For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...!

By A K Khan
Google Oneindia Tamil News

- ஏ.கே.கான்

தனியாக கட்சி ஆரம்பித்தோ, தேசிய கட்சிகளில் அடிமட்டத்தில் இருந்து உழைத்தோ அல்லது திராவிட இயக்கம் நடத்திய சமூக போராட்டங்களில் ஈடுபட்டோ முதல்வர் பதவியை ஜெயலலிதா பிடிக்கவில்லை.

எம்.ஜி.ஆர் என்ற பெரும் நட்சத்திரத்தின் நட்பும் ஆதரவும் தந்த பதவி தான் அதிமுக தலைவர் பதவியும் அதைத் தொடர்ந்து கிடைத்த முதல்வர் பதவியும். எம்ஜிஆரின் ஒரே வாரிசாக இவரை மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால் தான் ஜானகியை புறக்கணித்துவிட்டு இவரை அதிமுகவின் தலைவியாக ஏற்றுக் கொண்டனர். ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கியதில் சில ஊடகங்களின் பங்கும் மிக மிக முக்கியமானது. பல சுயநல, சமூக காரணங்களால் இந்த ஊடகங்கள் ஜெயலலிதாவை ஆரம்பத்தில் இருந்தே தூக்கிப் பிடித்தன.

ஆனால், ஜெயலலிதா தவறு செய்யும்போது அதை சுட்டிக் காட்டியிருக்க வேண்டிய இந்த ஊடகங்கள் அதைச் செய்யத் தவறின. காரணம், நம்மவருக்கு நாமே பிரச்சனை தரக் கூடாது என்ற எண்ணம் தான். அது தான் இன்று ஜெயலலிதாவை சிறைக்குள் உட்கார வைத்திருக்கிறது.

டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியது 'ஜஸ்ட் மிஸ்' தான். வலுவான ஆதரங்களோடு குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் 'சந்தேகத்தின் அடிப்படையில்' ஜெயலலிதாவை தண்டிக்காமல் விட்டது உச்ச நீதிமன்றம். சட்ட விரோதமாக வாங்கிய அரசு நிலத்தைத் திருப்பித் தந்தால் போதும் என்று கூறி ஜெயலலிதாவை விடுவித்தது.

டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியது அப்போது பெரும் ஆச்சரியத்தைத் தந்தது. அதாவது அதிகாரம் இருந்தால் யாரும் தண்டனைக்கு உள்ளாக மாட்டார்கள் என்ற கருத்தைப் பரப்பியது அந்த உத்தரவு.

Justice is done in Jayalalithaa's case

ஆனால், தொடர்ந்து அரசியல்வாதிகளால் இந்த தேசம் பாழ்பட்டு வருவதை பார்த்து சகிக்க முடியாத சில மிக மிக நேர்மையான நீதிபதிகள் Judicial activism என்ற நிலைக்கு வந்து அடுத்தடுத்து அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்து லாலு, எதியூரப்பா, ரெட்டி சகோதரர்கள் கும்பல் ஆகியோரின் பதவிகளைப் பறித்து உள்ளே தள்ளி சட்டத்தையும் நாட்டையும் காப்பாற்றினர்.

அந்த வரிசையில் தான் ஜெயலலிதாவின் தீர்ப்பையும் பார்க்க வேண்டும், கனிமொழியும் ஆ.ராசாவும் செய்யாத தவறையா ஜெயலலிதா செய்துவிட்டார் என்று முடிச்சுபோட்டு ஜெயலலிதா தப்பே செய்யவில்லை என்று பேசுவது விதண்டாவாதம். கனிமொழியும் ராசாவும் அவர்கள் செய்த தவறுக்கு தண்டனையை அனுபவிப்பார்கள். நிச்சயம் அனுபவித்தாக வேண்டும்.

ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியதே ஏதோ சட்ட விரோதம் மாதிரியும், ஜெயலலிதா இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு எல்லாம் அப்பாற்பட்டவர் என்பது மாதிரியும் படிக்காதவர்கள் நினைத்தால் தப்பில்லை. அதையே சில ஊடகங்களும் நினைப்பது தான் வேதனை. இல்லாவிட்டால் அவர் கைதான செய்தியை முதல் பக்கத்தில் வெளியிடாமல் மறைப்பார்களா?.

Justice is done in Jayalalithaa's case

இந்த ஊடகங்களை வழி நடத்துவோர் தான் ஜெயலலிதாவையும் வழி நடத்தியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களது தவறான ஆலோசனைகளால் தான் ஜெயலலிதா இன்று இந்தப் பாடுபட்டு வருகிறார்.

ஜெயலலிதாவின் தவறுகளை சுட்டிக் காட்டாமல் இவர்கள் சாமரம் வீசியதும், ஜெயலலிதாவுக்கு ஆலோசகர்கள் என்ற பெயரில் கூட இருந்த அதிகாரிகள், மாஜி ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஆகியோரும் தான் ஜெயலலிதாவின் இந்த நிலைமைக்குக் காரணம்.

அம்மாவுக்கு பிடிச்ச மாதிரி பேசணும், நடந்துக்கனும்.. அப்ப தான் பதவியில் இருக்க முடியும் என்ற ஒரே ஒரு பார்முலாவை மட்டும் வைத்துக் கொண்டு இந்த 'ஆலோசகர்கள்' தந்த அட்வைஸ், முதல்வருக்கு ஆலோசனைகள் தர வேண்டிய நிலையில் இருக்க வேண்டிய அமைச்சர்கள் அதைவிட்டுவிட்டு கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் காலில் விழுந்து கிடந்து பதவியும் அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தையும் மட்டுமே கருத்தில் கொண்டு செயல்பட்டது... என ஜெயலலிதாவை சுற்றி இருந்த கும்பல்கள் அனைத்துமே சுயநலத்தில் திளைத்தவை.

தமிழகத்தின் அனைத்து அமைச்சர்களும் முதல்வர் பன்னீர்செல்வம் தலைமையில் அழுதுகொண்டும், அழுகை ஓவராகி மூக்கு ஒழுகிக் கொண்டும், வாயில் கர்சீப்பை திணித்துக் கொண்டும் பதவியேற்றதை பார்த்த மற்ற மாநிலத்தினர் தமிழர்களை என்ன மாதிரி நினைத்திருப்பார்கள்?. நம்மை எவ்வாறு எடை போட்டு இருப்பார்கள்? ஜெயலலிதா முதல்வராக இல்லாத அமைச்சரவையில் எனக்கு எதற்கு இடம் என்று எந்த ஒரு அமைச்சரும், பன்னீர்செல்வம் உள்பட, பதவியேற்பை தவிர்க்கவில்லை. அமைச்சர் பதவி வேண்டாம் என்று சொல்லவில்லை. கண்ணீரில் மூழ்கியபடியே பதவியில் உட்கார்ந்துவிட்டனர்.

அதே போல ஜெயலலிதா இல்லாத சட்டசபையில் நான் இருக்க மாட்டேன் என்று எந்த ஒரு அதிமுக எம்எல்ஏவும், அதிருப்தி தேமுதிக எம்எல்ஏவும் பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவ்வளவு ஏன் ஒரு கவுன்சிலர் கூட பதவி விலகவில்லையே.. ஏன்?. அதே நேரத்தில் ஜெயலலிதா கைதால் தமிழகமே ஸ்தம்பித்துப் போய்விட்டதாகவும், யாருக்கும் வேறு வேலையே இல்லை என்பது மாதிரியும், எல்லோருமே இதைப் பற்றி மட்டுமே கவலைப்பட்டுக் கொண்டு உட்கார்ந்து இருப்பது மாதிரியும், பொது மக்கள் எல்லா வேலையையும் அப்படி அப்படியே விட்டுவிட்டு ரோட்டில் இறங்கி போராட்டங்களில் ஈடுபட்டு வருவது மாதிரியும், பெரிய சுதந்திரப் போராட்டமே நடப்பது மாதிரியும் ஒரு பிரமையை உருவாக்கும் வேலையும் நடந்து வந்தது.

அதுவும் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு விசாரணைக்கு வருவதையொட்டி இந்த இமேஜ் உருவாக்கப்பட்டது. அதாவது ஜெயலலிதா கைதால் தமிழகத்தில் பெரும் அசாதாரணமான சூழல் நிலவுவதாகவும் அவரை இனியும் சிறையில் வைத்திருப்பது நாட்டுக்கே ஆபத்து என்பது மாதிரியும் ஒரு பிரமையை உருவாக்கி நீதிமன்றத்தையே திணற வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதி தான் அது.

இதற்காகவே ஆம்னி பஸ், தனியார் பள்ளிகள் என ஸ்டிரைக்கில் ஈடுபட வைக்கப்பட்டனர். பள்ளிகள் விஷயத்தில் நீதிமன்றம் தலையிட்ட உடன் பல்டி அடித்தனர். அடுத்ததாக காய்கறி கடைகள், பூ கடைகள் என போராட்டங்களை நடத்த வைத்தனர். நேற்று ஜாமீன் மனு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது நீதிமன்றத்தின் வெளியிலும் பெரும் அளவில் அதிமுகவினர் கூடி நெருக்கடியான ஒரு நிலையை உருவாக்கவும் முயன்றனர்.

அதைவிட மேலே ஒருபடி போய் நீதிபதி தனது முடிவை அறிவிக்கும் முன்பாகவே ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடைத்துவிட்டது என்றும் செய்தி பரப்பினர். ஆனால், இதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு நீதிபதி சந்திரசேகரா ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்ததோடு ஊழல் என்பது மனித உரிமை மீறல் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையும் சுட்டிக் காட்டி, இனி ஊழல் அரசியல்வாதிகளுக்கு கொஞ்சமும் நீதி வளையாது என்பதை சொல்லிவிட்டுப் போய்விட்டார்.

ஜாமீன் மனு மீது விசாரணை நடக்கும்வரை தமிழகம் ஸ்தம்பித்துப் போனது மாதிரி காட்டினார்கள். மனு நிராகரிக்கப்பட்டவுடன் தமிழகம் இன்று அமைதியாக இருக்கிறது. அது எப்படி?

உடனே ஜாமீனில் விட வேண்டும் என கர்நாடக உயர் நீதிமன்ற விடுமுறை கால நீதிபதியையும் அடுத்து உயர் நீதிமன்றத்தையும் வேகவேகமாக அணுகிய ஜெயலலிதா தரப்பு, இப்போது உடனே உச்ச நீதிமன்றத்திற்கு போனால் என்ன ஆகுமோ, நாலு பேருக்கும் சேர்த்து பெட்டிஷன் போடலாமா தனித்தனியாக போடலாமா என்று அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்குவதில் அதிக அவசரம் காட்டாமல் மிரண்டு போய் மிக ஜாக்கிரதையாக அடி எடுத்து வைக்க ஆரம்பித்திருக்கிறது..

சட்டம் தன் வேலையை நன்றாகவே செய்கிறது...!

English summary
Law is doing it duty perfect, in Jayalalitha's case and the justice is done too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X