For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலக குடிநீர் தினம்

By Siva
Google Oneindia Tamil News

International World water day
-புனியமீன்

1992ம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற சுற்றாடல் மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஐக்கிய நாடுகள் மகாநாட்டில் செய்யப்பட்ட சிபாரிசையடுத்து மார்ச் 22ம் தேதியை உலக நீர் தினமாக ஐ.நா.பொதுச் சபை பிரகடனம் செய்தது. அதைத் தொடர்ந்து கடந்த 18 வருடங்களாக இத்தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

அருந்தலாகக் கிடைக்கின்ற நீர்வளத்தை மனிதன் தன் தேவைக்குத் திட்டமிட்டுப் பயன்படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்துவதற்காகவே இத்தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. சர்வதேச நீர்வள தினத்தின் கருப்பொருள் நீர்வளத்தை மதிப்பிட்டு மிகப் பயனுள்ள வகையில் அதனை முகாமைத்துவம் செய்தலாகும்.

உயிருள்ள அனைத்து ஜீவன்களினதும் இயக்கத்துக்கு ஆதாரம் நீர். உயிரற்ற ஜடங்களின் தூய்மை பேணவும் உதவுவது நீர். நீரின்றி உலகமே இல்லை. எல்லா வளங்களுக்கும் மூலவளம் நீரே. உலக மக்களின் வாழ்வியலோடு இரண்டறக் கலந்த உன்னத பொக்கிசமே நீர். நீர் வளமானது சகல உயிரினங்களின் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாகும். அதனை பயன்படுத்துவோர்களிடையே மேலும் மேலும் தேவைகள் அதிகரிப்பதனால் இன்று நீர் போட்டிப் பொருளாகவும், சந்தைப் பொருளாகவும் கூட மாறிவிட்டது.

பூமியெனும் உயிரின வாழ்விடத்தைத் தவிர வேறு எந்தக் கோளிலும் நீரில்லை என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். இதன் காரணமாக அங்கெல்லாம் உயிரினம் இல்லை என கூறப்படுகின்றது. வேற்றுக் கிரகங்களில் மரம், செடி கொடி, ஆறு, குளம், ஓடைகளும் இல்லை. இதன் காரணமாகவே அந்த கிரகங்களில் உயிரினங்கள் இல்லையென இதுவரை கண்டுபிடிப்புக்கள் நிரூபித்துள்ளன.

நீர் உயிரின் ஆதாரம். உயிர்களனைத்துக்கும் அதுவே ஜீவாதாரம். நீர் இல்லை என்றால் இந்த உலகிலும் உயிருள்ள ஜீவன்கள் இருக்கமாட்டாது. உணவு இல்லை என்றால் அதனை உற்பத்தி செய்து கொள்ளலாம். உடை இல்லை என்றாலும் அதனையும் உற்பத்தி செய்து கொள்ளலாம். ஆனால் நீர் இல்லாது போய்விட்டால் அதனை எந்த ஒரு சக்தியாலும் உற்பத்தி செய்யவே முடியாது.

மனித சமுதாயத்துக்கு நீரின் பயன் அளப்பரியது. பிறப்பிலும், வாழ்விலும், இறப்பிலும் கூட இணை பிரியாத இன்றியமையாத சாதனமாக விளங்குவது தண்ணீர். நீரின்றி நிலமில்லை, நிலமின்றி நீரில்லை எனும் தத்துவத்தைப் போதிக்கும் மகத்துவம் நிறைந்த தண்ணீரின் பெருமைகளை மதங்களும் மகிமைப்படுத்துகின்றன.

ஒவ்வொரு வருடமும் உலக நீர் தினத்துக்கென ஒரு தொனிப்பொருள் பிரகடனம் செய்யப்படுகிறது. இந்த ஆண்டின் தொனிப் பொருள் "எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளம்; நீரைப்பகிர்தல், வாய்ப்புக்களைப் பகிர்தல்" (Transboundary waters; Sharing water, Sharing opportunities) என்பதாகும். எல்லைகளுக்கு அப்பாலான நீர்வளங்களை கூட்டாக முகாமைத்துவம் செய்வதில் ஒத்துழைப்புக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதும் நாடுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையைக் கட்டியெழுப்பி அமைதி, சமாதானம், பாதுகாப்பு மற்றும் நிலைபேறான பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை மேம்படுத்துவதுமே இத்தொனிப்பொருளின் நோக்கமாகும்.

நீர்வளத்தின் முக்கியத்துவம் எல்லாக் காலங்களிலும் உணரப்பட்டு வந்துள்ளது. உலக வரலாற்றைப் பின்னோக்கிப் பார்க்கும்போது புகழ்பெற்ற உலக நாகரிகங்கள் எல்லாம் நீர் நிலைகளை அடிப்படையாகக் கொண்டே தோன்றியுள்ளன. நைல் நதி, சிந்து நதி, யூப்பிரடிஸ், தைகிறீஸ் போன்றன உலக நாகரிகங்களின் பிறப்பிடங்கள் எனப்படுகின்றது. எனவே இத்தகைய நாகரிக எழுச்சியின் மூலமே நீர் என்பது புலனாகின்றது.

பூமியின் நிலப்பரப்பில் 75 சதவீதம் இருப்பது நீர் எனினும் உலக சனத்தொகையின் ஒவ்வொரு நான்கு பேரிலும் மூவர் அருந்துவதற்கு தூய நீரின்றி அவதிப்படுகின்றனர். எமது நாட்டின் 25 மாவட்டங்களுள் 14 மாவட்டங்களில் வாழும் மொத்த சனத்தொகையின் 33 சதவீதமானவர்களுக்கு தூய குடிநீர் கிடைப்பதில்லை. உலக நீர்ப்பரப்பில் 97.5 சதவீதம் உப்பு நீராகவும், 2.5 சதவீதம் நன்னீராகவும் உள்ளது. நன்னீர்ப் பரப்பிலும் 69 சதவீதம் பனிக்கட்டியால் மூடப்பட்ட பிரதேசமாகும். 30 சதவீதம் நிலக்கீழ் நீர். 3 சதவீதம் நன்னீர் ஏரிகளும், நதிகளும் எஞ்சிய பகுதி ஈரழிப்பு தரைப் பிரதேசங்களுமாகும்.

உலகளாவிய ரீதியில் பார்க்கும்போது நீரை அதிகமாகப் பயன்படுத்தும் துறை விவசாயமாகும். 85 சதவீதம் விவசாயத்துக்காக நீர் பயன்படுத்தப்படுகின்றது என புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. கைத்தொழில்த்துறை 10 சதவீதத்தைப் பயன்படுத்துகின்றது. எஞ்சிய 5 சதவீதமே வீட்டுப் பாவனைக்குரியது. எனவே, அருமையாக உள்ள வளத்தை மக்கள் தற்போது எவ்வாறு பாவிக்கின்றார்கள் என்பதைப் பொறுத்தே எதிர்கால மக்களின் வாழ்வு அமையுமென குறிப்பிடப்படுகின்றது.

நகரமயமாக்கல் பல்வேறு நீர்ப்பிரச்சினைக்குக் காரணமாகின்றது. குடிநீர் போதாமை, சுகாதாரம் பேணப்படாமை மற்றும் நீர் மூலம் உண்டாகும் வியாதிகள் என்பவற்றுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளது. உலகில் வறிய நாடுகள் நிலக்கீழ் நீரையும் பெற்றுக் கொள்ளும் அளவில் தகாமுள்ளவையாக இருக்கின்றன. காரணம் காடழிப்பு, வனாந்திரமாதல் ஆகியவற்றால் மழைவீழ்ச்சி குறைவடைந்து வருகின்றமையாகும்.

வருடாந்தம் சனத்தொகை 90 மில்லியனால் அதிகரித்துச் செல்கின்றது. அந்தளவு நீரைப் பயன்படுத்தும் மக்களும் அதிகரிக்கின்றனர். நீர் தீர்ந்துபோன ஒரு வளம் என்பது பற்றிய உலகளாவிய விழிப்புணர்வு ரியோடி ஜெனிரோவில் நடந்த புவி உச்சி மகாநாட்டிலும், 1992ல் நீரும் சுற்றாடலும் பற்றிய டப்ளின் மகாநாட்டிலும் பிரதிபலித்தது. ரியோ– டப்ளின் மகாநாட்டுக் கோட்பாடுகளின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்ட நீர்வள முகாமைத்துவம் சம்பந்தமாக சர்வதேச நடவடிக்கைகள் பல மேற்கொள்ளப்பட்டன. வீட்டுப் பாவணையாளர் சங்கங்களும், கமக்காரர் அமைப்புக்களும் முறையே வீட்டுத்தேவை, விவசாயத்தேவை என்பனவற்றுக்காக நீரை முகாமைத்துவம் செய்வதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.

உலகில் பாதுகாப்பான நீரின்றி 8 செக்கன்ட்களுக்கு ஒரு குழந்தை என்ற விகிதத்தில் மரணம் நிகழ்வதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு வருடமும் உலகில் ஒரு கோடியே 50 லட்சம் குழந்தைகள் சாவதற்கு பாதுகாப்பற்ற குடிநீர் முதல் காரணமாக அமைகிறது. நீர் தொடர்பான நோய்களினால் இறப்பவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துக் கொண்டே போகிறது. உலகில் மூவரில் ஒருவருக்குப் பாதுகாப்பான குடிநீர் உறுதி செய்யப்படவில்லை. நீர்ப் பற்றாக்குறையும், புவி வெப்பமயமாதலும் மனித குலம் இன்று எதிர்கொள்ள ஆரம்பித்திருக்கும் பேராபத்துக்களாகும்.

இவ்விரு பேராபத்துக்களையும் சமாளிப்பதற்கு உலக நாடுகள் தங்களை எந்தளவுக்கு உருப்படியான முறையில் தயார்படுத்தியிருக்கின்றன என்பதை நோக்கும்போது வேதனையே மிச்சமாகிறது. ஒரு குடம் நீர் வேண்டி மைல் கணக்கில் நடக்கும் மக்கள் உலகில் வாழ்கிறார்கள் என்பதை மறந்து நாம் பொறுப்புணர்வின்றி வாழக் கூடாது. நீரின்றி அமையாது உலகு என்று வள்ளுவர் சொன்னதை மனதிலிருத்திச் செயல்படுவோம்!

நீர்ப்பிரச்சனைகளின் பாரதூரமான விளைவுகள் குறித்து நீண்டகாலமாக ஆராயப்பட்டு வந்துள்ளது. விதப்புரைகள் 1977ல் அர்ஜென்டினாவில் நடந்த ஐ.நா.வின் நீர்வள மகாநாட்டில் உருவாக்கப்பட்டன. அதன்பின் 1992ல் நடந்த ரியோ மகாநாடு, 1994ல் ரியோவில் நடந்த சுற்றாடலும் அபிவிருத்தியும் மகாநாடு என்பன உலகில் நன்னீர் வளங்களை மதிப்பிட வேண்டும் என்பதை வலியுறுத்தின. 1997ல் நடைபெற்ற ஐ.நா. பொதுச்சபை இதனை நடைமுறைப்படுத்துவதற்கு அங்கீகாரம் வழங்கியது.

உலக வானிலை அவதான அமைப்பும்; (WMO) யுனெஸ்கோவும் 1997ல் உலக நீர்வள தினத்தைக் கொண்டாடுவதற்கான தலைமை முகவராகப் பணியாற்றின. சென்னை நீரியல்துறை அறிஞர் பேராசிரியர் ஏ. மோகனக் கிருஷ்ணன் கூற்றுப்படி உலகிலுள்ள 240 பெரும் ஆறுகள் உள்ளுர்ப் பாவணைக்கு போதுமானவையாகவே உள்ளன. பெருகிவரும் சனத்தொகையால் நீர்வளம் அருகி வருகின்றது. 21ம் நூற்றாண்டில் இந்நிலை மேலும் உக்கிரமடையும் உலக யுத்தம் ஒன்று மீண்டும் ஆரம்பிக்குமானால் அது நீருக்காகவே ஏற்படும்.

இலங்கையில் வழமையாக உலக நீர் தினத்தில் நீர் முகாமைத்துவத்துடன் தொடர்புடைய அமைச்சரின் செய்தியும் பத்திரிகைகளில் விசேட அனுபந்தங்கள் மற்றும் கட்டுரைகளும் வெளியாகுவதைத் தவிர, மக்கள் மத்தியில் பெரியளவில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தக் கூடிய உருப்படியான செயற்திட்டங்கள் எதுவுமே முன்னெடுக்கப்படுவதில்லை. நீர்ச் சிக்கனம், நீர்த் தூய்மை, நீர்ச் சேமிப்பு குறித்து விழிப்புணர்வும் அக்கறையும் எம்மத்தியில் எந்தளவுக்கு இருக்கிறது என்பது மனச்சாட்சியைத் தொட்டுப்பார்க்கும்போது ஒவ்வொருவருக்கும் பிரகாசமாக விளங்கும். வீதியோரக் குழாயில் நீர் வீணே வடிந்து கொண்டிருக்கும்போது ஒரு நிமிடம் தாமதித்து நின்று அக்குழாயைப் பூட்டுவதற்கு எம்மில் எத்தனைபேர் உண்மையில் மானசீகமாக அக்கறை காட்டுகிறோம். நீர் விவகாரத்தில் இது எமது மனச்சாட்சிக்கு ஒரு அமிலப் பரீட்சையாகவே அமைந்துவிடுகிறது.

இலங்கையின் நீர்வள முகாமையின் வரலாறு பெரும்பாலும் வழங்கல் வரலாறாகவே இருந்தது. பண்டைய நீர்ப்பாசனக் குளங்கள் தேவையான நீரை விநியோகித்தன. இலங்கையின் தற்போதைய நீர் நிலைமை பற்றி விவசாயத்துறை நிபுணர் கலாநிதி சி.ஆர். பானப்பொக்கே நமது நீர்ப்பாவனை பற்றி நாம் மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீர்ப்பாவனை குறித்து நமது பழக்கவழக்கங்களும். பண்பாடும் மாறவேண்டும். இன்றேல் அடுத்த நூற்றாண்டில் நாம் பாரதூரமான விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும் என்று கூறியுள்ளமை சிந்திக்கத்தது.

தற்போது இலங்கையில் நீர் முகாமைத்துவ நடவடிக்கைகள் ஆசிய அபிவிருத்தி வங்கி, USAID தாபனம் ஆகியவற்றின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்றன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை குடிநீரை விநியோகிக்கின்றது.

நீர் பற்றி செவ்விந்தியத் தலைவர் சியாட்டில்(Siyattle) கூறியுள்ள கூற்று நீரின் அருமையைக் குறித்து எமது சிந்தனையைத் தூண்டுவதாகும். இந்த நாடு நமக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்கு அருவிகளிலும், ஆறுகளிலும் ஓடும் ஒளிர்விடும் நீர் வெறுமனே நீர் அன்று. இது எம் முன்னோரின் இரத்தம், அவை புனிதமானது என்பதை நினைவு கூர வேண்டும். மேலும் எமது பிள்ளைகளுக்கும் அவற்றின் புனிதத் தன்மையையிட்டு அறிவுறுத்த வேண்டும்.

உலக நீர் தினம் நினைவு கூறப்பட்டால் மட்டும் போதாது. அதன் தாற்பரியம் பேணப்படல் வேண்டும். மனித வாழ்வோடும், சடங்கு சம்பிரதாயங்களோடும் பின்னிப் பிணைந்தது தண்ணீரின் வரலாறு. உலக முன்னேற்றத்துக்கேற்ப, சனத்தொகைப் பெருக்கத்துக்கேற்ப, தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நீரின் தேவை நாளும் பொழுதும் அதிகரித்து வருகிறது. அதே வேளை தூய நீரின் எல்லை அருகி வருகிறது. நாம் நாமே நினைக்காத வரையில் நீர்ப்பற்றாக்குறை நீங்குவது சாத்தியமல்ல. நீரை வீணே விரயம் செய்வதும், எல்லை இன்றி பயன்படுத்துவதும், நீர்ப்பற்றாக்குறை நிதமும் நிலவவே வழி செய்யும்.

எனவே, நீர் எங்கள் உயிருக்கு நேர் என்று நாம் கருதி செயல்பட வேண்டும். ஒவ்வொரு துளி நீரும் ஒவ்வொரு பவுண் தங்கம் என எண்ணி நாம் நடந்து கொள்ள வேண்டும். நீர் இன்றேல் பார் இல்லை என்று நாம் கருத வேண்டும். அனைத்து வளங்களுக்கும் தாய்வளம் தண்ணீர். ஊர் வளம் பெற, பார் வளம் பெற நீர் வளம் காப்போம் என இந்த தினத்தில் திட சங்கற்பம் பூணுவோம்.

English summary
International world water day is observed on march 22 every year. Water is the elixir of earth. This day is observed to create awareness among the people about the importance of saving the precious water.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X