ஜெயலலிதாவை 'நம்பும்' திமுக!!

திங்கள்கிழமை, மே 11, 2009, 11:28 [IST]
-ஏ.கே.கான்

''தமிழகத்தில் பிரதான கட்சிகளான அதிமுகவும் திமுகவும் காங்கிரசும் இலங்கை விஷயத்தில் புரிதலோடு நடந்து கொண்டுள்ளன. இதனால் தான் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கெடாமல் அமைதி நீடித்து வருகிறது'' என்று ஒரு பேட்டியில் மகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

அதாவது, இலங்கை விஷயத்தில் அதிமுகவும் தங்களைப் போலவே அமைதி காத்ததால் புளகாங்கிதம் அடைந்து அவர் சொன்ன கருத்துக்கள் இவை. அதிமுக இப்படியே இருந்துவிடும், பாமக, மதிமுக, திருமாவளவன், சில சினிமாக்காரர்கள், சில பெரியாரிஸ்டுகள் மட்டுமே இலங்கை விவகாரத்தில் கூப்பாடு போடப் போகிறார்கள். இவர்கள் கூச்சல் போடுவதால் நமக்கு தேர்தலில் எந்த பாதிப்பும் இருக்காது என்ற பெரும் நம்பிக்கையில் இருந்தார் சிதம்பரம்.

ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் முதலில் தனி ஈழ மாநிலம் தான் பிரச்சனைக்குத் தீர்வு என்றார் ஜெயலலிதா. அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் அடுத்ததாக இலங்கைக்காக உண்ணாவிரதம் அமர்ந்தார். அப்போது நிலைமை கொஞ்சம் மாறியது.

ஆனால், அடுத்தபடியாக தனி ஈழம் அமைய வேண்டும், அதற்காக பாடுபடுவேன் என்று ஜெயலலிதா அதிரடியாக இறங்கிவிட திமுகவும் காங்கிரசும் என்ன செய்வது என்று தெரியாமல் கையை பிசையும் நிலை ஏற்பட்டுவிட்டது.

அதுவரை இலங்கை விவகாரம் தேர்தலில் ஒரு பிரச்சனையே அல்ல என்று நினைத்திருந்த திமுக-காங்கிரசின் நினைப்பில் மண்ணைப் போட்டுவிட்டார் ஜெயலலிதா.

இதையடுத்து டேமேஜ் கண்ட்ரோலில் இறங்க வேண்டிய நிலைக்கு திமுக-காங்கிரஸ் கூட்டணி தள்ளப்பட்டுவிட்டது. இலங்கை விவகாரம் தொடர்பாக ஜெயலலிதாவின் பேச்சுக்கு தமிழக பெரும் வரவேற்பு காணப்படுவது உண்மை.

மேலும் இந்த விவகாரம் திமுக-காங்கிரசுக்கு பெரும் பின்னடைவைத் தரப் போகிறது என்று மத்திய-மாநில உளவுப் பிரிவுகளும் அலாரம் அடித்தபடியே உள்ளன.

இதையடுத்து சோனியாவுக்கு தந்தி அடிப்படி, பிரதமருக்கு லெட்டர் எழுதுவது என்று என்று தபால்-தந்தி அலுவலகம் சார்ந்த அரசியலை வைத்து மக்களை ஏமாற்ற முடியாது என்ற நிலைக்கு முதல்வர் கருணாநிதி தள்ளப்பட்டார். அவரே உண்ணாவிரதமும் இருக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்ட்டது.

எதிர்க் கட்சியாக இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேச முடியும் என்பதால் தனி ஈழம் அமைக்க ராணுவத்தை அனுப்ப வேண்டும், நான் சொல்லும் ஆட்சி மத்தியில் பதவிக்கு வந்தால் ராணுவத்தை அனுப்புவேன் என்று அடுத்த கட்டத்துக்குப் போய்விட்டார் ஜெயலலிதா.

இதனால் அதை சமாளிக்க தனி ஈழம் அமைக்க நானும் பாடுபடுவேன் என்று அறிவித்தார் முதல்வர் கருணாநிதி. ஆனால், ஆளும் கட்சியாக இருப்பதால் ராணுவத்தை அனுப்புவோம் என்று சொல்ல முடியாத நிலை அவருக்கு.

அதே போல ஈழம் விஷயத்தில் இதற்கு மேல் மத்திய அரசை நெருக்கினால் தேர்தலுக்குப் பின் திமுகவின் தயவு தேவையில்லாமல் போனால், தமிழகத்தில் ஆட்சிக்குத் தந்து வரும் ஆதரவை வாபஸ் பெறவும் காங்கிரஸ் தயங்காது என்பது நிதர்சனம். இதனால் ஜெயலலிதாவை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் 'தற்காப்பு' நிலையில் தான் இந்தத் தேர்தலையே சந்திக்கிறது திமுக.

கடந்த முறையைப் போல திமுகவால் முழுமையாக வேகத்துடன் இந்தத் தேர்தலை எதிர்கொள்ள முடியவில்லை என்பது நிச்சயமான உண்மை. கூட்டணியில் முக்கிய கட்சிகள் இல்லாதது, முதல்வரின் உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் முழு அளவில் பிரச்சாரம் செய்ய முடியாதது, அத்தோடு ஈழ விவகாரத்தில் ஜெயலலிதாவின் பேச்சுக்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் குழம்புவது என திமுகவுக்கு இம்முறை ஏகப்பட்ட சங்கடங்கள்.

