பெங்களூர்: விஸ்வரூபம் பிரச்சனை தொடர்ந்திருந்தால் நான் பெங்களுரில் குடியேறி இருந்திருப்பேன் என்று கமல் ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீங்கி பிரச்சனைகள் எல்லாம் ஒரு வழியாகத் தீர்ந்து கடந்த 7ம் தேதி படம் தமிழகத்தில் ரிலீஸாகி ஓடிக் கொண்டிருக்கிறது. பல பிரச்சனைகளைத் தாண்டி வந்த விஸ்வரூபத்தைப் பார்க்க தமிழக ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டி வருவதால் தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் கமல் ஹாசன் பெங்களூர் மல்லேஸ்வரத்தில் உள்ள ரேணுகாம்பா தியேட்டரில் ரசிகர்களுடன் சேர்ந்து நேற்று விஸ்வரூபம் படம் பார்த்தார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
கர்நாடகத்திற்கும், எனக்கும் நீண்ட கால தொடர்பு
விஸ்வரூபம் கர்நாடகத்தில் ரிலீஸாக ஒத்துழைப்பு கொடுத்த மாநில அரசு மற்றும் காவல் துறைக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கர்நாடகத்தில் விஸ்வரூபம் வெற்றிகரமாக ஓடுவதைப் பார்க்கையில் மகிழ்ச்சியாக உள்ளது. கர்நாடகத்திற்கும் எனக்கும் நீண்ட காலமாக தொடர்பு உண்டு. நடிகர் அம்பரீஷ் எனது நண்பர்.






























