twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ரஜினி தமிழரா, கன்னடரா, மராட்டியரா...? - சலசலப்பு கிளப்பிய வைரமுத்து பேச்சு

    By Shankar
    |

    சென்னை: கோச்சடையான் வெளியீட்டு விழாவில் பேசிய கவிஞர் வைரமுத்து, ரஜினி தமிழரா, கன்னடரா, மராட்டியரா என்ற அடையாளச் சிக்கலை என் பாடல் தீர்த்து வைத்தது என்று பேசி சலசலப்பு கிளப்பினார்.

    கோச்சடையான் வெளியீட்டு விழாவில் வைரமுத்து பேச்சு சிறப்பாக அமைந்திருந்தாலும், சில விஷயங்கள் பொருத்தமற்றதாக அமைந்துவிட்டது.

    அவரது பேச்சு...

    இந்தப் படத்தில் நான் பணியாற்ற முக்கிய காரணம், அதை ரஜினி தூக்கிச் சுமக்கிறார் என்பதற்காக மட்டுமல்ல, படத்தின் தலைப்பான கோச்சடையான் மீதிருந்த ஈர்ப்புதான். பழமையும் அழுத்தமும் இணைந்த தலைப்பு இது.

    Vairamuthu's controversial speech about Rajini

    கோச்சடையான் சிவனின் இன்னொரு பெயர். மதுரையை ஆண்ட பாண்டியர்களுக்கும் இந்த பெயர் உண்டு.

    இந்தப் படத்தில் பல புதுமைகள் இடம்பெற்றுள்ளன. நவீன தொழில்நுட்பத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ரஜினி நான்கு யுகங்கள் தாண்டி வந்திருக்கிறார். 40 ஆண்டுகள் யாராலும் நகர்த்த முடியாத சிம்மாசனத்தில் வீற்றிருக்கிறார். அதுதான் அவரது மிகப்பெரிய சாதனை.

    அவரது முதல் ரசிகனுக்கு இப்போது 65 வயது. 25 வயதுக்காரர்களும் அவரது ரசிகர்களாக இருக்கிறார்கள். 65 வயது ரசிகரும், 25 வயது ரசிகரையும் பெற்றுள்ள ஒரே நடிகர் ரஜினிதான். இதற்கு அவரது உழைப்பு மட்டும் காரணம் அல்ல. நல்ல மனசும் நல்ல எண்ணமும்தான் காரணம். ரஜினி தன் உழைப்பால் வீடு கட்டினார். நல்ல எண்ணங்களால் அதைச் சுற்றி சுவர் எழுப்பினார். அந்த சுவர் அவரைக் காக்கிறது.

    'படையப்பா' படத்தில் பணியாற்றிய எல்லோருக்கும் தங்க சங்கிலி கொடுத்தார். அதில் மனிதாபிமானம் தெரிந்தது. 'பாபா' படம் நஷ்டமானபோது வினியோகஸ்தர்களை அழைத்து நஷ்டத்தை நான் தருகிறேன் என்றார். அதில் கொடை உள்ளம் தெரிந்தது.

    ரஜினி அரசியலுக்கு வருவாரா? மாட்டாரா? என்ற கேள்வி எழுந்த சமயத்தில் அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அந்த கேள்வியிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. ஆனால் ரஜினி சொன்ன பதிலில் அவரது அறிவாற்றலும் புத்திசாலித்தனமும் வெளிப்பட்டது.

    தமிழகத்தின் முதல்வராக தமிழன் வரவேண்டும் என்கிறார்களே? இதுதான் அந்த கேள்வி. அவர் நெஞ்சில் வேல் பாய்ச்சும் கேள்வி. மனிதர் என்ன பதில் கூறப்போகிறார் என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ரஜினி சொன்னார்: 'சரியான கருத்துதானே, ஒரு நாடாரோ, முதலியாரோ, பிள்ளைமாரோ வரவேண்டும் என்று சொல்லாமல், தமிழன்தான் முதல்வராக வரவேண்டும் என்றுதானே சொல்கிறார்கள்,' என்றார். ஆஹா.. இந்த மனுசன் மகா புத்திசாலி எனப் புரிந்து வியந்தேன்.

    இயக்குநர் ரவிக்குமார் எனக்கு ஒரு பெரிய புகழாரம் சூட்டினார். என்னை ஒரு கணம் அதிர வைத்த புகழாரம். அதை சற்றே நாணத்தோடு ஏற்றுக் கொள்கிறேன்.

    தமிழ் மக்கள் நெஞ்சில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடியேற என் வரிகளும் உதவின என்ற அந்த புகழாரத்தை நான் ஏற்றுக் கொள்கிறேன்.

    அமரர் எம்ஜிஆருக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கும் ஒரு அடையாளச் சிக்கல் இருந்தது.

    எம்ஜிஆர் மலையாளி என்று விமர்சிக்கப்பட்டார். ஆனால் இங்கே தமிழராகவே அவர் வாழ்ந்தார் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் அவர் நடித்துக் கொண்டிருந்த காலத்தில் இந்த கேள்வி கேட்கப்பட்டபோது, அதற்கு கண்ணதாசன் தன் பாடல் வரிகள் மூலம் இப்படி பதில் அளித்தார்...

    பாடுவது கவியா
    பாரி வள்ளல் மகனா
    சேரனுக்கு உறவா
    செந்தமிழர் நிலவா... - என்று எழுதினார். எம்ஜிஆர் தமிழர் என்று அழுத்தமாகப் பதிய அந்த வரிகள் உதவின.

    அப்படி ஒரு அடையாளச் சிக்கல் ரஜினிக்கும் வந்தது. அவர் மராட்டியரா, கன்னடரா, தமிழரா என்ற கேள்வி எழுந்தபோது,

    அன்னை வாரிக் கொடுத்தது தாய்ப்பாலு...
    என்னை வாழ வைத்தது தமிழ்ப் பாலு... - என்றெழுதினேன்.

    என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்கக் காசு
    கொடுத்தது தமிழலல்லவா
    என் உடல் பொருள் ஆவியை
    தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா...

    -என நான் எழுதியவை ரஜினியின் அடையாளப் பிரச்சினை தீர உதவியதில் மகிழ்ச்சிதான்.

    ரஜினி இன்னும் இருபது ஆண்டுகள் நடிக்க வேண்டும். அதற்கான உடல் வலுவும் மன வலிமையும் அவருக்கு உள்ளது.

    ரஜினி தமிழ் மக்கள் நெஞ்சில் நிறைந்து வாழ்கிறார். அவரது 'கோச்சடையான்' பெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை," என்றார்.

    English summary
    Poet Vairamuthu says that his lyrics help Rajinikanth to overcome the ethnicity crisis.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X