மனோன்மணியம் பல்கலையில். தமிழுக்குத் தடை!

திங்கள்கிழமை, ஆகஸ்ட் 18, 2008, 10:30 [IST]
குற்றாலம்: நீராரும் கடலுடுத்த... என தமிழ்த் தாயை வாழ்த்திப் பாடி தமிழ் வளர்த்த மனோன்மணியனார் பெயரில் அமைந்துள்ள பல்கலைக்கழக வளாகத்துக்குள் இனி மாணவர்கள் தமிழ் பேச முடியாது.

ஆம். இனி இம்மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஆங்கிலத்தில்தான் பேச வேண்டும் என அதன் துணைவேந்தர் சபாபதி மோகன் கண்டிப்பாக உத்தரவிட்டுள்ளார். இதற்கு மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடியும் ஆதரவு தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலியில் அமைந்துள்ள மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகின்றன.

இப் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1 கோடி செலவில் புதிய விடுதி கட்டும் பணியின் தொடக்க விழாவும், இந்தியாவிலேயே முதன் முறையாக எம்.எஸ்ஸி மிக நுண்ணுயிர் தொழில் நுட்பவியல் (MSc Hi-Bio Tech), எம்.எஸ்ஸி கடல்வாழ் உயிரின அறிவியல் மற்றும் மேலாண்மை (MSc, Marine Bio Tech&Management), எம்.டெக் மிக நுண்ணுயிர் தொழில் நுட்பவியல் (MTech Hi – Bio tech) ஆகிய 3 புதுவகை முதுநிலை பட்டபடிப்புகள் தொடக்க விழா குற்றாலம் ஐந்தருவி சாலையிலுள்ள ஒரு தனியார் விடுதியில் சட்டமன்ற சபாநாயகர் இரா. ஆவுடையப்பன் தலைமையில் நடைபெற்றது.

நெல்லை பல்கலைகழக துணை வேந்தர் சபாபதி மோகன் (மதிமுக சார்பில் எம்பி பதவிக்குப் போட்டிப் போட்டுத் தோற்ற பின்னர் திமுகவில் இணைந்து இப்போது துணை வேந்தராகியிருப்பவர்) வரவேற்றுப் பேசினார்.

மனோன்மணியனார் பல்களைக் கழக வளாகத்தில் ஏற்கெனவே ஆங்கிலத்தில் மட்டுமே பேச வேண்டும் என உத்தரவிட்டும், பலர் இன்னும் தமிழில் பேசுவது தவறு. ஆங்கிலம்தான் நமது தரத்தை உலக அரங்கில் எடுத்துச் செல்லும். அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றார் சபாபதி மோகன்.

ஆங்கிலத்தில் பேச வேண்டும்-பொன்முடி:

விழாவில் கலந்துக் கொண்டு முதுநிலைப் படிப்புகளை தொடங்கி வைத்து, விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டி அமைச்சர் பொன்முடி பேசியதாவது:

இந்தியாவிலேயே இதுவரை அறிமுகம் செய்யப்படாத 3 புதிய முதுநிலை படிப்புகள் இங்கே தொடங்கப்பட்டுள்ளன. கடந்த 18 ஆண்டுகாலமாக இப்பல்கலைக்கழகம் தென்மாவட்ட கல்விப் பணியை சிறப்பாக செய்து வருகிறது. இப்பல்கலைகழகத்தில் புதிய பட்டப்படிப்பு பாடங்களை நடத்திட வெளிநாட்டு பேராசியர்கள் வருகை தர உள்ளனர்.

இப்பல்கலை கழகத்தில் ஆங்கிலத்தில்தான் மாணவர்கள் பேச வேண்டும் என்று துணை வேந்தர் கூறியதை வரவேற்கிறேன். இதை நீங்கள் தவறாகப் புரிந்து கொள்க் கூடாது. ஆங்கிலம்தான் நம்மை உலகத் தரத்துக்கு உயர்த்த உதவும் மொழி. சீனர்கள் கூட இப்போது ஆங்கிலம் கற்க ஆரம்பித்துவிட்டார்கள்.

தமிழக கல்வி துறையில் காலத்திற்கேற்ப மாற்றங்களைக் கொண்டு வர வேண்டியுள்ளது. பல்கலைக்கழக வளாகத்துக்குள் ஆங்கிலம் மட்டுமே பேச வேண்டும் என்ற இந்த உத்தரவும்கூட அதில் ஒரு அங்கம்தான். அதனை மாணவர்களும், பேராசியர்களும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

அதே சமயம் புதிய விடுதி கட்டிடம் கட்டும் பணிக்கான கல்வெட்டை, தமிழ் வளர்த்த மனோன்மணியம் சுந்தரானர் பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத்தில் வைத்துள்ளதைப் போல் தமிழிலும் வைக்க வேண்டும். (பல்கலைக் கழகத்தில் தமிழ் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, கல்வெட்டில் இருந்தால் போதுமாம்!).

இந்தியாவிலேயே ஆண்டுதோறும் 8 லட்சம் பொறியியல் பட்டதாரிகள் உருவாகின்றனர். இதில் நம் தமிழகத்தில் மட்டும் 1 லட்சம் பேர். உயர் கல்வி துறையில் உலகுக்கே தமிழகம் எடுத்துக் காட்டாக, வழிகாட்டியாக இருக்கிறது. தமிழகத்தில் கோவை, திருவாரூர், திருச்சி ஆகிய 3 இடங்களில் உலக தரம் வாய்ந்த பல்கலை கழகங்கள் அமைந்திட முழு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போட்டி நிறைந்த உலகில் மாணவ, மாணவிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டு சாதிக்க வேண்டும் என்றார்.

இவ்விழாவில் அமைச்சர் மைதீன்கான், கலெக்டர் கோ.பிரகாஷ், எம்பி அப்பாத்துரை உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
IPL, Wankhede Stadium, Mumbai
Kolkata Knight Riders won by 32 runs
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
Match starts at 03:30 pm IST  
IPL, Himachal Pradesh Cricket Association Stadium, Dharmasala
Match starts at 04:00 pm IST