பிரபாகரன் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம்!- ராஜபக்சே அறிவிப்பு

செவ்வாய்க்கிழமை, நவம்பர் 4, 2008, 9:01 [IST]
கொழும்பு: ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு விடுதலைப் புலிகள் சரண் அடைந்தால்தான் போர் நிறுத்தம் செய்யப்படும் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.

இந்திய பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராஜபக்சே கூறியதாவது:

பிரபாகரனை ராணுவம் சுற்றி வளைத்து விட்டது. அவர் விரைவில் பிடிபடுவார். விடுதலைப் புலிகள் அதன்பிறகு தாங்களாகவே சரணடைவார்கள்.

இதற்கு முன்பு பிரபாகரனே ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தால் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டும்.

ஏற்கனவே கிழக்கு மாகாணங்களில் நாங்கள் செய்ததுபோல் அரசியல் தீர்வுக்கு வழி செய்வோம். இதைப் போர் என்றுகூட நான் கூற மாட்டேன். ராணுவ நடவடிக்கைதான். தீவிரவாதிகளை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கையைத் தொடங்கி இருக்கிறோம்.

ராஜீவ்காந்தி மற்றும் இலங்கை தலைவர்கள் பலர் கொல்லப்பட்டதை எங்களால் மறக்க முடியாது. பிரபாகரன் பிடிபட்டதும், இந்தியா விரும்பினால் அவரை விசாரணைக்காக இந்தியாவுக்கு அனுப்பி வைப்போம்.

விடுதலைப் புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை நெருங்கிவிட்டோம். அதேபோல், கிழக்கில் முல்லைத்தீவைப் பிடிப்பதற்கு முன்னேறி வருகிறோம். பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக மெதுவாக முன்னேறி வருகிறோம். போர் நிறுத்தம் செய்யும்போது விடுதலைப் புலிகள் ஆயுதங்களை வாங்கிக் குவித்து தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்வது வழக்கம். இம்முறை அப்படி நடக்கவிட மாட்டோம்.

எனவே போர் நிறுத்தத்தை விடுதலைப்புலிகள் நிச்சயம் மதிக்க மாட்டார்கள். அவர்கள் முதலில் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடையட்டும். நாங்கள் போர் நிறுத்தம் அறிவிக்கிறோம்.

இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சமீபத்தில் என்னிடம் டெலிபோனில் தொடர்பு கொண்டு பேசியபோது, போர் நிறுத்தம் செய்யும்படி கோரவில்லை. அப்பாவி தமிழர்கள் நிலை பற்றித்தான் அவர் கவலை தெரிவித்தார். இலங்கை இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்பதை நானும் ஒப்புக்கொள்கிறேன், என்றார் ராஜபக்சே.
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets