For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ரோட்டில் குப்பை கொட்ட தடை: முதல் நாளிலேயே 45 பேருக்கு அபராதம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இன்று முதல் சாலையோரம், தெருவோரம் குப்பைகள், கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவற்றை கொட்டக் கூடாது. மீறிக் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை நகரை அழகுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகரில் சாலைகள், தெருக்களில் குப்பைகள், கட்டட இடிபாடுகள் உள்ளிட்டவற்றைக் கொட்ட நாளை முதல் தடை உத்தரவு அமலுக்கு வருகிறது. குப்பைத் தொட்டிகளைத் தவிர வேறு இடங்களில் குப்பை கொட்டினால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் கட்டட இடிபாடுகளை கொட்டினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

அபராதம் விதிக்கும் அதிகாரம் அந்தந்த மாநகராட்சி வார்டின் சுகாதார ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர், இளநிலை பொறியாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி 155 வார்டுகளிலும் 465 அதிகாரிகள் கண்காணிப்பில் ஈடுபடுவர். அபராதம் வசூலிக்க தனியாக ரசீது புத்தகமும் இவர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டிட இடிபாடுகள், குப்பைகளை தெருவில் கொட்டிய கடைகள் மற்றும் வீடுகளை பார்த்து அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும். உடனுக்குடன் அதற்கான ரசீதும் வழங்கப்படும்.

முதல் நாளிலேயே 45 பேருக்கு அபராதம்:

இந்த திட்டம் அமலுக்கு வந்த முதல் நாளான இன்றே தெருவில் கட்டிட இடிபாடு களை கொட்டிய குற்றத்திற்காக 45 பேருக்கு தலா ரூ.500 வீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அவர்களிடமிருந்து அபராத தொகை ரூ.22,500 வசூலிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயத்தில் தயவு தாட்சணியமே காட்டப்படாது என மாநகராட்சி அறிவித்துள்ளது.

அதே போல குப்பைகளை ரோட்டில் கொட்டிய வீட்டினர் இன்று எச்சரிக்கப்பட்டனர். இதையடுத்து குப்பைகளை அவர்கள் தொட்டிகளில் போட்டனர்.

குப்பைகளை தெருவில் போடாமல் மாநகராட்சி குப்பை சேகரிப்பு வண்டி கள் அல்லது குப்பைத் தொட்டிகளில் போடுமாறு பொது மக்களை மாநகராட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

பொது இடங்களில் குப்பை கொட்டுபவர்கள் இன்னும் 15 நாட்களுக்கு எச்சரித்து விடப்படுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு ரூ.100 வீதம் அபராதம் விதிக்கப்படும் என்று கமிஷனர் ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

கட்டிட இடிபாடுகளை பொதுமக்கள் அப்புறப்படுத்த வசதியாக குறைந்த கட்டணத்தில் லாரிகளை ஏற்பாடு செய்து கொடுக்கவும் மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் குறித்து மேயர் மா.சுப்பிரமணியன் கூறுகையில்,

நகரை சிங்கார சென்னையாக மாற்றுவதற்காகவும் சுகாதார சீர்கேடுகளை தடுக்கவும், நோய்கள் பரவாமல் தடுக்கவும் தானே தவிர மக்களை துன்புறுத்தவோ, மாநகராட்சி வருவாயை பெருக்கவோ இந்த அபராத திட்டத்தை நாங்கள் கொண்டு வரவில்லை என்பதை முதலில் தெளிவாக சொல்லி விடுகிறேன்.

நகரில் தேவையான அளவு குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. தெருக்கள் தோறும் மாநகராட்சி குப்பை வண்டிகள் வருகி்ன்றன. எனவே குப்பைகளை தெருக்களில் வீசி எறிவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X