For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கள்ள நோட்டு: டைரக்டருக்கு வலை!

By Sridhar L
Google Oneindia Tamil News

சென்னையில் நேற்று மட்டும் ரூ.13 லட்சம் கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த குற்றம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் உள்பட 4 முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.

கள்ள நோட்டுக்களைப் புழக்கத்தில் விடுவதில் ஒரு திரைப்பட இயக்குநர்தான் முக்கியப் பங்காற்றினார் என கைதானவர்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து அவரைத் தேடும் பணியைத் தொடர்ந்துள்ளனர் போலீசார்.

சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனுக்கு கடந்த வாரம் வந்த ரகசிய கடிதம் ஒன்றில் சென்னை கே.கே.நகர், கோத்தாரி நகரில் ராமாபுரம் மெயின் ரோட்டில் 70ம் நம்பர் வீட்டில் தீவிரவாதிகள் தங்கியுள்ளனர் என்றும், அங்கு துப்பாக்கிகள், வெடிப் பொருட்கள் மற்றும் ஏராளமான பணம் பதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டிருந்தாம்.

அத்துடன் வெளி மாநிலங்களிலிருந்து வந்துள்ள பெண்கள், உள்ளூர் கல்லூரி மாணவிகளை வைத்து பெரிய அளவில் விபச்சாரம் நடப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதைத் தட்டிக் கேட்பவர்களை துப்பாக்கி காட்டி அவர்கள் மிரட்டுவதாகவும் தகவல் தெரிவித்திருந்தனர்.

உடனடியாக அந்த வீட்டை சோதனையிடும்படி உத்தரவிட்டார் கமிஷனர். மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் விஜயகுமாரி, உதவி கமிஷனர் கந்தசாமி, இன்ஸ்பெக்டர்கள் பழனிச்செல்வம், செல்லப்பா ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.

நள்ளிரவில் அந்த வீட்டுக்குள் நுழைந்த போலீசார் சோதனையிட்டதில், அந்த வீட்டின் ஒரு அறைக்குள் 1,000, 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததைக் கண்டுபிடித்தனர். இதைத் தவிர ரூபாய் நோட்டுகள் போல் தயார் செய்யப்பட்ட வெறும் காகித கட்டுகளும் ஏராளமாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ரூபாய் நோட்டுகளை சோதித்ததில் அவை கள்ள நோட்டுகள் என்று தெரிய வந்தது. மொத்தம் ரூ.13 லட்சம் இருந்தது.

கள்ள நோட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வீட்டின் இன்னொரு அறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த இளம்பெண்ணையும் மீட்டனர். இவரை தொடர்ந்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்தனராம்.

இது தொடர்பாக அந்த வீட்டிலிருந்த தினகரன் (வயது 40) என்பவர் கைது செய்யப்பட்டார். அவர் சென்னையில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருபவராம். அவர் கொடுத்த தகவலின்பேரில் சென்னை படாளத்தை சேர்ந்த அவரது கூட்டாளிகள் கோதண்டராவ் (63), ராமர் (59), பிச்சைக்கனி ராஜா (67) ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

தினகரனை விசாரித்ததில் வளசரவாக்கத்தில் வசிக்கும் திரைப்பட இயக்குநர் ஒருவர்தான் தியாகு என்பவர் மூலம் இந்த கள்ள நோட்டுத் தொழிலில் தன்னை ஈடுபடுத்தினார் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்தக் கள்ள நோட்டுக்கள் அனைத்தும் கேரள மாநிலம் குமுளியிலிருந்து கொண்டுவரப்பட்டவை என்றும் கூறியுள்ளார்.

அந்த சினிமா இயக்குநர் மற்றும் அவர் அறிமுகம் செய்து வைத்த தியாகு ஆகியோரைத் தேடி போலீசார் விரைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட பிறகே இயக்குநரைப் பற்றிய விவரங்கள் தரப்படும் என போலீசார் அறிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X