கும்ப்ளேவும் வேண்டும், வைரமுத்துவும் வேண்டும்-கமல்

வெள்ளிக்கிழமை, ஏப்ரல் 4, 2008, 16:26 [IST]
சென்னை: எனக்கு ரஜினியும் வேண்டும். கும்ப்ளேவும் வேண்டும். வைரமுத்துவும் வேண்டும், குல்ஸாரும் வேண்டும். எனவே இருதரப்பு சகோதரர்களும் மோதிக் கொள்ளும் சூழ்நிலை, தமிழகத்திலும், கர்நாடகத்திலும் உருவாகி விடக் கூடாது என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை உண்ணாவிரதத்தில் கமல்ஹாசன் பேசுகையில், இங்கு கூடியிருக்கும் கலையுலக சகோதரர்களுக்கும், பெங்களூரில் எதிர் கூட்டம் நடத்திக் கொண்டிருக்கும் சகோதரர்களுக்கும் வணக்கம்.

காவிரி தோன்றுவதற்கு முன்பு தோன்றிய மனிதர்களைப் போல நாம் பேசிக் கொண்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. கிட்டத்தட்ட குரங்குகள் உருவில் நாம் எல்லாம் நதிக் கரையில் தண்ணீர் குடித்துக் கொண்டிருப்பதைப் போன்ற பிரமை எனக்கு.

கடந்து வந்த தண்ணீரை அவர்கள் கேட்கிறார்கள். அதைத் திருப்பி எடுத்துக் கொண்டு போக முடியாது. அவர்களுடைய வாதத்தில் பெரிய அர்த்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.

அதேசமயம் நாம் கோபத்தை அதிகம் பயன்படுத்தக் கூடாது என்பது எனது வேண்டுகோள். இது 11 பேர் சேர்ந்து விளையாடும் கிரிக்கெட் ஆட்டம் இல்லை. 100 கோடி மக்கள் சேர்ந்து விளையாடும் சமுதாய விளையாட்டு.

இதில் எனக்கு ரஜினியும் வேண்டும். கும்ப்ளேவும் வேண்டும். நீங்களும் வேண்டும், சத்யராஜும் வேண்டும். வைரமுத்துவும் வேண்டும், குல்ஸாரும் வேண்டும்.

குனிந்து கொண்டே இருந்தால் குதிரை ஏறத்தான் செய்வார்கள் என்று நாம் பயப்படத் தேவையில்லை. நாம் எழுந்திரித்தால் அவர்கள் விழுந்து விடுவார்கள். எனவே பயப்பட வேண்டாம.

இங்கு செய்தி சேகரிக்க வந்திருக்கும் உளவுத்துறையினர் சொல்லும் இடத்துக்கு சேதிகளை சரியாக கொண்டு செல்ல வேண்டும். திரித்துக் கூறக் கூடாது என்று வைரமுத்து சொன்னார். அதை நானும் முன்மொழிகிறேன்.

குறிப்பாக கர்நாடகத்திற்குக் கொண்டு செல்லும் சேதிகளை கவனத்துடன் கொண்டு செல்லுங்கள், திரித்துக் கூறாதீர்கள் என்று நானும் கேட்டுக் கொள்கிறேன்.

எனக்கு பல விஷயங்களில் நம்பிக்கை இல்லை. அதுபோலவே கத்தி எடு, வாள் எடு என்பதிலும் நம்பிக்கை இல்லை. தாய்மை உணர்வு நமக்கு வேண்டும். பெண்ணுறுப்பு இருந்தால்தான் தாய்மை உணர்வு வரும் என்றில்லை.

தேவன் மகன் படத்தில் ஒரு வசனம் வரும், ஆத்தி, நான் கொடுத்த பாலெல்லாம் ரத்தமா ஓடுதே என்பார் ஒரு தாய். அதுபோன்ற சூழ்நிலை இரு தரப்பிலும் வரக் கூடாது என்று கேட்டுக் கொண்டு விடைபெறுகிறேன் என்றார் கமல்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST