For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜாகி உர் ரஹ்மான் லக்வி, மசூத் அஸார் கைது: பாக். அறிவிப்பு

By Super
Google Oneindia Tamil News

டெல்லி: ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் மசூத் அஸார் மற்றும் லஷ்கர் இ தொய்பாவின் முக்கிய தலைவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வி ஆகியோர் கைது செய்யப்பட்டிருப்பதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் செளத்ரி முக்தார் அகமது கூறுகையில், லக்வியும், அஸாரும் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லக்வி நேற்று கைது செய்யப்பட்டார். இன்று அஸார் கைது செய்யபப்ட்டார்.

பாகிஸ்தானில்தான் தீவிரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறும் இந்தியாவும், அமெரிக்காவும், அதற்கான ஆதாரங்களை காட்ட வேண்டும்.

தங்களிடம் போதுமான ஆதாரங்கள் இருப்பதாக இரு நாடுகளும் கூறுகின்றன. அப்படியென்றால் அவற்றை எங்களிடம் காட்ட மறுப்பது ஏன்?

தீவிரவாத குழுக்கள் மீது பாகிஸ்தான் நடவடிக்கை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறது. அதில் யாரும் எங்கள் மீது சந்தேகப்பட முடியாது. அத்தோடு, அண்டை நாடுகளின் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கும் நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம்.

அதேபோல இந்தியாவுக்கும், மும்பை தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக ஒத்துழைப்பு அளிக்க தயாராகவே இருககிறோம். இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து விசாரணையில் ஈடுபடுவதே நல்லது.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள மசூத் அஸார், லக்வி ஆகியோரை விசாரிக்கவும் இந்திய அதிகாரிகளை நாங்கள் அனுமதிப்போம்.

இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தானியப் படைகளை குவிக்கும் எண்ணம் இல்லை என்றார் அவர்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் சம்பந்தப்பட்டுள்ள முக்கிய தீவிரவாதி லக்வி. அதேபோல இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் தொடர்பாக இந்தியா கோரி வரும் தீவிரவாதி மெளலானா மசூத் அஸார்.

20 பேருடன் லக்வி கைது

முதலில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்தை தலைமையிடமாகக் கொண்டுள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அந்த அமைப்பின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஸாபராபாத்தில் வைத்து லக்வி கைது செய்யப்பட்டார். அவருடன் 20 தீவிரவாதிகளும் கைது செய்யப்பட்டனர்.

முஸாபராபாத்தில் உள்ள லஷ்கர் அலுவலகம், அதன் கிளையான ஜமாத் உத் தாவா ஆகிய இடங்களில் பாதுகாப்புப் படையினர் திடீர் வேட்டையில் இறங்கினர். முஸாபராபாத்தில்தான் லஷ்கர் உள்ளிட்ட பல்வேறு தீவிரவாத அமைப்புகளின் தலைமையகங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஜாகி உர் ரஹ்மான் லக்வி, லஷ்கர் அமைப்பின் முக்கிய தளபதிகளில் ஒருவர். இவர்தான் மும்பைத் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் இருந்தபடி இவர் மும்பையில் தீவிரவாதிகளை செயல்பட வைத்தார் என்றும் குற்றச்சாட்டு உள்ளது.

இந்த வேட்டையின்போது ஜமாத் உத் தாவா அறக்கட்டளையை பாதுகாப்புப் படையினர் தங்கது வசம் எடுத்துக் கொண்டதாகவும் கூறப்பட்டது.

மும்பையில் பிடிபட்ட தீவிரவாதி கஸாப் கொடுத்த வாக்குமூலத்தில் தாக்குதலைத் திட்டமிட்டவர் லக்விதான் என்று கூறியுள்ளான்.

கராச்சியிலிருந்து மும்பைக்கு தீவிரவாதிகள் கிளம்பியபோது லக்வி நேரில் வந்து அவர்களை வழியனுப்பி வைத்துள்ளான் என்று கூறப்படுகிறது. மேலும் ஹோட்டல்களில் தாக்குதலில் ஈடுபட்டிருந்தபோது லக்வி மற்றும் லஷ்கர் அமைப்பின் இந்தியத் தலைவரான யூசுப் முஸ்ஸமில் ஆகியோருடன் செல்போன்கள் மூலம் தொடர்பு கொண்டபடி இருந்துள்ளனர் தீவிரவாதிகள்.

லக்விக்கு அபு வாஹித் மற்றும் சாச்சு என்ற இரு வேறு பெயர்களும் உள்ளன. மேலும் சில பெயர்களையும் அவன் வைத்துள்ளான்.

ஆரம்பத்தில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் வசித்து வந்த லக்வி பின்னர் கராச்சிக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் இடம் பெயர்ந்துள்ளான்.

லக்விக்கு செச்னியா, போஸ்னியா, ஈராக், தென் கிழக்கு ஆசிய தீவிரவாத அமைப்புகளுடனும் தொடர்பு உள்ளதாக அமெரிக்க உளவுத்துறை கூறுகிறது.

