For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஃபீஃபா உலகக் கோப்பை போட்டிகள்: ஒரு பார்வை

By Siva
Google Oneindia Tamil News

-புன்னியாமீன்

சென்னை: உலகிலேயே அதிகளவு ரசிகர்களை கொண்ட விளையாட்டு கால்பந்து போட்டியாகும். உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் 1930ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 2014ம் ஆண்டுக்கான 20வது உலகக் கோப்பை போட்டி பிரேசிலில் 12ம் தேதி துவங்கிது. இந்த போட்டிகள் வரும் ஜூலை மாதம் 13ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

பிரிவுக்கு 4 அணிகள் வீதம் 8 பிரிவுகளில் மொத்தம் 32 அணிகள் கலந்து கொள்ளும் இப்போட்டித் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு முதற் பரிசாக 35 மில்லியன் அமெரிக்க டாலரும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு 25 மில்லியன் அமெரிக்க டாலரும், மூன்றாம் இடம்பிடிக்கும் அணிக்கு 22 மில்லியின் அமெரிக்க டாலரும் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FIFA world cups: All you want to know

உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கு தகுதி பெறுவது என்பது சுலபமான விஷயம் கிடையாது. போட்டியை நடத்தும் நாடு மட்டும் நேரடியாக தகுதி பெறும். மற்ற 31 இடத்திற்கு தகுதி சுற்று போட்டிகள் நடைபெறும். இந்த முறை தகுதி சுற்று போட்டியில் 203 நாடுகள் மொத்தம் 820 ஆட்டங்களில் இரண்டு ஆண்டுகள் விளையாடின. அதில் இருந்து 31 அணிகள் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

20 வது உலகக் கிண்ண போட்டியில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

பிரிவு - ஏ : பிரேசில், குரோஷியா, மெக்சிகோ, கேமரூன்

பிரிவு - பி : ஸ்பெயின், நெதர்லாந்து, சிலி, ஆஸ்திரேலியா

பிரிவு - சி : கொலம்பியா, கிரீஸ், ஐவரிகோஸ்ட், ஜப்பான்

பிரிவு - டி : உருகுவே, கோஸ்டாரிகா, இங்கிலாந்து, இத்தாலி

பிரிவு - இ : சுவிட்சர்லாந்து, ஈகுவடார், பிரான்ஸ், ஹோண்டுராஸ்

பிரிவு - எஃப் : அர்ஜென்டினா, போஸ்னியா, ஈரான், நைஜீரியா

பிரிவு - ஜி : ஜெர்மனி, போர்ச்சுக்கல், கானா, அமெரிக்கா

பிரிவு - ஹெச் : பெல்ஜியம், அல்ஜீரியா, ரஷியா, தென் கொரியா

‘கோல் லைன்' தொழில்நுட்பம்

இந்த உலகக் கோப்பையில் முதல் முறையாக ‘கோல் லைன்' தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஜெர்மனியின் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட கருவி மூலம் ‘கோல் லைன்' எனப்படும் எல்லை கோட்டை பந்து தாண்டியதா? இல்லையா? என்பதை நடுவர்கள் கண்டறியலாம். கோல் கம்பத்தை சுற்றிலும் 14 அதிவேக படப்பிடிப்பு கருவிகள் பொருத்தப்படும்.

இந்த கருவி பந்து எல்லை கோட்டை கடந்து விட்டால் அடுத்த வினாடியே நடுவர் கையில் கட்டி இருக்கும் கை கடிகாரத்துக்கு தகவல் தெரிந்துவிடும். இந்த தொழில்நுட்பம் மூலம் கால்பந்து விளையாட்டில் நீண்ட காலமாக நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

மாற்றுத்திறனாளிகளால் ஆரம்பித்து வைப்பு

முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு செயற்கைக் கால் பொருத்தியுள்ள பிரேசில் நாட்டை சேர்ந்த ஒருவர் வரலாற்று சிறப்பு மிக்க இந்த கால்பந்து போட்டியை ஆரம்பித்து வைத்தார்.

‘மீண்டும் நடக்க தொடங்குங்கள்' (வாக் அகைய்ன்) என்ற திட்டத்துக்காக உலகின் தலைசிறந்த நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சியாளர்கள் ‘எக்ஸோ ஸ்கெலிட்டன்' என்ற செயற்கை கால்களை உருவாக்கியுள்ளனர். மூளையின் கட்டளைக்கேற்ப செயல்படும் வகையில் மிக நுட்பமான மெல்லிய செயற்கை தோலையும் இணைத்து இந்த மாற்றுக் கால்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இவ்வகை செயற்கை கால்களை பொருத்திய ரோபோக்களின் மூலம் முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் மூளையில் தோன்றும் உணர்வுகளின்படி இந்த அதிநவீன செயற்கை கால்கள் செயல்படுகின்றன. இவ்வகையிலான செயற்கை கால்களை பொருத்திய பிரேசில் நாட்டை சேர்ந்த சிலருக்கு வழங்கப்பட்ட நீண்ட கால பயிற்சியின் பலனாக, மூளையின் கட்டளைக்கேற்ப செயற்கை கால்கள் துல்லியமாக செயலாற்றுவது நிரூபிக்கப்பட்டுள்ளது.

20-வது உலகக் கோப்பை கால்பந்து போட்டியை இவர்களில் ஒருவர் ஆரம்பித்து வைத்துள்ளார். இதைப்போன்ற வரலாற்று சிறப்பு மிக்க ஒரு போட்டியை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒரு நபர் முதல் பந்தை உதைத்து தொடக்கி வைப்பதன் மூலம், அறிவியலின் ஆற்றலை விளங்க வைப்பது மட்டுமின்றி, முடக்கு வாதத்தால் பாதிக்கப்பட்ட பலருக்கு தன்னம்பிக்கையை விதைக்கவும் முடியும் என்று பிரேசில் அரசு நம்புகிறது.

சுருக்க வரலாறு

1928 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதியன்று சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு ஆம்ஸ்டர்டாமில் கூடியது. அதன் போது 1930 ஆம் ஆண்டை சுதந்திரத்தின் நூற்றாண்டு விழாவாக கொண்டாடும் விதமாக உருகுவே உலகக் கோப்பை போட்டியை நடத்தும் நாடு என்ற அறிவிப்பை வெளியிட்டது.

1930 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 13 ஆம் தேதி ஒரே நேரத்தில் முதல் இரண்டு உலகக் கோப்பை போட்டிகள் நடந்தன. பிரான்ஸ் அணி மெக்சிக்கோ அணியை 4-1 மற்றும் அமெரிக்கா அணி பெல்ஜியம் அணியை 3-0 என்ற கோல்கணக்கில் தோற்கடித்து வெற்றி பெற்றன. உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் முதல் கோல் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த லூசியன் லாரண்ட் என்பவரால் அடிக்கப்பட்டது. மொண்டேவீடியோ நகரில் 93 ஆயிரம் பேர் முன்னிலையில் நடந்த இறுதி போட்டியில், உருகுவே அணி அர்ஜென்டினா அணியை 4-2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து உலகக் கோப்பையை வென்ற முதல் நாடு என்ற பெருமையைப் பெற்றது.

ஜெர்மனி (1942) மற்றும் பிரேசில் (1946) நாடுகளில் நடைபெறத் திட்டமிட்டிருந்த போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

1934 முதல் 1978 ஆம் ஆண்டுவரை நடைபெற்ற போட்டிகளில், ஒவ்வொருமுறையும் 16 அணிகள் கலந்து கொண்டு விளையாடின. ஆனால் 1938 ஆம் ஆண்டு போட்டியில் விளையாட தகுதி பெற்றிருந்தும் ஜெர்மனியுடன் இணைத்துக் கொள்ளப்பட்டதால் ஆஸ்திரியா போட்டியில் பங்கேற்கவில்லை. 1950 ல் நடைபெற்ற போட்டியில் இந்தியா, ஸ்காட்லாந்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விலகிக் கொண்டதால் 13 நாடுகள் மட்டுமே பங்கேற்றன.

உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடும் அணிகளின் எண்ணிக்கை 1982 ஆம் ஆண்டில் 24 அணிகளாக விரிவுபடுத்தப்பட்டது. 1998ல் இந்த எண்ணிக்கை 32 ஆக உயர்த்தப்பட்டது. இதனால் ஆப்பிரிக்கா, ஆசியா, வட அமெரிக்கா போன்ற நாடுகளின் அதிகமான பங்கேற்புக்கு வாய்ப்பு கிட்டியது. இந்நாடுகளில் இருந்து பங்கேற்ற அணிகள் கனிசமான வெற்றிகளை ஈட்டத் தொடங்கின. மெக்சிகோ, கேமரூன், செனகல் மற்றும் அமெரிக்கா, கானா அணிகள் முறையே 1986, 1990, 2002, 2010 ஆம் ஆண்டுகளில் காலிறுதி சுற்றுவரை முன்னேறின. இருப்பினும், ஐரோப்பிய மற்றும் தென் அமெரிக்க அணிகளின் ஆதிக்கம் தொடர்ந்து கொண்டிருந்தது.

1930ல் இருந்து 1970ம் ஆண்டு வரை கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டியை வெல்லும் அணிக்கு ஜூல்ஸ் ரிமெட் கோப்பை வழங்கப்பட்டது. ஆரம்ப காலங்களில், இக்கோப்பை எளிமையாக உலகக் கோப்பை என்றே வழங்கப்பட்டது. 1946-ஆம் ஆண்டில் முதன்முதலில் இத்தகைய போட்டியை நடத்தத் திட்டமிட்டு ஆரம்பித்து வைத்த ஃபீஃபா தலைவரான ஜூல்ஸ் ரிமெட் என்பவரின் பெயரில் கோப்பை வழங்குவதென முடிவெடுக்கப்பட்டது. 1970-இல் பிரேசில் அணி மூன்றாம் முறையாக உலகக் கோப்பையை வென்றபிறகு, ஜூல்ஸ் ரிமெட் கோப்பை அவ்வணியிடமே நிரந்தரமாகக் கொடுக்கப்பட்டது. ஆயினும், 1983-ஆம் ஆண்டில் அக்கோப்பை திருடப்பட்டது; அதன்பிறகு, அக்கோப்பை கண்டுபிடிக்கப்படவில்லை.

1970-க்குப் பிறகு, கால்பந்து உலகக் கோப்பைக்கான வெற்றிக் கோப்பை என்றழைக்கப்பட்ட கோப்பை வடிவமைக்கப்பட்டது. ஏழு நாடுகளிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஃபீஃபா நிபுணர்கள் உலகக் கோப்பைக்கான 53 மாதிரிகளை சோதனை செய்து இறுதியில் இத்தாலிய வடிவமைப்பாளரான சில்வியோ கஸ்சானிகாவின் மாதிரியைத் தேர்ந்தெடுத்தனர். 36.5 செ.மீ. உயரம் கொண்ட இக்கோப்பை 5 கி.கி. எடைகொண்ட 18 காரட் (75%) தங்கத்தால் செய்யப்பட்டது; இரண்டடுக்காலான மாலக்சைட் அடிப்பாகத்தையும் சேர்த்து மொத்தம் 6.175 கி.கி. எடை கொண்டது. கோப்பையின் அடித்தட்டில், உலகக் கோப்பை போட்டியை வென்ற அணியின் பெயரும், வென்ற ஆண்டும் பொறிக்கப்பட்டிருக்கும்.

இந்தப் புதிய கோப்பையானது, வெற்றியாளருக்கு நிரந்தரமாக வழங்கப்படுவதில்லை. அடுத்த உலகக் கோப்பை போட்டி நிகழும்வரை, நான்காண்டுகளுக்கு கடைசியாக வெற்றிகண்ட அணியின் வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கும். பின்னர், தங்கமுலாம் பூசப்பட்ட கோப்பைப் பிரதி ஒன்று வழங்கப்படும்.

இது வரை உலகக் கோப்பை போட்டிகள் நடைபெற்ற நாடுகளும், வெற்றி பெற்ற நாடுகளும்

*************************************************************************************

01) ஆண்டு - 1930
நடைபெற்ற நாடு - உருகுவே, வெற்றி பெற்ற அணி - உருகுவே 4-2

02) ஆண்டு - 1934
நடைபெற்ற நாடு - இத்தாலி, வெற்றி பெற்ற அணி - இத்தாலி 2-1

03) ஆண்டு - 1938
நடைபெற்ற நாடு - பிரான்ஸ், வெற்றி பெற்ற அணி - இத்தாலி 4-2

ஜெர்மனி (1942) மற்றும் பிரேசில் (1946) நாடுகளில் நடைபெறத் திட்டமிட்டிருந்த போட்டிகள் இரண்டாம் உலகப் போர் காரணமாக ரத்து செய்யப்பட்டன.

04) ஆண்டு - 1950
நடைபெற்ற நாடு - பிரேசில்
வெற்றி பெற்ற அணி - உருகுவே

05) ஆண்டு - 1954
நடைபெற்ற நாடு - சுவிட்சர்லாந்து, வெற்றி பெற்ற அணி - மேற்கு ஜெர்மனி 3-2

06) ஆண்டு - 1958
நடைபெற்ற நாடு - சுவீடன், வெற்றி பெற்ற அணி - பிரேசில் 5-2

07) ஆண்டு - 1962
நடைபெற்ற நாடு - சிலி, வெற்றி பெற்ற அணி - பிரேசில் 3-1

08) ஆண்டு - 1966
நடைபெற்ற நாடு - இங்கிலாந்து, வெற்றி பெற்ற அணி - இங்கிலாந்து 4-2

09) ஆண்டு - 1970
நடைபெற்ற நாடு - மெக்சிகோ, வெற்றி பெற்ற அணி - பிரேசில் 4-1

10) ஆண்டு - 1974
நடைபெற்ற நாடு - மேற்கு ஜெர்மனி, வெற்றி பெற்ற அணி - மேற்கு ஜெர்மனி 2-1

11) ஆண்டு - 1978
நடைபெற்ற நாடு - அர்ஜென்டினா, வெற்றி பெற்ற அணி - அர்ஜென்டினா 3-1

12) ஆண்டு - 1982
நடைபெற்ற நாடு - இத்தாலி, வெற்றி பெற்ற அணி - மேற்கு ஜெர்மனி 1-0

13) ஆண்டு - 1986
நடைபெற்ற நாடு - மெக்சிகோ, வெற்றி பெற்ற அணி - அர்ஜென்டினா 3-2

14) ஆண்டு - 1990
நடைபெற்ற நாடு - இத்தாலி, வெற்றி பெற்ற அணி - மேற்கு ஜெர்மனி 1-0

15) ஆண்டு - 1994
நடைபெற்ற நாடு - ஐக்கிய அமெரிக்கா, வெற்றி பெற்ற அணி - பிரேசில் 0-0 (3-2 பெனால்டீஸ்)

16) ஆண்டு - 1998
நடைபெற்ற நாடு - பிரான்ஸ், வெற்றி பெற்ற அணி - பிரான்ஸ் 3-0

17) ஆண்டு - 2002
நடைபெற்ற நாடு - தென் கொரியா, ஜப்பான், வெற்றி பெற்ற அணி - பிரேசில் 2-0

18) ஆண்டு - 2006
நடைபெற்ற நாடு - ஜெர்மனி, வெற்றி பெற்ற அணி - இத்தாலி 1-1 (5-3 பெனால்டீஸ்)

19) ஆண்டு - 2010
நடைபெற்ற நாடு - தென்னாப்பிரிக்கா, வெற்றி பெற்ற அணி - ஸ்பெயின் 1-0

உலகக் கோப்பை கால்பந்தாட்ட வரலாற்றில் அதிக பார்வையாளர்கள் கண்டு ரசித்த தொடர்கள்

1. 1994ம் ஆண்டு ஐக்கிய அமெரிக்காவில் நடைபெற்ற 15வது உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை 3.59 மில்லியன் ரசிகர்கள் நேரடியாக கண்டு ரசித்தனர்.

2. 2006ம் ஆண்டு ஜெர்மனியில் நடைபெற்ற 18வது உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை 3.36 மில்லியன் ரசிகர்கள் நேரடியாக கண்டு ரசித்தனர்.

3. 2010ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் நடைபெற்ற 19வது உலகக் கோப்பை கால்பந்தாட்ட போட்டிகளை 3.18 மில்லியன் ரசிகர்கள் நேரடியாக கண்டு ரசித்தனர்.

அந்தவகையில், சராசரியாக அதிக பார்வையாளர்கள் கண்டு ரசித்த முதல் 10 உலகக் கோப்பை கால்பந்தாட்ட தொடர்கள் வருமாறு;

1) 1994 - ஐக்கிய அமெரிக்கா
போட்டிகள் - 52
சராசரி பார்வையாளர்கள் - 68,991
மொத்த பார்வையாளர்கள் - 3,587,538

2) 1950 - பிரேசில்
போட்டிகள் - 22
சராசரி பார்வையாளர்கள் - 60,773
மொத்த பார்வையாளர்கள் - 1,337,000

3) 2006 - ஜேர்மனி
போட்டிகள் - 64
சராசரி பார்வையாளர்கள் - 52,384
மொத்த பார்வையாளர்கள் - 3,352,605

4) 1970 - மெக்சிகோ
போட்டிகள் - 32
சராசரி பார்வையாளர்கள் - 52,312
மொத்த பார்வையாளர்கள் - 1,673,975

5) 1966 - இங்கிலாந்து
போட்டிகள் - 32
சராசரி பார்வையாளர்கள் - 50,459
மொத்த பார்வையாளர்கள் - 1,614,677

6) 2010 - தென்னாபிரிக்கா
போட்டிகள் - 64
சராசரி பார்வையாளர்கள் - 49,670
மொத்த பார்வையாளர்கள் - 3,170,856

7) 1990 - இத்தாலி
போட்டிகள் - 52
சராசரி பார்வையாளர்கள் - 48,388
மொத்த பார்வையாளர்கள் - 2,516,215

8) 1974 - மேற்கு ஜெர்மனி
போட்டிகள் - 38
சராசரி பார்வையாளர்கள் - 46,685
மொத்த பார்வையாளர்கள் - 1,774,022

9) 1986 - மெக்சிகோ
போட்டிகள் - 52
சராசரி பார்வையாளர்கள் - 46,039
மொத்த பார்வையாளர்கள் - 2,394,031

10) 1998 - பிரான்ஸ்
போட்டிகள் - 64
சராசரி பார்வையாளர்கள் - 43,517
மொத்த பார்வையாளர்கள் - 2,785,100

(தகவல் மூலம் - உலக கால்பந்தாட்ட சம்மேளனம்)

English summary
Are you mad about FIFA world cup. Then this article has everything you want to know about FIFA world cups.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X