twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராஜபக்சே தொடர்பு: முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!

    By Shankar
    |

    சென்னை: விஜய் படத்தைத் தயாரிக்கும் லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் ராஜபக்சேவுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று ஒரு முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

    விஜய் நடிப்பில் முருகதாஸ் இயக்கும் புதிய படமான கத்தி, படப்பிடிப்பிலிருக்கும் போதே சிக்கலில் மாட்டிக் கொண்டுள்ளது.

    இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களாக ஐங்கரன் நிறுவனத்தின் கருணாமூர்த்தியும், லைக்காமொபைல் நிறுவனத்தின் சார்பில் சுபாஷ் கரண் அல்லிராஜாவும் தயாரிக்கின்றனர்.

    No links with Rajapaksa, says Lycamobiles

    ஐங்கரன் கருணா ஏற்கெனவே விஜய்யை வைத்து வில்லு படம் எடுத்து தோற்றவர். இவருடன் இணைந்து இப்போது விஜய் படத்தைத் தயாரிக்கும் சுபாஷ்கரண் அல்லிராஜா, ராஜபக்சேவுக்கு நெருக்கமானவராக அறியப்பட்டவர். ஈழத் தமிழர்கள் அத்தனைப் பேரும் அறிந்த உண்மை இது. குறிப்பாக லண்டன், நார்வே, பிரான்ஸ், சுவிட்சர்லாந்து நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு லைக்காமொபைல் நிறுவனத்துக்கும் இலங்கை அரசுக்கும் உள்ள தொடர்புகள் நன்கு தெரியும்.

    (லைக்கா மொபைல்காரர்களுக்கும் ராஜபக்சே குடும்பத்துக்கும் என்ன தொடர்பு?- கேமரூனின் அடுத்த அதிரடி)

    ராஜபக்சேவின் பேராதரவுடன்தான் லைக்காமொபைல் நிறுவனம், லண்டன் - கொழும்புவுக்கு லைக்கா ப்ளை விமான சேவையை நடத்திக் கொண்டுள்ளது.

    மேலும் ராஜபக்சேவின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் லைக்கா மொபைல் நிறுவனத்தில் பெருமளவு பங்குதாரராக இருப்பதை மீடியாக்கள் அம்பலப்படுத்தியுள்ளன.

    லைக்கா ப்ளை நிறுவனம்தான் இலங்கையின் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தெரிவு செய்யப்பட்ட கூட்டாளி நிறுவனமாகும். இந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் தலைமைப் பொறுப்பிலிருப்பவர் ராஜபக்சேவின் நெருங்கிய உறவினர்!

    அதுமட்டுமல்ல, கடந்த 2011-ம் ஆண்டு இங்கிலாந்தின் டோரி கட்சிக்கு 420,000 பவுண்டுகளை நன்கொடையாக அளித்திருந்தது லைக்கா மொபைல் நிறுவனம். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ராஜபக்சேவுக்கும், இலங்கை அரசுக்கும் நெருக்கமான லைக்காமொபைல் நிறுவனத்திடமிருந்து எதற்காக இவ்வளவு பெரிய தொகையை இங்கிலாந்தின் ஆளும்கட்சி பெற வேண்டும்? என அந்நாட்டு எம்பி டாம் ப்ளெங்கின்ஸாப் கேள்வி எழுப்பியிருந்தார்.

    இதற்கு பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பதிலளித்த பிரதமர் டேவிட் கேமரூன், இந்த நன்கொடையை திருப்பித் தரப் போவதாக அறிவித்ததோடு, லைக்காமொபைலுக்கும் ராஜபக்சேவுக்குமான தொடர்புகளை விசாரிக்க குழு அமைக்கவும் உத்தரவிட்டது நினைவிருக்கலாம்.

    அதுமட்டுமல்ல, இலங்கையில் கடந்த ஆண்டு நடந்த காமன்வெல்த் மாநாட்டுக்கு முதன்மை ஸ்பான்சராக இருந்தது இந்த லைக்காமொபைல் நிறுவனம்தான். இந்த நிறுவனத்துக்கு 'கோல்ட் ஸ்பான்சர்' எனும் பெரிய அந்தஸ்தை இலங்கை அரசு கொடுத்திருந்தது.

    ராஜபக்சேவின் சர்வாதிகாரம் கொடிகட்டிப் பறக்கும் இலங்கையில், அவரது அனுசரணை இல்லாமல் ஒரு தமிழரால் இத்தனை செல்வாக்குடன் இயங்க முடியுமா?

    சர்வதேச அளவில் மிக சக்தி வாய்ந்த ஒரு நாட்டின் பிரதமரே லைக்காமொபைல் - ராஜபக்சே நிதித் தொடர்புகள் என்ன? என்ற கேள்வியை நாடாளுமன்றத்தில் எழுப்பிய பிறகும், ராஜபக்சேவுக்கும் லைக்காவுக்கும் சம்பந்தமே இல்லை என சென்னையில் ஒருவர் பிரஸ் மீட் வைத்து சொல்கிறார்.

    அப்படியென்றால் தமிழ்ப் பத்திரிகைகள் அந்த அளவு விவரம் தெரியாதவர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்களா?

    முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பது எப்படி என்பதற்கு நேற்று ஒரு லைவ் டெமோ காட்டியிருக்கிறார்கள் விஜய் படத் தயாரிப்பாளர்கள்!!

    English summary
    Vijay's Kaththi movie producers deliberately denied the (already exposed) links between Lycamobiles and Srilankan president Rajapaksa.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X