For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வலிமையான பாரதத்தை உருவாக்க கல்வி அவசியம்: பிரதமர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: வலிமையான இந்தியாவை உருவாக்க அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியும், அனைத்து இளைஞர்களுக்கும் தொழில் கல்வியும் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி சிறப்பு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, தமிழக முதல்வர் கருணாநிதி, யுனிடோ தலைமை இயக்குனர் கண்டே கே.உம்கலா ஆகியோருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

பல்கலைக்கழக துணை வேந்தர் எஸ்.ராமச்சந்திரன் வரவேற்றார். பின்னர் டாக்டர் பட்டம் பெறுபவர்களின் வாழ்க்கைக் குறிப்புகளை வாசித்தார். இதையடுத்து பல்கலையின் வேந்தரும், தமிழக ஆளுநருமான சுர்ஜித் சிங் பர்னாலா, மன்மோகன் சிங், சோனியா, கருணாநிதி, கண்டே ஆகியோருக்கு டாக்டர் பட்டங்களை வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து பல்கலைக்கழக இணை வேந்தரும், உயர் கல்வித்துறை அமைச்சருமான பொன்முடி தனது வாழ்த்துரையில், சிறந்த பொருளாதார மேதையான இந்திய பிரதமர் மன்மோகன் சிங், சிறந்த ஜனநாயகவாதியும், பெண்ணியவாதியுமான சோனியா காந்தி, அனைத்துத் துறைகளிலும் முத்திரைப் பதித்த மாமேதை, அரசியல் விஞ்ஞானி முதல்வர் கருணாநிதி ஆகிய இந்தியாவின் முப்பெரும் தலைவர்களுக்கு டாக்டர் பட்டம் வழங்கி சென்னை பல்கலைக்கழகம் தனக்கு பெருமை தேடிக் கொண்டது என்று கூறினார்.

இதையடுத்து டாக்டர் பட்டம் பெற்ற கண்டே கே.உம்கலா பல்கலைக்கழகத்தின் சிறப்பை பாராட்டி, மேலும் அது வளர்ச்சி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். இதனை தொடர்ந்து முதலமைச்சர் கருணாநிதி, சென்னை பல்கலைக்கழகத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிகளை விவரித்தார்.

கல்விக்கு முக்கியத்துவம் - சோனியா

விழாவில் தரமணி வளாகத்தில் நிறுவப்படும் அடிப்படை அறிவியல் ஆய்வு மையக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி காங்கிரஸ் தலைவர் சோனியா பேசியதாவது:

பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு கல்விக்கு அதிகளவில் முன்னுரிமை அளித்து வருகிறது. குறிப்பாக உயர்கல்விக்கு அதிமுக்கியத்துவம் வழங்கி வருகிறோம். அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் அனைவருக்கும் கல்வி வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பெண்கள் தற்போது அதிக அளவில் கல்வி கற்று வருகின்றனர்.

முன்பு 10 சதவிகிதம் பெண்கள் மட்டுமே கல்வி கற்றவர்களாக இருந்தனர். ஆனால் தற்போது 40 சதவிகிதம் பெண்கள் கல்வி பெற்றுள்ளனர்.
அனைவருக்கும் கல்வி கிடைக்க செய்வதுடன் தரமான கல்வி அளிப்பது தான் நாம் எதிர்கொள்ளும் சவால். யாருக்கும் உயர்கல்வி மறுக்கப்பட கூடாது. அதனால் தான் பல்வேறு கல்வி உதவித் தொகைகள் வழங்கப்பட்டு வருகின்றன. உயர்கல்வி பெறுவதற்காக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு கல்விக் கடன்கள் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

டாக்டர் பட்டம் மகிழ்ச்சி - மன்மோகன் சிங்

அதைத் தொடர்ந்து சேப்பாக்கத்தில் அமைக்கப்படும் கலை அறிவியல் மைய கட்டிடத்திற்கு பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி 8 நூல்களை வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:

சென்னை பல்கலைக்கழகத்தின் 150வது ஆண்டு விழாவில் பங்கேற்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இந்த பல்கலைக்கழகத்தில் பயின்று, பணியாற்றி ஜனாதிபதியாக இருந்த ராதா கிருஷ்ணனின் பிறந்தநாளான ஆசிரியர் தினத்தன்று இந்த விழா நடைபெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது.

தேசிய மற்றும் சர்வதேச அளவில் சென்னை பல்கலைக்கழகம் தனித் தன்மையுடன் விளங்கி வருகிறது. பாரத ரத்னா விருது பெற்ற 7 பேரையும் நோபல் பரிசு பெற்ற 2 பேரையும் இந்த பல்கலைக்கழகம் உருவாக்கி உள்ளது. இங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் புகழ் பெற்று விளங்குகின்றனர்.

இங்கு பயின்ற விஞ்ஞானிகள், பொறியாளர்கள், பொருளாதார நிபுணர்கள் பலரும் இந்த பல்கலைக்கழகம் தங்களை உருவாக்கியதாக பெருமிதத்துடன் தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் கல்வி வழங்குவதுடன் தொடக்க, நடுநிலை, உயர் மற்றும் தொழில் கல்வி கிடைக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியுடன் உள்ளது.

வலிமையான இந்தியாவை உருவாக்க அனைத்து குழந்தைகளுக்கும் பள்ளிக் கல்வியும், அனைத்து இளைஞர்களுக்கும் தொழில் கல்வியும் கிடைக்கச் செய்ய வேண்டும். பெண்கள் கல்வி பயில அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டும்.

பெண்கள் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. தமிழக அரசின் நடைமுறையை மற்ற மாநிலங்களும் பின்பற்ற வேண்டும். நாடு சந்திக்கும் சவால்களை எதிர்கொண்டு இந்தியாவை உலகளவில் மாபெரும் சக்தியாக உயர்த்துவதில் மாணவர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார்.

கிறிஸ்தவர்களுக்கு விரைவில் விளக்கம்: கருணாநிதி

முதல்வர் கருணாநிதி பேசுகையில், இந்தியாவின் மூத்த பல்கலைக்கழகம் கொல்கத்தாவில் உள்ளது. அடுத்து மும்பை பல்கலை. இவற்றிற்கு அடுத்தபடியாக தொன்மை வாய்ந்த பல்கலைக்கழகமாக சென்னை பல்கலைக்கழகம் விளங்குகிறது.

முதன் முதலாக நீதிக்கட்சியின் ஆட்சியில் 1923ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவ சட்டம், உயர்கல்விக்கு அளித்த கொடை.

மண்டல் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவிகித இடஒதுக்கீடு அளிக்க வகை செய்த பிரதமர் மன்மோகன் சிங், மத்திய அரசின் வழிகாட்டுக் குழு தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் அர்ஜுன் சிங் ஆகியோருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இடஒதுக்கீட்டு பிரச்சனையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்கிறது. முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் தலா 3.5 சதவிகிதம் இடஒதுக்கீடு நீதியரசர் ஜனார்த்தனன் கமிஷன் மூலம் நிறைவேற்றப்படும். இதன் மூலம் கிறிஸ்தவ இன மக்களிடையே நிலவும் பய உணர்வை போக்க முடியும். இந்த விஷயத்தில் கிறிஸ்தவர்களுக்கு உள்ள சந்தேகங்களுக்கு விரைவில் விளக்கமளிக்கப்படும் என்றார்.

பின்னர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு உயர் கல்வி அளிப்பதில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை பட்டியலிட்டார். பின்னர் பல்கலைக்கழகத்தின் கிண்டி வளாகத்தில் அமைக்கப்பட உள்ள நானோ தொழில்நுட்ப மைய கட்டிடத்திற்கு கருணாநிதி நிகழ்ச்சியில் அடிக்கல் நாட்டி 12 நூல்களை வெளியிட்டார்.

நிகழ்ச்சியில், பல்கலைக்கழக 150வது ஆண்டு விழாவையொட்டி அமைக்கப்படவுள்ள பிரமாண்ட நுழைவாயிலுக்கு ஆளுநர் பர்னாலா அடிக்கல் நாட்டினார்.

விழாவில், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவவியர் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

பிரதமர், சோனியா வருகையையொட்டி பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.

உற்சாக வரவேற்பு...

முன்னதாக விழாவில் பங்கேற்பதற்காக இன்று காலை விமான்படை விமானம் மூலம் பிரதமர் மன்மோகன் சிங் சென்னை வந்தார். அவருடன் மத்திய இரும்புத்துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானும் வந்தார்.

பிரதமரை விமான நிலையத்தில் ஆளுநர் பர்னாலா, முதல்வர் கருணாநிதி, நிதியமைச்சர் ப.சிதம்பரம், மாநில அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் ஸ்ரீபதி, மேயர் மா.சுப்ரமணியம் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் ஆளுநர் மாளிகைக்கு பிரதமர் சென்றார். அங்கிருந்து சென்னை பல்கலைக்கழகத்திற்கு அவர் வந்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X