மதிமுக கூட்டத்தில் திமுக பயங்கர வன்முறை- தரக்குறைவாக பேசிய நாஞ்சில் சம்பத் கைது

வியாழக்கிழமை, அக்டோபர் 25, 2007, 11:19 [IST]
வத்தலக்குண்டு: வந்தலகுண்டில் நடந்த மதிமுக பொதுக் கூட்டத்தில் பயங்கர வன்முறை ஏற்பட்டது. முதல்வர் கருணாநிதி குறித்து நாஞ்சில் சம்பத் கீழ்த்தரமாக பேசியதால் ஆத்திரமடைந்த திமுகவினர்  பெட்ரோல் குண்டுகளால் தாக்குதல் நடத்தினர். மேடையில் இருந்த மதிமுக பிரமுகருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது.

இந் நிலையில் கருணாநிதி குறித்து மிக மோசமாக விமர்சித்துப் பேசியதாக மதிமுக மாநில கொள்கை விளக்கச் செயலாளர் நாஞ்சில் சம்பத் நள்ளிரவில் கைது செய்யப்பட்டார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டில் நாஞ்சில் சம்பத் பங்கேற்ற மதிமுக பொதுக் கூட்டம் நேற்று இரவு நடைபெற்றது. பல்வேறு குட்டித் தலைவர்கள் பேசி முடித்த நிலையில் இரவு 10 மணிக்கு மைக்கைப் பிடித்தார் நாஞ்சில் சம்பத்.

திமுக அரசை தனது வழக்கமான தீப்பொறிப் பேச்சால் தாக்கிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் முதல்வர் கருணாநிதி குறித்து மிக மட்டமாக பேச ஆரம்பித்தார்.

இந் நிலையில் சுமார் 40 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கற்களை வீசியபடி கூட்டத்துக்குள் புகுந்தது.

அவர்களை தடுக்க மதிமுகவினரும் அதிமுகவினரும் முயன்ற நிலையில் திடீரென பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. கூட்டத்துக்குள் பெட்ரோல் நிரப்பட்ட பாட்டில்கள் எரிந்தபடியே வந்து விழுந்து வெடிக்கவே மதிமுகவினரும் அதிமுகவினரும் கலைந்து ஓடினர்.

அடுத்தபடியாக அங்கு கட்டப்பட்டிருந்த டியூப் லைட்டுகளை உடைத்து எரிந்த அந்த கும்பல், நாற்காலிகளையும் தூக்கி வீசியது.

கூட்டம் அலறியடித்துக் கொண்டு கலைந்து ஓடிய நிலையில் மேடையில் ஏறிய அடாவடிக் கும்பல் மாவட்ட அவைத் தலைவர் அருள் சாமியை தலையில் அரிவாளால் வெட்டியது.

இதில் ரத்தம் கொட்டிய நிலையில் அவர் சரிந்தார். இதையடுத்து மேடையில் இருந்தவர்கள் மீதும் கற்கள் வீசப்பட்டு, அனைவருக்கும் சரமாரியாக அடி, உதை விழுந்தது. இதில்  நாஞ்சில் சம்பத், மாவட்டச் செயலாளர் செல்வராகவன் ஆகியோரும் லேசான காயமடைந்தனர்.

இந் நிலையில் பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதியையும், அமைச்சர்களையும் தரக்குறைவாகப் பேசிய நாஞ்சில் சம்பத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வத்தலகுண்டு திமுகவினர் போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்த புகாரின் அடிப்படையில் நாஞ்சில் சம்பத் கைது செய்யப்பட்டார். திண்டுக்கல் லாட்ஜில் தங்கி இருந்த அவரை போலீசார் இன்று அதிகாலை 3 மணிக்கு கைது செய்து நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் வீட்டில் இரவோடு இரவாக ஆஜர்படுத்தினர்.

அவரை 15 நாட்கள் காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதையடுத்து அவர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

நாஞ்சில் சம்பத் மீது இந்திய தண்டனை சட்டம் 147(சட்டவிரோதமாக கூட்டம் கூடுதல்), 148 (தாக்குதல் நடத்த சதி), 324 (காயம் ஏற்படுத்துதல்), 294 (ஆபாச வார்த்தையால் திட்டுதல்), 506 (கொலை மிரட்டல்) உள்ளிட்ட பல பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
Topics: nanjil
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST