For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும் -20: நைல் நதிக்கரையின் இட்லரா, நாசர்?

By Shankar
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

அறிந்தும் அறியாமலும் - 20: நைல் நதிக்கரையின் இட்லரா, நாசர்?

இரண்டாம் உலகப்போரின் முடிவில், உலகெங்கும் பல புதிய மாற்றங்கள் நிகழ்ந்தன.
ஐரோப்பிய நாடுகளின் காலனி நாடுகளாக, அடிமை நாடுகளாக இருந்த ஆசிய, ஆப்பிரிக்க நாடுகள் பல விடுதலை பெற்றன. இந்தியா தன் அரசியல் விடுதலையைப் பெற்றாலும், இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாக உடைந்தது. இஸ்ரேல் என்று ஒரு புதிய நாடு உருவானது.

உலகின் கிழக்கிலும், ஐப்பானின் தோல்வியைத் தொடர்ந்து பெரிய மாற்றங்கள் உருவாகின. இந்தோனேஷியா, இந்தோசீனா, மலாயாவில் எல்லாம் புரட்சிகரமான போராட்டங்கள் எழுச்சி பெற்றன. சீனாவில் மாவோ நடத்திய நெடும்பயணம், வெற்றி மேல் வெற்றியைப் பெற்றுக்கொண்டிருந்தது. 1949இல் பீகிங்கைக் கைப்பற்றி மாவோ சீனத்தின் மக்கள் குடியரசை நிறுவினார்.

பிரிட்டனும், பிரான்சும் ஐரோப்பிய நாடுகளைப் பங்கு போட்டுக் கொண்டன. ஜெர்மனி இரண்டாகப் பிரிக்கப்பட்டு, கிழக்கு ஜெர்மனி கம்யூனிச நாடாகியது.

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் (1945), அமெரிக்க அதிபர் பிராங்க்ளின் டி. ரூஸ்வெல்ட், பிரிட்டன் அதிபர் சர்ச்சில், சோவியத்தின் அதிபர் ஸ்டாலின் மூவரும் சந்தித்து உரையாடினர். அப்போது அவர்கள் மூவரும் சேர்ந்து அமர்ந்திருக்கும் படம் உலகப் புகழ் பெற்றது. ஆனால், அமெரிக்காவிற்கும், சோவித்திற்குமான நெருக்கம், அந்தப் படத்தில் மட்டும்தான் இருந்தது. பிரித்தானியப் பேரரசின் சரிவைப் புரிந்து கொண்ட இரு நாடுகளும், அடுத்த உலகத் தலைமையைத் தங்களுக்குள் யார் கைப்பற்றுவது என்னும் சிந்தனைக்கு ஆளாயின.

அந்தப் படம் வெளியான அடுத்த மாதமே, ஸ்டாலின் மீது ரூஸ்வெல்ட் வெளிப்படையாகக் குற்றச்சாற்றுகளை அடுக்கினார். தங்களுக்கிடையேயான ஒப்பந்தத்தை சோவியத் அடிக்கடி மீறுவதாகக் கூறினார். அதற்கு ஸ்டாலினும் கடுமையாகப் பதிலடி கொடுத்தார். இதற்கிடையில் 1945 ஏப்ரலில், ரூஸ்வெல்ட் உடல்நலமின்மை காரணமாக மரணமடைய, ட்ரூமன் அமெரிக்க அதிபரானார். பிறகு 1953 வரை அவரே அப்பொறுப்பு வகித்தார்.

இக்கால கட்டத்தில், மத்திய கிழக்கு நாடுகளில் புரட்சிகளும், மாற்றங்களும் நடைபெற்றன. 1952ஆம் ஆண்டு, இராணுவப் புரட்சியின் மூலம், எகிப்தில் மன்னராட்சி அகற்றப்பட்டது. முகமது நகீப் அந்நாட்டின் அதிபராகவும், ஜமால் அப்துல் நாசர் (Gamal Abdel Nasser) துணை அதிபராகவும் பதவியேற்றனர். இரண்டாண்டுகள் மட்டுமே முகமது நகீப் அதிபராக இருந்தார். மீண்டும் எழுந்த இராணுவப் புரட்சியில், அவர் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அதன்பிறகு 18 ஆண்டுகள் அவர் அந்தச் சிறையிலேயே இருக்க நேர்ந்தது.

1954இல் பதவியை விட்டு நகீபை அகற்றிய நாசர் 1956இல் அந்நாட்டின் அதிபரானார். 1970ஆம் ஆண்டு அவர் காலமாகும் வரை அவரே அப்பதவியை வகித்தார். அவர் பதவியில் இருந்த அந்தப் பதினைந்து ஆண்டுகள், இருபதாம் நூற்றாண்டு வரலாற்றில் இன்றியமையாதவை.

Subavee's Arinthum Ariyamalum - Part 20

அதிபர் பதவிக்கு வருவதற்கு முன்பாகவே, நாசர் அதிகாரத்தைக் கைப்பற்றிவிட்டார் என்றுதான் கூறவேண்டும். உலக அரசியலில் ‘அணிசேராத் தன்மை' (Non - allignment) என்னும் ஒரு தன்மையை உருவாக்கியவர்களில், அன்றைய இந்தியப் பிரதமர் நேரு, நாசர், யூகோஸ்லாவிய அதிபர் டிட்டோ ஆகிய மூவருக்கும் பெரும்பங்கு உண்டு. பிறகு, இந்தோனேசிய அதிபர் சுகர்னோ, பர்மாவின் அதிபர் யூ நூ, கானாவின் அதிபர் நிக்குருமா ஆகியோரும் அக்கொள்கையை முன்னெடுக்க, 1950களின் பிற்பகுதியில் ‘அணிசேரா நாடுகள்' அமைப்பு உருவான வரலாற்றை நாம் அறிவோம்.

சரிந்து கொண்டிருந்த பிரித்தானியப் பேரரசு ஒரு புறமும், எழுந்து கொண்டிருந்த அமெரிக்க, சோவியத் வல்லரசுகள் மறுபுறமும் உலகை ஆள முயன்று கொண்டிருந்த வேளையில், எந்த அணியிலும் சேராத நாடுகளாய் வளரும் நாடுகள் இணைந்தமை வரவேற்புக்குரியதாய் இருந்தது.

எனினும், தொடக்கத்தில் நாசரிடம், சோவியத் நோக்கிய சாய்வு இருக்கவே செய்தது.
1953ஆம் ஆண்டு, சோவியத் அதிபர் ஸ்டாலின் மரணத்திற்குப் பிறகு, அமெரிக்க அதிபராக அந்த வேளையில் புதிதாகப் பொறுப்பேற்றிருந்த ஜசனோவர் (Eisenhower) சோவியத்திற்கு எதிரான நாடுகளின் அணியை வலிமை உடையதாக ஆக்க முயன்றார். அந்த அடிப்படையில், அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் டல்லஸ், எகிப்தின் துணை அதிபராக இருந்த நாசரைச் சந்தித்து உரையாடினார். அமெரிக்க ஆதரவு அணிக்குள் இடம்பெற அழைத்தார். அந்த அழைப்பை ஏற்றுக்கொள்ள மறுத்த நாசர், பிரிட்டனே எங்களின் முதல் எதிரி என்று வெளிப்படையாகக் கூறினார்.

"சோவியத் எங்கள் மண்ணை எப்போதும் கைப்பற்றிக் கொள்ளக் கருதியதில்லை. ஆனால் பிரிட்டனோ 70 ஆண்டுகளாக எங்கள் மீது ஆளுமை செலுத்தி வருகிறது. அறுபதாவது மைலில் கையில் துப்பாக்கியுடன் எங்களைக் கொல்லக் காத்திருக்கும் ஒருவனை விட்டுவிட்டு, ஆயிரம் மைல்களுக்கு அப்பால், கத்தி வைத்திருக்கும் ஒருவனைப் பகைவன் என்று எங்கள் மக்களிடம் எப்படிக் கூறமுடியும்?" என்று கேட்டார் நாசர்.

1955ஆம் ஆண்டு, பொதுவுடைமை நாடாக இருந்த செக்கோஸ்லோவியாவுடன், ஆயுத ஒப்பந்தமும் அவர் செய்து கொண்டார்.

அது மட்டுமல்லாமல், பிரான்சு நாட்டின் காலனியாக இருந்த அல்ஜீரியாவில், தேசிய விடுதலை முன்னணி (National Liberation Front) என்னும் புரட்சிகர அமைப்புப் போராட்டத்தில் இறங்கியபோது, அதற்கு எகிப்தின் ஆதரவு கிடைத்தது. ஆக மொத்தம், ஐரோப்பிய வல்லரசுகளை மீறி, அவர்களுக்கு அருகிலேயே ஒரு நாடு உதயமாகிறது என்பது தெளிவானது.

ஐரோப்பாவை மிரட்டும் எகிப்து, எதிர்காலத்தில் நமக்கும் அறைகூவலாக உருவாகக்கூடும் என்ற எண்ணம் அமெரிக்க அதிபர் ஐசனோவருக்கு எழுந்தது. எகிப்தை அடக்கி வைக்க வேண்டும் என்று கருதிய அவர், நைல் நதியில் நாசர் கட்டுவதற்கு முடிவெடுத்திருந்த பெரிய அணை ஒன்றுக்கு நிதி உதவி தர மறுத்துவிட்டார். ஏற்கனவே தான் அளித்த ஒப்புதலை மீறி, 1956 ஜுலை 19 அன்று, ஐசனோவர் நிதி தர முடியாது என்னும் அறிக்கையை வெளியிட்டார்.

இனி நாசர் அடங்கிவிடுவார் என்று எல்லா நாடுகளும் கருதின. கீழே அடித்த பந்து விரைந்து மேலே எழுவதுபோல், புது எழுச்சியுடன் எழுந்தார் நாசர். "அமெரிக்கா நிதி தராவிட்டால் என்ன, சூயஸ் கால்வாயைக் கொண்டு, அந்த அணையைக் கட்டி முடிப்பேன்" என்றார் நாசர். ஜுலை 26ஆம் தேதி இப்படிப் பேசிய அவர், 30ஆம் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பையே வெளியிட்டுவிட்டார். உலக நாடுகள், குறிப்பாக பிரிட்டன், பிரான்ஸ் அதிர்ந்து போய்விட்டன.

அப்படி என்ன இருக்கிறது சூயஸ் கால்வாயில்? அது ஒரு நீண்ட கதை. அதற்குள்ளேதான் எகிப்தின் எழுச்சியும், பிரிட்டனின் வீழ்ச்சியும் பொதிந்து கிடக்கின்றன.

முன்பெல்லாம் ஐரோப்பாவிலிருந்து ஆசியாவிற்கு கடல்வழி வர விரும்பும் எவர் ஒருவரும், ஆப்பிரிக்கக் கண்டம் முழுவதையும் சுற்றிக் கொண்டுதான் வரவேண்டும். எரிபொருள் செலவும், கால இழப்பும் தவிர்க்க இயலாதனவாக இருந்தன. அதனைத் தவிர்ப்பதற்காக, எகிப்தில் சூயஸ் கால்வாய்த் திட்டம் 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்டு, பிரிட்டன், பிரான்ஸ் நிதி உதவியுடன், 1869இல் திறக்கப்பட்டது.
மத்திய தரைக்கடலையும், செங்கடலையும் நேரடியாக இணைக்கும் அந்தக் கால்வாய், ஏறத்தாழ 200 கி.மீ. நீளமுடையது. 24 மீட்டர் ஆழமும், 205 மீட்டர் அகலமும் உடைய அந்தக் கால்வாயில் சிறிய கப்பல் போக்குவரத்துகள் தொடங்கின. ஆப்பிரிக்காவைச் சுற்றிக் கொண்டு போக வேண்டிய தேவை இல்லை என்பதால், ஒவ்வொரு முறையும், 7000 கி-.மீ. பயணத் தூரமும், எண்ணிப் பார்க்க முடியாத அளவு எரிபொருள் செலவும் குறைந்தன. உலக வணிகம் வளர்ந்தது.

இருப்பினும், எகிப்து நாட்டை ஆண்ட மன்னர்கள், அந்தக் கால்வாயின் சிறப்பையும், பயன்பாட்டையும் முழுமையாக உணரவில்லை. சிறிது சிறிதாக, அதில் இருந்த தங்களின் பங்கைப் பிரிட்டனுக்கும், பிரான்சுக்கும் விற்கத் தொடங்கினார்கள். அதன் விளைவாக, எகிப்துக்குச் சொந்தமான அந்தக் கால்வாய், 1888ஆம் ஆண்டு, பிரிட்டனின் கட்டுப்பாட்டில் இயங்கும் பொது மண்டலம் (Neutral Zone) ஆயிற்று. மத்திய கிழக்கு நாடுகளின் எண்ணெய் வளத்தை, ஐரோப்பிய நாடுகள், சூயஸ் கால்வாய் வழியாக வாரிச் சென்றன. அமெரிக்காவும் அதனால் பயனடைந்தது.
1956ஆம் ஆண்டுக் கணக்குப்படி, நாளொன்றுக்கு ஐரோப்பிய நாடுகள் 20 இலட்சம் பீப்பாய்களிலும், அமெரிக்கா 8 இலட்சம் பீப்பாய்களிலும் எண்ணெயைக் கொண்டு சென்றன. அன்றைக்கே அந்த அளவு என்றால், இன்றைய சூழலில் அது எத்தனை மடங்கு கூடியிருக்கும் என்பதை நாம் எண்ணிப் பார்க்கலாம்.

