twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தூரத்திலிருந்து துயரப் பூக்களைத் தூவுகிறேன் - கவிஞர் வைரமுத்து அஞ்சலி

    By Shankar
    |

    Vairamuthu's condoles for Rama Narayanan death
    போய்வாருங்கள் நண்பரே.... என் துயரப்பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன், என மறைந்த இயக்குநர் ராம நாராயணனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார் கவிஞர் வைரமுத்து.

    ஒரு தமிழ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சுவிட்சர்லாந்து சென்றுள்ள கவிஞர் வைரமுத்து, ராம நாராயணன் மறைவு செய்தி குறித்து தகவல் அறிந்தவுடன், அங்கிருந்து வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

    இயக்குநர் ராம நாராயணன் மறைவு இன்று என் பகல் மீது கறுப்பு வண்ணம் பூசிவிட்டது. கலங்கித்தான் போனேன். என் பேச்சுத்துணை ஒன்று போய்விட்டது. திரை உலகின் ஒரு சில உண்மை விளம்பிகளுள் ஒருவர் மறைந்துபோனார். நூறு படங்களுக்கு மேல் இயக்கி சில ஆயிரம் குடும்பங்களுக்குத் தொழில் தந்த ஒரு தயாரிப்பாளரை இழந்துவிட்டது திரை உலகம்.

    வாழ்வின் இறுதி நாட்களில் நாள்தோறும் என்னோடு பேசினார். எல்லோருக்கும் நல்ல பிள்ளையாய்த் திகழவேண்டும் என்ற மோசமான முடிவால் அவர் அடைந்த துன்பங்களை நான் அறிவேன். ஆனால் பிறரைப் பழிக்காத பேராண்மை அவரிடம் நிறைந்திருந்தது.

    துயரப்பூக்களைத் தூவுகிறேன்

    என்னை ஏவி.எம்.மில் அறிமுகம் செய்தவர் அவர்தான். என்னை ஒரு பாடல் காட்சியில் வற்புறுத்தி நடிக்க வைத்ததும் அவர்தான். பாட்டுவரிகளின் நுட்பம் கூறும் செப்பம் அவருக்கு வாய்த்திருந்தது.

    கண்ணுக்குத் தெரியாமல் பலபேருக்கு உதவி செய்திருக்கிறார். ஒரு கொடையாளன் போய்விட்டான் என்று குமுறுகிறது நெஞ்சு. அவர் உடல் மீது மலர் தூவ முடியாமல் கடல் தாண்டி நானிருக்கிறேன். என் துக்கம் சுமந்து என் பிள்ளைகள் வந்து அஞ்சலி செலுத்துவார்கள்.

    போய்வாருங்கள் நண்பரே.... என் துயரப்பூக்களைத் தூரத்திலிருந்தே தூவுகிறேன். உங்களை என்றும் மறக்காதவர்களின் சிறு கூட்டத்தில் ஒருவனாய் நானுமிருப்பேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    English summary
    Poet Vairamuthu conveyed his condolences for the death of veteran director Rama Narayanan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X