twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மஞ்சப்பை விமர்சனம்

    By Shankar
    |

    Rating:
    3.0/5
    எஸ் ஷங்கர்

    நடிப்பு: ராஜ்கிரண், விமல், லட்சுமி மேனன்
    ஒளிப்பதிவு: மசானி
    இசை: என் ஆர் ரகுநந்தன்
    தயாரிப்பு: திருப்பதி பிரதர்ஸ், ஏ சற்குணம் சினிமாஸ்
    இயக்கம்: என் ராகவன்

    ராஜ்கிரணை மட்டுமே மனதில் வைத்து உருவாக்கப்பட்ட இந்த மஞ்சப்பை, சுவாரஸ்யமானதா.. பார்க்கலாம்!

    ஆகாச நெலவுதான்... என்ற இளையராஜா பாணி பாடலுடன் தொடங்குகிறது மஞ்சப்பை.

    சின்ன வயசிலேயே தாய் தந்தையை இழந்த விமலை, வளர்த்து படிக்க வைத்து ஆளாக்குகிறார் தாத்தா ராஜ்கிரண். பெரியவனாகும் விமல், சென்னையில் ஐடி கம்பெனியில் வேலைக்குச் சேருகிறார். அமெரிக்காவுக்குப் போக வேண்டும் என்று தீராத ஆர்வம் கொண்ட விமலுக்கு, அதற்கான வாய்ப்பும் கிடைக்கிறது. மூன்று மாதங்களுக்குள் அமெரிக்கா போகவிருக்கும் அவர், தன்னை வளர்த்து ஆளாக்கிய ராஜ்கிரணை அதுவரை தன்னுடன் சென்னையில் வைத்துப் பார்த்துக் கொள்ள விரும்புகிறார்.

    தாத்தாவையும் வரவழைக்கிறார். கிராமத்து மனிதரான தாத்தா, தன் ஊரில் நடந்து கொள்வதைப் போலவே சென்னை நகரிலும், குடியிருக்கும் அபார்ட்மெண்டிலும் நடந்து கொள்ள... அக்கம் பக்கத்தவர்கள் ஏகத்துக்கும் புகார்.

    விமலின் வேலைக்கும், அமெரிக்கா போகும் கனவும், லட்சுமி மேனனுடனான காதலும் கூட தாத்தாவின் நடவடிக்கையால் சோதனைக்குள்ளாக, கடுப்பான விமல் தாத்தாவை திட்டிவிடுகிறார்.

    அந்த நேரம் பார்த்து அந்த அபார்ட்மென்டில், இவர் ஏற்படுத்திய உணவுப் பழக்கத்தால், எலி மருந்தைத் தின்றுவிடுகிறது ஒரு குழந்தை. அவர்களும் ராஜ்கிரணைத் திட்டித் தீர்க்க... ராஜ்கிரண் காணாமல் போகிறார். அவர் கிடைத்தாரா இல்லையா என்பது க்ளைமாக்ஸ்.

    வெண்கலக் கடைக்குள் யானை புகுந்த மாதிரி கலகலப்பாகப் போகின்றன ராஜ்கிரண் காட்சிகள். ஆனால் அதற்காக அபார்ட்மென்ட் வளாகத்திலிருக்கும் நீரூற்றில் அவர் குளித்து, துணி துவைப்பதும். நகராத காரை வேகமாகத் தள்ளி முன்பக்கத்தை நசுங்க வைப்பதாகக் காட்டுவதும், லேப் டாப்பை டோஸ்டர் என நினைத்து ஸ்டவ்வில் வைத்து வெடிக்க வைப்பதும்... கொஞ்சம் அதிகம்தான்!

    ஆனால் சடாரென்று அந்த காவல் அதிகாரியின் கன்னத்தைப் பதம் பார்க்கும் காட்சியிலும், எச்சில் கையால் காக்காய் ஓட்டாத பக்கத்து வீட்டுக்காரனுக்கு உடல் நலமில்லாத போது அருகிலிருந்து கவனித்துக் கொள்வதும், விக்ரமன் பாணியாக இருந்தாலும், மனசு ரசிக்கிறது!

    ராஜ்கிரணின் இயல்பான நடிப்பு அசர வைக்கிறது. இந்த மாபெரும் கலைஞனை சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்வது இயக்குநர்கள் கையிலிருக்கிறது.

    லாஜிக் இருக்கிறதோ இல்லையோ... ராஜ்கிரண் இப்படி மாங்கு மாங்கென்று நடித்துத் தீர்க்க, விமல் எப்போதும் பேஸ்தடித்த மாதிரியே வருவதும், லட்சுமி மேனனுக்கும் அவருக்குமான சுவாரஸ்யமற்ற காதலும் படத்தை முழுமைபெறாத சித்திரமாக்கிவிட்டன. காட்சியமைப்பில் ஒரு சீரியல்தனம் இருப்பதையும் சொல்லித்தான் ஆக வேண்டும்.

    பாராட்டத்தக்க விஷயம், படத்தின் எந்தக் காட்சியிலும் வன்முறையோ ஆபாசமோ இல்லை என்பது.

    லட்சுமி மேனனுக்கு வழக்கமான பாத்திரம்தான். ஆனால் பளபளப்பு கொஞ்சம் கம்மி. பாடல் காட்சிகளில் பரவாயில்லை.

    Manja pai

    மசானியின் ஒளிப்பதிவு பரவாயில்லை. திரும்பத் திரும்ப அந்த அலுவலகம், அபார்ட்மென்டை மட்டுமே ஷூட்டிங் ஸ்பாட் என்பதால் அவருக்கே போரடித்துவிட்டது போலிருக்கிறது.

    ரகுநந்தனின் இசையில் எல்லா பாடல்களுமே முன்பே கேட்ட ரகம்தான். எஸ்பிபி பாடியுள்ள அந்த டைட்டில் பாடலும், ஒரு டூயட்டும் ஓகே.

    இயக்குநர் ராகவனுக்கு முதல் வாய்ப்பு. கதை திரைக்கதையும் அவரே என்பதால் இன்னும் செம்மைப்படுத்தியிருக்கலாம்.

    ஆனால் ராஜ்கிரண் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படத்தை ஒரு முறை பார்க்கலாம்!

    English summary
    Manjappai is the old fashioned story, but interesting in bits and pieces. Raqjkiran is the soul of the movie and he steals the show.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X