இது சென்னையா லண்டனா?: தமிழையே காணவில்லை..ராமதாஸ்

திங்கள்கிழமை, பிப்ரவரி 11, 2008, 11:01 [IST]
மேட்டூர்: சென்னைக்குச் சென்றால் ஏதோ லண்டனில் நடந்து செல்வது போல இருக்கிறது. கடை வீதிகளில் சில கடைகளில் மட்டுமே தமிழில் பெயர் பலகை வைத்துள்ளனர். தமிழ் எங்கேயும் இல்லை என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேட்டூர் அருகே நடந்த பாமக பிரமுகரின் திருமண விழாவில் ராமதாஸ் பேசியதாவது,

ஒரு மனிதனுக்கு உயிர் தாய். அதனால் தான் தாம் பேசும் மொழியை தாய்மொழி என்கிறோம். எனவே தாயை மதிக்க கற்றுக் கொள்ள வேண்டும்.

குடி வீட்டுக்கும், நாட்டுக்கும், உடலுக்கும் கேடு என எழுதி வைத்துவிட்டு, நன்றாக குடியுங்கள் என அரசு ஊக்கப்படுத்துகிறது. இப்படி வரும் காசை வைத்து ஏதாவது இலவசமாக கொடுக்க முடியும் என்று கூறுகிறது.

கூலி வேலைக்குச் சென்று சம்பாதிப்பவனின் பையில் உள்ள 100 ரூபாயை (குடிக்க வைத்து) எடுத்துக்கொண்டு, அவனுக்கு நலத்திட்டம் என்ற பெயரால் 10 ரூபாயை அரசு கொடுக்கிறது. இது அநியாயம். அரசு செய்யும் அநியாயத்தை யாரும் தட்டி கேட்கவில்லை. ஆனால் நாங்கள் தட்டிக் கேட்கிறோம்.

பொங்கல் பண்டிகை தினத்தன்று ரூ.70 கோடிக்கு தமிழகத்தில் மது விற்பனை ஆகியுள்ளது. அந்தளவிற்கு குடித்திருக்கிறார்கள். குடியை நிறுத்தினால் அந்தப் பணத்தில் ஆட்டுக்கறி எடுத்து குடும்பத்துடன் சாப்பிடலாம்.

கல்விக்காக பாமக கடந்த 7 ஆண்டுகளாக நடத்தாத போராட்டங்களே கிடையாது. தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. அரசு தன்னிடம் இருந்த கல்வியை கொள்ளைக்காரர்களிடம் கொடுத்துவிட்டு, தனியார் நடத்தி வந்த மதுக்கடைகளை எடுத்துக் கொண்டிருக்கிறது. கேட்டால் ஏராளமான வருமானம் வரும் என்கிறார்கள்.

கல்வியறிவு வளருவதற்காக காமராஜர் படிக்கச் சொன்னார். அதற்காக கிராமங்கள் முழுவதும் பள்ளிக் கூடங்களை திறந்தார். இப்போதுள்ள அரசு மதுக்கடைகளை திறந்து அனைவரையும் குடிக்கச் சொல்கிறது. இதனால் ஏழைகள் மேலும் ஏழைகளாகி வருகிறார்கள்.

நாட்டில் 70 சதவீத மக்களுக்கு உண்ண உணவில்லை, தங்குவதற்கு இடமில்லை. பெண் குழந்தைகள் பிறந்தால் மகிழ்ச்சி அடைய வேண்டும். அரசு தொட்டில்களில் போட வேண்டாம். எருக்கம்பால் ஊற்றிக் கொல்ல வேண்டாம் என்றார் ராமதாஸ்.

தமிழை அழிக்கிறார்கள்:

முன்னதாக தமிழ் அமைப்புகள் சார்பில் சேலத்தில் நடந்த பாராட்டு விழாவில் ராமதாஸ் பேசுகையில்,

சிலர் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என பேசி வருகின்றனர். எங்கே தமிழ் இருக்கிறது என நானும் கடந்த 6 மாதமாக கேட்டு வருகிறேன். ஆனால் யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

தமிழ், இசையில் இருக்கிறதா, கோவிலில் இருக்கிறதா அல்லது திரைப்படங்களில் பேச்சில், நடை, உடையில் இருக்கிறதா. எங்கே இருக்கிறது?

சென்னைக்குச் சென்றால் ஏதோ லண்டனில் நடந்து செல்வது போல இருக்கிறது. கடை வீதிகளில் சில கடைகளில் மட்டுமே தமிழில் பெயர் பலகை வைத்துள்ளனர். தமிழ் எங்கேயும் இல்லை.

ஒரு மொழி கொள்கை, இரு மொழி கொள்கை என மோசடி கொள்கை தேவையில்லை.

திட்டமிட்டு தமிழ் மொழியை அழித்து வருகின்றனர். இதில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு (செய்தி தாள்கள் மற்றும் தொலைக்காட்சி) முக்கியமான பங்குண்டு. அந்த எதிரிகள் நம் கண் முன்னே இருந்தும், நம்மால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

கடந்த 16 ஆண்டுகளாக வேளாண்மை பட்டதாரிகள் பலர் வேலை கிடைக்காமல் இருக்கிறார்கள். அவர்கள் வறுமையில் வாடுகிறார்கள். ஒரு காலத்தில் டாக்டர் படிப்புக்கு பிறகு வேளாண் படிப்புக்குத் தான் அதிக மதிப்பு இருந்தது. ஆனால் இன்று அத்தகயை நிலை இல்லை.

14,000 வேளாண்மை பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகிறார்கள். தொழில் துறைக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை வேளாண் துறைக்கு அரசு தராததால் தான் இந்த நிலை.

இங்கே நாம் தொழிலாளர்களை வைத்துக் கொண்டு மலேசியாவில் இருந்து பாமாயில் இறக்குமதி செய்கிறோம். 1,000 ஏக்கரில் சிறப்பு பொருளாதார மண்டலம் வருகிறது என்கிறார்கள். படித்து வேலையில்லாத இவர்களுக்கு 100 ஏக்கர் கொடுக்கலாமே.

ரயில்வேயில் தனியாக பட்ஜெட் போடுகிறார்கள். ரயில்வே போர்டு எல்லா முடிவுகளையும் எடுக்கிறது. அது போல வேளாண்மை துறைக்கும் மத்திய, மாநில அரசுகள் தனியாக பட்ஜெட் போட வேண்டும்.

10 வருடமாக நான் இதே கருத்தை சொல்லி வருகிறேன். வேளாண்மை துறையை வளர்க்க வேண்டுமானால் அதுபற்றி தெரிந்த 5 பேர் குழுவை முதலில் நியமிக்க வேண்டும். நான் இந்த துறை அமைச்சர் பற்றி எதுவும் சொல்லவில்லை. விபரம் தெரிந்த அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றுதான் சொல்கிறேன்.

மேற்குவங்க மாநிலத்தில் 30 வருடமாக கம்யூனிஸ்ட் ஆட்சி நடக்கிறது. அதில் பார்வர்டு பிளாக் கட்சியும் அங்கம் வகிக்கிறது. சிறப்பு பொருளாதார மண்டலத்தை எதிர்த்து அவர்கள் போராட்டம் நடத்தினார்கள். அதை யாரும் தவறு என்று சொல்லவில்லை.

ஆனால் நான் இங்கு எதுவும் சொன்னால், இந்த ஆட்சியின் தவறுகளை சுட்டிக் காட்டினால் வேறு மாதிரி பேசுகிறார்கள். அதுபற்றி எனக்கு கவலையில்லை. நான் எதையும் வெளிப்படையாக பேசக் கூடியவன்.

தவறுகளை நான் சுட்டிக்காட்டினால் கோபம் தான் வருகிறது. இந்த அரசை பற்றி குறை சொல்லாமல் என்ன செய்வது என்றார் ராமதாஸ்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST