For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'Higgs Boson'! கடவுளே!

By Staff
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

உலகின் மிக ரிஸ்கியான மாபெரும் அறிவியல் சோதனை ஒன்று நாளை துவங்கப் போகிறது. இந்த சோதனையை எதிர்த்து உலகெங்கும் நடுக்கக் குரல்கள்.. உலகம் அவ்வளவு தான்.. அம்பேல் என கதற ஆரம்பித்துள்ளனர் 'டூம்ஸ் டே' ஆசாமிகள்.

பிரான்ஸ்-சுவிஸ் எல்லையில் ஜெனீவாவுக்கு கொஞ்சம் பக்கத்தில் இந்தச் சோதனை நடக்கப் போகிறது. ஐரோப்பிய அணு ஆராய்ச்சிக் கழகம் (CERN) இந்த சோதனையை நடத்துகிறது.

ரொம்ப 'பில்ட்-அப்- கொடுக்கிறீர்களே.. அது என்ன சோதனை என்கிறீர்களா?. Big bang theory சொல்கிறபடி உலகம் எப்படி உருவானது என்பதை கொஞ்சம் பிராக்டிலாக சோதனை செய்து பார்க்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.

அதாவது புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் அதி பயங்கர வேகத்தில் மோதவிட்டு வேடிக்கை பார்க்கப் போகிறார்கள். இதற்காக கிட்டத்தட்ட 300 அடி ஆழத்தில் 27 கி.மீ. தூரத்துக்கு வட்டமான சுரங்கம் அமைத்து அதற்குள் சப் அடாமிக் பார்ட்டிகிள்ஸ் (புரோட்டான், நியூட்ரான்) மோதிக் கொள்ளும் Large Hadron Collider-LHC என்ற வட்ட வடிவ பைப்பை அதற்குள் அமைத்திருக்கிறார்கள். இதற்காக 5.8 பில்லியன் டாலர்களை செலவிட்டுள்ளன ஐரோப்பிய நாடுகள். கிட்டத்தட்ட 5,000 விஞ்ஞானிகளின் கூட்டு முயற்சி இது.

கனரக இரும்பினால் செய்யப்பட்டு ரீ-இன்போர்ஸ்ட் சிமெண்ட் மற்றும் ஏகப்பட்ட ரசாயன, அணு கதிர்வீச்சை தாக்குப்பிடிக்கும் பாதுகாப்பு பூச்சுக்கள் கொண்டது இந்த கொல்லாய்டர்.

இது அணுக்களை பிளக்க உதவும் வழக்கமான சைக்ளோட்ரான் மாதிரி தான். ஆனால், இதில் விஷேசம் என்னவென்றால் இதன் வேகம். இதுவரை உலகில் கட்டப்பட்ட சைக்ளோட்ரான்களை விட இது 7 மடங்கு அதிக சக்தி கொண்டது.

1,800 'சூப்பர் கண்டக்டிங்' காந்தங்கள் புரோட்டான்களை ஒளியின் வேகத்தில் இந்த 27 கி.மீ. வளையத்தில் சுற்றவிடவுள்ளன. LHC தன் முழு வேகத்தை அடைந்தவுடன் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் வினாடிக்கு 600 மில்லியன் முறை நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள்.

அப்போது புரோட்டான்களி்ல் 7 டிரில்லியன் எலெக்ட்ரான் வோல்ட்ஸ் அளவுக்கு 'சக்தி' உருவாகும். அப்போது ஏற்படும் 'சப் அடாமிக் லெவல்' மாற்றங்களை இந்த 27 கி.மீ. வட்டத்தில் பொறுத்தப்பட்டு்ள்ள ஆயிரக்கணக்கான சென்சார்கள் கிரகித்து அந்த விவரங்களை சூப்பர் கம்ப்யூட்டர்களில் பீட் செய்யவுள்ளன.

கிட்டத்தட்ட 15 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு மாபெரும் வெடிப்பில் இருந்து தான் (Big Bang) பூமி உள்பட Universe தோன்றியது என கருதப்படுகிறது. அப்போது இருந்த சூழலை இந்த 27 கி.மீ. வட்டத்தில் உருவாக்கிப் பார்க்கப் போகிறார்கள்.

இந்த வளையத்தில் புரோட்டான்கள் என்ன வேகத்தி்ல் சுற்றி வரப் போகின்றன என்பதை இப்படி ஈசியாக சொல்லாம்... ஒரு வினாடியில் இந்த 27 கி.மீ. தூரத்தை புரோட்டான் 11,245 முறை சுற்றி வரும்.

இந்த அளவுக்கு வேகம் பிடித்த புரோட்டான்களை அப்படியே நேருக்கு நேர் மோத விடப் போகிறார்கள். இப்போது புரிகிறதா.. உள்ளே என்ன நடக்கப் போகிறது என்பது.

புரோட்டான், நியூட்ரான், எலெக்ட்ரான் ஆகிய 'சப் அடாமிக்' கூறுகளைக் கொண்டது தான் ஒரு அணு. குவார்க், பெர்மியான், குளுயான்ஸ் ஆகியவற்றால் ஆனது தான் ஒரு புரோட்டான்.

ஆக, LHCல் வைத்து அதிவேகத்தில் புரோட்டான்களை 'கொத்து புரோட்டோ' போடும்போது குவார்க், பெர்மியான், குளுயான்ஸ், மின் காந்த கதிர்வீச்சு, வெப்பம் என புரோட்டான்கள் சிதறும்.

மேலும் Higgs Boson என்று ஒரு சமாச்சாரம். இப்படி ஒரு சப்-அடாமிக் பார்ட்டிகிள் இருப்பதாக தியரியில் சொல்கிறார்கள். ஆனால், அதை யாரும் நிரூபித்ததில்லை. இதனால் இதை விஞ்ஞானிகள் 'கடவுளின் அணுத் துகள்' (God's particle) என்கிறார்கள். அப்படி ஒன்று இருந்தால் இந்தச் சோதனை வெளியில் கொண்டு வரலாம் என்கிறார்கள்.

ஆனால், இது மிக ஆபாயகரமான ஆராய்ச்சி என உலகம் முழுவதும் கடும் எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளன. உலகத்தின் கதையே முடியப் போகிறது என்று கூட சிலர் கிளப்பிவிட்டு்ள்ளனர்.

இவ்வளவு வேகத்தில் சப் அடாமிக் அணுத் துகள்களை மோதச் செய்யும்போது பிளாக் ஹோல் (Black Hole) கூட உருவாகிவிடலாம் என்கிறார்கள். Black Hole என்பது நம் அரசியல்வாதிகளின் வாய் மாதிரி. உள்ளே போனால் போனது தான் எதுவுமே வெளியே வராது.. ஒளி-ஒலி உள்பட. (பிளாக் ஹோல் நேரத்தையும் கூட விழுங்கிவிடும்.. இது அதீதமான டெக்னி்க்கல் சமாச்சாரம். மண்டையை ரொம்பவே குழப்பிக் கொள்ள வேண்டாம். மிகவும் ஆர்வம் இருந்தால் ஸ்டீபன் ஹாக்கிங்ஸ்சின் 'The brief history of Time' வாங்கிப் படியுங்கள்)

நமது அண்டத்தில் (Universe) ஏராளமான மண்டலங்கள், அதாவது கேலக்ஸிகள் (Galaxies) உள்ளன. நமது சூரியன், பூமி, கோள்கள் உள்ளிட்ட சூரிய குடும்பம் இருக்கும் மண்டலத்தின் பெயர் Milky way Galaxy (பால்வெளி மண்டலம்).

பல பில்லியன் சூரிய குடும்பங்கள் சேர்ந்தது ஒரு கேலக்சி. பல பில்லியன் கேலக்சிகள் சேர்ந்தது தான் யுனிவர்ஸ். இந்த யுனிவர்ஸ் தொடர்ந்து விரிவடைந்து கொண்டே போகிறது என்பது தான் மிக இன்ட்ரஸ்டிங்கான விஷயம்.

ஒரு சிறிய நிலக்கடலை சைசில் இருந்த யுனிவர்ஸ், Big bangல் வெடித்துச் சிதறி விரிவடைய ஆரம்பித்தது.. விரிவடையும்போது அதற்குள் உருவானவை தான் பூமி, கோள்கள், நிலாக்கள், எரிகற்கள், சூரியன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய கேலக்சிகள்.

இன்னும் விரிந்து கொண்டே இருக்கும் அண்டத்தில் மேலும் மேலும் ஏராளமான கேலக்சிகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன. கூடவே பிளாக் ஹோல்களும்.

இந்த பிளாக் ஹோல்கள் ஒளி-ஒலியை மட்டுமல்ல, சூரியன்களைக் கூட விழுங்கி ஏப்பம் விடும் சக்தி கொண்டவை.

இதனால் தான் இந்த அதிவேக சப் அடாமிக் பிளப்பு சோதனை ஆபத்தானது... இதனால் பிளாக் ஹோல் உருவாகப் போகிறது.. அப்படி உருவானால் அது பூமியையே விழுங்கலாம் என அச்சம் கிளப்பியிருக்கிறார்கள்.

ஆனால், அப்படியெல்லாம் ஏதும் நடந்துவிடாது என்கிறார்கள் இந்த ஆராய்ச்சியை நடத்தும் CERN மையத்தின் விஞ்ஞானிகள்.

அப்போ, என்ன தான் நடக்கப் போகிறது என்று கேட்டால் பதில் வருகிறது..

'தெரியாது'

Higgs Boson! கடவுளே!

(கட்டுரையாளர் தட்ஸ்தமிழ் ஆசிரியர்)

தொடர்பான செய்திகள்:

புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்!புரோட்டான் 'மோதல்' சோதனை ஆரம்பம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X