twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அஜீத் 43... ஒரு உழைப்பாளியின் பிறந்த நாள்!

    By Shankar
    |

    சென்னை: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான அஜீத்தின் பிறந்த நாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.

    தல என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் அஜீத் 1971 மே 1-ம் தேதி செகந்திராபாதில் பிறந்தவர். சென்னையில் வளர்ந்தவர்.

    தனது மேல்நிலைக் கல்வியை முடிக்கும் முன்பே தனியார் பள்ளியிலிருந்து நீக்கப்பட்டு, ஒரு மோட்டார் பைக் மெக்கானிக்காகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தார்.

    எம்ஜிஆர் - ரஜினி ரசிகர்

    எம்ஜிஆர் - ரஜினி ரசிகர்

    பள்ளி நாட்களில் தீவிர எம்ஜிஆர், ரஜினி ரசிகராகத்தான் சினிமாவைப் பார்த்தார் அஜீத். இவர்களின் எந்தப் படத்தையும் அவர் பார்க்காமல் விட்டதில்லை.

    முதல் நடிப்பு

    முதல் நடிப்பு

    18 வயதில் மோட்டார் பைக் ரேஸில் கலந்து கொண்டார். இருந்தாலும் ஒரு தொழில் வேண்டுமே என்பதற்காக மோட்டார் பைக் மெக்கானிக்கானார். பின்னர் கார்மென்ட் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்ஸிக்யூடிவ். அப்போதுதான் முதல் முறையாக ஒரு டிவி விளம்பரத்தில் தோன்றினார் அஜீத்.

    தெலுங்கில் அறிமுகம்

    தெலுங்கில் அறிமுகம்

    20 வயதில் அவருக்கு முதல் சினிமா வாய்ப்பு வந்தது, ஒரு தெலுங்குப் படத்தில். ஆனால் அதுவும் கைகூடாமல் போனது. ஒரு ஆண்டு காத்திருந்த பின்னர், மீண்டும் ஒரு தெலுங்கு வாய்ப்பு. அந்தப் படம் பிரேம புஸ்தகம். கொல்லபுடி சீனிவாஸ் இயக்கினார். அஜீத் நடித்த முதலும் கடைசியுமான தெலுங்குப் படம் இதுதான்.

    அமராவதி

    அமராவதி

    பின்னர் தமிழ்ப் படம் அமராவதியில் நாயகனானார். அந்தப் படத்துக்குப் பிறகு தொடர்ந்து சினிமாவில் ஆர்வம் காட்டாமல், பைக் ரேஸுக்குப் போக, விபத்தில் அடிபட்டு படாத அவஸ்தைப்பட்டார்.

    போராட்ட வாழ்க்கை

    போராட்ட வாழ்க்கை

    பின்னர் பாசமலர்கள், பவித்ரா போன்ற படங்களில் சின்னச் சின்ன வேடங்கள் செய்தார். ராஜாவின் பார்வையிலே படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார். சினிமா ஒரு போராட்டமாக அவருக்கு மாறிய அந்த நாளில், அஜீத்துக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாக அமைந்தது ஆசை. வசந்த் இயக்கத்தில் வெளியான அந்தப் படம் அஜீத்தை சற்று நிமிர வைத்தது.

    காதல் நாயகன்

    காதல் நாயகன்

    அஜீத்தை அத்தனைப் பேருக்கும் பிடித்த நாயகனாக மாற்றியது அகத்தியனின் காதல் கோட்டை. ஆனால் இந்தப் படத்துக்குப் பிறகு வரிசையாக 5 தோல்விப் படங்கள் அமைந்தன அஜீத்துக்கு.

    வாலி தந்த வாழ்க்கை

    வாலி தந்த வாழ்க்கை

    ஆள் அவ்ளோதான் என்று எல்லோரும் நக்கலடித்த நேரத்தில் வந்தது காதல் மன்னன். பெரிய ஹிட். ஆனால் திரும்பவும் வரிசையாக தோல்விப் படங்கள். இடையில் அவள் வருவாளா போன்ற சுமார் படங்கள்.

    அஜீத்தை முதல் நிலை வரிசையில் கொண்டு வந்து நிறுத்திய படம் என்றால் அது எஸ்ஜே சூர்யா இயக்கிய வாலிதான். அதன் பிறகு அஜீத்துக்கு அமைந்தவை நல்ல படங்கள். ஆனந்தப் பூங்காற்றே, நீ வருவாய் என, அமர்க்களம்... இப்படி அஜீத்தின் கேரியர் வலுவடைய ஆரம்பித்தது.

    தவறான முடிவு

    தவறான முடிவு

    முகவரி, சிட்டிசன், வில்லன் என வித்தியாசமான வேடங்களில் நடித்துக் கொண்டிருந்த அஜீத், 2003-ல் ஒரு தவறான முடிவெடுத்தார். அதாவது பாதி ரேஸ், மீதி சினிமா... இதை பிரஸ் மீட் வைத்து அறிவித்தபோது, ஆடிப் போனார்கள் அவரை நம்பி முதலீடு செய்தவர்கள். அதற்கடுத்த 4 ஆண்டுகள் அவருக்கு பெரிய சோதனைக் காலம். எந்தப் படமும் ஹிட்டாகவில்லை. ரேஸிலும் தோல்வி.

    ரஜினி தந்த ஆதரவு

    ரஜினி தந்த ஆதரவு

    அப்போதுதான் அஜீத்துக்கு ரஜினியின் அட்வைஸும், ஆறுதலும் கிடைத்தது. முதலில் மனதை அமைதிப்படுத்தச் சொன்ன ரஜினி, பில்லா படத்தை ரீமேக் செய்ய ஆலோசனை கூறினார். ஒரு ஹீரோ, நெகடிவ் ரோலும் செய்தால் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கும் என்ற தனது அனுபவத்தைச் சொன்னார்.

    அந்த அட்வைஸ்படி முதலில் வாசு இயக்கிய பரமசிவம் படத்தில் நடித்தார். ரஜினியே நேரில் வந்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார். அடுத்து ஏவிஎம்முக்காக திருப்பதி செய்தார். பாலாவின் நான் கடவுளில் ஒப்பந்தமாகி விலகினார்.

    பில்லாவிலிருந்து...

    பில்லாவிலிருந்து...

    ஆனால் பில்லா அவருக்கு பெரிய அளவுக்கு கை கொடுத்தது. இந்தப் படம் ஆரம்பித்ததிலிருந்து வெளியானது வரை அனைத்து நிலையிலும் அஜீத்துக்கு பக்க பலமாக இருந்தார் ரஜினி.

    பில்லா பட வெற்றிக்குப் பிறகு, அஜீத்தின் ரேஞ்ச் வேறு உயரத்துக்குப் போனது. அவருக்கான ரசிகர்கள் பலமடங்கு அதிகரித்தனர்.

    மங்காத்தா

    மங்காத்தா

    அஜீத்தின் 50 வது படமாக வந்த மங்காத்தா பெரும் வெற்றி பெற்று, பாக்ஸ் ஆபீஸில் ரஜினி, கமலுக்கு அடுத்து அஜீத்தான் என்ற நிலையை உருவாக்கியது.

    இன்று அஜீத் யாரை தயாரிப்பாளர் என கைகாட்டுகிறாரோ, அவர் பெரும் கோடீஸ்வரராகிறார். அல்லது இருந்த கடன்களை அடைத்துவிட்டு நிம்மதிப் பெருமூச்சு விடுகிறார். சிறந்த உதாரணம், அவரை வைத்து அடுத்தடுத்து இரு படங்கள் செய்த, செய்யும் ஏ எம் ரத்னம்.

    தனி மரியாதை

    தனி மரியாதை

    ரஜினியைப் போல எந்த சினிமா பின்னணியும் இல்லாமல் நடிக்க வந்து, பெரும் போராட்டங்களைச் சந்தித்து வெற்றியை அறுவடை செய்தவர் என்பதாலேயே சினிமாவிலும் சரி, ரசிகர்கள் மத்தியிலும் சரி அஜீத் தனி மரியாதையைப் பெறுகிறார்.

    அவரது உதவும் மனப்பான்மை, மனிதாபிமானம் போன்றவை அவரது பிம்பத்துக்கு கூடுதல் சுவாரஸ்யத்தைச் சேர்த்துள்ளன.

    உழைப்பாளர் தினத்தில்

    உழைப்பாளர் தினத்தில்

    கடுமையான உழைப்பாளி, எத்தகைய தோல்வியையும் தாங்கி நின்று வெற்றி பெறும் இயல்பு கொண்ட அஜீத்தின் பிறந்த தினம் மே 1-ம் தேதி அமைந்திருப்பது, அவருக்கு இயற்கை தந்த ஆசி என்றுதான் கூற வேண்டும்!

    English summary
    Today May 1st, top star Ajith celeberates his 43rd birthday.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X