For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மிரட்டும் கட்சிகள்..முடிவெடுக்கும் நேரம் வந்தாச்சுபாமகவுக்கு கருணாநிதி மறைமுக எச்சரிக்கை!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:சில கட்சிகள் தமிழக அரசை மிரட்டி வருகின்றன. இதற்கு ஒரு நிரந்தர முடிவெடுக்கும் காலம் நெருங்கிவிட்டது என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் டாடா நிறுவனத்தின் டைட்டானியம் தொழிற்சாலை என்றதும், அடேங்கப்பா! எத்தனை கட்சிகளின் கருத்து கணிப்பு, எவ்வளவு கொடிய விமர்சனங்கள், எத்தனை மாற்று யோசனைகள். பொதுமக்கள் கண்ணீரில் மாளிகை அமைக்காதீர்! என்று எதுகை-மோனையாக வசனங்கள் வேறு.

எங்கள் ஊர் திருக்குவளைக்கு மிக அருகில் உள்ள எட்டுக்குடி முருகன் ஆலயத்துக்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான காவடிகள் வருகிற மகத்தான திருவிழா நடைபெறுவது கண்டு சிறுவனாக இருந்தபோது ரசித்திருக்கிறேன். எட்டுக்குடியைச் சுற்றியுள்ள எல்லா கிராமங்கள், நகரங்களிலிருந்து வேண்டுதல் செய்து கொண்ட பக்தர்கள் காவடிகள் எடுத்து வரும் காட்சி, கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.

சிறப்புக் காவடிகள் என்ற பெயரால் திருக்குவளையிலிருந்து சில கல் தொலைவில் உள்ள திருப்பூண்டி பகுதியிலிருந்து வருடந்தோறும் ஒரு காவடிக் குழு வரும். அந்தக் குழுவுக்கு முன் பகுதியில் சில பேர் கோலாட்டம் அடித்துப் பாடிக்கொண்டு வருவர். காவடி வருவதோ கோயிலுக்கு, அங்குள்ள முருகன் சன்னதிக்கு. ஆனால் கோலாட்டம் அடித்துக் கொண்டு வருபவர்கள் பாடுகிற பாட்டோ பெரியாரை பற்றியதாக இருக்கும்.

ஈரேழுலகம் புகழுகின்ற எட்டுக்குடி முருகா என்ற பக்தி வரிகளை பாடியவாறு கோலாட்டம் அடித்து ஆடுவார்கள். காரப்பிடாகை பக்கிரிசாமி என்பவர் தலைமையில் வரும் அந்தக் காவடிக் கோஷ்டியினர், கடவுள் பற்றியும் பாடிக் கொண்டு, ஈரோடு தந்த வள்ளல் ஈ.வெ.ரா. வாழ்க! வாழ்க! என்று பின்னர் கோலாட்டம் அடித்து முழக்கும் போது அந்தக் கிராமத்து இளைஞர்களாகிய எங்களை அந்த ஆட்டமும் பாட்டமும் கிறுகிறுக்க வைத்துவிடும்.

இப்படி பல ஊர்களில் இருந்து காவடிகள் வந்து திருக்குவளை குளத்தில் நீராடிவிட்டு இறுதியாக எட்டுக்குடி செல்லும். காலை முதல் பல ஊர்க்காவடிகள் வந்து போனாலும், இன்னும் நாகையிலிருந்து வேணு காவடி வரவில்லையே என்று நாங்கள் வழிமேல் விழி வைத்து காத்திருப்போம்.

கடைசியாக மாலை 6 மணிவாக்கில் அந்த வேணு காவடி வரும். அப்போதிருந்த நாகை ரயில்வே தொழிலாளர்கள் சார்பில் வேணு நாயக்கர் எடுத்து வரும் காவடி தான், வேணுக்காவடி என்பதாகும்.

இப்படிக் காவடி கோஷ்டிகள் வரிசையாக வருவதைப் பார்த்துப் பார்த்து ரசித்த அதே உணர்வுடன், இன்றைக்கும் சாத்தான்குளத்து மக்கள் திமுக உள்ளிட்ட எல்லா கட்சிகளும் அவர்களைச் சந்திக்க சாத்தான்குளத்துக்கு வந்து வந்து போவதை பார்த்து, ஓ! இது இன்னைக்கு புதுக்காவடியா? இது என்ன சொல்லப் போவுது என்ற கதையாக, வரும் காவடிகளைக் கண் கொட்டாமல் பார்த்து, காதுகளை வளைத்துக் கொண்டு கவனிக்கிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் என்னவென்றால், இந்த டைட்டானியம் தொழிற்சாலையை, இதே பகுதியில் அமைத்திட கடந்த ஜெயலலிதா ஆட்சியில் டாடாவுடன் ஓர் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டதே. அப்போது எந்த கட்சியும் இங்கே வந்து முகாம் அமைத்து முழக்கம் செய்யவில்லையே. இப்போது ஏன் இந்த முழக்கம் என்று புரியாமல் சில கட்சிகள் மட்டுமல்ல, சாத்தான்குளம் பகுதி மக்களும் விழிக்கிறார்கள்.

இதில் இன்னொரு வேடிக்கை என்ன தெரியுமா, டாடா நிறுவனத்தோடு முதலில் ஒப்பந்தம் செய்து கொண்டு, அந்த தொழிற்சாலை வருவதற்கான ஏற்பாடுகளையெல்லாம் செய்தவர்களே, இப்போது அதே தொழிற்சாலை மீண்டும் அதே இடத்தில் அமைவதற்கு கருத்து கேட்போம் என்று முகாமிட்டுள்ளார்கள்.

டாடா தொழிற்சாலைக்கு எதிராக, வன்முறையைத் தூண்டக்கூடிய பேச்சுக்கள், வரட்டும் பார்க்கலாம் என்று தோளை தட்டும் போர் முழக்கங்கள். திமுக தலைமையிலான அரசு ஒரு திட்டத்தை அறிவித்து அதனை செயல்படுத்த முனைந்தாலே இப்படி சில கட்சிகள் (தோழமைக் கட்சிகள் உட்பட) கூவல் விடுத்து அரசை மிரட்டத் தொடங்கியுள்ளன.

16 வருடங்களுக்கு முன்பு சென்னையை அடுத்துள்ள சோழிங்கநல்லூரில் வீட்டு வசதி வாரியம் எடுத்துள்ள நிலத்தை, இப்போது திருப்பிக் கொடுக்கச் சொல்லி ஒரு போராட்டத்தை அறிவித்துள்ளார்கள். அதாவது பல ஆண்டுகளுக்கு முன்பே அந்த இடத்தை வீட்டு வசதி வாரியத்திடம் ஒப்படைத்து, அதற்கான இழப்பீட்டுத் தொகையைப் பெற்ற பிறகு, அவர்களுக்கே நிலத்தை திரும்பக் கொடுக்க வேண்டும் என்பது அவர்கள் (பாமக) போராட்டத்தின் கோரிக்கை.

இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஒரு தலைவர், சாவியைப் பிடுங்குங்கள், பூட்டை உடையுங்கள் என்று பகிரங்கமாகச் சொல்லி அது பத்திரிக்கையிலும் வருகிறது என்றால் என்ன செய்வது. தமிழகத்தின் அமைதி கருதி தலைகுனிந்து கொண்டு தான் இருக்க வேண்டியுள்ளது. சில அரசியல் கட்சிகள் தம்மை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக எதையும் பேசலாம்.

எத்தகைய போராட்டத்தையும் நடத்தலாம் என்ற நிலைமை வளர்ந்துவிட்ட சூழலில், வன்முறையற்ற, அமைதி, நட்புறவு, தோழமை ஆகிய உணர்வுகளுக்கு நாம் மதிப்பு கொடுப்பதால், நாட்டை காக்கும் நாகரீகம் இல்லாத முறைகளுக்கும் கை கொடுப்பவர்கள் என்ற குற்றத்திற்கு நாமும் ஆளாகி விடுவது போல் உள்ளது.

அதனால் அரசை மிரட்டும் சில கட்சிகள் குறித்து யோசித்து முடிவெடுக்கும் காலம் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதில் ஐயமில்லை என்று கருணாநிதி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X