For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அறிந்தும் அறியாமலும் 27: அதுவன்றி ஓர் அணுவும் அசையாது!

By Shankar
Google Oneindia Tamil News

-சுப. வீரபாண்டியன்

மதுக்கடைகளை நடத்துவது அரசு. கோடிக்கணக்கான ரூபாய்க்கு மதுவை வாங்கிக் குடிப்பவர்கள் மக்கள். மக்களைக் குறை சொல்லக்கூடாது... அரசே கடைகளை நடத்தினால், மக்கள் குடிக்காமல் என்ன செய்வார்கள் என்பது ஒரு வாதம். குடியில், போதையில் மக்களுக்கு இருக்கின்ற பெரும் ஈடுபாடு காரணமாகவே, அரசு மதுக்கடைகளை நடத்துகின்றது என்பது இன்னொரு வாதம்!

இரண்டும் ஒன்றையொன்று சார்ந்தே இருக்கிறது என்பதை மட்டும் மறுக்க முடியாது. எனினும், மக்களிடமுள்ள குறைபாடுகளை வளர்ப்பதற்காக இல்லை, அவற்றைக் களைவதற்காகவே அரசுகள் உள்ளன. அரசு என்பது அரசியல் சார்ந்தது. அரசியலை நடத்துகின்றவர்கள் அரசியல்வாதிகள். அந்த அரசியல்வாதிகள், மக்களேயன்றி வேறு யார்?

ஆனால், மக்களுள் மிக மிகச் சிலரே அரசியலுக்கு வருகின்றனர். ஆம்... 95% மக்களின் வாழ்க்கை, 5% அரசியல்வாதிகளால் தீர்மானிக்கப்படுகின்றது. ஏன்? 95 விழுக்காடு மக்களை அரசியலுக்குள் வரக்கூடாது என் யார் தடுத்தார்கள்?

யாரும் தடுக்கவில்லை. தடுக்கவும் முடியாது. ஆனாலும் அரசியலுக்குள் பெருவாரியான மக்கள் ஏன் அடியெடுத்து வைக்கவில்லை?

"அரசியல் ஒரு சாக்கடை, அரசியல் இன்று அயோக்கியர்களின் புகலிடம் ஆகிவிட்டது, அரசியல்வாதி என்றாலே மக்களை ஏமாற்றுபவன்" என்ற கருத்து இங்கு ‘பொது'மக்களிடம் ஆழ்ந்து வேரூன்றிக் கிடக்கின்றது.

தங்கள் பிள்ளைகள் மருத்துவர்களாக வரவேண்டும், பொறியாளர்களாக, மாவட்ட ஆட்சியர்களாக வரவேண்டும் என்றுதானே பெற்றோர்கள் ஆசைப்படுகின்றனர். தன் மகனோ, மகளோ அரசியல்வாதியாக வரவேண்டும் என்று ஆசைப்படுவதாய்க் கூறும் பெற்றோர்களை நாம் பார்த்ததில்லை.

அரசியலை விட்டு ஒதுங்கி நிற்க வேண்டும் என்ற எண்ணமே இங்கு மேலோங்கி உள்ளது. தேநீர்க் கடைகளில் கூட, ‘இங்கு அரசியல் பேச வேண்டாம்' என்ற எழுத்துப் பலகைதான் தொங்குகின்றது. இலக்கிய அமைப்பினர் பலர் தங்களை ‘அரசியல் சார்பற்றவர்கள்' என்றுதான் அறிவித்துக் கொள்கின்றனர். அரசியல்வாதிகளால் நடத்தப்படும் கல்வி நிலையங்களில் கூட, கவனமாக அரசியல் தவிர்க்கப்படுகிறது. திரைப்படம் மற்றும் பண்பாட்டு விழாக்களில் அரசியல் பேசவேண்டாம் என்றுதான் சொற்பொழிவாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஆனாலும், இந்த ‘அரசியல் தீண்டாமை' வெறும் மாயைதானே தவிர, உண்மையில்லை. இங்கே அரசியல் சாராமல் இருப்பவர்கள் யாவர்? அல்லது, யாரைவிட்டு அரசியல் விலகி நிற்கிறது-? அரசியலை விட்டு நாம் விலகி நிற்பதாய்க் காட்டிக் கொண்டாலும், அரசியல் ஒருநாளும் நம்மை விட்டு விலகி நிற்காது.

நம்முடைய கலை, இலக்கியம், விளையாட்டு, இசை, ஆன்மீகம், கல்வி, பண்பாடு, வாழ்க்கை முறை அனைத்தையும் அரசியலும், அரசியல் வழிப்பட்ட அரசுகளுமே தீர்மானிக்கின்றன. அரசியலின்றி இங்கு ஓர் அணுவும் அசையாது.

கல்வி நிலையங்களில் எந்தப் பாடத்தைக் கற்பிப்பது என்றும், எந்த மொழியில் கற்பிப்பது என்றும் அரசுகள்தாம் முடிவு செய்கின்றன. தனியார் கல்வி நிலையங்களும் அரசின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. திரைப்படங்களில் எது ஆபாசம், எது வன்முறை என்பனவற்றை முடிவுசெய்யும் தணிக்கைக் குழுக்கள் அரசினால்தான் நியமிக்கப்படுகின்றன. கோயில்களை வழிநடத்தும் அறநிலையத் துறை அரசின் ஒரு பகுதி. சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் உரிமைகளை அரசியல் சட்டங்கள்தாம் வரையறுக்கின்றன. காவல் நிலையங்கள் அனைத்தும் அரசாங்கத்தின் ஒரு முகம்தான். நீதிமன்றங்களை வழிநடத்தும் சட்டங்கள் அனைத்தும் அரசினால் உருவாக்கப்பட்டவை.

லஞ்சம், ஊழலைத் தடுப்பதும் அரசுதான். லஞ்சம், ஊழலைக் கண்டும் காணாமலும் இருப்பதும் அரசுதான். சாதி, மதம், பெண் விடுதலை என எல்லாவற்றிலும் அரசின் பங்கும், அரசியலின் பங்கும் மிகக் கூடுதல்.

பிறகு ஏன் மக்கள் அரசியலை விட்டு விலகி நிற்கிறார்கள்?

உண்மையில், அரசியலை விட்டு மக்கள் விலகி நிற்கவில்லை. நிற்கவும் முடியாது. விலகி நிற்பதாய் நினைக்கிறார்கள் அல்லது நடிக்கிறார்கள்-.

தேர்தல்களில் 60 முதல் 95 விழுக்காடு வரை வாக்குகள் பதிவாகின்றனவே, எப்படி? மக்கள்தாமே வாக்களிக்கின்றனர். தேர்தலில் வாக்களிப்பது அரசியல் அன்றி வேறு என்ன? வாக்களிப்பதும் அரசியல்தான், யாருக்கும் வாக்களிக்காதீர்கள், தேர்தலைப் புறக்கணியுங்கள் என்று பரப்புரை செய்வதும் அரசியல்தான்!

எனினும், தேர்தல்களில் வாக்களிப்பதோடு, தங்கள் ‘அரசியல் கடமை' முடிந்து விடுவதாகவே பெரும்பான்மையான மக்கள் கருதுகின்றனர். எங்கே நம் கடமை தொடங்குகின்றதோ, அங்கே அது முடிந்துவிடுகிறது எனக் கருதுவதற்கு என்ன காரணம்?

முதன்மையான மூன்று காரணங்கள் உள்ளன.

1. அருவெறுப்பு
2. அச்சம்
3. அலட்சியம்.

அரசியல் உலகில் பெருகிவிட்ட லஞ்சம், ஊழல், ஆடம்பரம் ஆகியனவற்றைக் கண்டு வெகுமக்கள் பலரிடம், இன்று ஒரு விதமான அருவெறுப்பு ஏற்பட்டுள்ளது. அரசியல்வாதி என்றாலே அடாவடிக்காரன், ஆடம்பரப் பேர்வழி, அடுத்தவனை ஏமாற்றுகிறவன் என்னும் கருத்து இங்கு நிலை கொண்டுள்ளது.

இரண்டாவது, பொதுவாழ்க்கை குறித்த அச்சம். ‘தான் உண்டு, தன் வேலை உண்டு' என்று இருப்பதுதான் நல்லது, நமக்கு எதற்கு ஊர் வம்பு என்ற எண்ணம். யாரையாவது, எதையாவது பேசி, நாளைக்கு நான்கு பேர் நம்மை வந்து தாக்கினால், நமக்கு என்ன பாதுகாப்பு உள்ளது என்ற கவலை.

மூன்றாவதாக அலட்சியம். ‘இராமன் ஆண்டால் நமக்கென்ன, இராவணன் ஆண்டால் நமக்கென்ன' என்று காலகாலமாக வளர்ந்துவிட்ட நம் மனப்போக்கு! ‘நமக்கு வேண்டியது கிடைக்கிறது, பிறகு ஏன் நமக்கு மற்றவைகளைப் பற்றிய கவலை' என்னும் தன்னலம்.

மேற்காணும் மூன்று காரணங்களும் உண்மைக் காரணங்களா, நியாயமான காரணங்களா என்று ஆராய வேண்டாமா?

லஞ்சமும், ஊழலும், கறுப்புப் பணமும் அரசியல்வாதிகளிடம் மட்டும்தான் உள்ளனவா? அரசுத் துறையைத் தாண்டி, அரசியல்வாதிகளைத் தாண்டி, தனியார் துறையினரோ, தனிப்பட்ட மனிதர்களோ லஞ்சமே வாங்குவதில்லையா? கறுப்புப் பணத்தை எதிர்த்துத் திரைப்படம் எடுக்கும் படத் தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், பெரிய நடிகர், நடிகைகளுக்கெல்லாம் கறுப்புப் பணம் என்றால் என்னவென்றே தெரியாதா? அவர்கள் அத்தனை பேரும், தீமைகளைக் கண்டவுடன் அடித்து நொறுக்கிவிடும் ‘அந்நியர்'கள்தாமா? தொழில் துறையில், வணிகத் துறையில் ‘இரண்டாவது கணக்கு' என்று, எதுவுமே கிடையாதா? அரசுக்கான வருமான வரியை அனைவரும் விரும்பி, விரும்பிக் கட்டுகின்றனரா? கல்வி நிலையங்களில், மருத்துவ மனைகளில், விளையாட்டுத் தளங்களில் லஞ்சம் என்னும் பேச்சுக்கே இடமில்லையா?

அரசியல்வாதிகளிடம் ஆடம்பரம் உள்ளது என்பது உண்மைதான். ஆனால், அரசியல்வாதிகளிடம் மட்டும்தான் ஆடம்பரம் உள்ளது என்பது உண்மையில்லை.

அரசியல் உள்பட, எல்லாத் துறைகளிலும் நல்லவர்கள் இருக்கிறார்கள், தீயவர்களும் இருக்கிறார்கள். எல்லாத் தளங்களிலும் எளிமை இருக்கிறது, ஆடம்பரமும் இருக்கிறது. எல்லா இடங்களிலும் பாதுகாப்பு இருக்கிறது, ஆபத்தும் இருக்கிறது. பிறகு ஏன் அரசியலின் மீது மட்டும் வெறுப்பு, அச்சம், அலட்சியம்?

politician

ஒரே ஒரு நியாயமான காரணத்தைச் சொல்ல முடியும். எல்லா இடங்களிலும் தவறுகள் உள்ளன என்றாலும், எல்லாவற்றிற்கும் ஊற்றுக் கண்ணாய் இருப்பது அரசும், அரசியலும்தானே!

ஆம்... அது உண்மைதான். அரசு எவ்வழி, மக்கள் அவ்வழி என்பது சரிதான். அப்படியானால், ஊற்றுக்கண்ணை அடைக்காமல், ஊரில் பெருகும் வெள்ளத்தை எப்படித் தடுப்பது? அடித்தளம் ஆடும் போது, சன்னலுக்கு வண்ணம் பூசி என்ன பயன்? வேர்களை விட்டுவிட்டு, இலைகளுக்கு எவனாவது தண்ணீர் ஊற்றுவானா?

அனைத்துக்கும் அடிக்கல்லாய் இருப்பது அரசியல்தான் என்பது அனைவருக்கும் தெரியும். அதனைவிட்டு விலகி விலகிப் போவதற்கு அச்சமும், அலட்சியமும் மட்டும் காரணங்கள் இல்லை. அவை இரண்டிற்கும் நிலைக்களனாக இருக்கும் தன்னலமும், நுகர்வுப் பண்பாடுமே (Consuming culture) காரணங்கள்.

தன்னலம் என்பது இன்றைய நம் சமூகத்தில், ஆல்போல் தழைத்து, அருகுபோல் வேரோடிக் கொண்டுள்ளது. அனைத்தையும் துய்த்துவிட வேண்டும் என்ற பேராவல் அன்றாடம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. தன் வீடு, தன் பிள்ளை, தன் கல்வி, தன் செல்வம் என்று எல்லாம் ‘தன்'னில் கால் கொண்டு வலுப்பெற்றுள்ளது.

‘மனிதன் தானாகப் பிறக்கவுமில்லை, தனக்காக மட்டும் பிறக்கவுமில்லை' என்பார் பெரியார். அந்தச் சிந்தனையும், சமூகப் பார்வையும், பொதுவாழ்வும் நம் அத்தனை பேரிடமும் குறைந்து கொண்டே போகின்றன. அனைத்து ஆபத்துகளும் அங்குதான் தொடங்குகின்றன!

(வியாழன்தோறும் சந்திப்போம்)

தொடர்புக்கு: ([email protected] , www.subavee.com)

English summary
The 27th part of Subavee's Arinthum Ariyamalum discusses about why public hesitates to participate in politics.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X