twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி, கமல் படங்களோடு போட்டி போடாதீர்கள் - இளம் நடிகர்களுக்கு நாசர் அட்வைஸ்

    By Shankar
    |

    சென்னை: இளம் நடிகர்கள் ரஜினி, கமல், அஜீத் படங்களுடன் போட்டி போடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் நடிகர் நாசர்.

    ஒன்பது குழி சம்பத் இசை வெளியீட்டு விழா மற்றும் முதல் திரையரங்கை நிறுவிய சாமிக்கண்ணு வின்சென்ட்டின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற நாசர் பேசியதாவது:

    Dont compete with Rajini, Kamal movies

    எனக்கு நானே

    விழாவில் நடிகர் நாசர் பேசுகையில், "இந்த இசை வெளியீட்டு விழாவுக்கு என்னை அழைத்த திருவுக்கு நன்றி. அதே நேரத்தில் என்னை அழைக்கும்போது இப்படத்தின் இசை வெளியீடு பற்றி என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இருந்தாலும் எனக்கு கோபம் இல்லை. சமீப காலமாக நான் மிக அதிகமாக பேச ஆரம்பித்திருக்கிறேன். எனக்கு நானே தனியாககூட பேசிக் கொண்டிருக்கிறேன்.

    ஒரே மாதிரி...

    எனக்கு சுதந்திர தினம், மகளிர் தினம், புத்தாண்டு தினம் இவற்றிற்கெல்லாம் வித்தியாசங்கள் தெரியவில்லை. எல்லாமே ஒரே மாதிரியாகத்தான் தோன்றுகிறது.

    இதனால்தான் இந்தப் படக் குழுவிடம், சாமிக்கண்ணு அய்யாவின் பிறந்தநாளை திரை அரங்கு தினமாக அறிவிக்க வேண்டியிருப்பதற்கு தேவையான நடைமுறை சாத்தியங்களில் அதிக கவனம் எடுத்துக் கொள்ளுமாறு சொல்லி இருக்கிறேன்.

    அவருக்கு எந்த அளவுக்கு நம்பிக்கை இருந்திருந்தால், எந்த அளவுக்கு சினிமாவின் மேல் காதல் இருந்திருந்தால் அந்தக் காலத்திலேயே திரையரங்கைக் கட்டியிருக்க வேண்டும்.

    அழிவில் தியேட்டர்கள்

    இப்போது தியேட்டர்கள் அழிந்து வருவதைக் கண்டு நாம் மிகவும் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால் அது இங்கு மட்டும்தான். நான் லண்டனில் நடைபெற்ற 'தாண்டவம்' படத்தின் ஷூட்டிங்கின்போது, அங்கே நாடகங்களுக்கு சென்றேன். அங்கே சாதாரணமாக வருடத்திற்கு குறைந்தது 100 நாடகங்கள் நடைபெறும். ஒரு காட்சியின் டிக்கட்டின் விலை நம்மூர் மதிப்பின்படி ரூபாய் 2000 முதல் 7500 வரை ஆகும்.

    மல்டிப்ளெக்ஸ்கள்...

    நான் நடிக்க வாய்ப்பு தேடி அலையும் காலகட்டத்திலேயே தியேட்டர் இடிப்பதைக் கண்டு "நம் எதிர்காலம் என்னவாகுமோ?" என்று பயந்துள்ளேன். ஆனால் இப்போது அப்படியல்ல. காரணம் தியேட்டர்கள் இடிக்கப்பட்டாலும் நிறைய மல்டிப்ளக்ஸ்கள் வந்துகொண்டிருப்பது சந்தோஷமாக உள்ளது.

    திருட்டு டிவிடியை அழிக்க முடியாது

    திருட்டு டிவிடியை நாம் அழிக்க முடியாது. ஆனால் நாம் கண்டிப்பாக நல்ல படம் எடுத்தால் நிச்சயம் மக்கள் தியேட்டருக்கு வந்துதான் பார்ப்பார்கள்.

    மேலும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் நல்ல படங்கள் கமல், ரஜினி, அஜித் போன்ற பெரிய நடிகர்களின் படங்களோடு மோத வேண்டாம். காரணம் வெகுஜன சினிமாக்களோடு மோத வேண்டிய சூழ்நிலையால் கதைக்குத் தேவையில்லாத காதல், பாட்டு, சண்டை போன்றவற்றைத் திணிக்க வேண்டியுள்ளது.

    சினிமா இல்லாமல் தமிழன் இல்லை

    தமிழர்களின் வாழ்க்கையை இரண்டு வகைப்படுத்தலாம். ஒன்று அரசியல் இன்னொன்று சினிமா. தமிழர்கள் சோறு தண்ணியில்லாமல் கூட இருந்துவிடுவார்கள். ஆனால் சினிமா இல்லாமல் அவர்களால் இருக்க முடியாது.

    தியேட்டர்கள் இடிப்பதை நான் பொருளாதார சிக்கலாகப் பார்க்கவில்லை. கலாச்சார சீரழிவாகத்தான் பார்க்கிறேன். தயவு செய்து சினிமாவை வியாபாரமாகப் பார்க்க வேண்டாம். பொதுவாக ஒரு நடிகரின் படம் ரிலீசாகும்போது தியேட்டரே திருவிழாக் கோலம் பூண்டிருக்கும். ஆனால் நான் அதை வெறுக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில், படம் பார்க்கும்போது ரசிகனின் மனதில்தான் திருவிழாக்கோல உணர்வு இருக்க வேண்டும்," என்றார்.

    English summary
    Actor Nasser says that the new and young heroes should avoid compete with Rajini, Kamal movies.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X