour), பிரித்தானிய யூதர் குழுமத்தின் தலைவர் பேரானுக்கு (Baron Rothschid) எழுதிய கடிதத்தில்தான், பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியில் இஸ்ரேல் நாட்டை உருவாக்க இங்கிலாந்தின் ஒப்புதலை வெளியிட்டிருந்தார். அந்தப் பிரகடனம்தான் இன்றுவரை பாலஸ்தீனத்தில் வாழும் அரபு மக்களின் வாழ்வை அலைக்கழித்துக் கொண்டுள்ளது.

மதத்தின் பெயரால் 1897ஆம் ஆண்டு, யூதர்கள் தங்களுக்கென்று ஒரு நாடு உருவாக்கிக் கொள்ள முடிவெடுத்து, ஜியோனிச இயக்கத்தைத் (Zionist Movement) தொடங்கினர். அன்றிலிருந்து அந்த முயற்சிகளில் இடைவிடாமல் ஈடுபட்டனர். தங்கள் முடிவில் எந்த நிலையிலும் மாறாது இருந்தனர்.

1906ஆம் ஆண்டு, அதே பல்ஃபோர், ஜியோனிஸ்ட் இயக்கத் தலைவர் செய்ம் வெய்ஸ்மன்னைச் (Chaim Weizmann) சந்தித்து உரையாடினார்.

"ஏன் நீங்கள் பாலஸ்தீனத்திலேயே குறியாக இருக்கின்றீர்கள். கிழக்கு ஆப்பிரிகாவில் எங்கள் காலனியாக உள்ள உகாண்டாவின் ஒரு பகுதியைத் தர முன்வருகிறோம்...ஏற்பீர்களா?" என்று பல்ஃபோர் கேட்டார்.

"லண்டனுக்குப் பதிலாக பாரீஸ் நகரத்தை நீங்கள் என்றேனும் ஏற்றுக் கொள்வீர்களா?" என்று திருப்பிக் கேட்டார் வெய்ஸ்மன். எங்களுக்கு ஏதேனும் ஓர் இடம் வேண்டும் என்பதில்லை, எங்களுக்கு எங்கள் தாய்நாடுதான் வேண்டும் என்ற பொருளில் அவ்வாறு கூறினார்.

அது தங்களின் தாய்மண் என்பதற்கு அவர்கள் பக்கத்துச் சான்றுகளை அவர் கொடுத்தார். "உங்களின் லண்டன் மாநகரம், ‘வெள்ளக் காடாக' (marsh) இருந்தபோதே, ஜெருசலேம் மாநகரம் எங்களுடையதாக இருந்தது" என்று வாதாடினார்.

1948இல் இஸ்ரேல் என்னும் நாடு செயற்கையாக உருவாக்கப்பட்டபோது, வெய்ஸ்மன்தான், முதல் குடியரசுத் தலைவராகப் பொறுப்பேற்றார்.
அவர்களின் உறுதி பாராட்டிற்குரியதுதான், ஆனால் மதத்தின் பெயராலும், ‘புனித மண்' (Holy land) என்னும் பெயராலும் பாலஸ்தீனிய மக்களின் மீது அவர்கள் தொடுத்தபோரும், ஏற்படுத்திய பேரழிவுகளும் என்றைக்கும் ஏற்கத்தக்கன அல்ல.

இஸ்ரேல் உருவாவதற்கு ஓராண்டிற்கு முன்புதான், பாகிஸ்தான் தனி நாடாகியது. இந்திய - பாகிஸ்தான் பிரிவின்போதும், இந்துக்கள் என்ற பெயரிலும், முஸ்லீம்கள் என்ற பெயரிலும் எத்தனை லட்சம் மனிதர்கள் கொல்லப்பட்டனர்!

இவ்வளவுக்கும் நேரு, ஜின்னா, டேவிட் பென் குரியன் (David Ben Gurion - Þv«óL¡ ºîTM Hóîñ˜) மூவருமே மதவெறியர்கள் இல்லை. மதச்சார்பின்மைக் கொள்கையில் நம்பிக்கை உடையவர்களாகவே இருந்தனர். ஆனாலும் என்ன பயன்? மதவெறி என்னும் ஆற்றுவெள்ளம் அடித்துக் கொண்டுபோய்விட்டது - மனிதர்களையும், மனிதத்தையும்!

(வியாழன்தோறும் சந்திப்போம்)

தொடர்புகளுக்கு: ([email protected] , www.subavee.com)

English summary
The 18th part of Subavee's Arinthum Ariyamalum discusses about how the religions killed the people worldwide.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X