காங்கிரஸைப் பொறுத்தவரை திமுக, அதிமுக இதில் யார் அதிக இடங்களில் வென்று டெல்லிக்கு வருகிறார்களோ அவர்களுடன் கூட்டணி என்ற புதிய அரசியல் கூட்டணி தத்துவத்தை கையாளப் போகிறது.

நேற்று சென்னையில் பொதுக் கூட்டத்தில் பேசிய சோனியா காந்தி மேடையில் இருந்த முதல்வர் கருணாநிதி நீடுழி வாழ வேண்டும் என்று வாழ்த்தினார். அதே நேரத்தில் இலங்கை பற்றி பேசியபோது இதுவரை சொன்தையே மீண்டும் சொல்லிவிட்டு நிறுத்திக் கொண்டார். புதிய விஷயம் ஏதுமில்லை, நாங்கள் தான் தாக்குதலை நிறுத்தச் செய்தோம்.. தமிழர்களைக் காப்போம் என்று சோனியா சொல்லிக் கொண்டிருந்தபோதே இலங்கையில் தமிழர் பகுதிகளில் ராணுவம் தாக்கிக் கொண்டிருந்தது.

அதே போல இலங்கை தொடர்பாக ஜெயலலிதாவின் பேச்சுக்களுக்காவது பதிலடி தருவார் என்று திமுகவினர் எதிர்பார்க்க ஜெயலலிதா குறித்து எந்தக் கருத்தையும் சொல்லாமல் போய்விட்டார் சோனியா.

இது தான் திமுக தரப்புக்கு பெரும் பீதியைத் தந்துள்ளது. தேர்தலுக்குப் பின் ஜெயலலிதாவுடன் கைகோர்க்க வேண்டிய நிலை வரலாம் என்பதை உணர்ந்திருப்பதால் தான் அதிமுகவை சோனியா விமர்சிக்கவில்லை என்கிறார்கள்.

இப்படியாக ஜெயலலிதாவின் தாக்குதல் ஒரு புறம், அதை வேடிக்கை பார்க்கும் காங்கிரஸ் மறுபுறம் என திமுக இந்தத் தேர்தலில் தட்டுத்தடுமாறிக் கொண்டுள்ளது.

இந்தத் தேர்தலில் தன்னைக் காப்பாற்றப் போவதாக திமுக திடமாக நம்பிக் கொண்டிருப்பது 5 விஷயங்கள்.

1. ஒரு ரூபாய் அரிசி
2. இலவச கலர் டிவி
3. ரேஷனில் 50 ரூபாய் மளிகை பொருட்கள் சப்ளை
4. கிராமப் பகுதிகளில் மத்திய அரசு நிறைவேற்றிய 100 நாள் வேலைத் திட்டம்.

இந்தத் திட்டங்களால் கோடிக்கணக்கான மக்கள் பலனடைந்துள்ளதால் இவையே தன்னைக் காப்பாற்றிவிடும் என திமுகவும், அதைச் சார்ந்துள்ள காங்கிரசும் நம்பிக் கொண்டுள்ளன.

திமுக நம்பும் 5வது முக்கியமான விஷயம் 'ஜெயலலிதாவின் நம்பகத்தன்மை'. ஜெயலலிதா என்றாலே எடுத்தேன் கவிழ்த்தேன் என்பது தான் பாலிஸி என்பதாலும், காலையில் ஒன்று சொல்வார் மாலையில் ஒன்று செய்வார் என்பதாலும் ஈழம் தொடர்பான அவரது பேச்சை மக்கள் நம்ப மாட்டார்கள் என திமுக திடமாகவே நம்புகிறது.

சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றுவோம் என்று தேர்தல் அறிக்கையிலேயே சொல்லிவிட்டு அதை எதிர்த்தவர் தான் ஜெயலலிதா. பாஜகவுடன் இனி ஜென்மத்திலும் கூட்டணி இல்லை என்று மெரீனாவில் நடந்த சிறுபான்மையினர் கூட்டத்தில் சொல்லிவிட்டு பின்னர் கூட்டணி அமைத்தார். பின்னர் அவர்களையும் வெட்டிவிட்டார்.
  Read:  In English 
இந்தத் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணிக்கு முயன்றார். அவர்கள் சேர்ககவில்லை என்றவுடன் காங்கிரஸை தாக்க ஆரம்பித்தார். அதே போல தன்னுடன் பல ஆண்டுகளாக இருந்து வரும் மதிமுகவை தேர்தலுக்கு முன் சீட் ஒதுக்கீட்டில் அவர் படுத்தியபாடு நாடறிந்தது. இப்படி தன்னை நம்பி வந்தவர்களையும் நம்புபவர்களையும் கைவிடுவது என்பது ஜெயலலிதாவுக்கு கைவந்த கலை. இன்னும் உதாரணங்களை சொல்ல தனியே 5 கட்டுரைகள் எழுதலாம்.

இப்படிப்பட்டவர் தான் தனி ஈழம் அமைக்க ராணுவத்தை அனுப்புவேன் என்கிறார். இதனால் ஜெயலலிதாவின் பேச்சை யாரும் நம்பி ஓட்டுபோட்டுவிட மாட்டார்கள் என திமுக நம்பிக் கொண்டிருக்கிறது.

நம்பிக்கை தானே வாழ்க்கை..!

IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST