For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இஸ்ரேல்-செளதி உளவுப் பிரிவுகள் கூட்டணியும், இஸ்ரேல்-எகிப்து 'ஜாயிண்ட் ஆபரேசனும்'!!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

(இது பாலஸ்தீனத்துக்கு எதிராக 'பரம எதிரி' இஸ்ரேலுடன் கைகோர்த்த செளதி அரேபியா- எகிப்து!!! கட்டுரையின் தொடர்ச்சி...)

காஸாவில் ஆயிரக்கணக்கான பாலஸ்தீனியர்களை இஸ்ரேல் கொன்று குவித்துக் கொண்டிருந்தாலும் வெறும் முதலைக் கண்ணீரை மட்டும் சில துளிகள் வெளியிட்டு வருகிறது செளதி அரேபியா. இஸ்ரேல் விவகாரத்தில் எப்போதுமே செளதியைவிட அதிக தீவிரம் காட்டும் எகிப்தும் கூட அமைதி காத்து வருகிறது.

இந்த இரு நாடுகளும் அமைதி மட்டும் காக்கவில்லை. இஸ்ரேலிய உளவுப் பிரிவுடன் இணைந்து ஹமாஸை கட்டுப்படுத்தும் வேலையிலும் இறங்கியுள்ளன என்றும் தகவல்கள் வருகின்றன.

மன்னர்களை விரட்டிய அரபு வசந்தம்:

மன்னர்களை விரட்டிய அரபு வசந்தம்:

காரணம்.. வளைகுடாவில் பரவி வரும், பரவி வந்த அரபு வசந்தம்.

மதத்தை முன்னிலைப்படுத்தி இங்கு நடந்து வரும் மன்னராட்சிகள், சர்வாதிகாரிகளை அரபு வசந்தம் ஓட ஓட விரட்டியது.

சுதந்திரம், ஜனநாயகம் கோரும் மாணவர்கள், படித்தவர்கள், பெண்கள் தெருவில் இறங்கி போராட்டம் நடத்தியதையடுத்து துனீசியாவில் ஆரம்பித்து எகிப்து, லிபியா வரை பல நாடுகளின் சர்வாதிகாரிகள் வீழ்ந்து மக்களாட்சி மலர்ந்தது.

ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க...

ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க...

அடுத்ததாக ஏமன், பஹைரன், ஜோர்டன், குவைத், மொரிஷியானா, ஓமன் என அடுத்தடுத்த நாடுகளிலும் ஜனநாயகம் கோரி போராட்டம் வெடிக்க, அடுத்தது நம்ம நாடு தான் என அச்சமடைந்த செளதி உடனடியாக இந்த நாடுகளில் ஜனநாயகப் போராட்டங்களை ஒடுக்க உதவி செய்தது.

மேலும் துனீசியா, எகிப்து, லிபியாவில் அரபு வசந்தத்துக்கு மறைமுகமான உதவிகளைச் செய்த அமெரிக்கா, இதே வசந்தம் செளதிக்கு அருகே நெருங்கியபோது கழன்று கொண்டது. காரணம், தங்களுக்கு பெரும் உதவியாய், அடிமைகளாய் இருக்கும் செளதி மன்னர்கள்- ஆட்சியாளர்களை பகைத்துக் கொள்ள விருப்பம் இல்லாததே.

பணம் கொண்டு அடக்கி....

பணம் கொண்டு அடக்கி....

அதே நேரத்தில் இந்த அரபு வசந்தத்தின் தாக்கத்தால் தான் மக்களுக்கு சில அடிப்படை உரிமைகளை செளதி தர முன் வந்தது. மேலும் செளதி அரசு ஊழியர்களுக்கு திடீரென போனஸ் எல்லாம் அள்ளித் தரப்பட்டது. அதாவது அரபு வசந்தத்தை பணத்தைக் கொண்டு, சலுகைகள் தந்து தாற்காலிகமாக அடக்கிவிட்டது செளதி..

எகிப்திலும் மீண்டும்.. மீண்டும்..

எகிப்திலும் மீண்டும்.. மீண்டும்..

அதே போல எகிப்தில் சர்வாதிகாரம் செய்த ஹோஸ்னி முபாரக்கை அரபு வசந்தம் எனும் மக்கள் புரட்சி தான் ஆட்சியை விட்டு நீக்கியது. முஸ்லீம் பிரதர்ஹுட் அமைப்பு தான் இந்தப் போராட்டத்தை முன்னிறு நடத்தியது. இந்தப் போராட்டத்தின் உதவியால் அடுத்து ஆட்சிக்கு வந்த முகம்மத் மோர்சி, தந்த உறுதிமொழிகளை எல்லாம் மறந்துவிட்டு அங்கு மதவாதம் சார்ந்த ஆட்சி நிர்வாகத்தை அமலாக்க முயன்றதோடு, ஜனநாயகக் குரல்களை ஒடுக்க ஆரம்பிக்கவே அங்கு மீண்டும் அரபு வசந்த போராட்டம் ஆரம்பித்தது.

இதையடுத்து மோர்சியை நீத்திவிட்டு பதவியைப் பிடித்தார் ராணுவத் தளபதியான ஜெனரல் சிசி. இவரே ஒரு மோசடியான தேர்தலையும் நடத்தி 'ஜனாதிபதி'யாக தேர்வும் ஆகிவிட்டார். இப்போது இவருக்கு எதிராக முஸ்லீம் பிரதர்ஹுட் போராட்டம் நடத்தி வருகிறது.

ஹமாஸ்- முஸ்லீம் பிரதர்ஹுட்:

ஹமாஸ்- முஸ்லீம் பிரதர்ஹுட்:

பாலஸ்தீனத்தின் காஸா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஹமாஸ் அமைப்பு எகிப்தின் முஸ்லீம் பிரதர்ஹுட் அமைப்புடன் நெருங்கிய தொடர்பில் உள்ளது.

இது எகிப்து அதிபர் சிசியை எரிச்சலடைய வைத்துள்ளது. இதனால் தான் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பாலஸ்தீனத்தை இஸ்ரேல் தாக்கினாலும் அதைப் பற்றி எகிப்து அரசு கவலையே படாமல் இருப்பதோடு, ஹமாஸை ஒடுக்க இஸ்ரேலுக்குத் தேவையான உதவிகளையும் மறைமுகமாக செய்து வருகிறது.

இஸ்ரேல்- எகிப்து 'ஜாயிண்ட் ஆபரேசன்'...

இஸ்ரேல்- எகிப்து 'ஜாயிண்ட் ஆபரேசன்'...

காஸாவைப் பொறுத்தவரை 3 பக்கம் இஸ்ரேலால் சூழப்பட்டு இருந்தாலும் ஒரு பகுதியில் எகிப்து எல்லை உள்ளது. இந்த எல்லை தான் காஸா பகுதியின் பாலஸ்தீனர்களுக்கு உயிர் காக்கும் வழி. இஸ்ரேலின் போக்குவரத்துத் தடைகளைக் கடந்து வேலைக்குப் போகவும் மருத்துவமனைக்குச் செல்லவும் இந்த எல்லையைத் தான் பாலஸ்தீனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், காஸா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தவுடன், பாலஸ்தீனர்கள் இந்த எல்லை வழியாக தப்பி வருவார்கள் என்பதால் உடனடியாக எல்லையை சீல் வைத்துவிட்டது எகிப்து.

இதன்மூலம் பாலஸ்தீனர்கள் மீதான இந்தப் போரை இஸ்ரேல் மட்டும் நடத்தவில்லை என்பதும் இது ஒரு இஸ்ரேல்- எகிப்து 'ஜாயிண்ட் ஆபரேசன்' தான் என்பதும் தெளிவாகும்.

