twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குக்கூ - விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.5/5
    எஸ் ஷங்கர்

    கண்களிருக்கும் மனிதர்களின் காதலுக்கு ஆயிரம் தடைகள்.. பிரச்சினைகள். அதை பல படங்களில் பார்த்தும்விட்டோம்.

    பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் இருவரின் காதலுக்கு வரும் சோதனைகள்... அவற்றிலிருந்து அவர்கள் எப்படி மீள்கிறார்கள் என்பதை மனம் வலிக்க வலிக்கச் சொல்லியிருக்கிறார் புது இயக்குநர் ராஜூ முருகன்.

    வெறும் பொழுதுபோக்கு, குத்துப் பாட்டு, கேவலமான காமெடியெல்லாம் ஏதுமில்லாத அழகான படமாக வந்திருக்கிறது குக்கூ. அன்பின் வலிமை அன்பானவர்களை ஒன்று சேர்க்கும் என்பதற்கு இந்தப் படம் ஒரு உதாரணம்.

    Cuckoo - Review

    படம் முழுக்க ஒவ்வொரு காட்சியிலும் தமிழுக்கும் கொடிக்கும் ஏதாவது நேர்ந்துவிடுமோ... எங்காவது மோதிக் கொள்வார்களோ.. அந்த வாகனம் இடித்துவிடுமோ என பதறுகிறது மனசு.

    பார்வையில்லாதவர்களின் உலகம், அவர்களின் வாழ்க்கை, அவர்களின் எள்ளலை, அவர்களின் சந்தோஷங்களை இத்தனை இயல்பாக, அதே நேரம் பிரச்சார தொனியில்லாமல் யாரும் சொன்னதில்லை.

    பார்வையில்லாத ஒரு காதலியும், காதலனும் எந்தத் தொடர்புகளும் இல்லாமல் இருவேறு திக்கில் பிரிந்து போன பிறகு.. மீண்டும் சேர்வதில் உள்ள சிக்கலை யோசித்துப் பார்த்தால்... ஏ யப்பா... எவ்வளவு பெரிய துயர் இது!

    Cuckoo - Review

    ரயிலில் பொருள்கள் விற்கும், அவ்வப்போது இளையராஜா குரலில் கச்சேரிகளில் பாடும் பார்வையற்ற இளைஞர் தமிழ் (தினேஷ்). ஆசிரியர் பயிற்சிக்குப் படிக்கும் பார்வையற்ற பெண் சுதந்திரக் கொடி (மாளவிகா நாயர்). இருவரின் சந்திப்பும் மோதலில் தொடங்கி, அடுத்தடுத்த சந்திப்புகளில் காதலாகிறது. ஆனால் கொடியின் அண்ணன், தங்கையை வேலையில் சேர்ப்பதற்காக தேவைப்படும் பணத்தை ஏற்பாடு செய்த தன் நண்பனுக்கே அவளை திருமணம் செய்து வைக்க முயல்கிறான்.

    கொடி கடுமையாக எதிர்த்துப் போராடுகிறாள். காதல் விஷயம் தெரிந்ததும் தமிழை அடித்துப் போடுகிறான் கொடியின் அண்ணன். வேலைக்காக கடன் வாங்கிய பணத்தைக் கொடுத்துவிட்டு தன்னை அண்ணன் பிடியிலிருந்து அழைத்துப் போகுமாறு தமிழிடம் சொல்கிறாள் கொடி. அங்கே இங்கே என பணத்தைப் புரட்டி கொடியைச் சந்திக்க கிளம்புகிறான் தமிழ். ஆனால் இரவில் ரகசியமாக கொடிக்கு திருமண ஏற்பாடு செய்கிறான் அண்ணன். அவர்களின் பிடியிலிருந்து தப்புகிறாள் கொடி.

    பணத்தோடு வந்த தமிழோ போலீசில் சிக்கி, அதிலிருந்து தப்பி விபத்தில் அடிபட்டு பணத்தையும் இழந்து மரணத்தோடு போராடுகிறான். இருவரும் மீண்டும் சந்திக்கிறார்களா.. அந்தக் காதல் கைகூடியதா என்பது மீதிக் கதை.

    Cuckoo - Review

    படத்தின் இயக்குநர் ராஜூ முருகன்தான் கதையைத் தொடங்குகிறார். தமிழுக்கும், சுதந்திரக் கொடிக்கும் இடையிலான காதல் என்ன ஆனது என்ற அவரது தேடல்தான் படமாக விரிகிறது.

    பார்வையற்ற நாயகர்கள் வேடத்தில் இதற்கு முன் நடித்த கமல், விக்ரமையெல்லாம் தூக்கிச் சாப்பிடுகிறார் தினேஷ். குறிப்பாக அவரது உடல்மொழி. தன் காதலி எதிரில் இருந்து கொண்டே இல்லை என்று பொய் சொல்லும்போது அந்தக் கோபம்.. காதலி சமாதானமானதும் மகிழ்ச்சியைக் காட்டும் விதம்...சினிமா 'கேட்க' தியேட்டருக்குப் போய் பண்ணும் நக்கல்ஸ்... எல்லாவற்றிலும் ஒரு உண்மையான மாற்றுத் திறனாளியை நகலெடுத்திருக்கிறார் தினேஷ். வெல்டன்.

    காதலியாக வரும் மாளவிகாவும் பிரமிக்க வைக்கிறார். இவரா புதுமுகம் என கேட்க வைக்கிறது அவர் நடிப்பு... அத்தனை கச்சிதம். அதுவும் அவர் சர்ச்சிலிருந்து தப்பித்து, தட்டுத் தடுமாறி நெடுஞ்சாலைக்கு அருகில் வந்தபிறகு பேய்த்தனமாக கடந்துபோகும் வாகனங்களின் வேகத்தை உணர்ந்து அலறிப் பின் வாங்கி நின்று தடுமாறும் போது மனம் படும் வேதனை கொஞ்சமல்ல.

    அந்த நாடகக் கோஷ்டியில் வரும் எம்ஜிஆர், சந்திரபாபு எல்லாருமே சுவாரஸ்யமான பாத்திரப் படைப்பு. முக்கியமாக எம்ஜிஆராக வருபவர் குணத்திலும் அவரது கொடையுள்ளத்தை வெளிப்படுத்தும் காட்சி!

    ஆடுகளம் முருகதாஸ், தினேஷின் பார்வையற்ற நண்பனாக வருபவர், கொடியின் அண்ணன், அந்த புரோக்கர், எமோசனல் ஆகிடுவேன் என்ற வசனத்தை குபீர் சிரிப்பாக மாற்றும் ஜிலாக்கி.. என நடித்த அனைவருமே இயல் மீறாமல் நடித்துள்ளனர்.

    படத்தில் குறைகள் என்று சொல்ல கொஞ்சமல்ல.. நிறையவே இருக்கிறது.

    பிறவிப் பார்வையற்ற நாயகி தனக்கு பிங்க் நிறம் பிடிக்கும் என்பது எப்படி எனப் புரியவில்லை.

    Cuckoo - Review

    மூன்று லட்ச ரூபாய் என்பது நாயகனின் நிலைமைக்கு மிகப் பெரிய பணம். பெரும்பாடுபட்டு அந்தப் பணத்தைப் புரட்டும் அவன், அத்தனை நண்பர்கள் துணையிருந்தும் பிரச்சினையுள்ள ஒரு இடத்துக்குத் தனியாகப் போவது ஏன்? வந்து பிக்கப் செய்து கொள்வதாகச் சொல்லும் பார்வையுள்ள நண்பன் எங்கே போனான்?

    நாயகனும் நாயகியும் பரஸ்பரம் தங்கள் வாசனையை உணர்ந்தவர்கள். பத்தடி தூரத்திலிருக்கும்போதே தன் காதலன் வாசம் புரிந்து கொள்பவள் நாயகி. ஒரு வேனில் தனக்கு மிக அருகில் அடிபட்டு படுத்துக் கிடக்கும் காதலனை நாயகி உணர்ந்து கொள்ளாமல் போவது எப்படி?

    Cuckoo - Review

    அந்த புனே ரயில் நிலையக் காட்சி. பார்ப்பவர் மனதில் பெரும் பாரத்தைச் சுமக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே எடுக்கப்பட்ட மாதிரி தெரிகிறது. ஆனாலும், ராஜூ முருகன் எதிர்ப்பார்ப்பு நிறைவேறியிருக்கிறது என்றே சொல்லலாம்!

    படத்துக்கு இசை இளையராஜா என்று போட்டிருந்தாலும் கண்ணை மூடிக் கொண்டு நம்பலாம். அப்படி ஒரு பாதிப்பு. நாயகன் இளையராஜா குரலில் பாடுபவன் என்பதால், ராஜாவின் பாடல்கள் பின்னணி இசையாக ஒலிப்பதைக் கேட்கவே அத்தனை சுகமாக உள்ளது. மனசில சூறைக்காத்தே... மனசில் நிற்கிறது. சந்தோஷ இசை தந்திருக்கிறார் சந்தோஷ் நாராயணன்!

    இந்தக் கதை எத்தனைப் பேருக்குப் பிடிக்கும்... என்பதையெல்லாம் யோசிக்காமல், எந்த மனிதருக்கும் காதல் வரும்.. அதில் சோதனைகள் வரும். அதைச் சொல்லும் விதத்தில் சொன்னால் மனசில் பதியும் என்ற அழுத்தமான நம்பிக்கையுடன் தன் முதல் படத்தைத் தந்திருக்கும் ராஜூ முருகனை வாழ்த்தி வரவேற்போம்!

    English summary
    Director and writer Raju Murugan’s debut attempt Cuckoo is a well made melodramatic love story of two visually impaired lovers. A must watch movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X