For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆர்ப்பரித்த அலங்காநல்லூர்;காளைகளை அடக்கிய வீரர்கள்!

By Sridhar L
Google Oneindia Tamil News

Jallikattu
மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் இன்று உலகப் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடந்தது. கிட்டத்தட்ட ஆயிரம் காளைகள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சி எந்தவித பெரிய அசம்பாவிதமும் இல்லாமல் வீரம் செறிய நடந்தேறியது.

தமிழகத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளிலேயே உலகப் புகழ் பெற்றது அலங்காநல்லூரில் நடைபெறும் ஜல்லிக்கட்டுதான்.

இன்று அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதற்காக அலங்காநல்லூர் மந்தை பகுதியில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

நடுவில் காளைகள் ஓடவும், அவற்றை வீரர்கள் அடக்கவும் வசதியாக மணல், சனல் நார் ஆகியவை தூவப்பட்டிருந்தன. இரு பக்கமும் மரக் கட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டு பார்வையாளர்கள் அமர்ந்து பார்க்க காலரி அமைக்கப்பட்டிருந்தது.

மாவட்ட ஆட்சித் தலைவர் சீதாராமன் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள், பாதுகாப்பு நடவடிக்கைகள், மருத்துவ வசதிகள் உள்ளிட்டவை செய்யப்பட்டிருந்தன.

மதுரை, தேனி, திண்டுக்கல், திருச்சி, தஞ்சாவூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கிட்டத்தட்ட ஆயிரம் காளைகள் இந்த முறை ஜல்லிக்கட்டில் கலந்து கொண்டன.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் காளைகளைப் பிடிக்கும் வீரர்களுக்கு சீருடை வழங்கப்பட்டிருந்தது.

காளைகள் அனைத்தும் முழுமையாக பரிசோதிக்கப்பட்ட பின்னரே களத்தில் இறக்கி விடப்பட்டன.

முதலில் கோவில் மாடு திறந்து விடப்பட்டது. கோவில் மாடு என்பதால் யாரும் அதை பிடிக்கவில்லை. இதையடுத்து மற்ற காளைகள் வரிசையாக திறந்து விடப்பட்டன.

வாடி வாசலில் காத்திருந்த வீரக் காளைகளுக்கு மத்தியில் ஒவ்வொரு காளையும் புயலென சீறிப் பாய்ந்து திமிறி ஓடின.

அவற்றை போட்டி போட்டுக் கொண்டு வீரர்கள் திமிலைப் பிடித்தும், கொம்புகளைப் பிடித்தும் அடக்கி பரிசுகளைத் தட்டிச் சென்றனர்.

தங்களது உயிரையும் பொருட்படுத்தாமல் வீரர்கள், காளைகளைப் பிடிக்க பாய்ந்த காட்சி மயிர்க்கூச்செறிவதாக இருந்தது.

சில காளைகள் யாருக்கும் அடங்காமல் திமிறியபடி எகிறிச் சென்றது பிரமிப்பூட்டும்படியாக இருந்தது.

எலியார்பட்டி என்ற ஊரைச் சேர்ந்த ஒரு காளை, நீண்ட நேரமாக வாடி வாசலை விட்டு வெளியே வராமல் உள்ளேயே நின்று கொண்டிருந்தது. இதையடுத்து காளையின் உரிமையாளர் வெளியே வந்து அதை பலமுறை அழைத்தார்.

ஆனாலும் அந்தக் காளை வந்தபாடில்லை. இதையடுத்து நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்னர் ஒரு வழியாக அந்த காளை வெளியே வந்தபோது அதைப் பிடிக்க வீரர்கள் பாய்ந்தனர். இருப்பினும் யாரிடமும் சிக்காமல் அக்காளை ஓடி விட்டது.

காளைகளை அடக்கிய வீரர்களுக்கு அண்டா, ரொக்கப் பரிசு, பனியன், கட்டில், தங்கக் காசு உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.

அதேபோல யாரிடமும் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளர்களுக்கும் பல்வேறு விதமான பரிசுகள் வழங்கப்பட்டன.

சோழவந்தான் தொகுதி திமுக எம்.எல்.ஏ. மூர்த்தி ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.

மாநில வீர விளையாட்டு பேரவையின் மாநிலத் தலைவர் பி.ஆர். ராஜசேகரன், அலங்காநல்லூர் பேரூராட்சி மன்றத் தலைவி உமாதேவி, அறங்காவலர் கோவிந்தராஜ் மற்றும் அரங்காவலர் குழு தலைவர் ரகுபதி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டு பெரிய அளவில் அசம்பாவிதம் இல்லாமல் சிறப்பாக நடந்தது.

காயமடைந்தவர்களுக்கு உடனடியாக ஸ்பாட்டிலேயே முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டன.

தஞ்சையில் ஒருவர் பலி ...

இதற்கிடையே, தஞ்சை மாவட்டம் பூதலூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதில் திமிறி ஓடிய காளைகளைப் பிடிக்க வீரர்கள் வீராவேசத்துடன் பாய்ந்தனர்.

அப்போது முருகானந்தம் என்ற 20 வயது வாலிபர் காளை குத்தியதில் படுகாயமடைந்தார். குடல் சரிந்த நிலையில் அவர் தஞ்சை அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவர் உயிரிழந்தார்.

25 பேர் காயமடைந்தனர். அனைவருக்கும் உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஜல்லிக்கட்டு நடத்துவதில் மோதல் ..

புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டை நடத்துவது குறித்து இரு தரப்பினரிடையே மோதல் வெடித்தது. இதை அடக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

பொன்னமராவதி அருகே உள்ளது குன்னையூர். இங்கு முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்தக் கோவிலில் பொங்கல் விழாவையொட்டி சாமி கும்பிடுவதிலும், ஜல்லிக்கட்டை நடத்துவதிலும், கொன்னைப்பட்டி மற்றும் கொப்பனாப்பட்டி ஆகிய இரு கிராம மக்களுக்கிடையே பிரச்சினை வெடித்தது.

வழக்கமாக கொப்பனாப்பட்டி கிராமத்தில்தான் ஜல்லிக்கட்டை நடத்துவார்களாம். ஆனால் இந்த முறை, எங்கள் ஊரில் வந்து ஜல்லிக்கட்டை நடத்தக் கூடாது என்று கொப்பனாப்பட்டி கிராமத்தினர் கூறி விட்டனர்.

ஆனால் அதை நிராகரித்த கொன்னைப்பட்டி கிராமத்தினர், குன்னையூர் மாரியம்மன் கோவிலுக்கு 300க்கும் மேற்பட்ட காளைகளுடன் வந்துள்ளனர்.

பின்னர் மாரியம்மனை வணங்கிய அவர்கள், கொப்பனாப்பட்டி மக்களை சபிப்பது போல வேண்டியுள்ளனர். இதைக் கேட்டதும் அங்கு கூடியிருந்த கொப்பனாப்பட்டி கிராமத்தினர் ஆத்திரமடைந்து மோதலில் குதித்தனர்.

இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் முற்றியது. இதையடுத்து போலீஸார் புகுந்து தடியடி நடத்திக் கலைத்தனர். ஆனால் அதற்கும் கூட்டம் மசியவில்லை. இதையடுத்து கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது. அப்படியும் மோதல் தீராததால், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து இரு கிராம மக்களும் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

இரு கிராமங்களுக்கு இடையே கலவரம் வெடிக்கும் அபாயம் இருப்பதால் பெருமளவில் போலீஸார் குவிக்கப்படடுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X