For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மக்களை வதைக்கும் ஆட்டோ டிரைவர்கள்-போலீஸ் எச்சரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

Auto
சென்னை: சென்னையிலும், புறநகர்ப் பகுதிகளிலும் பயணிகளிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிப்போர், மீட்டர்களைப் போடாமல் ஆட்டோக்களை இயக்குவோர், கூப்பிடும் இடத்திற்கு வர மறுப்போர் உள்ளிட்ட ஆட்டோ டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

சென்னை நகர மக்கள் புறநகர்ப் பகுதிகளையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ஒன்றரை கோடியை நெருங்கி விட்டது. சென்னை நகருக்கு இணையான மக்கள் தொகை புறநகர்ப் பகுதிகளிலும் உள்ளது.

சென்னை நகரைச் சுற்றிலும் ஏராளமான புறநகர்ப் பகுதிகள் நிறைந்துள்ளன. இங்கு போக்குவரத்து வசதிக்கு பெரும்பாலானோர் ஆட்டோக்களையே நம்பியிருக்க வேண்டிய நிலை உள்ளது. குறிப்பாக முக்கியச் சாலைகளிலிருந்து உள்புறப் பகுதிகளில் வசிப்போருக்கு ஆட்டோக்கள் இல்லாவிட்டால் மிகவும் சிரமம் என்ற நிலை உள்ளது.

இதைப் பயன்படுத்திக் கொண்டு புறநகர்களில் ஆட்டோ டிரைவர்கள் தங்களது இஷ்டத்திற்குப் பணம் கறக்கின்றனர். பல பகுதிகளில் குறைந்தபட்சக் கட்டணமே 25 முதல் 30 வரை உள்ளது. இப்பகுதிகளில் ஓடும் ஆட்டோக்களில் மீட்டர்கள் சுத்தமாக இயக்கப்படுவதில்லை. கேட்ட கட்டணத்தைக் கொடுக்காவிட்டால் ஆட்டோக்கள் வராது. கேட்டால் குண்டக்க மண்டக்க பேசுவார்கள். இப்படி பல அராஜகங்களுடன் புறநகர்ப் பகுதிகளில் ஆட்டோக்கள் ஓடி வருகின்றன.

தமிழகம் முழுவதும் மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற மினி பஸ்கள், ஏனோ சென்னை புறநகர்களை மட்டும் இன்னும் எட்டிப் பார்க்கவே இல்லை. கேட்டால் வழக்கு இருக்கிறது என்கிறது போக்குவரத்துத் துறை.

புறநகர் ரயில்களும் முக்கியப் பகுதிகளை மட்டுமே தொட்டுச் செல்வதால் ஓரளவுக்கே அவை கை கொடுக்கின்றன. உட்புறப் பகுதிகளில் வசிப்போர் ஆட்டோக்களை விட்டால் வேறு நாதியில்லை என்ற நிலையில்தான் உள்ளனர்.

புநகர்ப் பகுதிகள் என்றில்லாமல் நகருக்குள்ளும் கூட பல ஆட்டோ டிரைவர்கள் அடாவடியாகத்தான் கட்டணம் வசூலிக்கின்றனர்.

மீட்டர்களை சுத்தமாக இயக்குவதில்லை. கேட்டால் மீட்டர் போட்டால், பேரம் பேசுவதை விட கூட வரும், பரவாயில்லை என்று தெனாவெட்டாக கேட்போரம் இருக்கிறார்கள். அதாவது சூடு வைக்கப்பட்ட மீட்டர் என்பதை இப்படிப் பச்சையாகவே கூறுகிறார்கள்.

ஆட்டோக்களால் தாங்கள் படும் அவதிகள் குறித்து அரசுக்கும், போக்குவரத்து காவல்துறைக்கும் தினசரி நூற்றுக்கணக்கான புகார்கள் போய்க் கொண்டுதான் உள்ளன. ஆனால் இதுவரை ஆட்டோக்களின் அராஜகத்திற்கு முடிவே இல்லை. காரணம், பெரும்பாலான ஆட்டோக்கள் முக்கியப் புள்ளிகள், காவல்துறையினருக்குச் சொந்தமானவை என்று கூறப்படுகிறது.

சாதாரண ஆட்டோக்களில் இப்படிக் கொடுமை என்றால், ஷேர் ஆட்டோக்களின் நிலைமை வேறு. புளி மூட்டை போல ஆட்களை அடுக்கிக் கொண்டு செல்லும் இந்த ஆட்டோக்களால் உள்ளே பயணிப்போரின் உயிருக்கு உத்தரவாதம் கிடையாது. மேலும், செல்போன் திருடு போவது உள்ளிட்டவை சர்வ சாதாரணமாக நடக்கிறது.

இருந்தாலும் 50 ரூபாய் கேட்கும் ஆட்டோக்காரருக்கு அழுவதை விட, இந்த மாதிரியான புளி மூட்டை ஆட்டோக்களில் 10 ரூபாய் கொடுத்து போய் விடலாம் என்ற நிலையில்தான் மக்கள் உள்ளனர்.

இப்படி ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்களால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வரும் நிலையில் இதுபோன்ற அடாவடி ஆட்டோக்காரர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து நேற்று காவல்துறை சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ஆட்டோக்களுக்கான கட்டண விகிதம் 26.01.2007ம் ஆண்டு முதல் அரசால் நெறிமுறைப்படுத்தப் பட்டுள்ளது. இருந்தபோதும், ஆட்டோ ஓட்டுநர்களால் அதிக கட்டணம் வசூலிக்கப்படுதல் மற்றும் பயணிகள் கோரும் இடத்திற்கு வர மறுத்தல் போன்ற புகார்கள் பொது மக்களிடமிருந்து வரப்பெறுகின்றன.

இதற்கான நடவடிக்கை எடுக்கும் வகையில் சென்னை போக்குவரத்து காவல் துறை அதிக கட்டணம் கேட்கும் ஆட்டோக்கள் மீதும், விதிகளை மீறும் ஆட்டோக்கள் மீதும் மற்றும் பயணிகளை துன்புறுத்தும் ஆட்டோக்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கும்.

மேலும்,போக்குவரத்து சிவப்பு சமிக்ஞையை மீறும் ஆட்டோக்கள் மீதும் சென்னை போக்குவரத்து காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கைக்கு எத்தனை ஆட்டோ டிரைவர்கள் பயப்படுவார்கள், பணிவார்கள் என்பது கேள்விக்குறிதான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X