அந்த எண்ணெய்ச் சுரங்க வழியைத் தன் நாட்டின் உடைமையாக நாசர் அறிவித்தால், மேலை நாடுகள் கோபம் கொள்ளாதா? கடும் கோபம் கொண்டன. பிரிட்டன், பிரான்ஸ், இஸ்ரேல் மூன்று நாடுகளும் ஒன்றுசேர்ந்து, எகிப்து நாட்டின் மீது போர் அறிவிப்பையே வெளியிட்டன.

இந்தியாவின் சார்பில் பிரதமர் நேரு எகிப்துக்குத் தன் ஆதரவை வெளியிட்டார். சவூதி அரேபியா, சிரியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளும் எகிப்தை ஆதரித்தன.
அது குறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் அந்த மூன்று நாடுகளும் போரைத் தொடங்கின. அன்று பிரிட்டனின் அதிபராக இருந்த ஏடனும் (Eden), பிரான்சின் அதிபராக இருந்த மொலெட்டும் (Mollet), நைல் நதிக்கரையில் மறுபடியும் ஒரு இட்லர் உருவாகிவிட்டார் என்று நாசரை வருணித்தார்கள்.

மேலை நாடுகளால் இட்லர் என்று கூறப்பட்ட நாசர், ஒரே நாளில் இஸ்லாமிய நாடுகள் மற்றும் இந்தியா போன்ற வளரும் நாடுகளின் கதாநாயகன் ஆகிவிட்டார். உலகம் முழுவதும் பல நாடுகளில், பிறந்த குழந்தைகளுக்கு நாசர் என்று பெயர் சூட்டப்பெற்றது.

எனினும், போர்க்களத்தில் மேலை நாடுகள் முன்னேறின. நாசரும், எகிப்தும் பின்னடைவையே சந்தித்தனர். அப்போதுதான், போர் தொடுத்த மூன்று நாடுகளையும் கண்டித்துச் சோவியத் வெளிப்படையாக எச்சரித்தது. படைகள் பின்வாங்கவில்லையென்றால், சோவியத்தும், எகிப்துக்கு ஆதரவாகப் போரில் களமிறங்க வேண்டியிருக்கும் என்றார், சோவியத் அதிபர் குருசேவ்.

அமெரிக்காவின் ஆதரவை ஐரோப்பிய நாடுகள் எதிர்பார்த்தன. அமெரிக்கா அவர்களுக்கு ஆதரவாகக் களமிறங்கியதும் மூன்றாவது உலகப் போர் தொடங்கிவிடும் எனறு உலகமே எண்ணியது. இரண்டாம் உலகப் போர் முடிந்து, பத்தே ஆண்டுகளில், மீண்டும் ஓர் உலகப் போர் என்பது எண்ணிப் பார்க்க முடியாத துயரமாக இருந்தது.
எதிர்பார்த்தபடி, அமெரிக்க அதிபர் ஐசனோவர், மத்திய கிழக்குப் போர் பற்றிய அறிக்கையை வெளியிட்டார். ஆனால் அதன் உள்ளடக்கமோ, யாரும் எதிர்பாராத ஒன்றாக இருந்தது. போர் தொடுத்த மூன்று நாடுகளையும் அவர் வன்மையாகக் கண்டித்தார். உடனே படைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றார்.

அது மட்டுமின்றி, 1956 நவம்பர் 2ஆம் நாள், எகிப்தின் மீதான போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஐ.நா. அவையில் அமெரிக்கா தீர்மானமே கொண்டு வந்தது. அதற்கு ஆதரவாக 64 நாடுகளும், எதிராக 5 நாடுகளும் வாக்களித்தன. 6 நாடுகள் வாக்கெடுப்பில் இருந்து விலகி நின்றன.

உலகமே தங்களுக்கு எதிராகத் திரண்டபின், போரை அம்மூன்று நாடுகளும் நிறுத்த வேண்டியதாயிற்று. பிரிட்டன், பிரான்சு உடனடியாகவும், இஸ்ரேல் சற்றுக் காலந்தாழ்ந்தும் படைகளைப் பின்வாங்கிக் கொண்டன.

பிரித்தானியப் பேரரசு தன் வலிமை குன்றி, வெறும் பிரிட்டனாகச் சுருங்கிப் போனது. அதன்பிறகு, அங்கே சூரியன் உதிக்கவும் செய்தது ; மறையவும் செய்தது!

(வியாழன்தோறும் சந்திப்போம்)

English summary
The 20th chapter of Subavee's Arinthum Ariyamalum is speaks about the rise and importance of Egypt's former President Nasser in world history.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X