For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?!

By A K Khan
Google Oneindia Tamil News

-ஏ.கே.கான்

பிரையன் எட்வர்ட் காக்ஸ்..

உலகின் மிகச் சிறந்த இளம் இயற்பியல், வானியல் நிபுணர்களில் ஒருவர். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் ஜெனீவா அருகே பூமிக்கு அடியில் நடந்து வரும் ஹிக்ஸ் போஸான் என்ற அணுவின் நுண் துகளை கண்டுபிடிக்கும் சோதனையில் ஹிக்ஸ் போஸான்.. 'கடவுளை' 99.999% கண்டுபிடித்து விட்டார்கள்!, 'கடவுள்' இருப்பது உண்மை தான்!! ஈடுபட்டுள்ள முக்கிய விஞ்ஞானிகளில் ஒருவர்.

பிபிசியுடன் இணைந்து இவர் உருவாக்கிய வானியல் தொடர்பான டாகுமெண்டரிகள் உலகப் புகழ் பெற்றவை. மிகக் கடினமான விண்வெளி ஆராய்ச்சிகளை மிக மிக எளிதாக மக்களுக்குப் புரிய வைப்பதில் கில்லாடி.

வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள்...

வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள்...

இவரது Wonders of Life, Wonders of the Universe, Wonders of the Solar System போன்ற டாகுமெண்டரிகளை டிஸ்கவரி, நேஷனல் ஜியோகிராபிக் சேனல்கள் ஒளிபரப்புவது வழக்கம். முடிந்தால் பாருங்கள். இல்லாவிட்டால் இந்த சிடிக்களை ஆன்லைனில் வாங்கியாவது பாருங்கள். இவை வீட்டில் நாம் வைக்க வேண்டிய பெட்டகங்கள் என்பதே நிஜம்.

பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்...

பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்...

இந்த பிரையன் காக்ஸ் இப்போது ஒரு பெரிய குண்டைத் தூக்கிப் போட்டுள்ளார். அவர் சொல்வது இது தான். பூமியையும் மனித குலத்தையும் எந்த நேரத்திலும் மொத்தமாக காலி செய்யப் போவது ஒரு விண் கல் தான் என்கிறார்.

சமீபத்தில் பூமியை ஒரு பெரிய விண் கல் மிகச் சமீபத்தில் கடந்து சென்றுள்ளது. இந்தக் கல் பூமியின் மீது மோதியிருந்தால் இப்போது இதை எழுத நானோ, படிக்க நீங்களோ இருந்திருக்க சாத்தியமில்லை. பூமி பணால் ஆகி கதை முடிந்திருக்கும்.

மனித குலம் செய்த மாபெரும் தவறு...

மனித குலம் செய்த மாபெரும் தவறு...

இதே போன்ற விண் கல் எந்த நேரத்திலும் பூமியைத் தாக்கலாம் என்று கூறும் காக்ஸ், இந்த ஆபத்துகளை எதிர்கொள்வது, தடுப்பது தொடர்பான ஆராய்ச்சிகள் மிக மந்தமான வேகத்தில் நடந்து வருவது ஆச்சரியம் தருவதாகவும், இந்த ஆபத்தை உலக நாடுகள் சரியான உணரவில்லை என்றும் எச்சரித்துள்ளார்.

இதைப் பற்றி கவலைப்படாவிட்டால் மனித குலம் செய்த மாபெரும் தவறாக அது விளங்கும் என்கிறார்.

பூமியின் வட்டப் பாதையில் நுழைந்திருந்தால்...

பூமியின் வட்டப் பாதையில் நுழைந்திருந்தால்...

அவர் கூறுகையில், சில மாதங்களுக்கு முன் ஒரு விண்கல் பூமிக்கு மிக அருகே வந்துவிட்டுப் போனது. அது வந்ததே நமக்குத் தெரியாது. அது திரும்பிச் சென்றபோது தான் அதை நாம் கவனித்தோம். அந்தக் கல் இன்னும் கொஞ்சம் நெருங்கி வந்திருந்தால் பூமியின் வட்டப் பாதையில் நுழைந்திருந்தால் கதையே வேறு மாதிரி இருந்திருக்கும். நாம் மீண்டும் தப்பியிருக்கிறோம்.

பக்கத்தில் வந்து போன 2014 EC விண்கல்...

பக்கத்தில் வந்து போன 2014 EC விண்கல்...

ஒரு பெரிய பேருந்தின் சைஸில் உள்ள 2014 EC என்ற விண்கல் கடந்த மார்ச் மாதம் பூமிக்கு 61,637 கி.மீ. தூரமாக, பூமிக்கு மிகப் பக்கமாக வந்து சென்றது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் 6ல் ஒரு பகுதி தான். இந்தக் கல் பாதை மாறி இன்னும் நெருங்கி வந்திருந்தால் பூமி இந்நேரம் பஸ்பமாகியிருக்கும்.

மனித இனத்தின் பெயரை தாங்கிக் கொண்டு நிச்சயம் ஒரு விண் கல் விண்ணில் சுற்றித் திரிந்து கொண்டிருக்கிறது. அது எப்போது பூமியைத் தாக்கும் என்பது நமக்குத் தெரியாது.

நமக்கு குருட்டு அதிர்ஷ்டம்...

நமக்கு குருட்டு அதிர்ஷ்டம்...

பூமிக்கு மிக ஆபத்தானவை என்று கிட்டத்தட்ட 1,400 விண் கற்களை நாஸா அடையாளம் கண்டு, அவற்றை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ஆனால், இன்னும் எத்தனை கற்களோ.. யாருக்குத் தெரியும்.

இது வரை நாம் தப்பிப் பிழைத்திருப்பது ஒரு குருட்டு அதிர்ஷ்டம் காரணமாகத்தான்.

எனக்கு மிகுந்த வருத்தம் தருவது, நம்மிடம் இப்போது இருக்கும் தொழில்நுட்பத்தை வைத்தே இந்த ஆபத்துகளை ஓரளவுக்குத் தவிர்க்க முடியும் என்று தெரிந்திருந்தும் இதை நாம் சீரியஸாக எடுத்துக் கொள்ளாமல் இருப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை.

ரஷ்யாவில் விழுந்த மாபெரும் விண்கல்....

ரஷ்யாவில் விழுந்த மாபெரும் விண்கல்....

விண் கற்களை அணு ஆயுதங்களைக் கொண்டு தகர்க்கலாம் என்று ஒரு தரப்பு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அது சாத்தியமாகக் கூட இருக்கலாம். ஆனால், அதற்கான ஆய்வுகள் தொடங்கக் கூட இல்லை.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ம் தேதி ரஷ்யாவின் செலியாபின்ஸ்க் பகுதியில் ஒரு மாபெரும் விண்கல் வந்து விழுந்து வெடித்தது. இது ஜப்பானின் ஹிரோஷிமாவில் போடப்பட்ட அணுகுண்டைப் போல 20, 30 மடங்கு அதிக சக்தி வாய்ந்தது.

வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம்....

வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம்....

அந்தக் கல் பூமியின் வட்டப் பாதைக்குள் நுழைந்தது கூட நமக்குத் தெரியாது. அது பூமிக்குள் வந்து வெடித்த பின்னரே நாம் தெரிந்து கொண்டோம்.

ஆனால், நிலைமையே புரியாமல் அமெரிக்காவும் பிரிட்டனும் தங்களது விண்வெளி ஆராய்ச்சிக்கான நிதியை ஆண்டுதோறும் குறைத்துக் கொண்டே வருகின்றன என்கிறார் காக்ஸ்.

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?:

2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி பூமிக்கு இறுதி நாள்?:

இதற்கிடையே நாஸா மிகக் கவலையுடன் கண்காணித்து வரும் விண் கல் 1950 DA தான்.

கிட்டத்தட்ட 1 கி.மீ. விட்டம் கொண்ட இந்த விண்கல் 1950ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி கார்ல் ஏ. விர்டனென் என்ற அமெரிக்க விஞ்ஞானியால் கண்டுபிடிக்கப்பட்டது. 17 நாட்கள் மட்டுமே அப்போது இதை கண்காணிக்க முடிந்தது. பின்னர் இது மறைந்துபோனது. ஆனால், 2000ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி மீண்டும் இது விண்வெளி தொலைநோக்கிகளுக்குப் புலப்பட்டது.

இதுவரை இது உடையவில்லை....

இதுவரை இது உடையவில்லை....

2001ம் ஆண்டு மார்ச் 5ம் தேதி இந்தக் கல் பூமிக்கு 7,789,950 கி.மீ. அருகே வந்துவிட்டுப் போனது. அப்போது இதை ஆராய்ந்தபோது இந்தக் கல் மிக வேகமாக சுழல்வதும், இரும்பு, நிக்கல் போன்ற ரசாயனங்களால் ஆனது என்பதும் தெரிய வந்தது.

இந்த அதிவேகமாக சுழற்சி காரணமாக இந்தக் கல் தானாகவே உடைந்து சிதறியிருக்க வேண்டும். ஆனால், இதுவரை இது உடையவில்லை.

பயண திசை மாறுகிறது?...

பயண திசை மாறுகிறது?...

வினாடிக்கு 15 கி.மீ. வேகத்தில் பயணித்து வரும் இந்த எரிகல் பூமியில் 2880ம் ஆண்டு மார்ச் 16ம் தேதி அட்லாண்டிக் கடலுக்குள் மணிக்கு 60,000 கி.மீ. வேகத்தில் வந்து விழ வாய்ப்புண்டு.

இது நடந்தால் அடுத்த பல நூற்றாண்டுகளுக்கு பூமி வெறும் திட சாம்பலாகவே சுற்றிக் கொண்டிருக்கும்.

ஆனால், அடுத்தடுத்து நடந்து வரும் ஆராய்ச்சிகள் பூமியை நோக்கிய இந்தக் கல்லின் பயண திசை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருவதை உறுதி செய்கின்றன.

இது தான் இப்போதைக்கு நமக்கு உள்ள ஒரே ஆறுதல்!

English summary
Professor Cox says we recently had a ‘near-miss’ with a large asteroid. No one knows when next one could be. It 'could be tomorrow,' says Cox. Engineers are working to mitigate threat, but progress has been slow. As well as asteroids, threats to humanity include AI and climate change. ‘It's human stupidity we need to worry about,' claims Professor Cox. He says threats can be prevented through research and education
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X