For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'கூட்டணி அமைப்போம்-கொள்ளையடிப்போம்-பங்கு பிரிப்போம்'

By Sridhar L
Google Oneindia Tamil News

அறந்தாங்கி: திமுகவும், அதிமுகவும் சேர்ந்து மாறி மாறி மக்களை கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களுடன் சேர்ந்து காங்கிரஸும் கெட்டுப் போய் விட்டது என்று கூறியுள்ளார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் ராமநாதபுரம் தொகுதி தேமுதிக வேட்பாளர் சிங்கை ஜின்னாவை ஆதரித்துப் பிரசாரம் செய்தார் விஜயகாந்த்.

அப்போது அவர் கூறுகையில்,

விஜயகாந்த் சட்ட விரோதமாக பேசுவதாக கூறுகிறார்கள். நான் மணல் கொள்ளை கும்பலுடனோ அல்லது ரவுடிகளுடனோ பேசவில்லை. மக்களுடன்தான் பேசுகிறேன். ஆட்சியில் இருப்பவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத்தவறியதை மக்களிடத்தில் எடுத்துக் கூறுகிறேன். இது தவறா?

மேலும் நான் அனுமதி இல்லாமல் பேசுவதாகவும் தெரிவிக்கின்றனர். நான் தேர்தல் ஆணையர் நரேஷ் குப்தாவிடமும், டி.ஜி.பியிடமும் எனது தேர்தல் பிரசார சுற்றுப்பயண விவரத்தை கொடுத்து விட்டு முறைப்படி அனைத்து இடங்களுக்கும் சென்று வருகிறேன்.

போலீஸ் துறையை ஏவி விட்டு என் மீது ஏராளமான பொய் வழக்குகளை போட்டு வருகிறார்கள். அந்த வழக்குகளை நான் சட்டரீதியாக சந்திப்பேன்.

கட்சி தொடங்கியது முதல் இன்று வரை தெய்வத்துடனும், மக்களுடனும்தான் கூட்டணி என்று கூறி வருகிறேன். அதன்படியே தேர்தல்களை யாருடனும் கூட்டணி இல்லாமல் மக்கள் கூட்டணியுடன் தனித்து சந்தித்து வருகிறேன். அதே போல் பிற கட்சிகளும் தனித்து போட்டியிட வேண்டும்.

எனது தேர்தல் பிரசாரத்தின் போது மக்கள் பிரச்சினையையும், இலங்கை பிரச்சினையையும் கண்டுகொள்ளாத மத்திய-மாநில அரசுகளை குற்றம் சாட்டி பேசுகிறேன்.

தேர்தல் அறிக்கையில் காவிரி நீரை கொண்டு வருகிறோம் என்று சொன்னார்கள். இதுவரை கொண்டு வரவில்லை. 5 தடவை முதல்வராக இருந்த கருணாநிதியும், 2 தடவை முதல்நக இருந்த ஜெயலலிதாவும் இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

இலங்கை பிரச்சனை, ராமேஸ்வரம் மீனவர்கள் பிரச்சனை, முல்லை பெரியாறு அணை பிரச்சனை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு எந்தவித தீர்வுமே ஏற்படவில்லை. இப்படி இருக்க மத்திய அரசுக்கு ஏன் ஓட்டு போட வேண்டும். நமக்கு சேர வேண்டிய காவிரி நீரை முறையாக வாங்கி கொடுத்தார்களா? இல்லையே.

இந்த முறை தேமுதிகவுக்கு ஓட்டு போட்டு அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள். திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் மாறி மாறி ஓட்டு போட்டு மக்கள் ஏமாற்றம் மட்டுமே அடைந்துள்ளனர்.

மாறி மாறி அவர்களும் ஆட்சிக்கு வந்து கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுடன் சேர்ந்து காங்கிரஸ் கட்சியும் கெட்டுப் போய் விட்டது.

ஞானத்தைக் கொண்டு வாருங்கள்..

மக்கள் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஓட்டு போட வேண்டும் என்று சிந்தித்து ஓட்டு போட வேண்டும். நான் சொல்கிறேன் என்பதற்காக ஓட்டு போட வேண்டாம். உங்களுக்குள் ஒரு கேள்வி ஞானத்தை கொண்டு வாருங்கள்.

இந்த தேர்தலில் தேமுதிகவை 40 தொகுதிகளிலும் வெற்றி பெறச் செய்யுங்கள். அதன் பின்னர் தமிழகத்திற்கு நான் என்ன திட்டங்களையெல்லாம் கொண்டு வரப்போகிறேன் என்று பாருங்கள்.

நான் ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவேன் என்று கூறினேன். அதன்படி வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி 26 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தந்துள்ளேன். தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டு விட்டதால் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தவில்லை.

அதே போல் இளைஞர்களை நல்வழிப்படுத்த ரூ.6 கோடி நிதி ஒதுக்கி கம்ப்யூட்டர் பயிற்சி மையங்களை தொடங்கி உள்ளோம்.

அறந்தாங்கி பகுதியில் எனது கட்சி சார்பில் கட்- அவுட்டுகள், பேனர்கள் வைக்க போலீசார் அனுமதி மறுத்துள்ளனர்.

மறியல் செய்வேன்...

இதே போல் கருணாநிதி வரும் போதும் இந்த சட்டத்தை கடைபிடிக்க வேண்டும். அப்போது கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருந்தால் இங்கே நடுரோட்டில் அமர்ந்து நான் மறியல் போராட்டம் நடத்துவேன்.

தேமுதிக முதல்முறையாக மக்களவை தேர்தலை சந்திக்கிறது. அதனால்தான் மக்களை நம்பி தனித்து போட்டியிடுகிறோம். ஆனால், பெரிய கட்சிகளில் தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. எனக்கு அதுபோன்ற கஷ்டங்கள் கிடையாது.

நானும் எந்த கட்சியுடனாவது கூட்டணி சேர்ந்திருந்தால், சிலரைப் போல் கைகட்டி நின்று, பதில் எதுவும் பேச முடியாத நிலை ஏற்பட்டிருக்கும்.

தேமுதிகவுக்கு ஓட்டு கேட்டு மாணவ, மாணவிகள் அனைவரும் எஸ்எம்எஸ் மூலம் பிரசாரம் செய்யுங்கள். தேமுதிக வெற்றி பெற்றால், ரேஷன் பொருட்கள் வீடு தேடி வர செய்வேன்.

லோக்சபா தேர்தலில் உங்களை நம்பித்தான் தனித்து போட்டியிடுகிறேன். ஆடு, மாடுகளை எல்லாம் நம்பி போட்டியிடவில்லை. இங்கு கூடியுள்ள கூட்டத்தினரை பார்க்கும்போது, என்னை நம்பித்தான் வந்துள்ளீர்கள் என்பதை உணர்கிறேன்.

எனக்கு நல்ல தீர்ப்பை வழங்கவேண்டும். தமிழக முன்னாள் முதல்வர்களான அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததில்லை. ஆனால், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, இந்நாள் முதல்வர் கருணாநிதி மீது அடுக்கடுக்காக ஊழல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இப்படிப்பட்டவர்களுக்கு ஏன் வாக்களிக்கிறீர்கள்.

தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைக்கப் போவதாக காங்கிரஸ் கட்சியினர் கூறுகின்றனர். உயிரோடு இருக்கும்போது அவரை மதிக்காத காங்கிரஸ் கட்சியினரால் எப்படி காமராஜர் ஆட்சி அமைக்க முடியும்?.

இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளின் நிலைமை என்பது கூட்டணி அமைப்போம், கொள்ளையடிப்போம், பங்கு பிரிப்போம் என்பது தான். தமிழகத்தில் கூட்டுறவுக்கடன் தள்ளுபடியினால் உண்மையான விவசாயிகள் யாரும் பயனடையவில்லை. ஒரு கட்சியின் மாவட்டச் செயலர், ஒன்றியச் செயலர் மற்றும் தொடர்புடைய வங்கி அதிகாரிகளுக்கு வேண்டப்பட்டவர்களின் பெயர் அடங்கிய பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இவற்றால் ஏழை விவசாயிகளுக்கு எந்த பயனும் ஏற்படவில்லை.

கலைஞர் 'டிவி'யில் ஜெயலலிதாவை தாக்கியும், ஜெயா 'டிவி'யில் கருணாநிதியை தாக்கியும் நாள்தோறும் ஒரு மணி நேரம் வரை செய்தி ஒளிபரப்பாகிறது. இதை நீங்கள் அனைவரும் கண்டிப்பாக பார்க்க வேண்டும். இதற்கு பிறகாவது நல்லவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றார் விஜயகாந்த்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X