லாலுவுக்கு கைகொடுக்குமா 'மாயாவதி பார்முலா'!

செவ்வாய்க்கிழமை, ஆகஸ்ட் 17, 2010, 11:08 [IST]
Lalu Prasad Yadav
-ஏ.கே.கான்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் (ஆர்ஜேடி), ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் (எல்ஜேபி) கூட்டணி அமைத்துப் போட்டியிட முடிவு செய்துள்ளன.

இந்தக் கூட்டணியின் முதல்வர் பதவி வேட்பாளராக லாலு பிரசாத் அறிவிக்கப்பட்டுள்ளார். பாஸ்வானின் தம்பியான பசுபதி குமார் பரஸ் துணை முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

நீண்டகாலமாக கூட்டணி அமைத்துப் போட்டியிட்டு வந்த இந்த இரு கட்சிகளும் 2005ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பிரிந்தன. இதனால் இரு கட்சிகளுக்கும் பேரிழப்பு ஏற்பட்டது.

லாலுவின் கட்சி படுதோல்வி அடைந்து ஆட்சியை பாஜக-ஐக்கிய ஜனதா தளம் கூட்டணியிடம் இழந்தது. அதே போல கடந்த ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலிலும் தனித்தனியே போட்டியிட்டு இரு கட்சிகளும் படுதோல்வியை சந்தித்தன.

கடந்த சட்டமன்றத் தேர்தலுக்கு முன் இந்த இரு கட்சிகளுடன் காங்கிரசும் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வந்தது. ஆனால், கடந்த தேர்தலின்போது காங்கிரசுக்கு வெறும் 20 இடங்கள் தருவதாகக் கூறி அந்தக் கட்சியை கேவலப்படுத்தினார் லாலு.

இதையடுத்து அந்தக் கட்சி தனி்த்தே போட்டியிட்டு எதிர்பாராத வகையில் அதிக இடங்களில் வென்றது. மேலும் அதன் வாக்கு வங்கியும் உயர்ந்துள்ளது.

இதைத் தொடர்ந்து கடந்த மக்களவைத் தேர்தலில் எப்படியாவது காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துவிட லாலு முயற்சித்தார். ஆனால், அவருடன் சேர மறுத்துவிட்டது காங்கிரஸ்.

அதே போல வரும் சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்துவிட முயற்சித்துப் பார்த்தார். ஆனால், தனித்தே போட்டியிடலாம் என்று ராகுல் காந்தி கூறிவிட்டார்.

இதனால் மீண்டும் பாஸ்வானை எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட கடுமையாக முயன்று அதில் ஒருவழியாக வென்றுள்ளார் லாலு.

ஆனால், இதற்காக பாஸ்வானின் கட்சிக்கு மிக அதிகமாகவே விட்டுத் தர வேண்டிய நிலைக்கு லாலு தள்ளப்பட்டுள்ளார். லாலுவின் கட்சி பலவீனமாக உள்ளதால் அவரை விட்டுவிட்டு காங்கிரசுடன் கைகோர்க்க பாஸ்வான் திட்டமிட்டார்.

இதனால் லாலுவிடம் எனக்கு 125 தொகுதிகள் வேண்டும் என்று பாஸ்வான் முரண்டு பிடித்தார். மேலும் தனது கட்சிக்கு துணை முதல்வர் பதவி வேண்டும் என்று நிபந்தனையும் போட்டார்.

வழக்கமாக இந்தக் கட்சிக்கு 25 முதல் 35 இடங்களே தரப்படுவது வழக்கம். துணை முதல்வர் பதவியோடு அதிக இடங்களையும் கேட்டால் தன்னை லாலுவே கைகழுவி விடுவார், அப்படியே காங்கிரசுடன் கைகோர்த்துவிடலாம் என பாஸ்வான் திட்டமிட்டார்.

ஆனால், இதை உணர்ந்த லாலு பாஸ்வானுக்கு 75 இடங்கள் தர முன் வந்துள்ளார். இதனால் மாநிலத்தில் மொத்தமுள்ள 243 தொகுதிகளில் லாலு கட்சி 168 இடங்களில் தன் போட்டியிடுகிறது. மேலும் பாஸ்வானின் தம்பிக்கு துணை முதல்வர் பதவி தரவும் தயார் என்று அறிவித்து, அந்தக் கட்சி தன்னை விட்டுப் போய்விடாமல் பார்த்துக் கொண்டுள்ளார் லாலு.

