For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இந்த டியூப் லைட் ஏன் எரிய மாட்டீங்குது...?

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

நேற்றிரவு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமிக்கு சிறப்புப் பேட்டியளித்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளரும் பிரச்சாரக் குழுத் தலைவருமான ராகுல் காந்தி.

சில வருடங்களுக்கு முன் எனது சகாவும் தட்ஸ்கன்னடா ஆசிரியருமான ஷாம் சுந்தர் மாஜி பிரதமர் தேவகெளடாவை நேரடி பேட்டி கண்டுவிட்டு திரும்பி வந்தபோது பெரும் அசதியோடு இருந்தார். என்ன ஆச்சு ஷாம் என்றபோது, உஷ்.. அப்பப்பா.. நான் கேட்ட எந்த கேள்விக்கும் கெளடா பதில் சொல்லவே இல்லை. என் கேள்விகளை காதிலேயே வாங்கவில்லை. நான் கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்க, கட்சி மேடையில் பேசுவது மாதிரி தான் நினைத்ததை மட்டுமே கெளடா பேசிக் கொண்டே இருந்தார். என்ன எழுதுவது என்றே தெரியவில்லை என்றார்.

கிட்டத்தட்ட அதே மாதிரி தான் இருந்தது ராகுல் காந்தியின் பேட்டியும்.

Rahul Gandhi and Arnab Goswami

மோடி, குஜராத் கலவரம், சீக்கியர் படுகொலை, தேர்தல், கூட்டணி என அர்னாப் கோஸ்வாமி நேரடியாக சில சங்கடமான கேள்விகளைக் கேட்டுக் கொண்டே இருக்க, பெண்களுக்கு அதிக உரிமைகள், காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது, இளைஞர்களின் சக்தி, நாட்டின் சிஸ்டத்தை மாற்றுவது, பஞ்சாயத்து ராஜ் என்று தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வரும் மத்திய அரசுத் துறைகளின் இந்தி விளம்பரங்கள் மாதிரியே பேசிக் கொண்டிருந்தார்.

ராகுல் காந்தியின் கனவுகள், திட்டங்கள், கொள்கைகள் எல்லாமே நல்ல விஷயங்கள் தான். ஆனால், அன்றாடம் பாஜகவுடனும் மோடியுடனும் போட்டி போட்டு கட்சி நடத்தி தேர்தலை சந்திக்கும் வேகமும் லாவகமும் ராகுல் காந்தியிடம் இல்லவே இல்லை என்பதை இந்தப் பேட்டி தெளிவாகவே உணர்த்தியது.

ஜெய்ராம் ரமேஷ் சமீபத்தில் சொன்ன மாதிரி ராகுல் காந்தியின் எண்ணங்கள்- திட்டங்கள் எல்லாமே 'Toooo long term'. ஒரு பொது நல சங்கம் நடத்தினால் இது மாதிரியான நீண்ட கால திட்டங்கள் உதவும். ஆனால், ராகுல் காந்தி இருப்பது அரசியலில்...

அதே மாதிரி நாட்டில் நடக்கும் முக்கிய விவகாரங்களில் ராகுல் காந்தி முழுமையான கவனம் செலுத்தவில்லை என்பதையும் இந்தப் பேட்டி தெளிவாகவே உணர்த்தியது.

குறிப்பாக சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்காக காங்கிரஸ் ஏன் மன்னிப்புக் கேட்கக் கூடாது என்று அர்னாப் கோஸ்வாமி கேட்க, ராகுல் காந்தி முழித்த முழி இருக்கிறதே.. புள்ளையைப் பார்க்க ரொம்பவும் பரிதாபமாக இருந்தது.

5 ஆண்டுகளுக்கு முன் சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்துக்காக பிரதமர் மன்மோகன் சிங் நாடாளுமன்றத்திலேயே நேரடியாக மன்னிப்பு கேட்டார். இதை நினைவுகூர்ந்து சொல்லக் கூடிய நிலையில் ராகுல் காந்தி இல்லை. தட்டுத் தடுமாறிவிட்டு, ''நான் பெண்களுக்கான உரிமைகள், காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது, இளைஞர்களின் சக்தி, நாட்டின் சிஸ்டத்தை''... என்று ஏற்கனவே சொன்னதை திரும்பச் சொல்ல ஆரம்பித்தார் ராகுல் காந்தி.

அதே மாதிரி குஜராத் கலவரம் விவகாரத்தில் மோடி அரசுக்கு எதிராக ஆதாரம் இல்லை என்று நீதிமன்றங்களே கூறிவிட்டதே என்ற கேள்விக்கு, ராகுல் காந்தியிடம் இருந்து பதில் வாங்குவதற்குள் அர்னாப் கோஸ்வாமிக்கு நெஞ்சு வலியே வந்திருக்கும். இந்தக் கேள்விகளுக்கும் ராகுலிடம் நேரடியாக பதில் வரவில்லை. மீண்டும் ''நான் பெண்களுக்கான உரிமைகள், காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது, இளைஞர்களின் சக்தி, நாட்டின் சிஸ்டத்தை...'' என்று ராகுல் காந்தி ஸ்டியரிங்கை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு வண்டியை படுவேகமாக ஓட்டினார்.

ஆனாலும் அவரை விடாமல் துரத்தித் துரத்தி இந்தக் கேள்வியைப் போட்டார் அர்னாப். இறுதியில், ஆமாம் குஜராத்தில் கலவரம் நடந்தது, அதை அரசு தூண்டியது. அப்போது மோடி தான் முதல்வராக இருந்தார், அதுக்கு என்ன இப்போ என்பது மாதிரி பொத்தாம்பொதுவாக ஒரு பதிலை ரொம்பவே கஷ்டப்பட்டு சொல்லிவிட்டு மீண்டும் ''நான் பெண்களுக்கான உரிமைகள், காங்கிரஸ் கட்சியில் ஜனநாயகத்தைக் கொண்டு வருவது, இளைஞர்களின் சக்தி, நாட்டின் சிஸ்டத்தை...'' என்று ஆரம்பித்தார் ராகுல் காந்தி.

குஜராத் கலவரம் தொடர்பாக பாஜக அமைச்சர் மாயா கோட்னானி கைதானதை சுட்டிக் காட்டி தனது தரப்பு வாதத்தை தெளிவாக ராகுல் எடுத்து வைத்திருக்கலாம். இந்த விஷயம் தெரிந்தால் தானே அவர் சொல்வார். அல்லது அன்றாடம் இந்த விவகாரங்களை கூர்ந்து கவனித்திருந்தால் தானே இதெல்லாம் நினைவுக்கு வரும்.

கடைசியில் நீங்கள் உருப்படியாக ஒரு கேள்வியாவது கேட்டீர்களா என்று அர்னாப் கோஸ்வாமியை நோக்கி கேள்விகளைக் கேட்டு அவரை திணறடித்தார் ராகுல் காந்தி.

பரீட்சைக்கு சரியாக படிக்காத பையன் எக்ஸாம் ஹாலில் உட்கார்ந்து கொண்டு, அங்கு எத்தனை மின் விசிறிகள் ஓடுகின்றன.. எத்தனை டியூப் லைட்கள் எரிகின்றன என்று எண்ணிக் கொண்டு இருப்பானே..

அப்படித்தான் இருந்தது ராகுல் காந்தியின் இன்டர்வியூ..!

English summary
Billed by Times Now "the interview of the year", Congress leader Rahul Gandhi's full-length television appearance on Monday night has disappointed every one including his supporters, and inspired his detractors.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X