என் சோறு தமிழகத்தில்தான்-அர்ஜூன்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4, 2008, 11:23 [IST]
சென்னை: நான் தமிழகத்தில் நடிக்க ஆரம்பித்து 25 வருடங்கள் ஆகிறது. இங்குதான் எனது வீடும், சோறும் உள்ளது. அந்த உணர்வில் சொல்கிறேன், வன்முறை என்பது யார் எங்கே செய்தாலும் அது தவறுதான் என நடிகர் அர்ஜூன் கூறினார்.

கர்நாடகத்தில் நடக்கும் தாக்குதல்களை கண்டித்து சென்னையில் நடந்த திரைப்படத்துறை உண்ணாவிரதத்தில் பேசிய அர்ஜூன்,

நான் தமிழகத்தில் நடிக்க ஆரம்பித்து 25 வருடங்கள் ஆகிறது. இங்குதான் எனது வீடும், சோறும் உள்ளது. அந்த உணர்வில் சொல்கிறேன், வன்முறை என்பது யார் எங்கே செய்தாலும் அது தவறுதான்.

அப்பாவிகளும், பொதுமக்களும் பாதிக்கப்படுவது கண்டிக்க வேண்டிய செயல். சில வருடங்களாவே இந்தியாவில் மாநிலங்களுக்கு இடையே ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள், பிரச்சினைகள் வந்து கொண்டிருக்கின்றன.

மராட்டிய மாநிலத்தில் வட இந்தியர்கள் தாக்கப்பட்டனர். அதேபோல இங்கும் காவிரிப் பிரச்சினை. அது நிரந்தரமாக தீர்க்கப்படாத காரணத்தால், இந்தப் புதிய பிரச்சினை பூதாகரமாக கிளம்பியுள்ளது.

ஆனால் இதற்கு வன்முறை தீர்வு கிடையாது. பஸ்சை உடைத்தால், இங்கு பஸ்சை உடைப்பார்கள். வன்முறைக்கு முடிவே கிடையாது. அதற்கு உண்மையான தீர்வு, சேரன் சொன்னது போல, மக்கள் கையில் இல்லை. அரசியல் தலைவர்கள்தான் நல்ல முடிவை காண வேண்டும்.

மத்திய அரசு தலையிட்டு இதற்கு ஒரு நல்ல தீர்வைக் கண்டால் பல அப்பாவி மக்களைக் காப்பாற்றலாம். ஒருமைப்பாடு என்று சொல்கிறோமே அதைக் காப்பாற்றலாம். மாநிலங்களுக்கு இடையே சகோதர மனப்பான்மையை வளர்க்கலாம்.

இங்கு ஆயிரக்கணக்கான கன்னடர்கள் பல வருடங்களாக நிம்மதியாக, சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அங்கும் தமிழற்கள் உள்ளனர். இந்த சந்தோஷம், நிம்மதி நீடிக்க மத்திய அரசு தயவு செய்து தலையிட வேண்டும் என்றார்.

எனது தாய் மொழி தமிழ்-முரளி

இன்று உண்ணாவிரதத்திற்கு முதல் நபராக வந்தவர்களில் நடிகர் முரளியும் ஒருவர். அவர் பேசுகையில் பிரச்சினை என்று வந்தால், தமிழர்களை கன்னடர்கள், அவர்களை கன்னட வெறியர்கள் என்றுதான் நான் சொல்வேன், தாக்குகிறார்கள்

உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் பிறந்தது சென்னை. எனது தாய் மொழி தமிழ். தமிழன் என்று சொல்லிக் கொள்வதில் மிகவும் பெருமைப்படுகிறேன். கவுரவம் அடைகிறேன்.

நான் பத்தாம் வகுப்பு வரை படித்துள்ளேன். 5ம் வகுப்பு வரை சென்னையில்தான் படித்தேன். 10ம் வகுப்பு வரை கர்நாடகத்தில் படித்தேன்.

அங்கு நான் படித்தபோது எல்லோரும் சேர்ந்தே இருப்பார்கள். சந்தோஷமாகத்தான் இருப்பார்கள். ஆனால் தேர்தல் வரும்போது சில அரசியல்வாதிகள் இந்த ஒற்றுமையை சீர்குலைப்பது போல நடப்பது வழக்கமாகி விட்டது. அதிலும் ஏப்ரல் மாதம் வந்து விட்டால் காவிரிப் பிரச்சினையை கொண்டு வந்து விடுவார்கள்.

கர்நாடக சகோதரர்களைக் கேட்டுக் கொள்கிறேன். தமிழர்களாகிய நாங்கள் உங்களுக்கு என்ன தவறு செய்தோம். நீங்கள் வாழ்கிற வீட்டைக் கட்டித் தருவது சேலத்தைச் சேர்ந்த, கிருஷ்ணகிரியைச் சேர்ந்த தமிழர்கள். அங்கிருந்து வரும் கொத்தனார்கள்.

நீங்கள் விவசாயம் செய்யவும், உழுவதற்கும், பராமரிப்பதற்கும் தமிழர்கள் அனைத்து வசதிகளையும் செய்து தருகிறார்கள்.

சாலைகள் போடுவது, தார் போடுவது என அனைத்து உழைப்புகளையும் உங்களுக்காக தமிழர்கள் செய்து தருகிறார்கள். இப்படி தமிழர்களின் உழைப்புகளையெல்லாம் வாங்கிக் கொண்டு தண்ணீருக்காக அவர்களை ஒதுக்கி வைப்பது எந்த வகையில் நியாயம்.

நீங்கள் செய்யும் வன்முறைகளையும், கொடுமைகளையும் மறக்கவும், மன்னிக்கவும் தமிழர்களாகிய எங்களுக்கு பக்குவம் உள்ளது. திருந்தி விடுங்கள். திருந்திக் கொள்ளுங்கள்.

ஒரு தாய் பிள்ளைகளாக வாழ வேண்டும். காவிரி என்றால் எங்களுக்கு சொந்தம் என்கிறீர்கள். ஓகேனக்கல் என்றால் அதுவும் எங்களுக்கு சொந்தம் என்கிறீர்கள். என்ன நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றார் ஆவேசமாக.

நான் உங்களுடன் இருக்கிறேன்-பிரகாஷ் ராஜ் :

எந்த பிரச்சினையாக இருந்தாலும் ஏன் சினிமாக்காரர்களை தாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. அது தவறு. வன்முறையில் கன்னடக்காரர்கள் ஈடுபட்டாலும், தமிழர்கள் ஈடுபட்டாலும், தெலுங்கர்கள் ஈடுபட்டாலும் அது தவறு. இந்தப் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வர வேண்டும். உங்களுடன் நான் இருக்கிறேன் என்றார்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST