twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோச்சடையான் - தி லெஜன்ட் விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.5/5

    எஸ் ஷங்கர்

    நடிப்பு: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன், நாசர், சரத்குமார், ஜாக்கி ஷெராப், ஷோபனா, நாகேஷ், ருக்மணி, ஆதி

    இசை: ஏ ஆர் ரஹ்மான்

    பாடல்கள்: கவிஞர் வாலி, வைரமுத்து

    பிஆர்ஓ: ரியாஸ் அகமது

    தயாரிப்பு: ஈராஸ் - மீடியா ஒன்

    கதை, திரைக்கதை, வசனம்: கேஎஸ் ரவிக்குமார்

    இயக்கம்: சவுந்தர்யா ரஜினிகாந்த் அஸ்வின்

    இந்திய சினிமாவுக்கு புதிய வாசலைத் திறக்கப் போகும் படம் என்ற கட்டியங்கூறி வந்துள்ள, சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் படத்தை விமர்சிப்பதற்கு முன்...

    இத்தனை அழுத்தமான சரித்திரக் கதையை, எடுத்த எடுப்பில் மோஷன் கேப்சரிங் தொழில்நுட்பத்தில் முழு நீள திரைப்படமாகவே தர முடியும் என்று நம்பி களமிறங்கிய சவுந்தர்யா ரஜினியை பாராட்டிவிடுவோம். ஆங்காங்கே கொஞ்சம் அமெச்சூர்த்தனம் இருந்தாலும் நல்ல முயற்சி.

    இந்த தொழில்நுட்பத்தில் தான் நடித்தால் என்ன மாதிரி விமர்சனங்கள் எல்லாம் எழும் என்பதை ஆரம்பத்திலேயே உணர்ந்தும், ஒரு முன்னோடியாக நின்று நடித்த ரஜினி நிச்சயம் திரையுலகின் பெருமைதான்!

    சரி, கோச்சடையான் கதைக்கு வருவோம்.

    ராணா ஒரு பெரும் வீரன். கலிங்காபுரி நாட்டின் படைத் தலைவன். அவன் படையுடன் போன இடமெல்லாம் வெற்றிதான்.

    கலிங்காபுரியின் பரம விரோதி நாடு கோட்டைப்பட்டினம். இந்த நாட்டை ஜெயித்தால்தான் வெற்றி பூரணமாகும் என மன்னன் ராஜ மகேந்திரனிடம் (ஜாக்கி ஷெராப்) கூறுகிறான் ராணா.

    அதை ஒப்புக் கொண்டு பெரும் படையோடு கோட்டைப்பட்டினம் நோக்கி கிளம்புகிறான் ராணா. செய்தி அறிந்து கோட்டைப்பட்டின படைகளும் இளவரசன் செங்கோடகன் (சரத்குமார்) மோதலுக்குத் தயாராகின்றன.

    இரு நாட்டுப் படைகளும் பெரும் சமவெளியில் மோதத் தயாராகின்றன. அதற்கு முன் ராணாவும் செங்கோடகனும் சந்திக்கிறார்கள். திடீரென நண்பா என கட்டித் தழுவுகிறார்கள்... ராணாவுடன் வந்த சேனையில் முக்கால்வாசி கோட்டைப்பட்டினப் படையுடன் சேர்ந்து கொள்ள, மீதிப் படை கலிங்காபுரிக்கு திரும்பி ஓடுகிறது.

    -இதுதான் கதையின் ஆரம்பம்... ஏன் இப்படி நடந்தது... தான் விசுவாசமாக இருந்த, தன்னை நம்பிய மன்னனை மாவீரன் ராணா ஏன் இப்படி ஏமாற்றினான் என்பதெல்லாம் மீதி ஒருமணி நேரக் கதை. அதைத் திரையில் பாருங்கள்!

    படத்தின் கதை ரொம்ப எளிமையானது. ஒரு ஊர்ல ஒரு ராஜா..அவனுக்கும் அடுத்த நாட்டுக்கும் சண்டை வகைதான். ஆனால் அதில் பகைக்கும் பழிவாங்குதலுக்கும் காரணம் வைத்த விதம் நம்மை எளிதில் கவர்கிறது. 'நம்மை விட திறமையானவனை அருகில் வைத்துக் கொள்ளக்கூடாது' என்ற ஒரு மன்னனின் ஈகோ, அவன் ராஜ்யத்தை எந்த எல்லைக்குக் கொண்டுபோகிறது என்பதை அடுத்த பாதியில் கோச்சடையான் மூலம் சொல்லியிருக்கிற விதம் அருமை.

    ரஜினியின் தோற்றம், அவரது உடல் மொழி, சின்னச் சின்ன உணர்வுகளைக் கூட சட்டென்று முகத்தில் காட்டியுள்ள விதம் எல்லாமே பிரமிக்க வைக்கிறது. அந்த அட்டகாசமான அறிமுகக் காட்சியில் தொடங்கி, கடைசி காட்சி வரை ரஜினிதான் படத்தில் பிரதானமாய் நிற்கிறார்.

    பல காட்சிகளில் மோஷன் கேப்சரிங் காட்சிகள் கொஞ்சம் உறுத்தலாக இருந்தாலும், ராணா ரஜினியின் முகம், நடனம், சண்டை என அனைத்திலும் நிஜ ரஜினியைப் பார்க்க முடிகிறது. செங்கோடன் அரசவையில் ரஜினி முதல் முதலாக நுழையும் போது அவர் காட்டும் எக்ஸ்பிரசன்கள் இது நிஜ ரஜினியா அவது நடிப்பு பதிவாக்கமா என யோசிக்க வைக்கிறது.

    ரஜினி உருவத்தை வடிவமைத்ததில் தெரியும் சின்னச்சின்ன குறைகளைக் கூட சரிகட்டிவிடுகிறது அவரது காந்தக் குரல்.

    ஜாக்கி ஷெராப், தீபிகா படுகோன், ஷோபனா, ருக்மணி, ஆதி ஆகியோரில், ஆதிக்கு மட்டும் மோஷன் கேப்சரிங் பக்காவாக செட் ஆகிறது.

    அடுத்தவர் நாசர். படம் முழுக்கவே வருகிறார், இவருக்கும் உடை, உருவ வடிவைப்பு பிரமாதமாகப் பொருந்துகிறது.

    ராணாவின் நண்பராக வரும் சரத்குமாருக்கு இத்தனை முக்கியத்துவம் தேவையே இல்லை. அதிலும் அவருக்கும் ருக்மணிக்கும் ஒரு பாட்டு வேறு.

    படத்தின் இன்னொரு ஆச்சர்யம் நாகேஷ். அவரது உருவம், குரல், நகைச்சுவை அனைத்துமே அச்சு அசலாக உள்ளன. அருமை.

    இந்தப் படத்தின் இரு பெரிய தூண்கள் ஏ ஆர் ரஹ்மானின் பாடல்கள் - பின்னணி இசை மற்றும் கேஎஸ் ரவிக்குமாரின் திரைக்கதை - வசனம்.

    கதையின் அடிப்படையே அரசியல் என்பதால், அரசியல் சாணக்கியத்தனம், அரசியல் முத்திரை வசனங்கள் எல்லாம் ஆங்காங்க சர்வ சாதாரணமாக வந்து விழுகின்றன. பார்வையாளர்கள் முறுக்கேறி கைத்தட்டுகிறார்கள். கோச்சடையான் காட்சிகளில் வரும் முடிச்சுகள் சுவாரஸ்யமானவை.

    சேனாவின் பாத்திரம் வரும்போது படம் முடிந்துவிடுகிறது. இரண்டாம் பாகம் பண்ணுவார்கள் போலிருக்கிறது.

    படத்தின் ஆகப் பெரிய குறை, படத்துக்கான மோஷன் கேப்சரிங் வேலைதான். அதை மறுப்பதற்கில்லை. ரஜினியின் கண்களில் இருக்க வேண்டிய உயிர்ப்பு இல்லை.

    பாத்திரங்களின் நடையில் இயல்பான வேகம் குறைந்து காணப்படுவது இன்னொரு குறை. ரஜினிக்கு அழகே அந்த வேக நடைதானே... அனைத்துப் பாத்திரங்களின் கால்களும் சற்று வளைந்த மாதிரியே இருப்பதை மோஷன் கேப்சரிங் குழு கவனிக்க மறந்தது ஏனோ? ரசிகர்களை விட தன் அப்பாவை அதிகம் பார்த்து ரசித்த சவுந்தர்யா எப்படி இதைக் கவனிக்காமல் விட்டார்?

    இந்தப் படத்தை அவதார் மாதிரி நிஜ ரஜினி பாதி, மோஷன் கேப்சரிங் பாதி என்று எடுத்திருந்தால் இந்தப் படத்தின் ரேஞ்சே வேறு.

    Kochadaiiyaan - The Legend Review

    ஆனாலும், ஒரு முழுப் படத்தை இந்தத் தொழில்நுட்பத்தில் எடுத்திருப்பது அசாதரணமானதுதான். அந்த வகையில் இந்திய சினிமா தனது பாரம்பரிய எல்லையைவிட்டு, புதிய தொழில்நுட்ப எல்லைக்குள் முதல் சில அடிகள் எடுத்து வைத்துள்ளது கோச்சடையான் மூலம்!

    English summary
    Superstar Rajinikanth's Kochadaiiyaan is a novel effort to show the superstar in new technology and it is definitely a welcome effort from a debutant director like Soundarya.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X