twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு பேரிழப்பு: விஜயகாந்த்

    By Mayura Akilan
    |

    டெல்லி: இயக்குநர் ராம நாராயணன் மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடைய திரையுலக வெற்றிக்கு அவரின் பங்கு மகத்தானது எனவும் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    "தமிழ்த் திரையுலகின் ஜாம்பவானும், எனது பெரும் மரியாதைக்குரிய இயக்குநருமான ராம நாராயணன் அவர்கள் உடல்நலக் குறைவால் சிங்கப்பூர் மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தியினை கேட்டு, பெரும் அதிர்ச்சியும், மிகுந்த வேதனையும் அடைந்தேன். இச்செய்தி என்னை மீளாத் துயரில் ஆழ்த்தியுள்ளது.

    Vijayakanth condolence Ramanarayanan death

    ராம நாராயணன் இயக்கத்தில் 10-க்கும் மேற்பட்ட தமிழ்ப் படங்களில் நான் நடித்துள்ளேன். என்னுடைய திரையுலக வெற்றிக்கு அவரின் பங்கு மகத்தானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா, போஜ்புரி, மலாய் ஆகிய மொழிகளில் 125 படங்களுக்கும் மேல் இயக்கியுள்ளார்.

    பல படங்களை அவரே தயாரித்தும் உள்ளார். பாடலாசிரியராகவும், கதாசிரியராகவும் இருந்து, இயக்குநர், தயாரிப்பாளர் என உயர்ந்தவர். இவரின் சாதனை தமிழ்த் திரையுலக வரலாற்றில் ஒரு மைல் கல்லாகும்.

    தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தலைவராக 3 முறையும், தமிழக அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக 2 முறையும், சட்டமன்றப் பேரவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். தமிழக அரசின் கலைமாமணி விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

    பழகுவதற்கும், நட்பு பாராட்டுவதற்கும் இனிமையானவர், எளிமையானவர். சிறந்த பண்பாளர். இப்படி எல்லா வகையிலும் சிறப்பு பெற்ற எனது ஆருயிர் நண்பர் ராம நாராயணன் அவர்களின் இழப்பு எனக்கு மட்டுமல்ல, அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், இந்திய திரையுலகிற்கும், குறிப்பாக தமிழ்த் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.

    அவரை இழந்து வாடும் அனைவருக்கும் தேமுதிக சார்பில் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்ளுகிறேன். அவருடைய ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்". இவ்வாறு விஜயகாந்த் தனது இரங்கல் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

    English summary
    DMDK leader Vijayakanth condolence to Director Ramanarayanan.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X