காந்தஹார் .. அஸார் ..

இந்தியப் பாதுகாப்புப் படையினர் பிடித்த மிக மிக முக்கிய தீவிரவாதிகளில் ஒருவராக இருந்தவர் அஸார். ஆனால் கடந்த 1999ம் ஆண்டு காந்தஹாருக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது, தீவிரவாதிகள் அஸாரின் விடுதலையைக் கோரி நிபந்தனை விதித்தனர்.

இதை ஏற்று அஸார் உள்ளிட்ட 3 முக்கிய தீவிரவாதிகளை அப்போதைய வாஜ்பாய் அரசு விடுவித்தது. அதன் பிறகு அஸாரின் கை மேலும் ஓங்கியது, இந்திய நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலை லஷ்கர் அமைப்புடன் இணைந்து நடத்தினார் அஸார்.

தற்போதைய மும்பைத் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் முகம்மது சயீத், தாவூத் இப்ராகிம் உள்ளிட்டோருடன் அஸாரையும் தங்களிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

வீட்டுக் காவலில் அஸார்

கைது செய்யப்பட்டுள்ள மசூத் அஸார் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பஹவல்பூர், மாடல் டவுன் நகரில் உள்ள பல மாடிக் கட்டடம் ஒன்றில்தான் தங்கியுள்ளார் அஸார். அந்தக் கட்டடத்தை விட்டு அவர் வெளியேறாத வகையில் பாதுகாப்புடன் அடைக்கப்பட்டுள்ளார்.

தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்புகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இந்த நடவடிக்கை தொடரும் எனவும் ராணுவம் கூறியுள்ளது.

தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஜெய்ஷ் இ முகம்மது தலைவர் அஸார், காந்தஹார் சம்பவத்திற்குப் பின்னர்தான் அந்த அமைப்பை உருவாக்கினார். அதற்கு முன்பு அவர் சிறிய அளவிலான தீவிரவாத அமைப்பை நடத்தி வந்தார். அவரைக் கைது செய்த பாதுகாப்புப் படையினர் அஸாரை சிறையில் அடைத்திருந்தனர்.

பெரும்பாடுபட்டுப் பிடிக்கப்பட்ட அஸாரை, தலிபான் தீவிரவாதிகள் நெருக்குதல் கொடுத்து விடுவிக்க வைத்தனர்.

2001ல் நடந்த இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்குப் பின்னர் அஸாரின் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசு கட்டுப்படுத்தியது. அதேபோல 2003ம் ஆண்டு அதிபர் முஷாரப்பைக் கொல்ல முயன்ற சம்பவத்திற்குப் பின்னரும் அஸாரின் நடவடிக்கைகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.

பெயரை மாற்றிய ஜெய்ஷ் இ முகம்மது

தற்போது ஜெய்ஷ் இ முகம்மது, குதும் உல் இஸ்லாம் என்று பெயர் மாட்டப்பட்டுள்ளது. அமைப்பின் தலைவராக முப்தி அப்துல் ராஃப் செயல்பட்டு வருகிறார். இவர் அஸாரின் தம்பி ஆவார்.

2001ம் ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பை அமெரிக்கா தடை செய்தது. பின்னர் அமெரிக்காவின் நெருக்குதலின் பேரில் முஷாரப் 2003ம் ஆண்டு தடை செய்தார். இதையடுத்தே குதும் உல் இஸ்லாம் என்று அமைப்பின் பெயர் மாற்றப்பட்டது.

2001ம் ஆண்டு நடந்த இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதலுக்குப் பின்னர் அஸாரை பாகிஸ்தானிய படைகள் கைது செய்தனர். ஆனால் ஒரே ஆண்டில் அவரை லாகூர் உயர்நீதிமன்றம் விடுவித்து விட்டது.

இவருக்கும், அல் கொய்தா அமைப்புக்கும் இடையே நெருங்கிய தொடர்புகள் இருப்பதால் இவர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸதான் அரசை அமெரிக்கா தொடர்ந்து நெருக்கி வந்தது. இதனால் அஸாருடனான நெருக்கத்தை பாகிஸ்தான் அரசு குறைத்துக் கொள்ள ஆரம்பித்தது.

அஸாரை, இந்தியா மட்டுமல்ல, அமெரிக்காவும் கூட கேட்டு வருகிறது. 2002ம் ஆண்டு அமெரிக்க பத்திரிக்கையாளர் டேணியல் பியர்ல் கடத்திக் கொல்லப்பட்டார். அவரைக் கொன்றது ஷேக் அகமது சயீத் ஓமர். இவர் அஸாரின் சிஷ்யர் ஆவார். இந்த வழக்கில் அஸாரை தங்களிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது அமெரி்க்கா.

மேலும் காந்தஹாருக்குக் கடத்தப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் ஒரு அமெரிக்கரும் இருந்ததால், அதுதொடர்பாகவும் அஸார் மீது வழக்குப் பதிவு செய்ய அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. ஆனால் அமெரிக்காவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X