செளதி- இஸ்ரேல் உளவுப் பிரிவு கூட்டணி:

செளதி- இஸ்ரேல் உளவுப் பிரிவு கூட்டணி:

அதே போல முஸ்லீம் பிரதர்ஹுட், ஹமாஸ் போன்ற அமைப்புகள் கூட்டாக இணைந்து அரபு வசந்தம் எனும் புயலை தங்கள் நாட்டுக்குள்ளும் கொண்டு வரக் கூடும் என்ற அச்சத்தில் இருக்கும் செளதி அரேபியாவும் பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு ஐ.நா.வில் மட்டும் எதிர்ப்புக் குரல் கொடுத்துவிட்டு, சில மில்லியன் டாலர் உதவி- நிவாரணப் பொருட்களை பாலஸ்தீனத்துக்கு அனுப்பிவிட்டு அமைதி காத்து வருகிறது.

மேலும் இஸ்ரேலிய உளவுப் பிரிவான மோசாத் அமைப்பின் உளவாளிகளும் செளதி உளவுப் பிரிவினரும் ஹமாஸ் குறித்த தகவல்களைப் பரிமாறிக் கொள்வதாகவும் தகவல்கள் வருகின்றன. ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்த இரு உளவுப் பிரிவுகளும் எப்போதுமே கூட்டணி அமைத்து செயல்படுபவை தான் என்றாலும் இதை பாலஸ்தீன விவகாரம் வரை விரிவாக்கிவிட்டனர் என்பது சோகத்திலும் சோகம்.

மதகுருவின் பேச்சு....

மதகுருவின் பேச்சு....

மேலும் கொடுமையாக, பாலஸ்தீன மக்களுக்காக இஸ்ரேலுக்கு எதிராக அரபு நாடுகளில் நடக்கும் போராட்டங்கள் அர்த்தமே இல்லாதவை என்கிறார் செளதி அரேபியாவின் தலைமை மதகுருவான அப்துல் அஜீஸ் அல் அஷ் ஷேக். இவர் இவ்வாறு சொல்லாவிட்டால் அந்தப் பதவியில் இருக்க முடியாது என்பதே உண்மை.

இவர்கள் அரபு வசந்த ஆதரவாளர்கள் என்பதால் ஹமாஸ் தலைவர்களை ஜோர்டனும் பல ஆண்டுகளுக்கு முன்பே நாடு கடத்திவிட்டதோடு உதவிகளையும் நிறுத்திவிட்டது.

சின்னாபின்னாவான சிரியா...

சின்னாபின்னாவான சிரியா...

அதே நேரத்தில் பாலஸ்தீனியர்களுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்து வந்த சிரியா அதிபர் பஸார் அல் அஸத் இப்போது உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்டுள்ளார். இவரை எதிர்த்து சன்னி பிரிவு இஸ்லாமிய அமைப்புகள் போரை நடத்தி வருகின்றன. இவர்களை எதிர்க்க ஈரானும் ரஷ்யாவும் அல் அஸதுக்கு உதவி வருகின்றன. இந்த சன்னி பிரிவினருக்கு முஸ்லீம் பிரதர்ஹுட் அமைப்பும் ஹமாஸும் உதவுவதால் பாலஸ்தீனர்களிக்கு உதவுவதை அல் அஸத் நிறுத்திவிட்டார்.

டமாஸ்கஸில் தவிக்கும் அகதிகள்...

டமாஸ்கஸில் தவிக்கும் அகதிகள்...

மேலும் சிரியாவின் டமாஸ்கஸ் நகரில் பல லட்சம் பாலஸ்தீனியர்கள் அகதியாக உள்ளனர். பல ஆண்டுகளாக அகதிகளாக இருக்கும் இவர்களுக்கு உதவி வந்த அல் அஸத் அந்த உதவியையும் நிறுத்திவிட உணவுக்குக் கூட வழியில்லாமல் கொடும் பட்டியினில் தவித்து வருகின்றனர் இந்த அப்பாவிகள். மேலும் உள்நாட்டுப் போரில் டமாஸ்கஸ் நகரமே சின்னாபின்னாவாகிக் கிடக்கிறது. தனது மக்களையே கவனிக்கும் நிலையில் அஸத் இல்லை. அவரே 3 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து கொண்டு தான் ஆட்சி நடத்துகிறார். சில நேரங்களில் ரஷ்ய போர்க் கப்பலில் இருந்தபடி ஆட்சி நடத்திக் கொண்டுள்ளார் அஸத்.

செளதி- எகிப்து- இஸ்ரேல் கூட்டணி:

செளதி- எகிப்து- இஸ்ரேல் கூட்டணி:

இவ்வாறு ஹமாஸை ஒடுக்க தங்கள் பக்கம் செளதியும் எகிப்தும் துணையாக இருப்பதாலும் ஜோர்டன் அமைதி காப்பதாலும், சிரியா உள்நாட்டுப் பிரச்சனையில் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பதாலும் இஸ்ரேலுக்கு மிக வசதியாகப் போய்விட்டது.

இஷ்டம்போல காஸா பகுதியில் தாக்குதல் நடத்திக் கொண்டும் அவ்வப்போது போர் நிறுத்தம் செய்து கொண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி ஆயிரக்கணக்கான சிறார்கள், பெண்கள் உள்பட பலரையும் கொத்துக் கொத்தாக கொன்று குவித்து வருகிறது.

குழந்தைகளை இஸ்ரேல் குறி வைப்பது ஏன்?

குழந்தைகளை இஸ்ரேல் குறி வைப்பது ஏன்?

பல ஆண்டுகளாக பல முனைப் போராட்டம் நடத்தியும் ஹமாஸை அடக்க முடியாமல் திணறும் இஸ்ரேல் குழந்தைகளை குறி வைத்துத் தாக்குவது ஏன் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. ஹமாஸின் பலமே இளைஞர்களும் பெண்களுமே. போர்க் களத்திலேயே பிறந்த இவர்கள் வளர்ந்தவுடன் ஆயுதம் தூக்குவது கடமையாகிவிட்டது.

இதனால் அடுத்த தலைமுறையில் ஆயுதம் தூக்குவோரின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கத்தில் தான் இஸ்ரேல் தரப்பு குழந்தைகள், பள்ளிக் கூடங்கள், மருத்துவமனைகளை குறி வைத்துத் தாக்கிக் கொண்டிருக்கிறது. இதில் ஐ.நா. பள்ளியும் தப்பவில்லை.

இன்னும் எத்தனை குழந்தைகளோ?:

இன்னும் எத்தனை குழந்தைகளோ?:

கடைசி நிலவரப்படி நேற்று (செவ்வாய்க்கிழமை) இஸ்ரேல்- ஹமாஸ் இடையே செய்யப்பட்ட தாற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் தோல்வியடைந்துவிட்டது. இதனால் இன்று முதல் மீண்டும் இஸ்ரேலின் பேயாட்டம் தொடங்கப் போகிறது....

இஸ்ரேலிடம் சொந்த நாட்டைப் பறி கொடுத்துவிட்டு நடுத் தெருவில் நிற்கும் பாலஸ்தீனர்கள்.. இவர்களுக்கு உதவ வேண்டிய அரபு நாடுகள் சுயநலத்துக்காக இஸ்ரேலுடன் கைகோர்த்துக் கொண்டு நிற்கும் சூழல்..

இந்த நாடுகளின் 'அரசியலுக்கு' இன்னும் எத்தனை குழந்தைகள் பலியாகப் போகிறார்களோ?!

(கட்டுரையாளர் ஒன் இந்தியா குழுமத்தின் தலைமை ஆசிரியர்)

English summary
Earlier Tuesday, Sami Abu Zuhri, Hamas spokesman in Gaza, said that Hamas wasn't responsible for the four rockets were fired earlier on Tuesday afternoon from Gaza into Israel. Izzat al-Resheq, a senior Hamas leader and member of the Palestinian delegation in Cairo for the ceasefire talks said in a press statement that he ruled out the possibility of reaching an agreement Tuesday. Israel launched a ground and air offensive on the Gaza Strip to rein on Gaza militants and stop rockets firing into Israel. Around 2,018 Palestinians and 68 Israelis were killed and more than 10,000 wounded so far.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X