twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வடிவேலு படத்தை எதிர்த்தால் இங்கும் தாக்கரேக்கள் தோன்றுவார்கள்! - பாரதிராஜா

    By Shankar
    |

    சென்னை: வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை தெலுங்கு அமைப்பினர் எதிர்த்தால், தமிழகத்திலும் பால் தாக்கரேக்கள், வாட்டாள் நாகராஜ்கள் தோன்ற வாய்ப்பிருக்கிறது, என்று இயக்குநர் பாரதிராஜா எச்சரித்துள்ளார்.

    வடிவேலுவின் தெனாலிராமன் படத்தை எதிர்ப்பவர்ளுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கை:

    சமீபகாலமாக தமிழ் திரைப்படத்துறை கலைஞர்களையும், தமிழ் திரைப்படத் துறையையும் சீண்டிப் பார்ப்பது என்பது வழக்கமாக உள்ளது. விஸ்வரூபம் திரைப்படம் தொடங்கி தெனாலிராமன் வரை பல தமிழ் படங்கள் தணிக்கை செய்யப்பட்டும்கூட ஏதோ ஒரு காரணத்தை கூறி எதிர்ப்பை கிளப்பி தமிழ் கலையையும், கலைஞர்களையும் பலவீனப்படுத்த முயற்சிக்கிறார்கள்.

    ஹிட்லர் படத்தையே...

    ஹிட்லர் படத்தையே...

    உலக அரசியலில் பெரும் தலைவர்களையும் கிண்டல் கேலி செய்து கார்ட்டூன் வரைவதில்லையா? சர்வாதிகாரி ஹிட்லரையே கிண்டல் செய்து படம் எடுத்தவர்தான் மகா கலைஞரான சார்லி சாப்லின். அந்த சர்வாதிகாரி ஹிட்லரேகூட அதை அறிந்து சார்லி சாப்லினை குறுகிய கண்ணோட்டத்தில் எதிர்க்கவில்லை.

    அயோத்திராமன் என்றா காட்டமுடியும்?

    அயோத்திராமன் என்றா காட்டமுடியும்?

    தெனாலிராமன், கிருஷ்ணதேவராயரின் அரசவையில் விகடகவியாக நையாண்டி செய்து, கேலி கிண்டல்கள் மூலமாக அறிவுபூர்வமான கருத்துக்களை கூறியவர். தெனாலிராமனின் செயல்பாடுகள் கோமாளித்தனமாகத்தான் தெரியும். அப்படியொரு தெனாலிராமனை, தெனாலிராமன் என காட்டாமல் அயோத்திராமன் என்றா காட்ட முடியும்.

    தெலுங்கு பேசிய தெனாலிராமனைப் பற்றி சொல்லும்போது ஆங்காங்கே தெலுங்கு வசனங்கள் வரத்தான் செய்யும். அதை ஒரு காரணமாக வைத்துக்கொண்டு ஒரு சாரார் படம் வெளிவருவதற்கு முன்பாகவே அதை எங்களுக்கு திரையிட்டு காட்டுங்கள் அல்லது நீதிமன்றத்துக்கு செல்வோம் என்று சொல்வது நியாயமா?

    தணிக்கைக் குழு எதற்கு?

    தணிக்கைக் குழு எதற்கு?

    திரைப்படத்தில் பிறமொழி கதாப்பாத்திரங்கள் வருகிறது என்பதற்காக, அந்த கதாபாத்திரம் சம்பந்தப்பட்ட மொழி பேசும் மக்களுக்கு அதை திரையிட்டுக்காட்டி சான்றிதழ் பெறவேண்டும் என்றால் எப்படி? அதேபோல் மருத்துவர்கள், பொறியாளர், வழக்குரைஞர்கள் போன்ற கதாபாத்திரங்கள் வருகிறது என்பதற்காக, இவர்களும் எங்களுக்கு திரைப்படத்தை திரையிடுவதற்கு முன்பாக காட்ட வேண்டும் என்று சொன்னால் திரைப்பட தணிக்கை குழு என்று எதற்கு இருக்கிறது.

    அதிகார மையமா?

    அதிகார மையமா?

    தணிக்கை செய்யப்பட்ட திரைப்படம் உங்கள் கருத்துக்கு முரண்பாடாக இருந்தால் அதை நீங்கள் தணிக்கை குழுவிடம்தான் கேட்க வேண்டும். ஒரு திரைப்படம் மக்கள் பார்க்க தகுதியானது என்று மத்திய அரசின் பிரதிநிதி, சான்றிதழ் வழங்கிய பிறகு உங்களிடமும் திரைப்படத்தை காட்டி சான்றிதழ் வாங்க வேண்டும் என்று சொன்னால் நீங்கள் என்ன மற்றொரு மத்திய அரசாங்கமா? அல்லது அதிகார மையமா?

    பெருந்தன்மை

    பெருந்தன்மை

    ஆந்திரா, கர்நாடகா, கேரளாவில் ஒரு தமிழன் அரசியல் பண்ண முடியுமா? அல்லது மந்திரியாகத்தான் வர முடியுமா? ஆனால் எங்கள் மண்ணில் யார் வேண்டுமானாலும் அரசியல் பண்ணலாம். பதவிக்கு வரலாம். அந்த பெருந்தன்மை எங்களுக்கு உண்டு. அந்த ஒற்றுமையில் மண்ணை அள்ளி போட்டு விடாதீர்கள்.

    இன்னொரு மகாராஷ்டிராவாக மாத்திடாதீங்க

    இன்னொரு மகாராஷ்டிராவாக மாத்திடாதீங்க

    தமிழகத்தை இன்னுமொரு மகாராஷ்டிராவாக மாற்றி விடாதீர்கள். பிறகு தமிழ்நாட்டில் பால் தாக்கரேக்கள், வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தோன்ற ஆரம்பித்து விடுவார்கள். ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். என் இனிய தமிழ் மக்களே!

    தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு விடுமுறை

    தெலுங்கு ஆண்டுப் பிறப்புக்கு விடுமுறை

    ஏப்ரல் 14 அன்று தமிழர்களின் புத்தாண்டு. அன்றைய தினம் தமிழகத்தில் அரசு விடுமுறை. வேறு எந்த மாநிலத்திலாவது தமிழ் புத்தாண்டு விடுமுறை உண்டா? ஆனால் தமிழ்நாட்டில் தெலுகு வருடப்பிறப்பான யுகாதிக்கு விடுமுறை விடப்படுகிறது. தமிழா! நீயும் நானும் சம்பாதித்தால் போதும் என்று ஜட மனிதனாகவே ஆகிவிட்டோமே நாம். இந்த நிலை நீடித்தால், தமிழ் இனமும், தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும், தமிழ் பண்பாடும் ஒருநாளில் காணாமல் போய்விடக்கூடும்.

    -இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.

    English summary
    Director Bharathiraja condemned Telugu outfits for opposing Vadivelu's Tenaliraman.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X