இந்தக் கூட்டணி குறித்து லாலு செய்தியாளர்களிடம் கூறுகையில், முன்பு நாங்கள் 15 ஆண்டுகாலம் தொடர்ந்து ஆட்சியில் இருந்தபோது கட்சியில் இருந்த சில மோசமான தலைவர்களால் கட்சிக்கும், ஆட்சிக்கும் கெட்டபெயர் ஏற்பட்டது. இப்போது அவர்கள் வெளியேற்றப்பட்டு விட்டனர் என்றார்.

பிகாரில் இப்போது ஐக்கிய ஜனதா தளம் (81 எம்.எல்.ஏ.க்கள்) -பாஜக (54 எம்.எல்.ஏ.க்கள்) கூட்டணி ஆட்சியில் உள்ளது. சட்டசபையில் 56 எம்.எல்.ஏ.க்களுடன் இரண்டாவது பெரிய கட்சியாக லாலு கட்சி உள்ளது. பாஸ்வான் கட்சிக்கு 12 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

இந்த ஆண்டு இறுதியில் அங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது.

ஆனால், பிகாரில் இப்போது முதல்வர் நிதிஷ்குமாருக்கு ஆதரவான நிலையே உள்ளது. அனைத்து ஜாதியினர், மதத்தினரையும் அரவணைத்துச் செல்வதாலும் சிறப்பான ஆட்சியை வழங்கி வருவதாலும், சட்டம்-ஒழுங்கை காப்பாற்றி வருவதாலும் அவரது ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இதனால் தனது கூட்டணிக் கட்சியான பாஜகவுக்கே உத்தரவு போடும் நிலையில் அவர் உள்ளார். தேவைப்பட்டால் அவர்களை கழற்றிவிடக் கூட அவர் தயாராகவே உள்ளார்.

இதனால் லாலுவும் இந்தமுறை வேட்பாளர்களைத் தேர்வு செய்யும்போது வழக்கம்போல் யாதவர்கள், முஸ்லீம்களுக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் தராமல் அனைத்து ஜாதியினருக்கும் வாய்ப்பளிப்பார் என்று தெரிகிறது.

உத்தரப் பிரதேசத்தில் மாயாவதி அமைத்த பிராமணர்கள், தலித்துகள், ராஜ்புத், முஸ்லீம்கள் கூட்டணியைப் போல அனைத்து ஜாதி-மதத்தனரின் வாக்கு வங்கிகளையும் ஒருங்கிணைக்கும் வகையில் அவரது வேட்பாளர் தேர்வு இருக்கும் என்கிறார்கள்.

தலித்துகள், யாதவர்கள், முஸ்லீம்கள், பிராமணர்கள், குர்மி (நிதிஷ் குமார் இந்த சமுதாயத்தை சேர்ந்தவரே), பூமிகார், ஷத்திரியர்கள், வைஸ்யர்கள் ஆகியோருக்கு வேட்பாளர் பட்டியலில் உரிய பிரதிநிதித்துவம் இருக்கும் என்று தெரிகிறது.

தாழ்த்தப்பட்ட சமுதாயமான பாசிக்களின் பிரதிநிதியாகக் கருதப்படும் ராம் விலாஸ் பாஸ்வானை தன்னுடன் இழுத்துவிட்டதால் அந்த சமுதாயத்தினரின் வாக்குகளை எப்படியும் பெற்றுவிடலாம் என லாலு நினைக்கிறார்.

ஆனாலும் அவரது ஆட்சியின் சட்டம்-ஒழுங்கு நிலவரமும் பிகார் பொருளாதாரரீதியில் சந்தித்த சீ்ர்கேடுகளும் இந்தத் தேர்தலிலும் லாலுவுக்கு கடுமையான சவால்களாக இருக்கப் போவது நிச்சயம்.

பாஜகவைப் பொருத்தவரை நிதி்ஷ் குமாரி்ன் நிழலில் ஒதுங்கி நின்றே தப்பிவிடலாம் என்று கருதுகிறது.

காங்கிரஸைப் பொறுத்தவரை பிகாரில் வெல்லும் ஒவ்வொரு இடமும் லாபம் தான். காரணம், அந்தக் கட்சி கிட்டத்தட்ட பூஜ்யத்திலிருந்து தான் கணக்கை ஆரம்பிக்கப் போகிறது. இதனால் அவர்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை!.
User Comments
நண்பன் 07 Jan 2011 09:16 am
u-j-i-l-a-d-e-v-i.b-l-o-g-s-p-o-t . c-o-m இந்த தளத்தை பாருங்கள் நீங்கள் காணத்தவறிய பல தகவல் அறிந்து கொள்ளலாம்
khan 06 Dec 2010 03:50 pm
thulukan khan . say sorry to readers first. now you know all ur article info is wrong
[ கருத்தை எழுதுங்கள் ]
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST