For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'சின்னப் பையன்' தந்த அழிவு!

By புன்னியாமீன்
Google Oneindia Tamil News

உலக வரலாற்றில் கரைபடிந்த அத்தியாயம் ஒன்றை அமெரிக்கா வழங்கி 2009 ஆகஸ்ட் 6ம் தேதியுடன் 64 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1945ம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் நாள் காலை வழக்கம்போல் ஜப்பானின் துறைமுக நகரான ஹிரோஷிமா நகரமும் துயில் கலைந்து பரபரப்பாகிக் கொண்டிருந்தது. எத்தனையோ சுனாமிகளுக்குப் பழக்கப்பட்டிருந்த ஜப்பானியர்களால் வரப்போகும் சூறாவளியைப்பற்றி அறிந்திருக்க முடியவில்லை. எனோலா கே (Enola Gay) என்ற B-29 ரக விமானத்தில் அமெரிக்காவிலிருந்து, அந்நாட்டின் விமானப்படை வீரரான போல் டிபெட்ஸ், ஹிரோஷிமா நகரினை நெருங்கிக் கொண்டிருக்கையில் நேரம் காலை 8.00 மணியைத் தாண்டிவிட்டிருந்தது. சரியாக காலை 8.15ற்கு அந்த சூறாவளி விண்ணிலிருந்து தரை நோக்கி முதலாவது அணுகுண்டு (பெயர் லிட்டில் பாய்) மனித குலத்தை நாசமாக்க வெடித்துக் கிளம்பியது.

அணு குண்டு அணுக்கரு பிளவு முறையிலோ, அணுக்கரு இணைவு முறையிலோ அழிவு ஆற்றலைப் பெறும் வெடிப்பாயுதமாகும். ஏனைய வெடிமருந்துளை ஒப்பிடும்போது அணுகுண்டின் ஆற்றல் பல ஆயிரம் மடங்கு பெரிது. அணுக்கரு பிளவு (Nuclear fission) எனப்படுவது அணு ஒன்றின் கருவானது, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட லேசான அணுக்கருக்களாக பிளவுறும் நிகழ்வு ஆகும். இவ்வணுக்கருப் பிளவின் போது நியூத்திரன்களும் 'காமா' வடிவத்தில் கதிரியக்க ஆற்றலும் வெளிப்படுகின்றன. பாரமான தனிமங்களின் பிளவின் போது பிகப் பெரிய அளவில் ஆற்றல் மின்காந்த அலைகள் ஆகவும் இயக்க ஆற்றலாகவும் வெளிப்படுகின்றன.

1939ம் ஆண்டில் ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த ஹான் மெயிட்னர் மற்றும் ஸ்ட்ராஸ்மன் ஆகியோர் அணுக்கரு வினைகளை ஆராயும்போது யுரேனியம் நியூட்ரான்களால் தாக்கப்படும்போது அது பேரியம், கிரிப்டான் ஆகிய அணுக்கருக்களாகப் பிளவுறுவதை உணர்ந்தனர். 200 MeV அளவு ஆற்றல் வெளிவிடப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.முதன்முறையாக அணு ஆயுதம் அமெரிக்காவில், பல்வேறு ஐரோப்பிய நாடுகளை சார்ந்த புலம் பெயர்ந்த அறிவியளாலர்களாலும், இங்கிலாந்து, கனடா போன்ற நாடுகளின் கூட்டு முயற்சியாலும், இரண்டாம் உலகபோரின்போது "Manhattan Project" என்ற பெயரில் நடந்த ரகசிய ஆராய்ச்சிகளின் விளைவாக உருவாக்கபட்டது.

முதல் அணு ஆயுதம் ஜெர்மானிய நாசிகளுடன் எற்பட்ட ஆயுதப்போட்டியின் விளைவாக உருவாக்கப்பட்டாலும், ஜப்பானியர்களுக்கு எதிராக ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகசாகி மீது பயன்படுத்தபட்டது. சின்னப்பையன் (Little Boy) தன் கடமையைச் சரிவரச் செய்து விட்டான் என்கின்ற செய்தியோடு போல் டிபெட்ஸ் தன் தாயகத்திற்கு திரும்பினார். ஹிரோஷிமா எரிந்தழியத் தொடங்கியது. முதலாவது அணுகுண்டின் வீரியத்தைக் கண்டு மனிதகுலம் உறைந்தது. ஒற்றைக் குண்டு, சுமார் 4 இலட்சம் மக்கள் வாழ்ந்து கொண்டிருந்த ஹிரோஷிமா நகரின் மையப்பகுதியில் 580 மீற்றர் உயரத்தில் அக்குண்டு வெடித்ததும் கண்களைக் குருடாக்கும் வெளிச்சம் வான் வெளியில் பரவியது. காற்றின் வெப்பநிலை 4,000 சதம் உயர்ந்தது. மணிக்கு 400 கிலோமீட்டர் வேகத்தில் சூறாவளி ஊழித் தீயாய்ப் புறப்பட்டது. குண்டு வெடித்த 15 விநாடிகளில் 12 ஆயிரம் மீற்றர் உயரத்துக்கு ராட்சதக் கதிர்வீச்சுப் புகை மண்டலம் எழுந்து நின்றது. மரங்கள் தீப்பந்தங்களாகின. இரும்புத் தூண்கள் உருகி ஓடின. குண்டு வெடித்த ஒரு நிமிடத்தில் ஒரு லட்சத்து நாற்பதினாயிரம் அப்பாவி மக்களுடன் அந்த நகரையே சுடுகாடாக்கியிருந்தது. ரோஷிமாவில் இருந்த சுமார் 75 ஆயிரம் கட்டிடங்களில் 70 சதவீதமானவை சாம்பலாகின.

மீண்டும் மூன்று நாட்கள் கழித்து ஆகஸ்ட் 9 முற்பகல் 11.02 மணிக்கு "குண்டு மனிதன்' (Fat Man) என்று பெயரிடப்பட்ட மற்றொரு அணுகுண்டை நாகசாகி நகரின் மீது அமெரிக்கப் போர் விமானம் வீசியது. நகரின் மையப்பகுதியில் இருந்து 500 மீட்டர் உயரத்தில் வெடித்த அக்குண்டினால் அந்நகரில் வாழ்ந்த 280,000 மக்களில் 40 ஆயிரம் பேர் உடனடியாகவே இறந்தனர். இரு அணுகுண்டுத் தாக்குதல்களின் விளைவான காயங்களினாலும் கதிர்வீச்சுத் தாக்கங்களினாலும் அடுத்த ஒரு வருடத்திற்குள் இரு நகரங்களிலும் சுமார் ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மக்கள் பலியாகினர்.

ஹிரோஷிமாவில் 13 சதுர கிலோ மீற்றர் பரப்பளவும் நாகசாகியில் 6.7 சதுர கிலோமீற்றர் பரப்பளவும் முற்றாக எரிந்து சாம்பலாகின. உயிர் தப்பியவர்கள் பல ஆண்டுகள் கழித்தும் கூட கதிரியக்க நச்சினாலும் புற்று நோயினாலும் தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட வண்ணமேயிருக்கிறார்கள். இன்றும் கூட அந்த நகரங்களில் பிறக்கும் பல குழந்தைகள் ஊனமுற்றவர்களாகவே உலகைத் தரிசிக்கிறார்கள்.

எப்படியோ இரண்டாவது உலக மகாயுத்தத்துக்கு பின்னரான காலகட்டத்திலே கெடுபிடியுத்தம் தீவிரமடைந்த போது 1962 கியூபா ஏவுகணை நெருக்கடி போன்ற சில சந்தர்ப்பங்களில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படக்கூடிய ஆபத்தின் விளிம்புக்கு உலகம் சென்றபோதிலும் கூட கடந்த 64 வருடங்களாக அணு ஆயுத உபயோகம் தவிர்க்கப்பட்டே வந்திருக்கிறது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

ஹிரோஷிமா, நாகசாகி குண்டு வீச்சுகளுக்கு பிறகு, சுமார் இரண்டாயிரம் தடவைகளுக்கு மேல் சோதனைகளுககாக பல்வேறு நாடுகளால் அணுகுண்டு வெடிக்க வைக்கபட்டுள்ளது. 1949ம் ஆண்டு சோவியத் யூனியனும் தனது முதல் அணு ஆயுதத்தை சோதனையைச் செய்தது. அமெரிக்காவுக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த கடும் ஆயுத போட்டியின் விளைவாக, 1950களில் ஹைட்ரஜன் அணுகுண்டு கண்டுபிடிக்கபட்டது.

1960களில் எற்பட்ட ஏவுகணை தொழிநுட்ப வளர்ச்சியினால், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகள் உருவாக்கப்பட்டன.

அணுகுண்டு தொழில்நுட்பத்தை பயன்படுத்த தெரிந்த நாடுகளாக உறுதிசெய்ய நாடுகள் முறையே (காலமுறைபடி) அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வட கொரியா. பிற சில நாடுகளும் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொண்டிருக்கலாம் என்ற ஐயம் இருப்பினும், முழுமையாக அதை உறுதிசெய்ய இயலவில்லை.
உதாரணமாக, இஸ்ரேல் அணு ஆயுத வான்வழி தாக்குதலுக்கு பயன்படுத்தபடும் சில துணைக் கருவிகளை உருவாக்கியுள்ளதை கருத்தில்கொண்டால், அது அணு ஆயுதங்களை கொண்டுள்ளதோ என்ற ஐயம் எழுவது திண்ணம். அண்மைகாலமாக, ஈரான் அணு ஆயுத தொழில்நுட்பத்தை தெரிந்துகொள்ள முயலுவதாக அமெரிக்கா குற்றம் சாற்றுகிறது.

ஜப்பானில் நேற்று 64 ஆவது ஹிரோஷிமா தினம் கடைப்பிடிக்கப்பட்டது. ஹிரோஷிமா அணுகுண்டு வீச்சில் உயிரிழந்தவர்களுக்கு செலுத்தப்பட்ட நினைவஞ்சலி நிகழ்ச்சியில் பேசிய ஹிரோஷிமா மேயர், அடுத்த பத்தாண்டுகளில் உலகம் எங்கும் உள்ள அணு ஆயுதங்களை அழிக்க அழைப்பு விடுத்தார். இந்நிகழ்ச்சியில் அணுகுண்டு வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுடன் 50 ஆயிரம் மக்கள் கலந்துகொண்டு நினைவஞ்சலி செலுத்தினார்கள். ஜப்பான் பிரதமர் டாரோ அசோவும் இந்நிகழ்வில் பங்கேற்றார். அணு ஆயுதமற்ற உலகம் வேண்டும் என்று குறிப்பிட்ட ஹிரோஷிமா மேயர், வரும் 2020ம் ஆண்டிற்குள் இது கைகூட உலக நாடுகள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதனை ஒரு நினைவு நாள் சொற் பொழிவு என சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோஷம் உலக நாடுகளில் சமாதனத்திற்கு விடுக்கப்படும் அழைப்பாகும். ஆனால் ஹிரோஷுமா, நாகசாகியின் கொடுமைகளைக் கண்டும் அணு ஆயுதப் போட்டியில் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே இருக்கின்றன.

இன்று அந்நாடுகள் அறிவித்துள்ள புள்ளி விபரங்கள் படி அணு ஆயுத நாடுகள் வைத்திருக்கும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை பின்வருமாறு உள்ளது:

அமெரிக்கா-10,240.
ரஷ்யா-8,400
சீனா-390
பிரான்ஸ்-350
இங்கிலாந்து-200-300
இந்தியா- 60-90
பாகிஸ்தான்-30-52
வட கொரியா-0-18

அதே நேரம் இன்று உலகில் சுமார் 40 நாடுகளிடம் அணு ஆயுத மூலப்பொருட்கள் இருக்கின்றன. இவற்றை வைத்து நோக்கும் போது அணு ஆயுதங்களின் போட்டி குறையவில்லை என்பதையே எடுத்துக்காட்டுகின்றது. அணு ஆயுதங்களைத் தயாரிப்பதற்கும் பராமரிக்கவும் செலவிடப்படுகின்ற நிதி பற்றிய மதிப்பீடுகள் அதிர்ச்சி தருகின்றன.

அமெரிக்கா 2008ம் ஆண்டு மட்டும் இதற்காக 5,240 கோடி டாலர்களை செலவிட்டிருக்கிறது. அணு ஆயுதங்களின் தரத்தை உயர்த்துவதற்கும் பராமரிப்பதற்கும் அமெரிக்கா வருடாந்தம் 2,900 கோடி டாலர்களை செலவிடுகிறது. இது இந்தியாவின் வருடாந்த வரவு செலவுத்திட்டத்தில் பாதுகாப்புத் துறைக்கு ஒதுக்கப்படும் நிதியைவிட அதிகமானதாகும்.

உலக வரலாற்றில், அணு ஆயுதங்கள் நாட்டின் ராணுவ பலத்தின் சின்னமாகவும், ராணுவ தொழிநுட்ப வளர்ச்சியை பறைசாற்றும் முயற்சியாகவும் கருதப்பட்டன. அமெரிக்காக்கும், சோவியத் யூனியனுக்கும் இடையே நடந்த பனிப்போரின்போது, அணு ஆயுதத்தை பரிசோதனைகள் எச்சரிக்கை சமிக்கைகள் போல் பயன்படுத்தபட்டன. இவ்வாறு பனிப்போர் நடந்து கொண்டிருக்கும் காலத்தில், மற்ற சில நாடுகளும், அணு ஆயுத தொழிநுட்பத்தை கற்றுக்கொண்டு இருந்தன. அவையாவன, இங்கிலாந்து, பிரான்சு மற்றும் சீனா.

இந்த ஐந்து அணுஆயுத நாடுகளும் இணைந்து அணு ஆயுத பரவலை தடுக்க வழிசெய்யும் ஓர் ஓப்பந்ததை (NPT) உருவாக்கி, மற்ற நாடுகளையும் அதில் கையெழுத்திடுமாறு வலியுறுத்தின. அணுஆயுத பரவல் தடுப்பு ஓப்பந்ததில் சரத்துகள் விவாதத்துகுரியவையாக சில நாடுகள் கருதியகையாதலால், இந்த ஓப்பந்தம் முழு வெற்றி அடையவில்லை. ஓப்பந்ததை விட்டு விலகி சில நாடுகளும் (வட கொரியா), ஓப்பந்ததில் கையெழுத்திடாமல் சில நாடுகளும் (இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, மற்றும் இஸ்ரேல்) அணு ஆயுத தொழிநுட்பத்தை அடைந்தன.

1990களின் தொடக்கத்தில், பனிப்போர் முடிவுற்ற சூழ்நிலையில, அமெரிக்காவும், ரஷ்யாவும் தம் அணுஆயுதங்களை படிப்படியாக குறைத்துக் கொள்வதாக அறிவித்தன.

2005ம் ஆண்டு, ஜனவரி மாதம் பாகிஸ்தானை சார்ந்த பிரபல விஞ்ஞானி அப்துல் கதீர் கான், தான் ஈரான், லிபியா, வட கொரியா ஆகிய நாடுகளுக்கு அணு ஆயுத தொழில்நுட்பத்தை விற்றதாக ஒப்புக்கொண்டார். இது வள்ர்ந்த நாடுகள்டையே பெரும் அதிச்சியலையை உருவாக்கியது. அதே ஆண்டு அக்டோபரில் வட கொரியா தனது, முதலாவது அணுகுண்டு சோதனையை நடத்தியது.

ஆக, அணு ஆயுதம் அற்ற உலகம் வேண்டும் என்ற கோஷம் வெறும் ஒரு கோஷமாகவே மட்டும் இருக்கப் போவது மட்டும் உண்மை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X