For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமெரிக்கா-பாகிஸ்தானின் 'ஹக்கானி நெட்வோர்க்' சண்டை!!

By Chakra
Google Oneindia Tamil News

US Troops
-ஏ.கே.கான்

பாகிஸ்தான் உதவியோடு ஆப்கானிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கர தீவிரவாத அமைப்பான ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை கட்டுப்படுத்தும் விஷயத்தில் பாகிஸ்தானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடும் மோதல் மூண்டுள்ளது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள் மீது ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்த அமெரிக்கப் படைகள் திட்டமிட்டுள்ளன. இதற்கு பாகிஸ்தான் ராணுவம் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.

நீங்கள் நினைத்த நேரத்தில் உள்ளே நுழைய இது இராக் அல்ல. நாங்கள் ஒரு அணு ஆயுத நாடு என்பதை அமெரிக்கா மறந்துவிடக் கூடாது. எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒன்றுக்கு 10 முறை அமெரிக்கா யோசிக்க வேண்டும் என பாகிஸ்தான் நாட்டு ராணுவத் தளபதி ஜெனரல் கயானி மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கயானியின் இந்த எச்சரிக்கையை அமெரிக்கா மிக சீரியஸாக எடுத்துக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. ஹக்கானி நெட்வோர்க் அமைப்பை பாகிஸ்தான் கட்டுப்படுத்தியே ஆக வேண்டும், இல்லாவிட்டால் ராணுவ உதவிகள் அனைத்தும் நிறுத்தப்படும் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.

ஆனால், அந்த உதவிகளே தேவையில்லை என ஜெனரல் கயானி கூறியுள்ளார். அமெரிக்காவுடன் தங்கள் நாட்டு ராணுவத் தளபதி நேரடி மோதலில் ஈடுபடுவதை பாகிஸ்தான் அதிபர் சர்தாரியும் பிரதமர் கிலானியும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

ராணுவத் தளபதிக்கு எதிராகப் பேசினால், இவர்களது பதவிக்கும் உயிருக்குமே கூட உத்தரவாதம் இருக்காது என்பது குறிப்பிடதக்கது.

ஹக்கானி நெட்வோர்க் என்பது வானத்தில் இருந்து திடீரென குதித்த தீவிரவாத அமைப்பு அல்ல. அதை உருவாக்கியதே அமெரிக்காவும், பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயும் தான்.

1970களில் சோவியத் படைகளுக்கு எதிராகப் போரிட பல அமைப்புகளுக்கு பாகிஸ்தான் மூலம் உதவி செய்தது அமெரிக்கா. இவ்வாறு உருவாக்கப்பட்டவர்கள் தான் முஜாகிதீன்கள். இவர்களுக்கு ஆயுதத்தையும் பணத்தையும் ஐஎஸ்ஐ மூலம் அமெரிக்கா தந்தது.

அந்த வகையில் மெளல்வி ஜலாலுதீன் ஹக்கானி, அவரது மகன் சிராஜூதீன் ஹக்கானி ஆகியோர் தலைமையிலான இந்தத் தீவிரவாத அமைப்பையும் அமெரிக்காவும் பாகிஸ்தானும் இணைந்து உருவாக்கின. இந்த அமைப்பு ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பாகிஸ்தானின் வசீர்ஸ்தான் மகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்குகிறது.

தலிபான்கள், அல்-கொய்தாவைக் கூட பெருமளவுக்கு ஒடுக்கிவிட்ட அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக விளங்குவது இந்த ஹக்கானி நெட்வோர்க் தான். இவர்கள் ஆப்கானிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்தி வரும் தாக்குதல்களால், ஏராளமான அமெரிக்க, நேடோ படை வீரர்கள் பலியாகியுள்ளனர்.

இந் நிலையில் இந்த அமைப்பை ஐஎஸ்ஐ தான் உரம் போட்டு வளர்ப்பதாக குற்றம் சாட்டியுள்ள அமெரிக்கா, அவர்களை ஒடுக்குமாறு பாகிஸ்தானுக்கு கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது. ஆனால், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தான் மறுத்து வருகிறது.

ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கப் படைகள் வெளியேறிய பின்னர், அந்த நாட்டை மறைமுகமாக கட்டுப்படுத்தும் திட்டத்தில் உள்ள பாகிஸ்தான் அதற்காக பெருமளவில் நம்பியுள்ளது ஹக்கானி நெட்வோர்க் அமைப்பைத் தான். முன்பு தலிபான்களை உருவாக்கி ஆப்கானிஸ்தானை கைப்பற்றி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது பாகிஸ்தான். ஆனால், தலிபான்களை அமெரிக்கா ஒடுக்கிவிட்டதால், இந்த முறை ஹக்கானி நெட்வோர்க்கை பயன்படுத்தும் திட்டத்தில் உள்ளது பாகிஸ்தான்.

இதனால், அவர்களை ஒடுக்க மறுத்து வருகிறார் பாகிஸ்தான் ராணுவத் தளபதி கயானி. இதையடுத்து வசீர்ஸ்தான் பகுதிக்குள் தனது படைகளை நேரடியாக அனுப்பி ஹக்கானி நெட்வோர்க் தீவிரவாதிகள், அவர்களது முகாம்கள் மீது தாக்குதல் நடத்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

இதை கடுமையாக எதிர்த்துள்ள கயானி, எங்கள் நாடு ஈராக் அல்ல, அணு ஆயுதம் வைத்திருக்கிறோம் என அமெரிக்காவை வெளிப்படையாகவே மிரட்டியுள்ளார்.

மேலும் அமெரிக்க நெருக்குதலால் தங்களால் விரட்டியடிக்கப்பட்ட பல தீவிரவாத அமைப்புகளின் தலைவர்களுக்கு ஆப்கானிஸ்தான் அதிபர் கர்சாய் அடைக்கலம் தந்து வருவதாகவும், அவர்களுக்கு அமெரிக்க உதவியுடன் ஆயுதங்களைத் தந்து பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்கள் நடத்த திருப்பி அனுப்பி வருவதாகவும் பாகிஸ்தான் கூறுகிறது.

அதே போல உங்கள் பேச்சைக் கேட்டு ஹக்கானி நெட்வோர்க் மீது நாங்கள் நடவடிக்கை எடுத்தால், அவர்களை நீங்கள் வளைத்துப் போட்டு, எங்கள் மீதே தாக்குதல் நடத்த திருப்பி அனுப்புவீர்கள். இதனால், ஹக்கானி நெட்வோர்க் மீது நாங்கள் கை வைக்க மாட்டோம் என்கிறது பாகிஸ்தான்.

ஹக்கானி நெட்வோர்க் தலைவர்களை அமெரிக்க அதிகாரிகள் கத்தாரிலும் துபாயிலும் வைத்து சந்தித்து சமாதானப் பேச்சு நடத்தியதாகவும் கூட பாகிஸ்தான் பத்திரிக்கைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந் நிலையில் ஹக்கானி நெட்வோர்க் என்பது பாகிஸ்தான் உளவுப் பிரிவான ஐஎஸ்ஐயின் 'Blue eyed boys' என்கிறது அமெரிக்கா.

ஆனால், ஹக்கானி நெட்வோர்க்கை உருவாக்கியதே அமெரிக்கா தான் என்கிறார் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹினா.

மொத்தத்தில் இந்த இருவருமே சேர்ந்து Frankenstein மாதிரி ஒரு பிசாசை உருவாக்கியுள்ளன. அதன் மீது இருவருமே நடவடிக்கை எடுக்கத் தயாராக இல்லை. அந்த அமைப்பை அமெரிக்காவுக்கு எதிராக பயன்படுத்த பாகிஸ்தானும், பாகிஸ்தானுக்கு எதிராக பயன்படுத்த அமெரிக்காவும் முயன்று வருகின்றன.

இந்த விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு இதுவரை இல்லாத அளவுக்கு உடையும் நிலைக்கு வந்துவிட்டதால், நிலைமையை சரி செய்ய அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இன்று பாகிஸ்தான் வருகிறார். (அவர் நேற்றே ரகசிய பயணமாக ஆப்கானிஸ்தான் வந்துவிட்டார். பாதுகாப்பு காரணங்களால், அவரது பயணம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது)

பாகிஸ்தான் நட்பு நாடு என அவர் பிரஸ்மீட்டில் பேசுவார் என்பது மட்டும் நிச்சயம். ஆனால, பூட்டிய அறைக்குள் ஹக்கானி விவகாரத்தை வைத்து பாகிஸ்தான் தரப்பை உருட்டி எடுக்க தன்னுடன் சிஐஏ தலைவர் ஜெனரல் டேவிட் பெட்ராசையும், முப்படைகளின் கூட்டுத் தலைவர் ஜெனரல் மார்டின் டெம்பிசியையும் அழைத்து வந்துள்ளார்.

இவர்கள் பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ரஸா கிலானியை சந்தித்துப் பேசுவதோடு, பாகிஸ்தான் ராணுவத் தளவதி அஸ்வாக் பர்வேஸ் கயானியையும் சந்தித்துப் 'பேசவுள்ளனர்' (சண்டை போட உள்ளனர்).

English summary
US secretary of state Hillary Clinton will arrive in Islamabad on Thursday for talks aimed at pressing the country's leadership to crack down on the Haqqani network to facilitate the process of reconciliation in neighbouring Afghanistan. Clinton, who is expected to be accompanied by CIA chief Gen David Petraeus and Joint Chiefs of Staff chairman Gen Martin Dempsey, will hold meetings with Pakistan's civil and military leadership, including President Asif Ali Zardari, Prime Minister Yousuf Raza Gilani and army chief Gen Ashfaq Parvez Kayani, diplomatic sources said.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X