நான்தான் பிரதமர் வேட்பாளர்-3வது அணிக்கு மாயாவதி நிபந்தனை!

வெள்ளிக்கிழமை, மார்ச் 13, 2009, 12:15 [IST]
டெல்லி: நான்தான் பிரமதர் வேட்பாளர் என அறிவித்தால் 3வது அணியில் தொடர்ந்து இருப்பேன் என்று உத்தரப் பிரதேச முதல்வரும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவருமான மாயாவதி நிபந்தனை விதித்துள்ளார்.

மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஒப்புக் கொள்ள மாடடார் என்பதால் அந்த அணி ஆட்டம் கண்டுள்ளது.

நேற்று தான் ஒரு வழியாக 3வது அணி உருவானது. அடுத்த கட்டமாக பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யும் கட்டத்தில் உள்ளனர் 3வது அணி தலைவர்கள்.

3வது அணியில் தெலுங்கு தேசம், அதிமுக, பகுஜன் சமாஜ் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பார்வர்ட் பிளாக், தெலுங்கான ராஷ்டிரிய சமிதி, மதச்சார்பற்ற ஜனதாதளம், ஹரியானா ஜனகித் காங்கிரஸ், ராஷ்டிரிய சோசலிச கட்சி ஆகியவை இடம் பெற்றுள்ளன.

இவற்றில் எட்டு கட்சிகளே வாக்கு வங்கிகளை உறுதியாக கொண்ட கட்சிகள் ஆகும்.

3வது அணியின் சார்பில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படக் கூடிய தகுதியுடன் இருப்பவர்கள் - சந்திரபாபு நாயுடு, தேவெ கெளடா, மாயாவதி, ஜெயலலிதா ஆகியோரே உள்ளனர்.

இவர்களில் நாயுடுவும், கெளடாவும் தாங்கள் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று கூறி விட்டனர். எனவே மீதமிருப்பவர்கள் ஜெயலலிதாவும், மாயாவதியும் மட்டுமே.

ஜெயலலிதா இதுவரை பிரதமர் பதவிக்கு தான் போட்டியிடுகிறேனா, இல்லையா என்பதை அறிவிக்கவில்லை. ஆனால் மாயாவதி நான் தான் பிரதமராக வேண்டும் என்பதை பகிரங்கமாக, 3வது அணி தலைவர்களுக்குத் தெரிவித்து விட்டார். அப்படி அறிவித்தால்தான் தன்னால் அணியில் நீடிக்க முடியும் என்பதையும் அவர் தெரிவித்துள்ளாராம்.

வருகிற 15ம் தேதி மறைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கான்ஷிராமின் பிறந்த நாளாகும். அன்றைய தினம் 3வது அணித் தலைவர்களை இரவு விருந்துக்கு அழைத்துள்ளார் மாயாவதி.

அந்த சமயத்தில், பிரதமர் வேட்பாளராக தன்னை 3வது அணித் தலைவர்கள் அறிவிக்க வேண்டும் என தனது தூதுவர் சந்தீஷ் சந்திராவிடம், சொல்லி அனுப்பியுள்ளாராம். அவரும், 3வது அணி தலைவர்களிடம் இதைத் தெரிவித்துள்ளதாகத் தெரிகிறது.

ஒரு வேளை தன்னை பிரதமர் வேட்பாளராக 3வது அணி அறிவிக்காவிட்டால் அணியில் தான் நீடிக்க முடியாது என்பதையும் திட்டவட்டமாக மாயாவதி தெரிவித்து விட்டதாக தெரிகிறது.

இதனால் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கலாமா என்ற ஆலோசனையில் 3வது அணித் தலைவர்கள் இறங்கியுள்ளனர். இதுதொடர்பாக ஜெயலலிதாவிடமும் ஆலோசனை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
  Read:  In English 
இதற்கைக ஜெயலலிதாவை சந்தித்துப் பேச தேவெ கெளடா, சந்திரபாபு நாயுடு, பிரகாஷ் காரத், ஏ.பி.பரதன் ஆகியோர் சென்னை வரவுள்ளனர்.

தன்னிடம் ஆலோசனைக்கு வரும்போது தனது விருப்பத்தை ஜெயலலிதா தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
1st Test , Lord's Cricket Ground, St John's Wood
England won by 5 wickets