For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உலகம் விவகாரமும்.. ஒரு சிறிய கடிதமும்!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் பகுதிக்கு ஒரு வாசகர் எழுதிய சிறிய கடிதம் இப்போது உலகளவில் பெரும் பிரபலமாகிவிட்டது. இண்டர்நெட்டில் சமீபகாலத்தில் மிக அதிகமாக ஷேர் செய்யப்பட்ட கடிதமாக இது மாறிப் போய் உள்ளது.

இங்கிலாந்தின் The Financial Times பத்திரிக்கைக்கு கே.என்.அல் சபா என்ற வாசகர் எழுதிய அந்தக் கடிதத்தின் ஸ்கேன் காப்பி இது தான்...

Letter explains why US should stay the heck out of Syria

வளைகுடாவில் இப்போது நடந்து வரும் பிரச்சனைகளை, சிரியா போர் உள்ளிட்ட விவகாரங்களை வெறும் 15 சிறிய வரிகளில் விளக்குகிறது இந்தக் கடிதம்...

சிரியாவில் நடந்து வரும் உள்நாட்டுப் போரில் அரசுப் படைகள் ரசாயண குண்டுகளை வீசி ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று குவித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்த குண்டுவீச்சை நாங்கள் நடத்தவில்லை, போராளிக் குழுக்கள் தான் நடத்தின என்று அரசும், போராளிக் குழுக்களும் பரஸ்பரம் புகார் கூறிக் கொண்டுள்ளன.

வளைகுடா நாடுகளில் பல ஆண்டுகளாய் ஆட்சியில் இருந்து வரும் சர்வாதிகாரிகளை ஆட்சியைவிட்டு நீக்கி, ஜனநாயகம் தளைக்க தானாக உருவானது தான் 'அரபு வசந்தம்' (Arab spring). ஆயுதம் ஏந்தா மக்கள் புரட்சி மூலம் துனீசியாவில் ஆரம்பித்தது இந்த அரபு வசந்தம்.

இதையடுத்து அந்த நாட்டு ராணுவ ஆட்சியாளர் பதவி விலக, அதைத் தொடர்ந்து எகிப்து, லிபியா, ஏமன் என்று மக்கள் புரட்சி வெடித்தது. இந்த நாடுகளில் ஆட்சியில் இருந்த அடக்குமுறையாளர்கள் பதவி விலகினர். இங்கு மக்கள் புரட்சி நடந்தது என்றாலும் போராட்டத்தை முன் நின்று நடத்திய போராளிகளுக்கு மறைமுகமாக அமெரிக்க ஆதரவும் நிதி உதவியும், ஆயுத உதவியும் கிடைத்தது.

Letter explains why US should stay the heck out of Syria

ஆனால், இதே போன்ற ஒரு அரபு வசந்தம் பஹ்ரைனில் தோல்வியைத் தழுவியது. இந்த நாட்டில் ஆட்சியில் இருப்பது சன்னி பிரிவினர். ஆனால், பெரும்பான்மையான மக்கள் ஷியா பிரிவினர். இங்கு ஷியா பிரிவினருக்கு ஈரான் உதவி செய்து, பஹ்ரைனில் ஆட்சியைக் கவிழ்க்க மறைமுகமாய் இறங்க, இதனால் சன்னி பிரிவினரின் ஆட்சியைக் காப்பாற்ற செளதி அரேபியா மறைமுகமாக உதவி செய்து, மக்கள் புரட்சியை ஒடுக்க உதவியது. இதை அமெரிக்கா கண்டுகொள்ளவில்லை.

ஆனால், அதே நேரத்தில் எகிப்திலும் லிபியாவிலும் மக்கள் புரட்சி நடந்தபோது அமெரிக்காவின் ரகசிய நிதி, ஆயுத உதவிகள் போராளிகளுக்கு உடனடியாக வந்து இறங்கின. ஆனால், செளதி அரேபியாவை பகைக்க விரும்பாததால் பஹ்ரைனில் மட்டும் மக்கள் புரட்சியை முறியடித்து அரபு வசந்தம் அங்கே துளிர்க்காமல் பார்த்துக் கொண்டது அமெரிக்கா.

இந் நிலையில் இந்த அரபு வசந்தம் சிரியாவில் ஆரம்பித்தது. அங்கு கடந்த 2000ம் ஆண்டு முதல் ஆட்சியில் இருப்பது பாத் கட்சியைச் சேர்ந்த பஸார் அல்-ஆசாத். இதற்கு முன் இவரது தந்தையான ஹபீஸ் அல்-ஆசாத் 30 வருடம் ஆட்சியில் இருந்தார். அதாவது தந்தையும் மகனும் ராணுவ ஆட்சியால் பதவியில் தொடர்ந்தனர். அங்கு ஜனநாயகம் செத்து 40 வருடத்துக்கு மேலாகிவிட்டது.

அல்-ஆசாத் ஷியா பிரிவிலேயே Alawites எனப்படும் ஒரு பிரிவைச் சேர்ந்தவர். இந்தப் பிரிவினர் சிரியாவில் சிறுபான்மையினர் தான் என்றாலும் நீண்ட காலமாகவே ஆட்சி, அதிகாரம், ராணுவம் எல்லாமே இவர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. இப்போது அரபு வசந்தம் இந்த நாட்டைத் தொட்டபோது ஷியா மற்றும் அலவைத் பிரிவினர் ஆசாதுக்கு ஆதரவாக களமிறங்க, எதிராக சன்னி பிரிவினர் உள்ளிட்டோர் களமிறங்க, அந்த நாடு ரத்தக்களறியை சந்தித்துக் கொண்டுள்ளது.

ராணுவத்துக்கும் அதிபர் ஆசாத்துக்கு எதிரான போராளிக் குழுக்களுக்கும் இடையே நடக்கும் மோதலில் இதுவரை 1 லட்சத்துக்கும் அதிகமான உயிர்கள் பலியாகிவிட்டன. சுமார் 20 லட்சம் மக்கள் நாட்டை விட்டு வெளியேறி அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர்.

இதை வெறும் உள்நாட்டுப் போர் என்று சொல்ல முடியாது. காரணம், ஆசாதுக்கு ஆதரவாக ஷியா பிரிவைச் சேர்ந்த நாடான ஈரான் உதவிகளைத் தந்து கொண்டுள்ளது. அதே போல தனது நீண்ட கால தோழன் என்ற வகையில் ஆசாதுக்கு ரஷ்யாவும் உதவிகளை வழங்கிக் கொண்டுள்ளது.

அதே நேரத்தில் செளதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட சன்னி பிரிவு நாடுகள் ஆசாதுக்கு எதிரான போராளிக் குழுக்களுக்கு உதவிக் கொண்டுள்ளன. இவர்களோடு சேர்ந்து அமெரிக்காவும் போராளிகளுக்கு நிதி, ஆயுத உதவிகளை வழங்கிக் கொண்டுள்ளது.

Letter explains why US should stay the heck out of Syria

ஆசாத் இப்போது எங்கே இருக்கிறார், எங்கு இருந்தபடி ஆட்சி செய்கிறார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவரை ரஷ்யா தனது போர்க் கப்பலில் பாதுகாத்து வைத்துள்ளதாகக் கூட செய்திகள் வருகின்றன.

இப்போது நாட்டின் 40 சதவீதம் பகுதி தான் ஆசாத் தலைமையிலான அரசு-ராணுவம் வசம் உள்ளது. மிச்சப் பகுதிகளை போராளிகள் கைப்பற்றிவிட்டனர். இந் நிலையில் தான் அங்கு ரசாயன குண்டுவீச்சுத் தாக்குதல் நடந்துள்ளது. இதை நாங்கள் செய்யவில்லை என இரு தரப்புமே கூறுகின்றன.

ரசாயண குண்டுவீச்சு நடந்தால் தான் உலகளவில் சிரிய ராணுவத்துக்கு எதிர்ப்பு அதிகமாகும் என்பதாலும் அப்போது தான் இந்த விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிட்டு சிரியா மீது தாக்குதல் நடத்த வசதி ஏற்படும் என்பதாலும், அமெரிக்காவின் உதவியுடன் செயல்படும் போராளிக் குழுக்கள் தான் ரசாயண குண்டுவீச்சு தாக்குதலை நடத்திவிட்டு அரசு மீது பழி போடுவதாக ஆசாத் அரசு குற்றம் சாட்டுகிறது.

ஆனால், இதைச் செய்தது ஆசாத் தரப்பே என்று போராளிக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.

சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கியதில் இருந்தே ஆசாதைத் தனிமைப்படுத்த செளதி அரேபியாவும் அமெரிக்காவும் பல முயற்சிகளில் இறங்கின. ஐ.நா. சபை மூலம் சிரியா மீது பல்வேறு நெருக்கடிகளை அமெரிக்கா கொண்டு வந்து கொண்டுள்ளது. ஆனால், சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா தூண் மாதிரி நிற்பதால் இராக், லிபியாவில் செய்தது மாதிரி சிரியா மீது உடனடியாக கடும் நடவடிக்கை ஏதும் எடுக்க அமெரிக்காவால் முடியவில்லை.

Letter explains why US should stay the heck out of Syria

சிரியாவில் போராட்டத்தை ஒருங்கிணைத்து நடத்துக் கொண்டிருப்பது National Coalition for Syrian Revolutionary and Opposition Forces என்ற அமைப்பு தான். இதில், துருக்கியின் ஆதரவு பெற்ற Syrian National Council, செளதி அரேபியாவின் ஆதரவு பெற்ற Muslim Brotherhood, அமெரிக்காவின் ஆதரவு பெற்ற கிருஸ்துவர்கள், குர்து இன மக்களின் Coalition of Secular and Democratic Syrians உள்பட ஏராளமான அமைப்புகள் உள்ளன.

இவர்களுக்கு செளதி அரேபியா, அமெரிக்கா, கத்தார் ஆகியவை நிதி, ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன. துருக்கியும் இவர்களுக்கு உதவி செய்கிறது. மேலும் இவர்களுக்கு பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பும் உதவுகிறது. இத்தனைக்கும் இஸ்ரேலை எதிர்க்க ஹமாசுக்கு பெரும் உதவிகளை செய்து வருவது ஈரான் தான்.

ஆனால் ஆசாத், ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர் என்பதால், அவருக்கு எதிராக ஹமாஸ் களமிறங்கி சிரியாவில் Muslim Brotherhood அமைப்பை ஆதரிக்கிறது. இந்த அமைப்பை அமெரிக்கா ஆதரித்தாலும் கூட ஹமாஸும் ஆதரிக்கிறது. ஆனால், ஹமாசுக்கும் அமெரிக்காவுக்கும் ஆகவே ஆகாது என்பது குறிப்பிடத்தக்கது.

அதிபர் ஆசாதுக்கு ஆதரவாக ஈரானின் ஆதரவு பெற்ற ஷியா-அலவைத் பிரிவினரைக் கொண்ட Al-Jaysh al-Sha'bi, Shabiha, Al-Abbas brigade, Lijan militias, லெபனானைச் சேர்ந்த ஷியா பிரிவின் மாபெரும் பேராளி அமைப்பான ஹிஸ்புல்லா ஆகியவை வரிந்து கட்டிக் கொண்டு நிற்கின்றன. இவர்களுக்குத் தேவையான ஆயுதங்களை ரஷ்யாவும், ஈரானும் தருகின்றன. லெபனானும் போராளிகளை அனுப்புகிறது. இராக்கின் ஷியா பிரிவினரின் ஆதரவும், பஹ்ரைனின் ஷியா பிரிவினரின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைத்து வருகிறது.

தனது எல்லையை ஒட்டிய சிரியாவில் ஈரானின் ஆதிக்கம் வந்துவிடக் கூடாது என்பதால் இஸ்ரேலும் அமெரிக்காவுடன் இணைந்து போராட்டகாரர்களுக்கு மறைமுக உதவிகளை அளித்து வருகிறது. பாலஸ்தீனத்தில் இஸ்ரேலுடன் மோதும் ஹமாஸ் கூட இஸ்ரேலுடன் இணைந்து போராட்டக்காரர்களுக்கு உதவி செய்கிறது.

இந் நிலையில் தான் ரசாயண ஆயுதத்தை ஆசாத் அரசு பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டி சிரியா மீது அமெரிக்கா படை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உள்ளிட்டோரும் ஆதரவு குரல் தர ஆரம்பித்துள்ளனர்.

அதே டோனி பிளேரும் ஜார்ஜ் புஷ்சும் தான் இராக்கில் சதாம் ஹூசேன் அணு ஆயுதம் வைத்திருப்பதாக பொய் சொல்லிக் கொண்டு போர் தொடர்ந்து அந்த நாட்டை நாசப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் ஆப்கானிஸ்தானில் இருந்து எப்படியாவது திரும்பி ஓடிவிட வேண்டும் என்பதில் குறியாய் இருக்கும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சிரியாவுடன் போரில் இழுத்துவிடும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளன.

Letter explains why US should stay the heck out of Syria

ஆனால், இது அமெரிக்காவுக்கு எந்த வகையிலும் உதவாது என்று அந் நாட்டுப் பத்திரிக்கைகளே எழுத ஆரம்பித்துள்ளன. சிரியாவுடன் மோதல் என்ற பெயரில் அமெரிக்கா அந்த நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால் சிரியாவுக்கு ஆதரவாக ஈரான்-லெபனான் நாடுகளும் இதில் இணையும், ஹிஸ்புல்லாவும் பாலஸ்தீனத்தின் ஹமாசும் இஸ்ரேல் மீது தாக்குதல் இறங்கும்.

மேலும் ஆசாத் கிட்டத்தட்ட மதசார்பில்லாத ஆட்சியாளர் என்பதால், அவருக்கு எதிராக போர் தொடுப்பது என்பது அல்-கொய்தாவுக்கு ஆதரவாகவும் சிரியாவில் கிருஸ்துவர்களுக்கு எதிராக போர் தொடுப்பதாகவுமே அமையும் என்கின்றன அமெரிக்க பத்திரிக்கைகள். ஆசாதுக்கு எதிரான போராளிக் குழுக்களில் அல்-கொய்தா ஆதரவு அமைப்புகளும் உள்ளதால், சிரியா விவகாரத்தில் அமெரிக்கா மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்கின்றன பத்திரிக்கைகள்.

மேலே உள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஜெனரல் சிசி என்பவர் தான் இப்போது எகிப்தின் ராணுவ கமாண்டர். அவர் வசம் தான் இப்போதைய இடைக்கால எகிப்து அரசு உள்ளது. எகிப்தில் ஜெனரல் சிசியை நீக்க Muslim Brotherhood பெரும் போராட்டங்களை நடத்தி வருகிறது.

சிரியாவில் ஆசாதுக்கு எதிராக Muslim Brotherhood அமைப்பை ஆதரிக்கும் துருக்கி நாடு, எகிப்தில் ஜெனரல் சிசிக்கு ஆதரவாக Muslim Brotherhood அமைப்பை எதிர்க்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வளவு குழப்பமாக சங்கத்தியைத் தான் தனது சிறிய கடிதத்தில் சொல்லி முடித்துவிட்டார் அல் சபா.

English summary
Assad is against Muslim Brotherhood. Muslim Brotherhood and Obama are against General Sisi. But Gulf states are pro Sisi! Which means they are against Muslim Brotherhood!. Iran is pro Hamas, but Hamas is backing Muslim Brotherhood!. Obama is backing Muslim Brotherhood, yet Hamas is against the US!. Gulf states are pro US. But Turkey is with Gulf states against Assad; yet Turkey is pro Muslim Brotherhood against General Sisi. And General Sisi is being backed by the Gulf states!. Welcome to the Middle East and have a nice day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X